சிம்மவர்மன் இரண்யவர்மன் ஆன கதை
எப்பேர்ப்பட்ட நோயாக இருந்தாலும் இறைவனின் கருணை இருந்தால் அது சூரியனைக் கண்ட பனி போல விலகி விடும் என்பதற்குச் சிம்மவர்மன் என்ற மன்னனின் கதையே எடுத்துக்காட்டு.
முன்னொரு காலத்தில் கௌட தேசம் என்ற ஒரு தேசம் இருந்தது. அதை அரசாண்ட மன்னனின் மூத்த குமாரனின் பெயர் சிம்மவர்மன். பெயர்தான் கம்பீரமாக சிம்மவர்மன் என்று இருந்ததே தவிர அவன் உடல் முழுதும் நோயால் பீடிக்கப்பட்டிருந்தது. ஆகையால் அவன் தன் நாட்டில் இருக்க விருப்பமின்றி, முடிசூட்டி அதை ஆளும் எண்ணமும் இன்றி ராஜ்யத்தைச் சுற்றிப் பார்க்க கிளம்பினான்.
இவ்வாறு தன் நாட்டை விட்டுப் புறப்பட்டுப் பல நாடுகளையும் சுற்றிப் பார்த்து கொண்டே வந்தான். அப்படி வரும்பொழுது ஒருமுறை அவன் ஒரு கானகத்தைக் கடக்க வேண்டி இருந்தது. அப்போது அவன் ஒரு வேடனைச் சந்தித்தான்.
அந்த வேடன் சிம்மவர்மனை மன்னன் என்று அறியாது அவனுடன் தோழமையுடன் பழகினான். எனவே மன்னன் தன்னுடைய உடலைப் பீடித்து இருக்கும் நோய்களைப் பற்றி அவனிடம் கூறினான். அப்போது வேடன் சிம்மவர்மனிடம், "தில்லை வனம் என்றொரு இடத்தில் ஒரு சுயம்புலிங்கம் இருக்கிறது. அங்கே புலிக்கை, புலிக்கால் உடைய முனிவர் ஒருவரும் மனித முகமும் நாகத்தின் உடலும் கொண்ட முனிவர் ஒருவரும் இருக்கிறார்கள். அவர்கள் அந்தச் சுயம்பு லிங்கத்தைப் பூசை செய்து வருகிறார்கள். அங்கே சென்றால் உனக்கு ஒரு வழி பிறக்கலாம்" என்றான்.
இதனைக் கேட்ட சிம்மவர்மன் நம்பிக்கையோடு காடு, மலை, மேடு அனைத்தையும் கடந்து சிதம்பரத்தின் தில்லை வனத்தைச் சென்றடைந்தான்.
அங்கே புலிக்கை புலிக்கால் உடைய வியாக்கிரபாதர் என்னும் முனிவரும் பாம்பின் உடலுடன் மனித தலையுடன் கூடிய பதஞ்சலி என்னும் முனிவரும் சிவபூஜை செய்து கொண்டிருப்பதைப் பார்த்தான். அவர்கள் இருவரையும் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கித் தன்னுடைய வரலாற்றை எல்லாம் சொன்னான். தன்னுடைய நோய் நீங்க அருள் புரிய வேண்டும் எனவும் வேண்டிக் கொண்டான்.
அவனுடைய கதையைக் கேட்டு மனம் இரங்கிய வியாக்கிரபாதரும் பதஞ்சலியும் உடனே திருமூலநாதரையும் உமையம்மையையும் நடராஜரையும் சிவகாமி அம்மனையும் அவன் தரிசிக்குமாறு செய்தனர். தாங்களும் சிவபெருமானிடம் சிம்மவர்மனின் கதையைக் கூறி அவன் நோயை நீக்கியருளுமாறு மனமுருகி விண்ணப்பித்துக் கொண்டார்கள்.
