திங்கள், 7 ஏப்ரல், 2014

நிழல்களை எரித்த நிஜங்கள்.



நிழல்களை எரித்த நிஜங்கள்:-
===============================

சந்தானம். சந்தானம். ஹூம் இந்தப் பெயரை எங்கேயோ கேள்விப்பட்டிருக்கின்றேன். நல்ல பரிச்சயம் கூட. எங்கே எங்கே .. என்று பாலகுமாரனின் ”மௌனமே காதலாயில்” வந்த  கதாநாயகன் பெயரைப் படித்துவிட்டு மனதினுள் தேடினாள் சுசீ.

“ஹாங்.. வந்துவிட்டது. கோ எஜுகேஷனில் எட்டாப்பூப் படிக்கும்போது எதுக்கெடுத்தாலும் என்னோட போட்டி போடுற சந்தான ராமன். வெள்ளையாய்ச் சிரித்துக் கொண்டு, வெள்ளையாய் அணிந்து கொண்டு, வெள்ளையாய்க் காண்பித்துக் கொண்டு எதுக்கெடுத்தாலும் படிப்பு, டிராமா, விளையாட்டுப் போட்டி அத்தனையிலும் போட்டி போடும் சந்தானம். தினம் அழகாய் உடையணிந்து கொண்டு நெற்றியில் கீற்றுப் பிறையாய் சந்தனத்துடன் வரும் சந்தானம்..

”கேர்ள்ஸ் லீடர்ஸ் எல்லாம் பாய்ஸ் லீடர்ஸ்கிட்ட குளோரின் தயாரித்தல் ஒப்பிக்கணும். பாய்ஸ் லீடர் எல்லாம் கேர்ள்ஸ் லீடர் கிட்ட ஒப்பிக்கணும். யாராவது தப்பாச் சொன்னா எங்கிட்ட வந்து சொல்லுங்க.” என்று கூறிவிட்டு மேஜை மேல் கையைக் கோர்த்துத் தலையைக் கவிழ்த்த நாகநாதன் வாத்யார் மேல் எரிச்சலாய் வந்தது சுசீக்கு.

அவள் குளோரின் தயாரித்தல் சரியாகப் படிக்கவில்லை. கேர்ள்ஸ்  தன்னிடம் ஒப்பிக்கும்போது மனப்பாடம் பண்ணிக் கொள்ளலாம் என்று அஸால்ட்டாய் இருந்து விட்டாள் வாத்தியார் இப்படி இப்பவே ஒப்பிக்கச் சொல்லுவார் என்று தெரிந்திருந்தால் நன்றாகப் படித்திருக்கலாமே. 

ஐயய்யோ இந்த சந்தானப் பாவியிடமா ஒப்பிக்க வேண்டும். இப்படித் தெரிந்திருந்தால் காலம்பற தண்ணி குடிக்கிற இண்டர்வெல்லில் அவன்கிட்டத் தகராற்ப் பண்ணாம டம்ளரைக் குடுத்திருப்பேனே. போச்சு போச்சு. இன்னைக்குப் பெஞ்சுதான். சந்தானம் மட்டும் தனியாக நின்று தட்டியின் ஓரத்தை நகத்தால் கீறிக் கொண்டிருந்தான். சகுந்தலா சீனிவாசனிடம் ஒப்பித்துக் கொண்டிருந்தாள். மீனாட்சி சிவகுமாரிடம் ஒப்பித்துக் கொண்டிருந்தாள்.

கொஞ்சம் தடுங்கி, நிறைய தட்டுத் தடவிக் குளோரின் தயாரித்தலில் பாதி முடித்தாகி விட்டது. “குளோரின் வாயு காற்றைக் கீழ்முகப் பெயற்சி செய்து ஊம் ஊம் மேல் முகப் பெயர்ச்சி செய்து.. “ என்று கூறி அவன் முகத்தைப் பார்த்துத் திருதிருத்துக் கொண்டிருந்தாள். ’டேய் .. டேய்.. ப்ளீஸ் சொல்லிடாதேடா என்று ஒரு பார்வை..’ அவன் முகத்தில் லேசாய் ஒரு சந்தோஷம் அரும்பியது.

