வியாழன், 1 நவம்பர், 2012

REVIEW OF "LOOPER".. A SELF ENCOUNTER. லூப்பர். ஒரு சுய அழிவின் கதை.

LOOPER.. A SELF ENCOUNTER. லூப்பர். ஒரு சுய அழிவின் கதை.

கோபாலன் சினிமாஸில் லூப்பர் பார்த்தேன். ப்ரூஸ் வில்லிசின் படம். 2074 இல் காலப் பயணம் கண்டுபிடிக்கப்படுகிறது. வழக்கம்போல அது கிரிமினல் கூட்டங்கள் தங்களுக்கு வேண்டாதவர்களை அழிக்கப் பயன்படுத்துகிறது. கான்சாஸில் இருக்கும்  மாஃபியா கும்பல்கள் 30 வருடம் பின்னோக்கி அழைத்துச் சென்று தங்களுக்கு எதிரியாக மாறப்போகிறவர்களை வாடகைக் கொலையாளி அதாவது லூப்பர் மூலம் தீர்த்துக் கட்டுகிறது.


இதில் இளவயது லூப்பராக வருபவர் ஜோசப் கோர்டான் லெவிட். அவரின் 30 வருட பிந்தைய பதிப்பாக ப்ருஸ் வில்லிஸ். இதில் ப்ரூஸ்வில்லிஸை அழிக்க அவரின் இளவயது லூப்பரே வாடகைக் கொலையாளியாக ஜோசப் கோர்டான் லெவிட் நியமிக்கப்படுகிறார்.  காத்துக் கொண்டே இருக்கும் ஜோ தன்னுடைய கடிகாரத்தை எடுத்துப் பார்த்துக் கொள்கிறார். அடுத்த நிமிடம் அந்தப் பிணையாளி அந்த இடத்தில் தோன்றுகிறார். உடனே பட படவென சுட்டுத் தீர்க்கிறார்.

எல்லாப் பிணைக் கைதிகளும் உடனே செத்து விழுவார்கள். இதில் ப்ரூஸ் வில்லீஸ் புத்திசாலித்தனமாக சில்வர் பார்கள் இணைக்கப்பட்டிருக்கும் தன் முதுகைக் காட்டித் தப்பிக்கிறார். ஜோ சுடும் குண்டுகள் எல்லாம் முதுகில் சில்வர்பார்களில் பட்டுத் தெறிக்கிறது. முதல் சில நிமிடங்கள் ஒரே பரபரப்புத்தான் படத்தில் பிந்தைய பாகங்களிலும் கூட. உயிருக்குத்தப்பி ஒருவன் ஓடும் ஓட்டம் அப்படித்தானே இருக்கும்.

எல்லா அழிவின்போதும் சோளக் கொல்லை போன்ற தோட்டத்தின் வெளிப்பக்கம் ஒரு கித்தான் விரிக்கப்பட்டு பிணைக்கைதிகள் பின்புறம் கை கட்டப்பட்டு ஒரு  தூக்குதண்டனைக் கைதியைப் போல முகத்தை மறைத்துத் துணி சுற்றப்பட்டு மண்டியிட்டு வைக்கப்படுகிறார்கள். லூப்பர் ஒரு காரில் சென்று  படபடவென்று சுட்டு தீர்த்துக் கட்டுகிறார். சுடப்பட்டவர் விழுந்ததும் அவரின் முதுகில் கட்டப்பட்டு இருக்கும் சில்வர் பார்களைக் கூலியாக  எடுத்துக் கொள்கிறார்.

