திங்கள், 10 ஏப்ரல், 2017

தர்மம் தலைமுறை காக்கும் - தஞ்சை மகாராஜா பாபாஜி ராஜா சாகேப் போன்ஸ்லே

நான்காம் உலகத் தமிழ் கருத்தரங்கம் கோட்டையூர் வள்ளல் அழகப்பரின் பேத்தி வள்ளி முத்தையாவின் இல்லத்தில் நடைபெற்றது. அதற்கு தகைமிகு தஞ்சாவூர் மூத்த இளவரசர் பாபாஜி ராஜாசாகேப் போன்ஸ்லே வந்திருந்து அருமையாகத் தலைமை தாங்கி சொற்பொழிவாற்றினார். அதைக் கடைசியில் கொடுத்துள்ளேன். திரு சொ சொ மீ அவர்களின் உரையையும் கொடுத்துள்ளேன்.
மதிய உணவு இடைவேளை முடிந்ததும் மதிய அமர்வு ஆரம்பமானது. அதில் சில கட்டுரைகள் முனைவர் திரு பழ முத்தப்பன் அவர்கள் தலைமையில் வாசிக்கப்பட்டன.

அதன் பின் தஞ்சை அரசர் வருகை நிகழ்ந்தது. பூரண கும்ப மரியாதையோடு அழைத்து வரப்பட்டார். பேராசிரியர் திரு மா சிதம்பரம் வரவேற்புரை நிகழ்த்தினார்.
புரவலர் திருமதி வள்ளி முத்தையா ராஜா அவர்களுக்கு ஒரு கவிதை எழுதிப் பரிசளித்தார்கள்.

திருமதி வள்ளி முத்தையா அவர்களுக்குத் தேர்வடிவத்தில் ஒரு சித்திரக் கவி எழுதிப் பரிசளித்தார் இப்பெண்.
மிக அழகாக அமைந்திருந்த அக்கவிதை எனக்கு சுவாமிமலையில் பொறிக்கப்பட்டிருக்கும் தேர்க்கவியை - இரதபந்தம்  ஞாபகப்படுத்தியது.
என்னுடைய சும்மா என்ற இவ்வலைப்பதிவில் இந்த செட்டிநாடும் செந்தமிழும் என்ற போட்டி அறிவிப்பைப் பார்த்துவிட்டு அதன் மூலம் போட்டியில் கலந்து கொண்டதாகக் கூறி ஆச்சர்யப்படுத்தினார் புதுதில்லியைச் சேர்ந்த ( தில்லி தமிழ்ச்சங்கத்தின் ஜாயிண்ட் செகரெட்டரி ) திருமதி சத்யா அசோகன் என்ற சத்ய சாரதாமணி. இவர் கலாசார பாதுகாப்பு அமைச்சரவையில் பணியாற்றுகிறார். ( MINISTRY OF CULTURAL WELFARE ) .

இவர்தான் நான் கட்டுரை வாசித்த அரங்கத்தின் தலைவராகப் பொறுப்பேற்றிருந்தார். மிகப் பெரும் பதவியில் இருந்தும் என் வலைத்தளத்தைப் படித்து வருவதாகக் கூறிப் பாராட்டிக் கை கொடுத்துப் பேசினார்.  மதிய உணவு இடைவேளையின் போது உரையாடிக் கொண்டிருந்தோம். அப்போது இந்த மையத்தின் மூலம் நலிந்த கிராமப்புறக் கலைஞர்கள் அனைவருக்குமே உதவித் தொகை ( சில ஃபார்மாலிட்டி பேப்பர்கள் கொடுத்தபின் ) வழங்கப்படுவதாகக் கூறினார். அது தப்புக் கலைஞராக இருந்தாலும் சரி, பரதநாட்டியம், கூத்து, வில்லுப்பாட்டு, கரகம் என்று எந்தக் கலைஞராக இருந்தாலும் சரி அது குறித்து வேறு யாரேனும் கூட அவர் சார்பாக விபரம் அனுப்பி விண்ணப்பித்தால் மாதம் 4000 வரை உதவித் தொகை அனுப்பி வைக்கப்படுவதாகக் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வு பற்றி உரையாற்ற உடனடியாக அழைத்தபோது அழகாகக் கோர்வையாக செட்டிநாட்டின் விருந்தோம்பல் , தமிழ் மொழிக்கான ஈடுபாடு, இலக்கிய வளர்ச்சி பற்றி உரையாற்றினார். இரு நிமிடங்களுக்குள் மிகச் சிறப்பான பேச்சு. !
அடுத்து இவரை நான் குறிப்பிட்டே ஆக வேண்டும். இவர் சிங்கப்பூரில் வசிக்கும் திருமதி எம் எஸ் லெக்ஷ்மி அவர்கள். இவர் என்னை சொல்வனம் மூலம் தொடர்பு கொண்டு என் ஈமெயில் ஐடி பெற்று ஃபோன் நம்பர் வாங்கிப்  பேசினார்.

