வெள்ளி, 23 மே, 2014

அன்ன பட்சி அறிமுக நிகழ்வில் இயக்குநர் திரு செல்வகுமார்.

இயக்குநர் திரு ஐஎஸ் ஆர்  செல்வகுமார் நான் 2009இல் வலைப்பதிவு எழுத வந்ததில் இருந்து நண்பர். என்னுடைய முதல் இரண்டு புத்தகங்களையும் வடிவமைத்தவர் அவர். என்னுடைய இரு கவிதைகள தனி இசைப்பாடல்களாகக் கொண்டு வந்தவர். இன்னும் பலருடைய கவிதைகளுடன் என்னுடைய நாலு வரிகளையும் சேர்த்து மூன்றாவதாக ஒரு பாடலையும் கொண்டு வந்திருக்கிறார்.


என்னுடைய முன்னேற்றத்தில் என்றும் அவருக்குப் பங்குண்டு. ஊக்கமூட்டும் வார்த்தைகளுக்குச் சொந்தக்காரர். முதலில் வலைத்தளம் எழுதிவந்த போது குமுதம் விகடனுக்கு அனுப்புங்கள் பிரசுரமாகும் என்பார். அனுப்பினேன். வந்தது. ! அதன் பின் புத்தகங்கள் போடுங்கள் என்றார். அதுவும் நடந்தது.. போட்டேன் !!. இப்போது நாவல் எழுதுங்கள் என்று சொல்லி இருக்கிறார். பார்க்கலாம் எழுதுவேனா என்று. ஏனெனில் இதுவரை அவர் சொன்னதை நடக்கும் என்று நம்பி இருக்கிறேன். நடந்தது. ஆனால் நாவல் விஷயத்தில் இது நடக்குமா என்று பார்க்கவேண்டும். ஏனெனில் 1 நிமிஷத்தில் 10 இல் இருந்து 30 வரி வரை உள்ள கவிதை ஒன்றை எழுதி முகநூலில் லைக் வாங்கும் எண்ணமே மேலோங்கி இருக்கிறது. ஒன்றை முழுமையாக அமர்ந்து எழுத சிந்தனைச் சிதறல்கள் இடமளிப்பதில்லை. :)

அவர் என்னுடைய அன்னபட்சி புத்தக அறிமுக நிகழ்வில் புத்தகம் பற்றி விமர்சகராய்ச் சில கருத்துக்கள் கூறவேண்டும் என விரும்பினேன்.  (ஏனெனில் நூலில் அவர் பெயரைக் குறிப்பிட்டு நன்றி சொல்லி இருக்கிறேன். ). எனவே ஏதும் எதிர்க்கருத்து சொல்ல மாட்டார் என்ற நம்பிக்கைதான்.

அவரும் வந்திருந்து அழகான மொழியில் சரளமாகப் பேசினார். தின ஓவியம் என்ற கவிதை முகநூல் பாதிப்பில்.. ஏன் அநேகக் கவிதைகள் முகநூல் பாதிப்பில் உருவாகி இருக்கலாம் என்று சொன்னார். மேலும் தான் இயக்குநராக இல்லாமலே இயக்குநர் என்று அனைவரும் பேரோடு சேர்த்து விடுவதாகக் கூறினார். அவர் என்ற படத்தை அவர் இயக்கிக் கொண்டிருக்கிறார். இன்னும் இரு ஆங்கிலப் படங்களிலும் பணி புரிந்திருக்கிறார். ஏறத்தாழ 40 தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு இயக்குநராக இருந்திருக்கிறார். இப்போது புதிய தலைமுறையின் ரிஷி மூலம் என்ற நிகழ்ச்சியின் இயக்குநர் இவர்தான். ” யாதுமானவள், பிரியாணி “ என்ற குறும்படங்களைத் தயாரித்து இயக்கி இருக்கிறார். மேலும் புதிதாக ஒரு திரைப்படத்தை இயக்கும் முயற்சியில் இருக்கிறார்.

இவர் வந்து என்னுடைய நூல் பற்றியும் என்னைப் பற்றியும் வாழ்த்துக் கூறியது குறித்துப் பெருமிதமாய் உணர்கிறேன். நன்றி செல்வம். வேறென்ன சொல்வது நண்பர்களுக்கு இடையில்.. :)

3 கருத்துகள்:

  1. // முகநூலில் லைக் வாங்கும் எண்ணமே மேலோங்கி இருக்கிறது...//
    உண்மை - ஆனால் மாற வேண்டும்...

    பதிலளிநீக்கு
  2. நன்றி தனபால் சகோ. என்ன செய்வது மாற்றிக் கொள்ள வேண்டும்தான் :)

    பதிலளிநீக்கு
  3. மிகச் சந்தோஷம் தேன்..தனபாலன் சொல்லி இருப்பது உண்மை. உங்கள் நாவல் உயிர் பெறவேண்டும். வெளிவரவேண்டும்.அன்பு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)