வெள்ளி, 26 அக்டோபர், 2018

ராமனுக்குத் தம்பியான குகன். தினமலர். சிறுவர்மலர் - 41.

ராமனுக்குத் தம்பியான குகன்.

ராமனுக்கு மூன்று தம்பிகள் தானே அது எப்படி சாதாரண படகோட்டியான குகன் மாமன்னனான ராமனுக்கு நான்காவது தம்பியாக ஆனார் என்று யோசிக்கிறீர்கள்தானே குழந்தைகளே. குகன் யார், அவர் எப்படி ராமருக்குத் தம்பியானார் என்று பார்ப்போம்.  
யோத்தி மன்னன் தசரதன் இட்ட கட்டளைப்படி ராமன் இலக்குவனோடும் சீதையோடும் வனவாசம் புகுந்தார்.  மரவுரி பாதுகை தரித்து அவர் வனம் புகுந்த போது கங்கையைக் கடக்க வேண்டி வந்தது.   
சிருங்கிபேரபுரம் என்னும் நாட்டின் தலைவனான நிசாத மன்னன் குகன். அவன் வேடுவ குலத்தைச் சேர்ந்த தீரன். அடர்ந்த கருங்குழல்கள் தொங்கும் நீண்ட தோள்கள் உடையவன். கங்கை ஆற்றில் படகோட்டி திண்மையான புயங்கள் பெற்றிருந்தான். நூலாடை போல் தோலாடை அணிந்தவன்.  அவன் ராம லெக்ஷ்மண சீதாதேவியின் வருகையைக் கேள்வியுற்றான்.
மன்னர்மன்னன் வருகிறாரா. இவரைக்காணத்தானே  அவன் பிறவியென்னும் பெருங்கடலை நீந்தாமல் காத்திருக்கிறான். உடனே தேனும் மீனும். தினைமாவும் எடுத்துக்கொண்டு ராமரைப் பார்க்கச் சென்றான்.