இவர் முனைவர் பட்டம் பெற்றவர் . நமது செட்டிநாடு இதழின் பதிப்பாசிரியராகப் பணியாற்றுகிறார். கூடியவிரைவில் இவரது அடுத்த நூல் அகநாழிகை வெளியீடாக மலரலாம். :)

இவர் எனது நூல்களை வருவித்து அவற்றையும் திறனாய்வு செய்துள்ளார். முருகு என்னும் படைப்பாளி என்றொரு கட்டுரையும், செட்டிநாட்டுப் பெண் படைப்பாளிகள் என்றொரு கட்டுரையும் எழுதி உள்ளார். இதில் சிங்கப்பூர் மீனா முத்து, சௌந்தரநாயகி, லண்டனில் வசிக்கும் சீதா லெக்ஷ்மி ஆகியோரோடு தோழி ரமா இன்பா சுப்ரமணியன் மற்றும் எனது படைப்புகளையும் ( ஐந்து நூல்கள் ) திறனாய்வு செய்துள்ளார். மிகுந்த மகிழ்வும் ஆச்சர்யமும் அளித்த செய்தி இது.

இவரும் செட்டிநாட்டுப் படைப்பாளிகள் பற்றிக் கூறிவிட்டு இன்னும் பெண்கள் எழுத்துலகில் ஈடுபட்டு இலக்கியம் படைக்கவேண்டும் என வலியுறுத்தினார். மிகத் தேவையான கருத்துகள் நிறைந்த பேச்சு.
அடுத்து முனைவர் திரு சொ . சேதுபதி அவர்களின் உரை.
தஞ்சை மகாராஜாவின் பேச்சு எதிர்பாராத டிலைட்.

இவ்வளவு சிறப்பாகப் பேசுவார் என எதிர்பார்க்கவே இல்லை. தங்கள் குடும்பத்தினரின் தர்மம் பற்றிக் கூறும்போது ‘ தர்மம் தலை  காக்கும் என்பார்கள். தலைமுறையாய்க் காக்கிறது ‘ என்று சுருக்கமாகவும் சுவையாகவும் தொடர்ந்து உரையாற்றினார்.
புன்சிரித்த முகத்துடன் அவரின் உரை இந்நிகழ்வின் மணிமகுடமாக அமைந்தது. தாங்கள் அளித்த தானத்தின் எச்சம் கூட ( RESIDUE )  கற்பூரமாகக் கரைந்துவிடவேண்டும். என்று கூறுவார்கள் என முன்னோர்களின் சொற்களையும் அறிவுரைகளையும் நினைவு கூர்ந்தார்.
செட்டிநாட்டின் விருந்தோம்பல், தமிழ் மொழி வழக்கு ஆகியன பற்றிக் கூறும்போது தஞ்சையிலிருந்து செட்டிநாடு வரும்வழியில் மண் இயற்கை ஆகியவற்றி ரசிக்கும்போது புதுக்கோட்டையிலிருந்து மண்ணின் நிறம் செந்நிறமாக மாறுபடுவதாகவும் அது செட்டி மக்களின் கொடுத்துச் சிவந்த கரங்களைக் குறிப்பதாகவும் கூறி அப்ளாஸை அள்ளினார்.

தொடர்ந்த பேச்சில் அவரது இலக்கிய ஈடுபாடு அசரவைத்தது. அன்று காலை அம்பை அவரைச் சந்திக்க வந்ததைக் கூறினார். லக்ஷ்மி சித்தூர் சுப்ரமணியன் தனது சரபோஜி நூலகத்தைப் பார்வையிட்டார் என்றும் கூறினார்.

