செவ்வாய், 22 மார்ச், 2016

வினையால் அணைதல். :-



வினையால் அணைதல். :-

அவன் கெஞ்சிக் கொண்டிருந்தான் இன்னமும்.

இவளுள் லேசாய் எரிச்சல் அரும்பத் தொடங்கி இருந்தது.

“ ஏய். ! இங்கே பாரேன். ! ச்சு, இங்க என்னைப் பாரும்மா. ! “

“எவ்வளவு நேரமா கூப்பிடுறேன். “ பஸ்ஸின் அருகில் இன்னம் நெருங்கி வந்தான். நண்பர் குழாம் சற்றுத் தள்ளிப் பிளாட்பாரத்தில் நமுட்டுச் சிரிப்புடன்.

“ ஏய். ! பார்க்கப் போறியா இல்லையா இப்ப ?” இதற்காகவே இவன் பக்கம் திரும்பாமல் அமர்ந்திருந்தாள்.

“இவன் என்ன சொல்றது ? நாம என்ன பாக்கிறதுன்னு இருக்கிறியா ?” அவன் பக்கத்தில் நின்று அவன் தோளின் மேல் கைக் கோர்த்துக் கொண்டிருந்தவன் நக்கலாகக் கேட்டு விட்டு உரக்கச் சிரித்தான்.

இவளுக்கு மூஞ்சி ஜிவுஜிவுத்துப் போயிறு. இன்னமும் இவள் ஜன்னல் பக்கம் திரும்பவில்லை.

பிக்னிக்குக்காக முக்கொம்பு வந்திருந்தனர் அந்தக் கல்லூரிப் பெண்கள். ஏழு பேருந்துகள் முழுக்க முழுக்க விதம் விதமான மலர்கள். எவனுக்குத்தான் அலுக்கும் அந்த மலர்க் கண்காட்சியைப் பார்க்க. போதாக்குறைக்கு அந்த மெயின் ரோட்டில் இரண்டு கல்லூரிகளும் மாணவர் விடுதிகளும் கடைகளும் இறைச்சலுமாக இருந்தன.

காலேஜ் ரோட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அந்த ஏழு பேருந்துகளும் கோயிலுக்கு, பிள்ளையார் தரிசனத்துக்கு, காற்று வாங்க, கடைத்தெருவில் இருந்த வெளிநாட்டுச் சாமான் கடைகளில் வீட்டாருக்கு கிஃப்ட் வாங்க, ஒன்றும் வாங்காமல் விலை மட்டும் கேட்டுக் கும்மாளமிட்டுத் திரிந்துகொண்டிருந்த கும்பல்களின் திரும்பல்களுக்காகக் காத்திருந்தன.

அவள்தான் அந்த பஸ்ஸின் ரெப்ரசெண்டேட்டிவ். சிஸ்டர் “ மதுரா எல்லாரும் வந்திட்டாங்களான்னு அட்டெண்டன்ஸ் எடுத்திரும்மா என்க. இதுதான் சமயம் என வேகமாக எழுந்து அட்டெண்டன்ஸ் எடுக்க ஒருத்தி மட்டும்தான் வரவில்லை. அனைவரும் பஸ்ஸினுள் அடைகாக்கும் கோழியாட்டம் அடைந்து கொண்டிருக்க. வந்து ஃபுட்போர்டுக்கு அருகினில் இருக்கும் சீட்டினில் வந்து அமர்ந்தாள்.

வந்த வேகத்தில் மேலே இருந்த லக்கேஜ் காரியரின் முனை நடு மண்டையில் மடாரென இடித்துவிட “ ஆ. அம்மா “ என முனகினாள். முகம் லேசாய் வலியில் கோண தலையைத் தடவி விட்டுக் கொண்டு அமர


“ஏண்டா டேய். ரொம்ப வலிக்குதா. தடவி விடட்டுமா “ என நண்பன் கூற இவன் அவனை முறைத்துவிட்டு “சும்மா இருடா “ என்றான்.