தம்முடைய மாபெரும் பக்தர்களான வியாக்கிரபாதரும் பதஞ்சலியும் இறைஞ்சுவதைக் கண்ட இறைவன் உடனடியாக மனமிரங்கி," சிம்மவர்மனைச் சிவகங்கைத் தீர்த்தத்தில் நீராடச் சொல்லுங்கள்" என்று அசரீரியாக ஒலித்தார். உடனே வியாக்கிரபாதரும் பதஞ்சலியும் சிம்மவர்மனைத் தில்லை வனத்தில் உள்ள சிவகங்கைத் தீர்த்தத்தில் நீராடும்படிப் பணித்தார்கள்.
சிம்மவர்மனும் அவர்கள் சொற்களைச் சிரமேற்கொண்டு பயபக்தியோடு சென்று சிவகங்கை தீர்த்தத்தில் சிவனின் திருநாமங்களை உச்சரித்தபடி நீராடினான். திருக்குளத்தில் மூன்று முறை மூழ்கி எழுந்ததும் அவன் உடம்பில் இருந்த நோய் அடையாளம் இல்லாமல் நீங்கியது. அதோடல்லாமல் அவன் உடல் தங்கநிறமாய்ப் பிரகாசித்தது.
இதைக் கண்ட சிம்மவர்மன் பெருமகிழ்வு கொண்டு ஆடலரசனின் சன்னதியில் வந்து தரையில் விழுந்து புரண்டு ஆனந்தக் கூத்தாடினான். பெருமானின் கருணையையும் அருளையும் நினைத்து நினைத்து ஆனந்தக்கண்ணீர் உகுத்துக் கொண்டிருந்தான்.
அவனுடைய இந்த மாற்றத்தைக் கண்டு வியாக்கிரபாதரும் பதஞ்சலியும் கூடப் புளகாங்கிதம் அடைந்தார்கள். இறைவனின் நற்கருணையைக் கண்டு அவர்களும் அந்த அற்புதச் செயலை விதந்தோதினார்கள். சிவபெருமானைப் பலவாறாகப் புகழ்ந்து தோத்திரம் செய்யலானார்கள். மேலும் சிம்மவர்மனிடம், "உன்னுடைய உடம்பு தங்கமயமாக மாறிவிட்டதால் இன்று முதல் உன்னை இரண்யவர்மன் என்று மக்கள் அழைப்பார்கள்" என்று சொல்லி வாழ்த்தினார்கள். சிவபெருமானை மூவரும் அன்போடு பூசித்தார்கள்.
இவ்வாறு இவர்கள் மூவரும் இறைவனைப் பூசித்துக் கொண்டிருக்கும் பொழுது இரண்யவர்மனின் தந்தையான பேரரசன் தன்னுடைய மகனைத் தேடிக்கொண்டு நாடு நாடாகக் கடந்து தில்லைவனத்தை அடைந்தான். அங்கே தன் மைந்தன் பொன்மயமாகத் திகழ்வதைக் கண்டு மகிழ்ந்தான். அவன் உடல் நோய் நீங்கியதையும் கேட்டு வியப்படைந்தான்.
இது எவ்வாறு நிகழ்ந்தது என்று மகனிடமும் கேட்டறிந்தான். அதன்பின் சிம்மவர்மனின் தந்தையும் சிவகங்கையில் நீராடி அனுஷ்டானங்களை முடித்துக் கொண்டு சிவபெருமானின் சன்னதியில் விழுந்து வணங்கித் தோத்திரம் செய்தான்.
தன் அடுத்த பட்டத்துக்குரிய மூத்த மகனான சிம்மவர்மனைத் தேடி வந்ததையும் இன்று தன் மகன் தங்கமயமாக மாறியதற்கு அவர்களே காரணம் என்றும் வியாக்கிரபாதருக்கும் பதஞ்சலிக்கும் நன்றி கூறினான். தன் மகனை அழைத்துச் சென்று முடிசூட்டக் கருதி இருப்பதாகவும் கூறினான். அதைக்கேட்ட இரண்யவர்மன், "தந்தையே! என்னுடைய புறநோயை நீக்கிய சிவபெருமான் என்னுடைய அகநோயையும் நீக்கி என்னை ஆட்கொள்வார். ஆகையால் எனக்கு அரச போகங்கள் எல்லாம் வேண்டாம். நான் இங்கேயே இருந்து சிவபெருமானைத் தரிசித்துக் கொண்டே இருப்பேன்" என்றான்.