மேலும் நூலகம் குறித்த தகவல்களில் அங்கே ஏராளமான ஓலைச்சுவடிகள் உள்ளன எனவும். அவற்றில் இருக்கும் பொக்கிஷங்கள் பின்வரும் தலைமுறையினருக்கும் பயன்படும் வகையில் காப்பாற்றப்படவேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

அங்கே  பாதுகாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு ஓலையை வலமிருந்து இடமாகப் படித்தால் ராமாயணம் என்றும் இடமிருந்து வலமாகப் படித்தால் மஹாபாரதம் என்றும் கூறினார். அதே போல் நாற்புறமும் படிக்கக் கூடிய நூல்களும் இருக்கின்றன என்றார். மேலிந்து கீழே படித்தால் பாகவதம் என்றும் கீழிருந்து மேலே படித்தால் வேறொரு நூலாகவும் வரும் அற்புதத்தைக் கூறினார்.

வழக்கம்போல் கம்பனடிசூடி அவர்களின் பேச்சு மிக மிக நெகிழ்வாயும் தன்மையாகவும்  இருந்தது. அவரும் இளவல்களும் பேச்சாளர்களுக்கு நேரம் ஒதுக்கி தங்கள் உரையைச் சுருக்கமாக முடித்துக் கொண்டார்கள்.
தில்லை நடராஜரின் மாலையும் குஞ்சித பாதமும் பிரசாதமும் அனைவருக்கும் வழங்கப்பட்டன. திரு கம்பனடிசூடி அவர்கள் குடும்பத்தின் பாரம்பர்ய தீக்ஷிதர் அவற்றை வழங்கி ஆசி அளித்தார். திரு முத்துப் பழனியப்பன் தனக்குப் போடப்பட்ட மாலையை மனைவிக்குப் போட்டு நிகழ்வரங்கை மகிழ்வால்  கலகலப்பாக்கினார்.

இறுதியாக உரையாற்றிய சொ சொ மீ அவர்களின் பேச்சு முத்திரைப் பேச்சு. வள்ளல் அழகப்பர் குடும்பத்தில் பிறந்த பெண்பால் வள்ளல் = வள்ளி என நகைச்சுவையாகக் குறிப்பிட்டார். மேலும் 1947 ஜூலை மூன்றாம் தேதி வள்ளல் அழகப்பர் காரைக்குடியில் கல்லூரி ஒன்று அமைப்பதாக அரசிடம் உறுதிகொடுத்து அதே ஆண்டே 1947 ஆகஸ்ட் 15 அன்று கல்லூரியை ஆரம்பித்ததாகக் குறிப்பிட்டார். அரிய வரலாற்றுத் தகவல்கள் நிரம்பியதாக இருந்தது அவர் பேச்சு. மேலும் அந்தக் காலத்தில் தமிழில் பேராசிரியர்கள் இல்லை ஆனால் ஒருவருக்கு விரிவுரையாளர் என்று பதவி கொடுப்பதற்குப் பதிலாக பேராசிரியர் என்று பதவி கொடுத்ததாகவும் , எழுத்து பூர்வமாக வள்ளல் அழகப்பரின் கையெழுத்தோடு கொடுக்கப்பட்டு விட்டதால் அதையே அவர் கடைபிடித்து அந்தப் பேராசிரியருக்கு அதிக சம்பளம் வழங்கியதாகவும் சொன்னார். அதற்குப் பத்தாண்டுகளுக்குப் பிறகே தமிழ்த்துறைக்கு பேராசிரியர் என்ற பதவியை அறிமுகப்படுத்தியதாம் அரசு.

அதே போல் தேவகோட்டை திண்ணப்ப செட்டியார் வகையறாவில் பொன் தகட்டில் பொறித்த திருவாசகம் இன்றளவும் கட்டிக் காத்து வரப்படுவதாகவும் தமிழ்மொழிக்கான செட்டிநாட்டாரின் ஈடுபாட்டையும், தொடர்ந்து செயல்முறையிலும் அவர்கள் அதைக் கடைப்பிடித்ததையும் சுட்டிக் காட்டினார்.  மிகுந்த பொருள் செறிந்த பேச்சு.
முடிவில் பேராசிரியர் திரு முத்து பழனியப்பன் அவர்கள் நன்றி நவில கூட்டம் இனிதாய் நிறைவுற்றது.

3 கருத்துகள்:

  1. அருமையான நிகழ்வு
    வாழ்த்துகள்
    தம +

    பதிலளிநீக்கு
  2. ஆஜர் என்று மட்டும் கூறுகிறேன்

    பதிலளிநீக்கு
  3. நன்றி மது

    நன்றி பாலா சார்

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)