“ஏம்மா ரொம்ப வலிக்குதா. ஒரு நிமிஷம் ஒரே நிமிம் பாரேன். உன் பேரென்ன ப்ளீஸ் சொல்லு சொல்லும்மா ! “ என்றான்.

“இதென்னடா வம்பாப் போச்சு “ இவள் நினைத்துக் கொண்டாள் திரும்பவில்லை.

”ஏய் இவன் பாட்டுக்குக் கெஞ்சுறான். நீ என்ன அங்க திரும்பிக்கிட்டு இருக்குற. பெரிய லேடி டோக் வாலண்டின்னு நினைப்பா. உன்னை வா நான் மதுரையில பார்த்துக்குறேன். திமிர் பிடிச்சவ. இத்தனை பேர் பார்க்கிறாங்கள்ல. உனக்கு மாத்திரம் என்னடி. ஏய் நீ இப்பப் பார்க்காட்டினா உன் மண்டைலேயே போட்டுடுவேன். கொழுப்பும் திமிரும் கொஞ்சமாவா இருக்கு உடம்புல “ அவனின் நண்பன் சர்டிஃபிகேட் . அவன் தடுக்கத் தடுக்க அவன் நண்பன் பேசிக்கொண்டிருந்தான். இவள் கல்லானாள். மூஞ்சியில் உணர்ச்சியே இல்லாத மாதிரி.

ரோட்டில் சோடியம் வேப்பர் லாம்பின் ஒளி பல்பின் முன்புறக் கண்ணாடி வழியாக உள் பாய்ந்து இவளின் சீட்டை வெளிச்ச வெள்ளமாக்கியது. காதில் இருந்த டோலக்கும், மூக்கின் மூக்குத்தியும் டாலடித்தன. உதடுகள் மௌனத்தை அடைகாத்தன.

ரோட்டில் திடீரென்று ஒரு போராட்ட ஊர்வலம் வந்தது.

வேலையில்லா இளைஞர்கள் கோஷமிட்டுக் கொண்டே போனார்கள். பஸ்கள் கிளம்ப வேண்டும். ஆனால் இன்னும் ஏழு பெண்கள் மற்ற பஸ்ஸுக்கும் வரவில்லை. ஊர்வலம் அனுமார் வால் மாதிரி நீண்டுகொண்டே போயிற்று. ஆவேசக் கூச்சல்கள். இருந்தாலும் கூட்டம் ஒழுங்காக வரிசையாகக் கலவரமின்றிச் சென்றது.

அவர்களுடன் பஸ்ஸில் இன்சார்ஜாக வந்திருந்த சிஸ்டர் கூப்பிட்டு அனைவருக்கும் ஸ்வீட் காரம் பாக்கெட்டுகளைக் கொடுக்கச் சொன்னார். வரிசையாக வழங்கிக் கொண்டே வந்தாள்.

”டேய். எனக்கு ஸ்வீட் வேணுண்டா. “ “ நீயே மது ஆச்சே  அப்புறம் ஸ்வீட் எதுக்கு ? “ அவனின் நண்பன். இவளுள் ஏதோ உடைத்துக் கொண்டது. அவன் தன்னை அவமரியாதை செய்துவிட்டமாதிரி.

அவன் தன் நண்பனை என்னவோ சொல்லித் திட்டிக்கொண்டிருந்தான். அவன் முகம் சிவந்திருந்தது. நாலு வார்த்தை பளிச்சென்று மூஞ்சியில் அறைவது மாதிரி செல்லணும் போல இருந்தது அவளுக்கு. டிஸ்ட்ரிப்யூஷனை முடித்துவிட்டு வந்து ஸீட்டில் மறுபடி அமர்ந்துகொள்ள

“ கண்ணே கண்ணே பாரம்மா. “ “ கரும்பு தாரேன் தின்னம்மா “
“ முத்தே முத்தே பாரம்மா “ ”முறுக்கு தாரேன் தின்னம்மா.”