இதில் இளவயது லூப்பராக இருக்கும் ஜோ சிம்மன்ஸ் கொஞ்சம் இரக்க சுபாவமுள்ளவராக  ஒரு கொலையில் கொலையாளியின் முகத்தை மூடி இருக்கும் துணியை அகற்றியதும் இரக்க வசப்பட்டு கொல்லாமல் விடுகிறார்.
இவ்வாறு கொல்லாமல் விட்டால் ஒரு லூப்பை துண்டித்ததற்குச் சமம் என்று தேடப்படுகிறார். அதற்கு முன் அவர் விடுவித்த அந்த ஆள் சேத் வேலிகளைத் தாண்டித் தப்பிச் செல்ல முயல்கிறான். அப்போது அவனது இளவயது மனிதனாக இன்னொரு சின்ன சேத்,  கிட் ப்ளூவால்  பிடிக்கப்பட்டு அங்கே அவனை அவர்கள் சுடச் சுட இவன் கை கால் எல்லாம்  தொய்ந்து விழுந்து தெறித்து  இறப்பது பரிதாபம். கிட் ப்ளூவுமே தன்னுடைய டாமினேஷனைக் காட்ட முயன்று அவனுடைய பாஸ் அபி யால் தண்டிக்கப்படுகிறான்.

இப்போது உள்ள ஒருவரைக் கொலை செய்தால் ட்ராக் செய்யப்பட்டுப் பிடிபடுவோம் என இறந்தகாலத்துக்குச் சென்று ஒரு ஆளைக் கொல்ல முனைகிறது இந்த மாஃபியா குழு.  இந்த லூப்பர்களின் காண்ட்ராக்டை முடிக்க நினைக்கும் சமயம் அவர்களின் இளவயது ( இதற்கு க்ளோசிங் த லூப்  என்று பெயர்).  லூப்பர் தன்னுடைய எதிர்கால உருவத்தை அழிக்க தங்கபார்களை வழங்குகிறது. இப்படி இந்த லூப்பை முடிக்காவிட்டால் அதற்கு மரணதண்டனை உண்டு.

இதில் சிட்டை முடிப்பதற்கு தன்னுடைய முதிய வயது ப்ரூஸ் வில்லிஸ் வரப்போகிறார் எனத் தெரிந்ததும் இருவருக்குமான ஓட்டம் தொடர்கிறது. சேத் இறக்குமுன்பு இந்த லூப்களை எல்லாம் முடிக்க ரெயின்மேக்கர் என்ற ஒருவன்  வருவான் எனச் சொல்லி இறக்கிறான். அது முதிய ப்ரூஸின் கைகளில் எண்களாக அச்சிடப்பட்டு இருக்கிறது. அந்த ரெயின்மேக்கரைத் தேடுமுன் கேட்மென், அபி எல்லாரையும் அழிக்கிறார் ப்ரூஸ் வில்லிஸ்.

இந்த எண்கள் ஜோவுக்கும் கிடைக்கின்றன. இருவரும் தேடிச் செல்லும்போது அங்கே சாராவின் பையன் சிட்தான்( CID) இந்த லூப்பை முடிக்கப்போகிறவன் என்று தெரிகிறது. ப்ரூஸ் வில்லிஸின் காதல் மனைவி அழியவும் இவன் காரணமாவான் என இவனை முடிக்க அவரும் தேடி வருகிறார். இதே தேதியில் பிறந்த 3 குழந்தைகளைத் தேடி வருகிறார்.

அந்த வருடங்களில் எல்லா மக்களுக்கும் டெலிகைனடிக் பவர் இருக்கிறது. சாராவின் மகன் அவளுடைய சகோதரியால் வளர்க்கப்பட்டதால் தன்னுடைய தாயை உண்மையான தாய் என நம்ப மறுக்கிறான்.அப்போது இந்த சோளத் தோட்டத்தில் ஓடி வந்து அடைக்கலமாகும் ஜோ இந்த எண்களைக் காட்டி அவளிடம் கேட்க அவள் தன் குழந்தையின் பிறந்த தேதி இடம்,  ஹாஸ்பிட்டலைக் குறிக்கிறது எனச் சொல்லி ஜோவைக் கொல்லத் தயாராகிறாள்.

