புதன், 23 மார்ச், 2016

கம்பர் திருவிழா - 2016 . மக நாள் மங்கல நிகழ்வுகள்.

கம்பன் அடிசூடி திரு பழ பழனியப்பன் மற்றும் அவரது இளவல்களின் பெருமுயற்சியால் காரைக்குடியில் கம்பர் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

முதல் நாளாம் மக நாளில் ஏகப்பட்ட கொண்டாட்டங்கள். கண்ணுக்கும் செவிக்கும் , மனதுக்கும் , சிந்தனைக்கும்  அதன்பின் வயிற்றுக்கும் மாபெரும் விருந்து படைத்தது சிறப்பு வாய்ந்த கம்பன் கழகம்.

காரைக்குடி கிருஷ்ணா கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற இவ்விழாவுக்கு ஸ்ரீராமரும் சீதையும் எழுந்தருளி அருள் பாலித்தனர். கோட்டையூரைச் சார்ந்த புரவலர், வள்ளல் பெருமகள்,  திருமதி வள்ளி முத்தையா ( வள்ளல் அழகப்பரின் தமையனாரின் மகள் ) அவர்களின் இல்லத்திலிருந்து ஸ்ரீராமரும் சீதையும் தம்பதி சமேதராக திருச்சின்னங்கள் ஒளிர எழுந்தருளி கிருஷ்ணர் கோயிலில் இருந்து ஊர்வலமாக கிருஷ்ணா கல்யாண மண்டபத்தில் எழுந்தருளச் செய்யப்பட்டனர்.
கோயிலில் தீப தூபத்துக்குப் பின் தேவகோட்டை கலைவாணி வித்யாலயா மாணாக்கியர் கொடி பிடித்து மலர் தூவி நடனமாடிப் போற்றித் துதித்து ஊர்வலத்தின் முன்னே வர , சங்கொலிக்க, நாதஸ்வரமும் மேளமும் இசைவெள்ளமாய்ப் பொங்க., தீவட்டி பிடித்தபடி இருவர் முன்னே கட்டியம் கூறிச் செல்ல, வேஷ்டி மற்றும் மஞ்சள் & பிங்க் நிறச் சட்டையணிந்த இளைஞர் பட்டாளம் தோளுக்கினியானில் ஸ்ரீராமர்சீதையைத் தாங்கிக் கவரி வீசி வந்தனர். 
நாட்டியத் தாரகைகள் முன்னே செல்ல கம்பீர அணிவகுப்பில் ஸ்ரீராமரும் சீதையும் கம்பருடன் சேவை சாதித்து அருளினார்கள். ( திரு.வீரப்பன் அவர்கள்  கம்பன் புகைப்படத்தைத் தாங்கி வருகின்றார்கள் )
மனம் கவர் தம்பதிகள் கொற்றக் குடையின் கீழ் உலா.


நாட்டியமணிகளின் கோலாகல வரவேற்பு.
 செல்வி எம். கவிதா கம்பன் அடிப்பொடி அஞ்சலியையும் திருச்சி கலைக்காவிரி நுண்கலை மாணாக்கர்கள் கம்பன் அருட்கவி ஐந்தை பஞ்ச ரத்ன கீர்த்தனையாகப் பின்னணி இசையுடன் வழங்கினார்கள். 

