திங்கள், 10 ஏப்ரல், 2017

உலகத்தமிழ் நான்காம் கருத்தரங்கம்.

காரைக்குடிக் கம்பன் கழகத்தின் சார்பாக இந்த வருடக் கம்பர் விழா கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வந்தது. இன்று அத்தத் திருநாள் பாட்டரசன் கம்பன் சமாதியில் நாட்டரசங்கோட்டையில் நடைபெறவுள்ளது.

இந்தக் கம்பர் விழாவை ஒட்டி செட்டிநாடும் செந்தமிழும் என்ற கருத்தரங்கம் நடைபெற்றது. வள்ளல் அழகப்பரின் பேத்தி கோட்டையூர் வள்ளி முத்தையா அவர்களின் நூற்றாண்டுப் பாரம்பரிய இல்லத்தில் இக்கருத்தரங்கு நடைபெற்றது . கம்பன் அடிப்பொடி அரங்கம், ராய சொ அரங்கம் போன்ற ஐந்து அரங்குகளில் கட்டுரைகள் வாசிக்கப்பட்டன. இக்கட்டுரைகள் முன்பே கட்டுரையாளர்களிடமிருந்து பெறப்பட்டு நூலாக்கம் செய்யப்பட்டிருந்தன என்பது சிறப்பு.

சிங்கையைச் சேர்ந்த முனைவர் லெக்ஷ்மி இரு கட்டுரைகள் பங்களிப்பு செய்திருந்தார். அதில் செட்டிநாட்டுப் பெண் படைப்பாளிகள் என்ற கட்டுரையில் ரமா இன்பா சுப்ரமணியன் படைப்புகள் பற்றியும் என் படைப்புகள் பற்றியும் ஆய்வு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. !!!

பதினோரு மணியில் இருந்து ஒரு மணி வரை கட்டுரை வாசிப்பு நிகழ்ந்தது. மதிய உணவுக்குப் பின் தேர்ந்தெடுக்கப்பட்ட சில கட்டுரைகள் மட்டும் வாசிப்புக்கும் உட்படுத்தப்பட்டன. முனைவர் திரு முத்தப்பன் முன்னிலையில் இக்கட்டுரைகள் வாசிக்கப்பட்டன.

அருவியூர்ச் செட்டியார்களின் தமிழ்ப்பணி பற்றி பொன்னமராவதியைச் சேர்ந்த திரு திருநாவுக்கரசு என்பவர் கட்டுரை வாசித்தளித்தார்.
இராய சொ வின் ஆழ்வார் அமுது உரைத்திறன் பற்றி அழகப்பா பல்கலைக் கழகத்தின் முனைவர் சு இராசாராம் அருமையான திறனாய்வுக் கட்டுரை வாசித்தளித்தார்.

கோயிலூர் வேதாந்த மடம் பற்றிக் காப்பியக் கவிஞர் நா. மீனவன் அவர்கள் எழுதிய கட்டுரையை அவர் சார்பாக திரு வினைதீர்த்தான் அவர்கள் வாசித்தளித்தார்கள்.

கவியரசர் முடியரசனாரின் தமிழ் உணர்வு பற்றி திருமதி பா லெட்சுமி அவர்கள் கவிதை வாசித்தளித்தார்கள்.
இவர் ஜீவா பற்றிப் பேசினார் என்று நினைக்கிறேன்.
பண்பாட்டுக் காவலர் - பாவலர் முடியரசன் பற்றி மிகச் சிறப்பாகப் பேசினார் ம. ஸ்டீஃபன் மிக்கேல்ராஜ்.( ஆய்வாளர், தமிழ்ப் பண்பாட்டு மையம், அழகப்பா பல்கலைக் கழகம், காரைக்குடி )
கம்பன் காட்டும் அறநெறிகள் பற்றி முனைவர் சி பரமேஸ்வரி . ( உதவிப் பேராசிரியர், தமிழ் உயராய்வு மையம், அழகப்பா அரசு கலைக்கல்லூரி, காரைக்குடி )
திருப்புத்தூர் தமிழ்ச்சங்கம், காரைக்குடி தமிழ்ச்சங்கம், திருப்புத்தூர் திருநெறி மன்றம் பற்றி முனைவர் மா சிதம்பரத்தின் உரை மிகச் சிறப்பு.
காலம் அறிந்து கடமை புரிந்த இந்தியத் தமிழர் காந்தி மெய்யப்பர் பற்றி சொ முனைவர் சொ சேதுபதி சிறப்பாகப் பேசினார்.
என்னுடைய ஆய்வுத் தலைப்பு முனைவர் வெ தெ மாணிக்கம் அவர்கள் பற்றியது. அதைத் தனி இடுகையாகப் பகிர்கிறேன்.

பெரும்பாலும் முனைவர்களும் ஆன்றோர்களும் சான்றோர்களும் பங்குபெற்ற இத்தளத்தில் என் கன்னி முயற்சியாக நானும் ஒரு ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்திருக்கிறேன். அது ”செந்தமிழ் வளர்க்கும் செட்டிநாடு” என்ற நூலில் இடம் பெற்றுள்ள 98 கட்டுரைகளில் 83 ஆவது கட்டுரையாக இடம் பெற்றுள்ளது. :) அன்பும் நன்றியும் காரைக்குடிக் கம்பன் கழகத்தாருக்கும் அன்னபூரணி வள்ளி முத்தையா அவர்கட்கும். :)

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)