‘வா.. வா.. டம்ளரைக் காலம்பற என் கையில கொடுக்காம ராமசுவாமி கையில கொடுத்தீல்ல..” “ சார் இந்த சுசித்ரா சரியா ஒப்பிக்கலை சார் “ என்று ஒரு கூவல் விடுத்தான் சந்தோஷ மிகுதியால். தூக்கம் கலைந்து போனதால் கடுப்புடன் எழுந்தார் ஸயன்ஸ் வாத்தியார். ஆத்திரமாய் வந்தது சுசிக்கு. 

“ ஏய் நாந்தான் ஒப்பிச்சுட்டேனே முக்கால்வாசி .. முடிக்கிறப்பத்தானே .. சார் நான் முடிச்சுட்டேன் சார்..” என சுசீயின் குரல் தேய்ந்து ஒலிக்க “இல்லை சார் “ என சந்தானம் கத்த சுசீ முறைக்க, மூக்கை விடைக்க அதைப் பார்த்து சந்தானம் ,”ஏய் இந்த முறைப்பெல்லாம் எங்கிட்ட வச்சுக்காத “ என சந்தானமும் மூக்கு விடைத்துக் கத்த, சுருசுருவென்று கோபம் தலைக்கேற வாத்தியார் எழுந்து ”ரெண்டு பேரும் போய் எழுந்து பெஞ்சுமேல ஏறி நில்லுங்க..” என்றலறி விட்டுப் பொசுக்கென்று மேசையில் முகம் புதைத்தார்.

‘குர் குர்’ ரென்று கொஞ்ச நேரத்துக்கு ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் காட்டமாய்ப் பெஞ்சு மேலேறி நின்று பார்த்துக் கொண்டிருந்தார்கள். 

ஹெட்மாஸ்டர் டெய்லி ரவுண்ட்ஸ் அன்றைக்கென்று மத்யானம் வந்தார். “ சார்.. சார்..” எரிச்சலாய் எழுந்த வாத்தியாரின் கண்ணில் ஹெட்மாஸ்டரின் பிம்பம் கசகசங்கலாய்த் தெரிந்தது. கலகலத்துப் போய், குப்புறப் படுத்ததால் மூக்கு ‘ஙங்’கென்று அமுங்கிப் போய், டேபிளைப் பிடித்துக் கொண்டு, டஸ்டரை எடுத்துக் கொண்டு தடுமாறிய வாத்தியாரைப் பார்த்து சந்தானமும் சுசியும் தம்மையறியாமல் ஒருத்தரை ஒருத்தர் பார்த்து நமுட்டுத் தனமாய்ச் சிரித்துக் கொண்டார்கள்.

பள்ளிக்கூட ஆண்டுவிழாவில் சத்யவானாக சந்தானமும், சாவித்ரியாகத் தானும் நடித்தது ஞாபகம் வந்தது. அந்த டிராமாவில் மீனாட்சி சாவித்ரியாக நடிக்க வேண்டுமென்று எவ்வளவு டிரை பண்ணினாள். ஆனால் அவளுக்கு வசனம் மறந்துபோய் விட்டது. மேற்கொண்டு அவள் குண்டானதால் பாதி மூச்சிறைத்தது. நகைகள் , தோள்வளைகள் அத்தனையும் கச்சிதமாகப் பொருந்தி, அழகாய் மேடையில் தோன்றி சாவித்ரியாக நடித்து அப்ளாஸ் மேல் அப்ளாஸாக வாங்கிக் குவித்தாள் சுசி. மீனாட்சிக்கு சுசி மேல் ரொம்பக் கோபம்.. ஏனெனில் சந்தானம் அப்பிடி இப்பிடிச் சுற்றி அவளுக்கு அத்தானாக ஆக வேண்டும். இதை நினைத்து எத்தனை தரம் சுசி விழுந்து விழுந்து சிரித்திருக்கிறாள்.

பள்ளிக்கூட விளையாட்டு மைதானம். சாயந்திர நேரம். போட்டி முடிவுகள் தெரிவிக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்படும் நேரம். ஆண்கள் 100 மீ ஓட்டப் போட்டியில் ரா. சந்தான ராமன். பெண்கள் 100 மீ ஓட்டப் போட்டியில் முதல் பரிசு பா.சுசித்திரா. உயரத் தாண்டுதல், நீளத் தாண்டுதல், எல்லாவற்றிலும் முதல் பரிசு ஆண்களில் அவனும், பெண்களில் அவளும்.

