சனி, 15 மார்ச், 2014

பண்ணையாரும் பத்மினியும். எனது பார்வையில்




பண்ணையாரும் பத்மினியும். :_

கார் என்பது இன்றைய மத்தியதரக் குடும்பங்களின் கனவாக இருக்கிறது.ஒரு கார் இருந்தா போதும் எங்க வேணாலும் போகலாம். இந்த பஸ், ட்ரெயின் ப்ளைட் டிக்கெட் வாங்கும் அவஸ்தை எல்லாம் இல்லை. ஆனால் பெட்ரோல் விலைதான் ஏறிப் போச்சு. செல்ஃப் ட்ரைவிங் செல்லத் தெரியாவிட்டால்.ட்ரைவரிடம் விட்டால் இன்னும் என்னென்ன கேடு வேறு அதற்கு நிகழுமோ. இந்த பயமும் அனைவரிடமும் உண்டு. அனைவருக்கும் இருக்கும் இந்தக் கார் ஆசையை மெயின் தீமாக வைத்துக் கதை சொன்ன அருண் குமாருக்கும் தயாரித்த கணேஷ் குமாருக்கும்  முதலில் ஒரு ஹேட்ஸ் ஆஃப். 

 எங்கள் அப்பத்தா வீட்டு ஐயாவிடம் 40 கார்கள் இருந்ததாம். ஆஸ்டின், செவர்லெட், பத்மினி , ப்ளைமவுத், அம்பாசிடர் என்று. அப்ப உள்ள கார்கள் எல்லாம் பிரம்மாண்டமாய் இருப்பதால் அதன் உள்ளே பிள்ளைகள் அமர ரெட்டு சீட்டுப் போட்ட மடக்கு ஸ்டூல்கள் இன்னும் என் அம்மா வீட்டில் இருக்கின்றன. 


உயிருள்ள உறவுகளையே மதிக்காதவர்கள் கூட அவர்களுக்குப் பிடித்த உயிரற்ற பொருட்களிடம் அளவற்ற நேசம் வைத்திருப்பார்கள். மனித நேயமிக்க ஒரு கிராமத்துப் பண்ணையார் முதன் முதல் ஒரு காரைப் பார்த்துக் காதல் வயப்படுகிறார். ! அது உடனே அவருக்குக் கிட்டியும் விடுகிறது. அதனோடான எண்ணப் பின்னல்களே கதை. 

அவர் மட்டுமல்ல. அதை முதன் முதல் ஓட்டக் கற்றுத் தர வரும் விஜய சேதுபதியும் பண்ணையாரின் ( ஜெயப்ரகாஷ் ) மனைவி துளசியுமே கூட அதை நேசிக்கத்துவங்குகிறார்கள்.

பண்ணை வீடும் வேலையாட்களும், பண்ணையாரும், துளசியும் அவரின் மர்மப் புன்னகைகளும் நொடிப்பும்  கண்ணும் கணவரை நேசிப்பதும் அழகு,  

யுத்தம் செய் போலவே இதிலும் பண்ணையாராக ஜெயப் பிரகாஷின் நடிப்பு அருமை. கார் ஆக்ஸிடெண்ட் ஆனதும் அவர் முகத்தில் ஏற்படும் பதற்ற உணர்வு ஏ க்ளாஸ்.

துளசி ரஜனியின் மகளாகவும் மகாநதியில் கமலுடன் நடித்திருக்கிறார். ஆனால் இதில் உண்மையாக வாழ்ந்திருக்கிறார். நடிப்பில் கூட நிறைவான வாழ்க்கை முத்திரை பதித்திருக்கிறதோ எனத் தோன்றியது. கணவரை வாய்யா போய்யா என அழைப்பதுதான் ஒட்டவில்லை. எல்லா கிராமத்துக்காரர்களும் அப்பிடியா கூப்பிடுகின்றார்கள். 

நீலிமா ராணியைத்தான் வில்லி ஆக்கி விட்டார்கள்.நடிப்பு ஒட்டினாலும் அது உண்மை போல ஒட்டவில்லை. பண்ணையார் தனக்குச் சமமான இடத்தில் தானே பெண்ணைக் கொடுத்திருப்பார். மேலும் தந்தையின் நற்குணங்களில் சிறிதும் ஒற்றைப் பெண்பிள்ளையிடம் இருக்காதா. 

பழைய போனைக் கொண்டு போய் அவர் என்ன செய்வார்.. ஹ்ம்ம் நாங்கள் ஊர் ஊராய் மாறும் போதெல்லாம் பி எஸ் என் எல் போனை என்ன செய்வது எனத் தெரியாமல் தூக்கிக் கொண்டே அலைந்திருக்கிறோம். அவருக்குக் கார் ஆக்ஸிடெண்ட் ஆனது என்று தந்தையிடம் கோபிக்கும்போது கூட யாருமே பதறவில்லை. அவ்வளவு கார் மோகம்.

ஒனக்காகப் பிறந்தேனே எனதழகா சில மாதங்களாகவே நான் அடிக்கடி முணுமுணுக்கும் பாடல். ஒவ்வொரு கணவனும் மனைவியும் தங்களை நெருக்கமாக எண்ணும்போது இந்தப் பாடல் தங்களுக்கானது என்று உணர்வார்கள். ஜஸ்டின் பிரபாகரன் இசை அருமை.பின்னணி இசையும் கூட.