அங்கோ ஐயகோ இதென்ன தோற்றம். மணிமுடி தரியாது சடைமுடி தரித்த இராமனின் உருவம் கண்டு குகனின் கண்கள் நீர் வடிக்கின்றன. ஓராண்டு ஈராண்டுகள் அல்ல. பதினான்கு ஆண்டுகளுக்கு வனவாசமாம். அதுவும் தந்தையே வனவாசம் அளிக்க அதை ஏற்றுக் கானகம் புகுந்த ராமரைப் பார்த்துக் கொந்தளிக்கிறது அவன் உள்ளம். முட்கள் செறிந்த காட்டுப்பாதைகளும் கரடு முரடான நிலப்பிரதேசமும் மன்னனான ராமர் தங்க ஏற்றவையா. அவரைப் பார்த்ததும் ஏனோ அவன் உள்ளத்தில் பாசம் ஊற்றெடுக்கிறது.
முகமன் கூறி விழுந்து வணங்கி தான் கொண்டு சென்ற பொருட்களை அவர் பாதத்தில் சமர்ப்பித்து ஏற்றுக்கொள்ள வேண்டுகிறான். எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்த அவன் அவர் மேல் வைத்திருக்கும் அதீத அன்பைக் கண்டு நெகிழ்கிறார் ராமபிரான். அவனைத் தோள் தொட்டு எழுப்புகிறார். கள்ளமில்லாத அவனது பரிவையும் பாசத்தையும் பார்த்து ராமரின் நெஞ்சும் அன்பால் கரைகிறது. அவனது கைபற்றிக்கொள்கிறார்.
சிருங்கேரிபுரமே வனம் தான் என்றும் அங்கேயே தங்கி விடும்படியும் தான் அவர்களைப் பார்த்துக் கொள்வதாகவும் கெஞ்சுகிறான். ஆனால் கங்கையைக் கடந்து வனத்துக்குள் புகுந்தால்தான் வனவாசம் முழுமையடையும் என்று கூறும் ராமர் அவனைச் சமாதானப்படுத்திகிறார்.
மறுநாள் அவனது படகில்தான் கங்கையைக் கடக்க வேண்டும் என்று அவர் கூற அவர் காலடிபடுவது தன் படகு செய்த பாக்கியம் என்று மறுமொழி உரைக்கிறான் குகன். நாடாள வேண்டிய நாயகர் காடாளப் புகுந்தது அயோத்தியின் துரதிர்ஷ்டம் என்று எண்ணும் அவனுக்கு பரதனின் மேல் கோபம் கோபமாக வருகிறது. சிந்தையில் எல்லாம் ராமரை நினைத்து விடைபெறுகிறான்.
மறுநாள். குகனின் படகில் ராமர் லெக்ஷ்மணன் சீதை மூவரும் அமர்கிறார்கள். குகனின் படகில் கங்கையைக் கடந்து கொண்டிருக்கிறார்கள் மூவரும். குகனுக்கோ அவனது பிரியத்துக்குரிய இராமனைக் காட்டுக்குள் விடும் அபாக்கியம் தனக்கு நேர்ந்ததே என்று அவனுக்கு துக்கமாக இருக்கிறது. இராமரின் கூடவே சென்றுவிடலாமா என்ற ஆசை பிடித்தாட்டுகிறது. கங்கை இதோ முடியப்போகிறது . அக்கரை இதோ வெகு சீக்கிரம் வந்துவிட்டதே. அக்கரை இன்னும் கொஞ்சம் தொலைவில் இருக்கக்கூடாதா.  அதற்குள் ராமரைப் பிரிய வேண்டுமா.
படகை விட்டு மூவரும் இறங்கியதும் குகனிடம் சித்திரக்கூடத்துக்குச் செல்லும் வழி கேட்கிறார் ராமர். தனக்கு அது இருக்குமிடம் தெரியும் என்றும் தானே உடன் வந்து வழிகாட்டுவதாகவும் சொல்லி ராமருடன் வர விண்ணப்பிக்கிறான் குகன். மேலும் கூறுகிறான் “ தங்களுக்குக் கானகம் புதிது. நான் வந்தால் தேன், காய் , கனி எல்லாம் தேடித்தருவேன். உங்களைப் பகைவர்களிடமிருந்தும் மிருகங்களிடமிருந்தும் போராடிப் பாதுகாப்பேன். என்னையும் அழைத்துச் செல்லுங்கள் ஐயனே “  
உடன் பிறந்தவன் போல் அவன் உள்ளம் துடிக்கிறது. ராமர் அடுத்த சில நொடிகளில் பிரிந்து போய்விடுவாரே என்ற துயரத்தைத் தாள முடியவில்லை அவனால். அவரது பாதங்களில் விழுந்து வணங்கி தானும் உடன் வருவதாகப் பிடிவாதம் பிடிக்கிறான். கண்ணீர் பெருகி அவன் கன்னங்களை நனைக்கிறது.
பார்க்கும் ராமருக்கும் கண்கள் கசிகிறது. இவன் யார் ? யாரோ ஒரு வேட்டுவத் தலைவன் என்று நினைத்தோமே தன் மீது மாறாத ப்ரியமும் அன்பும் கொண்டு கூடவே வரத் தயாராக இருக்கிறானே. ஆனால் இவனை அழைத்துச் செல்ல முடியாதே என்று அவனைச் சமாதானப்படுத்துகிறார்.
“அன்பு குகனே. நட்பில் திட்பம் உடையவனே. நீ எனக்கு நண்பன். என் தம்பிகள் உனது தம்பிகள், என் மனைவி சீதை உனக்கு அண்ணியாவாள். ஆகையால் நீ எனது தம்பிகளுக்கு ஒப்பானவன் எனவே நாம் ஐவரானோம். ” என்று கூறி லெக்ஷ்மணனும் சீதையும் இருந்த பக்கம் திரும்பி ”குகனுடன் ஐவரானோம்” என்று மொழிந்தார்.  
ஆஹா இதென்ன பெறற்கரிய பேறு. மாமன்னன் ராமனின் தன்னை தம்பியாகவே ஸ்வீகரித்துக் கொண்டாரே.  இருந்தும் அவன் மனம் அவருடன் செல்ல விழைகிறது. இன்னும் கூறுகிறார் ராமர். ” அன்புத்தம்பி குகனே. நாங்கள் பதினான்கு வருடங்கள் வனவாசம் முடித்து உன்னை வந்து பார்த்துவிட்டுத்தான் அயோத்தி செல்வோம். எங்களுக்கு ஒரு இன்னலும் நேராது . கவலற்க. உன் அன்பு எங்களைக் காக்கும் என்று கூறிச் செல்கிறார்.  
குகனும் மனம் தணிந்து அவரைப் போக விடுகிறான். உண்மையான பாசத்தால் அவன் புரிந்த தொண்டு மன்னனான ராமரையும் சகோதராய் எண்ணச் செய்தது. பிரதிபலன் பாராது அவன் அள்ளிக்கொடுத்த அன்பே அயோத்தி மன்னனுடன் ஐவராக்கியது. 

டிஸ்கி:-  இந்தக் கதை இதிகாச புராணக் கதைகள் என்ற தலைப்பில் 26 . 10. 2018  தினமலர் சிறுவர்மலர் இதழில் இடம்பெற்றுள்ளது. நன்றி தினமலர் சிறுவர் மலர் & தேவராஜன் ஷண்முகம் சார்

3 கருத்துகள்:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு
  2. கதையினை படித்தேன். உண்மையான பாசத்திற்கான அடையாள வெளிப்பாட்டினை உணர்த்தும் நிகழ்வு.

    பதிலளிநீக்கு
  3. நன்றி ஜம்பு சார்

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)