ஈழத்தை சேர்ந்த மறவன் புலவு சச்சிதானந்தம் அவர்கள் கலைவாணி வித்யாலயா மாணாக்கியருக்கும் கலைக்காவிரி நுண்கலை மாணாக்கருக்கும் பரிசுகள் வழங்கி கௌரவித்தார்கள்.
வரவேற்பு உரையைக் கம்பன் அடிசூடி திரு பழ பழனியப்பன் நிகழ்த்தினார்கள். கம்பன் அடிப்பொடி கம்பன் அடி சூடியையும் கம்பன் அடி சூடி இன்னும் சில கம்பதாசர்களையும் உருவாக்கி உள்ளார்கள். கம்பனுக்காகவே வாழ்வை அர்பணித்தவர்கள் இவர்கள். கம்பன் புகழ்பரப்ப வாழ்வை வேள்வியாக்கியவர்கள்.
தொடக்க உரையை பேராசிரியர் திரு. தி. மு. அப்துல் காதர் அவர்கள் நிகழ்த்தினார்கள். மிகச்செறிவாய் அமைந்து இருந்தது அவர்தம் உரை. தமிழ் நீர் தனது உமிழ் நீர் என்றும், மாயமானைத் தேடியவனைப் பற்றிப் பேச முசல்மான் தான் வந்திருப்பதாகவும் கூறினார். மேலும் பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த ரிச்சர்ட் கிராஸா ( RICHARD CRASHAW ) என்ற ஆங்கிலக் கவியையும் கம்பனையும் ஒப்புமைப்படுத்தி அவரிலும் முன்பே கம்பர் எப்படி மேம்பட்டார் என்பதனையும் அருமையாக விளக்கினார். எருசலம், தொழுவம் என்பனவற்றுக்கு அவர் கூறிய பொருட்சுவை மிகவும் ரசிக்கத்தக்கது.
இசைத்தமிழறிஞர் திரு. அருமளம், சு. பத்மநாபன் அவர்கள் எழுதி உமா பதிப்பகம் வெளியிட்ட மீனாட்சி பழனியப்பா அறக்கட்டளையின் சொற்பொழிவு நூலான ‘ கம்பனில் இசைத்தமிழை “ மதுரை  தியாகராஜர் கலைக்கல்லூரிச் செயலர் ( டெபோரா தியாகராஜன் - தியாகராஜனின் பேரர் ) , திரு. ஹரி தியாகராஜன் வெளியிட்டார். இவர் முதன் முறையாகக் கம்பன் கழகத்தில் உரையாற்றினாலும் கம்பனில் இருந்து மேற்கோள்கள் காட்டி மிகச் சிறப்பாக உரையாற்றினார்.
கோவைக் கம்பன் கழகத் துணைச் செயலாளர் பேராசிரியர் க. முருகேசன் எழுதிய “ தெய்வமும் மகனும் “ என்ற நூலும், பேராசிரியர். சொ. சேதுபதி எழுதிய “ காரைக்குடியில் ஜீவா “ என்ற நூலும் வெளியிடப்பட்டது. சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் திரு. த. இராமலிங்கம் அவர்கள் வெளியிட திரு. திராவிட மணி அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். 
வழக்கறிஞர் திரு. இராமலிங்கம் அவர்கள் தெய்வமும் மகனும் பற்றி உரையாற்றினார்கள். தசரதன் இறப்புக்குப் பின்னும் ராமனுக்கு இரு வரங்கள் தருவதாகக் கூறியபோது ராமன் தந்தையிடம் தனக்கு கைகேயியும் பரதனுமே அடுத்த பிறவியிலும் தாயும் சகோதரனுமாகக் கிட்ட வேண்டும் என்ற வரத்தைக் கேட்டதாகக் கூறினார். தசரதன் கைகேயியை மனைவி அல்ல என்றும் பரதனை மகன் அல்ல என்று கூறி இறந்தபின் மேலுலத்திலிருந்து இவ்வரத்தைக் கேட்டதனால் இராமன் தன் சிற்றன்னை கைகேகியைத் தெய்வம் என்றும் சகோதரனை தெய்வத்தின் மகன் எனவும் கூறி அவர்களையே அடுத்த ஜென்மம் எடுத்தாலும் தாயாகவும் சகோதரனாகவும் பெற வரம் கேட்டார் என்பதனைச் சிலாகித்துக் கூறினார்.
பேராசிரியர் திரு. சொ சேதுபதி தான் எழுதிய காரைக்குடியில்  ஜீவா நூலைப்பற்றிய தனது நினைவலைகளைப் பகிர்ந்து கொண்டார்கள். 
பொன் விழாக் கொண்டாடிய புதுச்சேரி கம்பன் கழகத்தின் செயலாளர் திரு. வி. பி. சிவக்கொழுந்து அவர்களுக்குக் கம்ப வள்ளல் விருதை ஜட்ஜ் திரு சொக்கலிங்கம் வழங்கிப் பாராட்டினார்கள்.
மனிதத்தேனி திரு. சொக்கலிங்கம் கோவிலூர் ஆதீனகர்த்தர் திருப்பெருந்திரு மெய்யப்ப ஞான தேசிக சுவாமிகளுக்கு அவர்தம் தமிழ்க்கவிதை, திருக்குறள், ஆன்மீகம், கல்விப் பணிகளைப் பாராட்டி கம்பன் கழகம் பணிவுடன் அளிக்கும், காரைக்குடி தெ. இலக்குவன் நினைவைப் போற்றி அவர் தம் குடும்பத்தார் இவ்வாண்டு நிறுவியுள்ள, கம்பன் அடிப்பொடி விருதினைப் பாராட்டினார்கள். திரு. இலக்குவன் அவர்களின் மைந்தர்திரு தெய்வராயன் காந்தி அவர்களையும் , குறள் இலக்குவன் அவர்களின் துணைவியாரையும் மேடையில் அழைத்துக் கௌரவித்தார்கள்.
புதுச்சேரி கம்பன் கழகத்தின் புரவலராகவும் உள்ள திரு வி. பி. சிவக்கொழுந்து அவர்களின் தன்னடக்கத்தோடு கூடிய உரை எளிமையாகவும் அதே சமயம் நிறைவாகவும் இருந்தது.
திருப்பெருந்திரு மெய்யப்ப ஞான தேசிக சுவாமிகளின் உரை அருமையாக இருந்தது. தனக்கு அளிக்கப்பட்ட இவ்விருதை தோழர்கள் ( கம்பன் அடிசூடி, குறள் இலக்குவன் மேல் கொண்ட ) அன்பின் காரணத்தினாலேயே பெற்றுக் கொள்வதாகக் கூறினார்கள். இவர்கள் தற்போது ( திருவாசகம் முற்றோதல் , திருப்புகழ் முற்றோதல் போல ) திருக்குறள் முற்றோதல் நடத்தி வரும் விபரம் அறிந்து மகிழ்வடைந்தேன்.
கம்பன் அடிப்பொடி விருதினை ஜட்ஜ் திரு சொக்கலிங்கம் அவர்கள் திருப்பெருந்திரு மெய்யப்ப ஞான தேசிக சுவாமிகளுக்கு வழங்கிய போது.

