ஞாயிறு, 20 செப்டம்பர், 2015

கம்பன் கழகம் - சொ சொ மீ யின் பாராட்டுரை. மூன்று தாமரைகளும் பிள்ளையார்களும்.

எங்கள் கல்லூரியின் முத்தழிச் சங்கத்தில் கேட்டு ரசித்த சொ சொ மீ அவர்களின் உரையைப் பல்லாண்டுகளுக்குப் பின் கம்பன் கழகத்தில் கேட்டு ரசித்து மகிழ்ந்தேன். தழிழ்த் தேனை மாந்தி மகிழ்ந்தேன் என்பது சாலப் பொருந்தும் :)
குழந்தைக் கவிஞருக்கு கம்பன் அடிப்பொடி விருது வழங்கப்பட்ட நாளில் திருமந்திரச் சொல்மணி திரு சொ சொ மீயின் உரை மிகச் செறிவானதாக இருந்தது. மூன்று தாமரைகளையும் இரண்டு பிள்ளையார்களையும் அவர் ஒருங்கே உவமைப்படுத்திய விதம் சுவையானது.

கம்பன் அடி சூடியின் உரைக்குப் பின் தன்னுடைய உரை அமைந்ததால் அது இலக்கியமழைக்குப் பின்னே சிதறும் தூவானம் என்று குறிப்பிட்டார்.



செட்டிநாடே திரண்டிருக்கும் இவ்விழாவில் கண்டனூரின் வைரப்பொட்டுகளாய் மேனாள் அமைச்சரையும் குழந்தைக் கவிஞரையும் அருளாடிகளையும், விடி விஆர் அவர்களையும் குறிப்பிட்டார்.

கண்ணன் குழந்தையாயிருந்தபோது மூன்று தாமரைகள் ( கைத் தாமரை, முகத் தாமரை, கால் தாமரை ) ஆகியன ஒன்று சேர்ந்தன.( கையால் காலைப்பற்றி வாயில் வைத்தபோது இந்த மூன்று தாமரைகள் ஒன்று சேர்ந்திருக்கலாம் என நினைக்கிறேன். )

தூய்மைக்கு மறுபெயர் கம்பன் அடிப்பொடி. ஒரு தாமரை.

”மனக்கோயில் வாழும் உமையே” - என வாரியார் மதிப்புரை மன்னும் மலர்க்கோயில் வாழும் உமையம்மை சுமந்த செல்ல கணபதி சீரோங்கி பேரோங்கி வல்லவரும் வாழிநிதி வாழ்த்தும்  செல்ல கணபதி இரண்டாவது தாமரை.

உலகம் போற்றும் மாண்புடைய மாமேதை - ப. சிதம்பரம் .

கள்ளமற்றுக் கலகலத்துப் பேச்சுக் கேட்கும்
கோபுரத்தின் வடிவம் போல் குறுங்க நிற்கும்.
வெள்ளையன்று வேறு நிறம்  அறியா ஆடை
....

குலவு தமிழ்ச் சிதம்பரத்தை நினைவு கூர்ந்தால்..

இவர் நடத்திய ”இலக்கியச் சிற்றலை”,   ”எழுத்து”  ஆகியிருக்கிறது. இவர் மூன்றாம் தாமரை. இந்த மூன்று தாமரைகளும் இங்கு இன்று ஒன்று சேர்ந்தன.

கண்ணனின் மூன்று தாமரைகள் ஒன்று சேர்ந்தது போல  இந்த கிருஷ்ணா கல்யாண மண்டபத்தில் ( காரைக்குடி ) இந்த மூன்று தாமரைகளும் ஒன்று சேர்ந்தன.

-- என்று கூறிச் சிறப்பித்தார்.

*******************************************************

மேலும் இரண்டு பிள்ளையார்களைப் பற்றி அடுத்துக் கூறினார். அதில் முதலில் குனித்த புருவமும் என்ற பாடலை வைத்து முழு தேவாரத்தையும் தொகுக்கக் காரணமானவன் ராஜராஜ சோழன். அந்த தேவாரம் எங்கே இருந்தது என்றால் சிதம்பரத்தில் அதுவும் பொல்லாப் பிள்ளையாரிடத்தில். அந்தப் பொல்லாப் பிள்ளையார் -- பொள்ளாப் பிள்ளையார் ( உளி கொண்டு செதுக்காத மூர்த்தி ) சா . கணேசன்.

நம்பியாண்டார் நம்பி - திருமுறை கண்ட விநாயகர். - செல்ல கணபதி.