இத்தனை வருடம் கழித்து இன்றைக்குப் பார்த்தால் சந்தானம் எப்படி இருப்பான். ? ஹூம். ஜோராய் டை கட்டிக் கொண்டு ஆஃபீஸ் போய் அதிகாரம் பண்ணும் மேனேஜராய், கோர்ட்டில் வாதிடும் வக்கீலாய், ஆபரேஷன் சக்ஸஸ் என்று சொல்லிச் சிரிக்கும் வெண்ணிற கோட் டாக்டராய்,” எஸ் ஐயாம் த சயிண்டிஸ்ட் ஆர். எஸ். ராம்.” என்று கூறி மூக்குக் கண்ணாடியைத் தூக்கிவிட்டுக் கொள்ளும் விஞ்ஞானியாய்க் கற்பனை பண்ணிப் பார்த்தாள் சுசி. ஹூம் அவனுக்கு எந்த டிரஸ்ஸும், எந்த போஸ்டும் பொருத்தமாகத்தான் இருக்கும். அவனைப் பார்க்கவேண்டும். எப்படி இருப்பான் இப்போது, அவன் ஒரு குழந்தையின் கையைப் பிடித்துக் கொண்டு வர அவன் மனைவி ஒரு குழந்தையை இடுப்பில் சுமந்துவர ஒரு அமைதியான மகிழ்ச்சியான குடும்பஸ்தனாய்… அவனுக்குக் கல்யாணம் ஆயிருக்குமா..? இவ்வளவு அழகான அவனுக்கு, திறமையான அவனுக்கு, மனைவியாய் வாய்த்தவளும் அழகாய் இருப்பாளா..

அவளைப் பார்த்தால் சயின்ஸ் வாத்தியாரின் திரு திரு முழிப்பை, மீனாட்சியின் அர்த்தமில்லாத கோபத்தைச் சொல்லிச் சொல்லிச் சிரிக்க வேண்டும். மேலும் டீபார்ட்டியில் நடந்த ஜோக்குகளை, பிரிவுபசாரங்களை, தங்களின் சண்டைக் கோழிக் குணத்தைச் சொல்லிச் சிரிக்க வேண்டும்.

டீ குடித்துவிட்டு ரிசப்ஷனைத் தாண்டிய போது வாரவிஜயன் இதழின் டைரக்டர் ராகவ் அவளின் முதலாளி அவளைக் கூப்பிட்டதாக ரிசப்ஷனிஸ்ட் ராஜஸ்ரீ கூறினாள்.

ராகவ் சொன்னார்., “ சுசீ இன்னைக்கு செண்ட்ரல் ஜெயில் போய் அங்குள்ள கைதிகளைப் பேட்டி கண்டு ஒரு ஆர்டிகிள் கமிங் ஸண்டே நம்ம வார விஜயனுக்குக் கொடுக்குறே. நான் ஜெயிலர்கிட்ட பர்மிஷன் வாங்கிட்டேன். போம்போது இந்த யாஷிகா காமிராவையும் எடுத்துப் போ. ரெண்டு மூணு ஸ்நாப்ஸ் எடுத்துக்கோ. த்ரி ஓ க்ளாக்குக்குள்ள அந்த ஆர்டிகிளை எடிட்டர் சுவாமிகிட்ட கொடுத்துடு. “ உற்சாகமாய்க் கிளம்பினாள். ஒவ்வொருத்தனின் கதையும் டிஃபரண்டாய் .. கேட்க சுவாரசியமாய் இருக்கும்.

பெரிய இரும்புக் கிராதிக் கதவுகள் மூன்றைக் கடந்து உள்ளே போனாள்.. அவளுக்குச் சிரிப்பு வந்தது. ‘கொள்ளை, கடத்தல், கொலை புரிந்துவிட்டு இவர்கள் உள்ளே வந்திருக்கிறார்கள். ஒன்றுமே செய்யாமல் நானும் அரைநாள் சிறைவாசம் அனுபவிக்கிறேன்.