செட்டிநாடு சிமெண்ட்ஸ் இயக்குநரும் நமது செட்டிநாடு இதழின் புரவலருமான திரு இராஜாமணி முத்து கணேசன் அவர்கள் அந்தமான் தீவில் கம்பன் கழகம் 2016 ஏப்ரலில் கூட்டும் மூன்றாம் உலகத் தமிழ்க் கருத்தரங்கச் செய்தியைக் கூறி விழா மடலை வெளியிட்டார்கள். இவர் தம் உரையில் கம்பன் பற்றிப் பேச இன்னும் அடுத்த தலைமுறை இளையர்களைத் தயார்ப்படுத்த வேண்டியதன் அவசியத்தை முன்னிறுத்திப் பேசினார்கள்.
விழாவில் பெயர் அச்சடிக்கப்படாமல் முதன் முறையாகக் கலந்து கொண்ட ஜட்ஜ் திரு சொக்கலிங்கம் அவர்களின் தலைமை உரை  ஆணித்தரமாக இருந்தது. திரு சகாயம் அவர்கள் கலந்து கொள்ள முடியாத காரணத்தால் கம்பனடிசூடியின் அன்பு வேண்டுகோளுக்கிணங்க இவ்விழாவுக்குத் தலைமை ஏற்று இவ்விழாவினைச் சிறப்பித்தார்கள் ஜட்ஜ் சொக்கலிங்கம் அவர்கள்.
கோட்டையூரைச் சேர்ந்த வள்ளல் பெருமகள் திருமதி வள்ளி முத்தையா அவர்கள் போட்டியில் வென்ற  மாணாக்கருக்குப் பரிசுகள் வழங்கிப் பெருமைப்படுத்தினார்கள்.
காரைக்குடியைச் சேர்ந்த ஆன்மீகச் செம்மல் திரு எஸ் எல் என் அவர்கள் மற்றும் பல பிரமுகர்கள் வந்திருந்தார்கள். கிருஷ்ணா கல்யாண மண்டபத்தின் உரிமையாளர் தேவகோட்டை திரு. சேவுகன் செட்டியார் அவர்களும் வந்திருந்தார்கள். ஒவ்வொரு மாதக் கூட்டத்திற்கும், ஆண்டுத் திருவிழாவுக்கும் கம்பன் கழகத்துக்காக இம்மண்டபத்தை அவர்கள் இலவசமாக வழங்கி வருவது பாராட்டுக்குரியது.