பரண் முழுக்க ஏடுகள். பாதி கரையான் அரித்துவிட்டன. அப்பர் சம்பந்தர் சுந்தரர் கைச்சாத்து வைக்கப்பட்டவை. எனவே அவர்கள் வந்தால்தான் தருவோம் என அங்கே இருந்த தீக்ஷிதர்கள் கூறவும். அவர்கள் மூவரின் தெய்வீகத் திரு உருவத்தையும் உருஎழுந்தருளப் பண்ணிவிட்டார்கள். அதன் பின் தீக்ஷிதர்கள் அனுமதிக்க ( நீரறியும் நெருப்பறியும் ) மிச்ச சொச்ச 8000 பாடல்கள் 8 % . மட்டுமே காப்பாற்றப்பட்டன. எல்லாப் பாடல்களும் தெரிஞ்ச ஓதுவார் யாருமே கிடையாது.

இதில் ஒரு பிள்ளையார் பொல்லாப் பிள்ளையார் -  கம்பன் அடிப்பொடி. சா. கணேசன் அவர்கள்.

இன்னொரு பிள்ளையார் திருமுறை கண்ட விநாயகர். - குழந்தைக் கவிஞர் செல்ல கணபதி.

இது நடந்த இடம் சிதம்பரம். இங்கே மேனாள் அமைச்சர் சிதம்பரம் அவர்கள் கம்பன் அடிப்பொடி  ( பொல்லாப் பிள்ளையார் ) விருதை குழந்தைக் கவிஞருக்குச்( திருமுறை கண்ட விநாயகருக்கு )  சூடுவது சிறப்பு.

கம்பராமாயணத்தில்

அழகெல்லாம் ஒருங்கே கண்டால் யாவரே ஆற்ற வல்லார் - என்று கம்பனாலேயே  அதிசயக்கப்பட்ட சீதை நவ வியாகரணப் பண்டிதனான ஆஞ்சநேயரை வாழ்த்துகிறாராம்.

 “ பாழிய பணைத்தோள் வீர துணை இலேன் பரிவு தீர்த்த
வாழிய வள்ளலே! யான் மறு இலா மனத்தேன் என்னின்
ஊழி ஓர் பகலாய் ஓதும் யாண்டு எலாம், உலகம் ஏழும்
ஏழும் வீவுற்றஞான்றும் இன்று என இருத்தி “ என்றாளாம். இன்று போல் என்றும் சிரஞ்சீவியாக இருக்க வாழ்த்தினாளாம். ( அவர் இன்றும் இமயமலையில் கைலாசத்தில் உள் பரிக்ரமாவில் வாழ்கிறாராம் ).

“ நிதியோடும் கலைமகளோடும், குழந்தைகளோடும் பழனியப்பா பிரதர்களோடும் இந்த மக்களின் ஆசியோடும் கண்டனூர் மக்களின் அன்போடும் என்றும் வாழ்க என சீதை ஆஞ்சநேயரை வாழ்த்தியது போல செல்லகணபதியை வாழ்த்துவதாக கூறினார்.

-- கம்பன் விழாவை தொடர்ந்து இதேபோல் மிகச் சிறப்பாக நடத்திவரும் ( கம்பன் அடிசூடி ) உங்களிடம் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது. மேலும் சிறப்பாக ஓங்கட்டும் என்ற வாழ்த்தோடு தனது பாராட்டுரையை நிறைவு செய்தார்.

-- கம்பன் அடி சூடி “ தமிழ்த் தாயை கற்கோயிலிலிருந்து சொற்கோயிலுக்குக் கொண்டு வந்த சொ சொ மீக்கு நன்றி கூறினார். அந்தமான் தீவில் மே மாத முடிவுக்குள் கம்பன் தமிழ் ஆய்வு நூலகம் அமையவேண்டும். என்றும் கூறினார்.

-- பேராசிரியர் சொ. சேதுபதி அவர்கள் விருதுப்பா வழங்கினார்கள்.

-- அடுத்து விருது வழங்கி சிறப்புரை ஆற்றிய மேனாள் நிதியமைச்சரின் உரையைப் பகிர்வேன்.


4 கருத்துகள்:

  1. அருமை
    விழாவினை நேரில் கண்ட உணர்வு
    தொடர்கின்றேன் சகோதரியாரே

    பதிலளிநீக்கு
  2. அருமை. விழா பற்றிய தகவல்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  3. நன்றி ஜெயக்குமார் சகோ

    நன்றி வெங்கட் சகோ

    பதிலளிநீக்கு
  4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)