அப்போது கிட் ப்ளூ அங்கு இவர்களைத் தாக்க வர  சிட் டின்  டெலிகைனடிக் பவரால் அந்த இடமே வெடித்துச் சிதறி அவன் இறக்கிறான். அவர்கள் ஒரு நிலவறையில் ஒளிந்து தப்புகிறார்கள். ஆனால் ப்ரூஸ் வில்லிஸ்  தேடி வருகிறார், ஏனெனில் அவருடைய காதலியை சுட்டு அழிக்கப்போகிறவன் இந்த சிட்தான். இவனைக்  கொன்று விட்டால் தன் காதல் மனைவிக்கு அழிவு ஏற்படாது என எண்ணுகிறார்.

கடைசியில் ஒரு வேனில் எல்லா தங்க வெள்ளிக்கட்டிகளையும் கொண்டு வந்து இவர்கள் தப்பிக்கும் காரைத்  துரத்துகிறார். ஒரு வயல் வெளியில் அவர்கள் ஓடும்போது சிட் டுக்கு வழக்கம் போல பயத்தால் அல்லது கோபத்தால் டெலிகைனடிக் பவர் அதிகமாக அங்கே இருக்கும் பொருட்கள் வயல்வெளி, மண் எல்லாம் சூறாவளி வந்தமாதிரி சுழலத் துவங்குகிறது. அவனுடைய தாய் சாரா நான் உன்னுடன் இருக்கிறேன்.  நீ என்னுடைய குழந்தை பயப்படாதே என்று சமாதானப்படுத்தி அமைதிப்படுத்துகிறாள்.

அவர்கள் பாசத்தைப் புரிந்து கொள்ளும் ஜோ ப்ரூஸ் வில்லிஸ் அவர்களை அழிக்காமல் இருக்க வேண்டுமானால் தான் தன்னைத்தானே அழித்துக் கொண்டால்தான் உண்டு என்று தன்னையே சுட்டுக் கொள்கிறான். உடனே ஜோசப், ப்ரூஸ் வில்லீஸ் இருவருமே இறக்கிறார்கள். அந்தத் தங்கக்கட்டிகளும் வெள்ளிக் கட்டிகளும் கொண்ட வேன் அத்வானக் காட்டில் தனியாக  சிதறிக் கிடக்கிறது.

இந்தப் படத்தைப் பார்க்கும்போது எவ்வளவு நுண்ணிய விவரங்கள் என்று தோன்றியது. காட்சிப்படுத்துதலில் மிகச் சரளம். எல்லா ஆங்கிலப் படங்களையும்  பார்க்கும்போது தோன்றுவது டெக்னாலஜி. அதை நமக்குப் புரியும்படி எடுத்திருக்கும் ( இறந்த காலம் ,  எதிர்காலம் வித்யாசம் ) லைட்டிங்குகள்.

ப்ரூஸ் வில்லிஸைக் காட்டும் காட்சியில் எல்லாம் அவரது வலதுகாது ஒரு மாதிரி கொரகொரப்பாக வெட்டுப்பட்டது போல இருக்கும். அதற்குக் காரணம் அவரது இளவயது லூப்பர் ஜோவிற்கு ஒரு காட்சியில் துப்பாக்கிக் குண்டு துளைத்துச் செல்லும். இது போல ஒவ்வொரு காட்சியும் எடுக்கப்பட்டிருக்கும்.

கண்களில் சொட்டு மருந்து விடுவது போல போதை மருத்தை ஏற்றிக் கொள்வார் ஜோ. அதைப் பார்க்கும்போது மட்டும் கோபம் வந்தது. பெங்களூருவில் பணிபுரியும் சாஃப்ட்வேர் மக்கள் இந்த மாதிரி போதைப் பொருட்களுக்கு அடிமையாகித்தானே அழிகிறார்கள். இன்னும் என்ன புதுசு புதுசாக போதை மருந்துகளைக் காட்டுகிறீர்களே என்று.