லேசாய்த் திரும்பினாள். ஓரக்கண்ணில் அந்த அவன் கண்ணில் பட்டான். எதையோ கூற விளைவது போல தரிசனம் கண்ட பக்தனின் பரவசமாய் கண்களில் அமைதியாய்.

படக்கென்று இவள் திரும்ப. “ ஏண்டா நீ என்னையெல்லாம் பார்க்க மாட்டியா. “
“நான் உன்னயப் பார்க்க மாட்டேன் ஆனா அந்தப் பக்கம் திரும்பி வந்தவனை எல்லாம் சைட் அடிப்பேன் ” இன்னொருவன்.

இவள் வெடித்தாள். ” பார்க்குறதுனால உங்களுக்கு என்ன வந்திறப் போகுது “

கொஞ்சம் தள்ளியிருந்த காம்பவுண்டு சுவரில் அமர்ந்திருந்த ஒருவன் ”ஆமாம் சும்மா பார்க்கிறதுனால உங்களுக்கு என்ன வந்திறப் போகுது.”

“ கருப்புக் கெட்டுப் போயிருமாம் “ மற்றுமொருவன். 

மற்ற பஸ்களில் இருந்த பெண்களையும் கும்பல் கும்பலாய் கேலி பேசியபடி இளைஞர் பட்டாளம் ஆடிக்கொண்டிருந்தது. அது மெல்ல நகர்ந்து இந்த பஸ்ஸின் சமீபம் வந்தது. 

”என்னது கருப்பா. அது கருப்பா செவப்பா “ எனக் கேட்டு ஒருவன் அட்டகாசமாகச் சிரித்தான்.

இவளின் மூக்கும் உதடும் துடிக்க கண் கலங்க எதேச்சையாக முதன் முதலில் இவளைப் பார்க்கச் சொல்லிக் கெஞ்சினவனையும் காம்பவுண்டுச் சுவரிலிருந்து வந்தவனையும் மற்றுமொரு கூட்டத்திலிருந்து கலாட்டா செய்து கத்திக்கொண்டு வந்தவர்களையும் பார்க்க புது கும்பலில் வந்த ஒருவன் துடிதுடித்துப் போய் “ ஏண்டா என் தங்கச்சிய என்னவெல்லாம் சொல்றீங்க. அவளைச் சொன்னாக் கேட்டுக்க ஆளில்லைன்னு நினைச்சீங்களா. ஏண்டா டேய்” என்று கோபமாய்ப் பாய்ந்து அனைவரையும் அடித்து ஆடித் தீர்த்தான்.

மற்ற பஸ்ஸில் இருந்த பெண்கள் தங்களைக் கேலி செய்த அவனது ஆட்டத்தைப் பார்த்து எண்ணிக் கொண்டனர். ”முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் இல்லையில்லை இப்ப செஞ்சா இப்பவே வினை விளையும்”  என்று.  

-- 84 ஆம் வருட டைரி.


5 கருத்துகள்:

  1. இளவயதினரின் போக்குக்களைப்பற்றி மிகவும் யதார்த்தமான நல்லதொரு ஆக்கம். பாராட்டுகள்.

    //வந்த வேகத்தில் மேலே இருந்த லக்கேஜ் காரியரின் முனை நடு மண்டையில் மடாரென இடித்துவிட “ ஆ. அம்மா “ என முனகினாள். முகம் லேசாய் வலியில் கோண தலையைத் தடவி விட்டுக் கொண்டு அமர....//

    இந்த இடத்தில் இதைச்சேர்த்துள்ளதுதான் மிகவும் சிறப்பு. ஸ்பெஷல் பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  2. நன்றி விஜிகே சார் :)

    நன்றி வெங்கட் சகோ

    பதிலளிநீக்கு
  3. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)