ஜெயிலர் யூனிபார்மில் நின்றார். “ இப்படியே போனால் கைதி ரூம்கள் ரோ ரோவாக வரும். “ என்று கூட்டிக் கொண்டு போனார். இந்தக் கைதிகளாவது என்றைக்காவது ஒருநாள் விடுதலையாகிப் போவார்கள். பாவம், இந்த ஜெயிலர், ஒரு தப்பும் பண்ணாமல் ஆயுள் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கிறார். 

தூரத்தில் ஒரு கைதி போய்க்கொண்டு இருந்தான். கூப்பிட்டதும் தாடியும் மீசையும் பரட்டைத் தலையும் சீழ் வடிந்து கட்டுப் போட்ட காலுமாய் இழுத்து இழுத்து வந்தான். ” இவன் சொத்து மூழ்கிப் போச்சு குடியினால. பொண்டாட்டி புள்ளை நகையை வித்தான். தொல்லை பொறுக்காம அவ அம்மா வீட்டுக்குப் போயிட்டா. நாலு வருஷத்துக்கு முன்னாடி கடத்தல் கேசுல மாட்டினான். ரெண்டு வாரம் முன்னாடி ரிலீசாகிப் போனவாரம் ஒரு பெண்ணோட தாலிச் செயினை அறுத்துக்கிட்டு ஓடும்போது மாட்டிக்கிட்டான். ஸ்மக்கிளிங் கேஸ் இவன் மேலே நெறைய இருக்கு. கால்ல, ஒரு பழக்கடைக்காரர் இவன் தப்பி ஓடும்போது பழக் கத்தியை எறிஞ்சிருக்கார். “ அவளின் லெட்டின் கூர்முனை பேப்பரைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தது. “ இவர் பெயரென்ன..? “ “ என்னவோ ராமன். என்னது ஆங்.. சந்தான ராமன் ..”

சடாரென்று “ என்னது ஜிவிஎமெஸ் ல படிச்ச சந்தானமா..” என்று கேட்டாள். அவன் திகைத்து விழித்தான். தட்டுத் தடுமாறிக் கரகரத்த குரலில் ,” நீ.. நீங்.. நீங்க சுசியா..? “ என்று கேட்டுக் குரல் கம்மக் கண் கலங்கப் பார்த்தான். 

“நீயா.. நீயா.. “ என சுசி அதிர்ந்து போனாள்.  அவளுள் இன்சினியர் , டாக்டர், சயிண்டிஸ்ட், ஆஃபிசர் எல்லாரும் வந்து பாம் வைத்த ஸ்கெலிடன் மாதிரித் தூள் தூளாகிச் சிதறினார்கள். ஊகும் முடியாது.. இனிமேல் தன்னால் பேட்டியைத் தொடர முடியாது. போய் ராகவ் இடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்ள வேண்டும். தனக்குப் பதிலாக ராஜ்குமாரை வரச் சொல்ல வேண்டும். ‘ பாறையாய் இறுகி சிறையின் கடைவாயிலைத் தாண்டிய சுசிக்குத் தன்னால் இனிமேல் சிரிக்கவே முடியாது என்று தோன்றியது. மத்யான வெய்யிலிலிருந்து தப்பித்துக் கொள்ள, முதன் முறையாக சிரிப்பை மறந்த வாயுடன் எதிரே இருந்த பஸ் ஸ்டாப்பிற்கு ஓடினாள். 

டிஸ்கி :- 1984 இல் எழுதியது.
மார்ச் 15 - 31, 2014, அதீதத்தில் வெளிவந்தது.

7 கருத்துகள்:

  1. அருமையான சிறுகதை. கனவுகளும் கற்பனைகளும் கலைந்து சுக்கு நூறாகப் போகும் தருணம் நன்கு பதியப்பட்டுள்ளது.

    பதிலளிநீக்கு
  2. முடிவை எதிர்பார்க்கவில்லை...........

    பதிலளிநீக்கு
  3. நன்றி உமேஷ்

    நன்றி மஹேஷ்

    நன்றி குமார்.

    பதிலளிநீக்கு
  4. உண்மையிலேயே அசந்து போயிட்டேன் தேன் , சஸ்பென்ஸ் குறையாமல் ரியலி சூப்பர்--சரஸ்வதிராசேந்திரன்

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)