மேலும் இத்தமிழ்ப் பணியில் கம்பன் கழக சேவையில் நமது செட்டிநாடு இதழ், கோட்டையூர் வள்ளல் பெருமகள் வள்ளி முத்தையா அவர்கள், பொன்னமராவதி அன்னை மெடிக்கல்ஸ், சரஸ்வதி அறக்கட்டளை திரு. மாணிக்கவேலு செட்டியார் அவர்கள், நாட்டரசன் கோட்டை திருமதி விசாலாட்சி கண்ணப்பன் அவர்கள், சிங்கப்பூர் தமிழ் அன்பர், காரைக்குடி தெ.இலக்குவன் நினைவாக திரு. இல. தெய்வராயன் காந்தி அவர்கள், காரைக்குடி லெட்சுமி ப்ரிண்டர்ஸ் திரு. கண. சரவணன் அவர்கள் , ஸ்ரீவிசாலம் சிட்ஃபண்டு, மதுரை விஸ்வாஸ் கலை பண்பாட்டு அறக்கட்டளை ஆகியோரின் பங்களிப்பு பாராட்டுக்குரியது.

கம்பன் புகழ் வாழ்க !
கன்னித் தமிழ் வாழ்க. !
கம்பன் புகழ் பாடிக் கன்னித் தமிழ் வளர்ப்போம்.

முதலாம் நாளான மகநாளின் மங்கல நிகழ்வுகள் நற்பெருமாட்டி வள்ளல் பெருமகள் திருமதி வள்ளி முத்தையா அவர்களின் இல்லத்தில் இனிய விருந்துடன் இனிதாய் நிறைவுற்றன.


3 கருத்துகள்:

  1. படங்களும் பதிவும் மிகவும் அருமை. பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    //நாட்டியத் தாரகைகள் முன்னே செல்ல கம்பீர அணிவகுப்பில் ஸ்ரீராமரும் சீதையும் கம்பருடன் சேவை சாதித்து அருளினார்கள்.//

    நாங்களும் காணும் பாக்யம் பெற்றோம். மிக்க மகிழ்ச்சி :)

    {உங்களைத்தான் எந்தப்படத்திலும் சரியாக என்னால் காண முடியவில்லை என்பது ஓர் சின்னக்குறையாக உள்ளது.}

    பதிலளிநீக்கு
  2. நாந்தான் புகைப்படங்களை எடுத்தேன் விஜிகே சார். அதனால் நான் எந்தப் புகைப்படத்திலும் இடம் பெறவில்லை :) நன்றி விஜிகே சார் :)

    பதிலளிநீக்கு
  3. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)