ஐஸ்வர்யா ராஜேஷ் அளவான நடிப்பு. ஹாலிவுட் படங்கள் போல கடைசியிலாவது இவரை ஜொலிக்கச் செய்து விடுவார்கள் என்று பார்த்தால். கடைசி வரை அதே பாவாடை, தாவணி, ரிப்பன். ( நல்ல வேளை ரிப்பன் குப்பன் என்று குத்துப் பாட்டு ஏதும் போடவில்லை. ). வித்யாசமாக இழவு வீட்டு நிகழ்வில் அறிமுகமாகும் ஹீரோயினை ஹீரோ பார்க்கிறார். அசந்தர்ப்பமாகக் காதல் கொள்கிறார். ஆனால் பாடலும் காட்சியும் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம் நீளம். பொறுமையைச் சோதிக்கும் அளவு.

விஜய் சேதுபதி பண்ணையாருக்குக் கார் ஓட்டக் கற்றுக் கொடுத்து விட்டால் கார் தன்னை விட்டுப் போய்விடுமோ என்று கொந்தளிக்கும் இடத்தில் அருமையாக நடித்திருக்கிறார். கிராமம் என்றால் ஹீரோக்கள் இந்த தாடியையும் மீசையையும் சுப்ரமணியபுரத்திலேருந்து விடவே மாட்டேன் என்கிறார்களே. காதல் கெமிஸ்ட்ரி பிசிக்ஸ் என்று எதுவுமில்லாமல் ரொம்ப யதார்த்தமாக இருக்கிறது. ஐஸ்வர்யா ராஜேஷின் கண்கள் அதிகம் பேசுவதற்கு சாத்தியக் கூறு இருந்தும். 

பால சரவணனோட காரெக்டர் நல்லா இருந்தும் அவரை பீடை என்று அழைப்பது என்னவோ போலிருந்தது. 

காதல் , காமெடி எல்லாமே அளவாக இருக்கிறது. இன்னும் கொஞ்சம் போட மாட்டார்களா என்று எண்ணுமளவு. குழந்தைகளுக்கு லேசா இஞ்சி பூண்டு மசாலாவைப் பேருக்குத் தடவி செய்யும் சிக்கன் லாலிபாப்/ பாப்கார்ன் போல இருக்கிறது. என்னது அதுக்குள்ள முடிஞ்சு போச்சா அப்பிடின்னு கேக்கும் அளவு. குடி,சிகரெட், ஐட்டம் சாங் இதெல்லாம் இல்லாமலே நல்லாத்தான் இருக்கு. சோ இப்பிடியே கண்டின்யூ பண்ணலாம்.  

தூண்கள் நிறைந்த காரைக்குடி ராமவிலாஸ் தியேட்டர்ல நல்ல செண்டர் சீட்ல உக்கார்ந்து இந்தப் படம் பார்த்தோம். தியேட்டர் ரொம்ப பழசாயிடுச்சு. இன்னும் கொஞ்சம் நல்லா மெயிண்டெயின் பண்ணலாம்.  கிட்டத்தட்ட படம் பார்த்து ஒரு  மாசம் கழிச்சு இந்த ரிவியூ போடுறேன். நேரமின்மை காரணமா.. :)

காரைக்குடி கம்பன் மணி மண்டபத்தில் இந்த வருட  ஃபுக்பேர்ல என்னோட அன்னபட்சி, சாதனை அரசிகள், ங்கா புக்ஸெல்லாம்  மீனாக்ஷி புக் ஸ்டாலில் டிஸ்ப்ளே ஆகி இருக்கதப் பார்த்து சந்தோஷப்பட்டுட்டு தியேட்டருக்கு 6 25 க்குப் போனா ஒரு பத்துப் பேர் நின்னுக்கிட்டு இருந்தாங்க. படம் நடக்குதா இல்லையான்னு வேற குழப்பம். 

6 30 க்கு டிக்கெட் கொடுத்த பின்னாடி ந்யூஸ் ரீல் பத்து நிமிஷம் பார்த்தோம் பாருங்க. தியேட்டர் நிரம்பிடுச்சு. ஹவுஸ்ஃபுல் !!! குழந்தை குட்டிகளோடு வந்து அனைவரும் இந்த மெல்லிய நகைச்சுவை கலந்த படத்தைப் பார்த்து ரசிச்சுக்கிட்டு சிரிச்சுக்கிட்டு இந்தாங்க. சந்தோஷமா இருந்தது. ஏன்னா……

இந்த அருமையான படத்த மக்களுக்குக் கொடுத்ததன் பின்னணியில் இந்தப் படத்தயாரிப்பாளரோட குடும்பமும் நட்புக்களும் இருக்காங்க. அதை டைட்டில் கார்டிலேயே THANKS TO FAMILY AND FRIENDS  என்று போட்டிருந்தார்கள். அந்த ஃபாமிலியில் என் நண்பர் டாக்டர் உதயராஜா அவர்களும் ( கணேஷ் குமாரின் மாமனார் ) இருக்காங்க. அதான் சந்தோஷத்துக்குக் காரணம்.

இந்த டீம் இன்னும் இது போல மக்கள் குடும்பத்தோடு பார்க்க விரும்பும் பல படங்களைப் படைக்கவும் வெற்றி பெறவும்  வாழ்த்துக்கள்.

டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.

1. எந்திரன் .. THE ROBOT.. எனது பார்வையில்.

2. ஸ்மைலியும் க்ளாடியும் கல்கியும்.


 


 
 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)