அதே ஜோ அந்தக் கண் மருத்தைப் போட்டதும் இன்னும் கவர்ச்சிக் கண்ணனைப்  (!) போலாகிவிடுவார். இவரின்  இளமையும் மானரிசங்களும் கவர்கிறது என்றால்  ப்ரூஸ் வில்லிஸுக்கு பெரும்பாலும் ஒரு மாதிரி லூசான முரட்டுச் சாக்கு பனியன்தான் காஸ்ட்யூம். மொட்டை/வழுக்கைத் தலையானாலும் வழக்கம் போல தன் நடிப்பால், ஆக்‌ஷனால் கவர்கிறார்.

படுக்கை அறைக் காட்சிகளும் முத்தக் காட்சிகளும் இல்லாமல் ஆங்கிலப் படமா. சான்ஸே இல்லை. தங்களைக் காக்க வரும் ஜோவுடன் சாரா உறவு கொள்கிறார். பையன் செய்து வைத்திருக்கும் ஒரு ரிமோட் தவளையை அமுக்கினால் இன்னொரு இடத்தில் இருக்கும் சென்சார் ஒளிரும். அதை ப்ரஸ் செய்து ஜோவை அழைத்து உறவு கொள்கிறார். ஹூம் ஆங்கிலப் படத்தில் இதெல்லாம் சகஜம். ஏன் இப்படி என்று யாரும் கேட்க முடியாது. தமிழ்ப் படங்களில் குத்துப் பாட்டு சீனைப் போல . அல்லது  சில ஏ படங்களின் பிட்டு சீனைப் போல. கடந்து செல்ல வேண்டும் நாம் இதை.

சாராவுக்கு தினம் ஒரே மரத்தை வெட்டும் பணி.. அதென்ன எவ்வளவு வெட்டியும் குறைய மாட்டேன் என்கிறது.. பின் ஒரு மருந்தடிக்கும் சாதனம் தோட்டத்தில் பறந்து பறந்து மருந்தடிக்க இவர் வராண்டாவில் உக்கார்ந்து கண்காணிக்கிறார். சுற்றி சோளக்கொல்லையில் இவர் மட்டும் தனித்து தன் மகனோடு  வாழ்கிறார். மக்க மனுஷங்களே வேண்டாம்போல.. அட்லீஸ்ட் சின்னப் பையனுக்குக்கூட.

படம் பார்க்கும் போது எதிர்கால சந்ததி குறித்து பயம் வந்தது. இப்படித் தனித்தனித் தீவாய் வாழும் மனிதர்கள். போதைக்கும் காசுக்கும் ஆசைப்பட்டு கொலைகாரர்களாகும் மனிதர்கள் உருவாவது. யாரும் யாரோடும் எந்த ஒட்டுதலும் இல்லாமல் இருப்பது. தன்னலம் மட்டுமே முக்கியமாய் இருப்பது என்று சில பல கேள்விகளோடு கோபாலன் சினிமாவை விட்டு வெளியே வந்தபோது என்ன நடந்தால் என்ன யாராய் இருந்தால் எனக்கென்ன என்ற விதத்திலேயே மனிதர்கள் இருப்பது புரிந்தது. யதார்த்தத்தைத்தான் படம்பிடித்திருக்கிறார்கள் என்று தோன்றியது.

வித்யாசமான படம் கொடுத்த ( சயின்ஸ் பிக்‌ஷன் டெரர்) ரையன் ஜேசனுக்கு நன்றி. அருமையான நடிப்புக்காக ப்ரூஸ் வில்லீசுக்கும், ஜோசப் கோர்டான் லெவிட்டுக்கும் கூட..

டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.

1. எந்திரன் .. THE ROBOT.. எனது பார்வையில்.

2. ஸ்மைலியும் க்ளாடியும் கல்கியும்.


 


 


4 கருத்துகள்:

  1. Tamil Review for English picture with comparison to Tamil Culture. Good.

    பதிலளிநீக்கு
  2. நல்ல விமர்சனம்... எப்படியோ குழந்தைகளோடு பார்க்க முடியாது என்று தெரிந்து கொண்டேன்... நன்றி...

    பதிலளிநீக்கு
  3. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)