வியாக்கிரபாதர் ஒரு கணம் யோசித்தார். 'இவன் அரசனாக முடி சூட்டிக் கொண்டால் இவனைக் கொண்டு சிவபெருமானுக்கு மாபெரும் கோவில் கட்டச் சொல்லலாம்' என்று எண்ணி இரண்யவர்மனை நோக்கி,"முன்பு உனக்கு உடலில் நோய் இருந்தது. ஆகையால் நீ அப்போது முடிசூட்டிக் கொள்ளாதது சரிதான். ஆனால் இப்பொழுது சிவபெருமான் திருவருளால் உன்னுடைய நோய்தான் சரியாகி விட்டதே. அதுவும் போகத் தங்கமயமாகவும் ஆகிவிட்டாய். எனவே சிவபெருமானுக்கு மாபெரும் கோயில் ஒன்றை நீ கட்ட வேண்டும். ஆகையால் பேரரசரான உன் தந்தையின் விருப்பப்படி உன் தேசத்திற்குச் சென்று நீ முடிசூட்டிக் கொள். கருணாமூர்த்தியான சிவபெருமானின் துணையுடன் நீதி நெறியோடு குடிமக்களை அன்போடு ஆட்சி புரிந்து வா. உன் தந்தையின் ஆசியோடு இங்கு அதிகமாகப் பொருள் கொண்டு வந்து பெருமானுக்குக் கோயில் கட்ட வேண்டும்" என்று கூறினார்.
வியாக்கிரபாதரின் சொல்லைத் தட்ட முடியாததாலும் பெருமானுக்கு கோயில் கட்ட வேண்டும் என்ற எண்ணத்தாலும் இரண்யவர்மன் முடி சூட்டிக்கொள்ள இசைந்தான். ஆனாலும் பெருமானை விட்டுப் பிரிய மனமில்லாமல் அவர் சன்னதியில் வெகுநேரம் விழுந்து அழுது புரண்டான்.
மற்றவர்கள் அனைவரும் தேறுதல் சொல்ல ஒருவாறாகத் தன்னைத் தேற்றிக்கொண்டு மனதை அடக்கிக்கொண்டு தன் தந்தையுடன் தன்னுடைய நாட்டுக்குத் திரும்பிச் சென்றான்.
கௌடதேசத்தில் இரண்யவர்மன் நல்லதொரு நாளில் பேரரசனான தந்தையின் கையால் முடிசூட்டப் பெற்றான். எந்த நேரமும் சிவபெருமானை மனத்தில் இருத்திக்கொண்டு நீதிநெறி வழுவாது குடிமக்களிடத்தில் அன்புடன் அரசு புரிந்தான்.
தன்னுடைய தாய், தந்தை, உடன் பிறந்தவர்கள் அனைவரின் ஆசியோடும் அனுமதியோடும் பெரும் நிதியம் கொண்டு தில்லைக்கு வந்து திருமூலநாதர், உமையம்மை, நடராஜர், சிவகாமி அம்பாளுக்கு நான்கு கோபுரங்களும் ஐந்து பிரகாரங்களும் மாபெரும் மதிற்சுவர்களும் கொண்ட ஒரு மாபெரும் கோயிலை கட்டினான்.
சிவபெருமான் கோயில் கொண்டிருக்கும் ஞான சபைக்குத் தங்க ஓடுகள் வேய்ந்தான். கோபுரங்களுக்குத் தங்கக் கலசங்களும் மற்றும் கனகசபை, நிருத்தியசபை, தேவசபை என்னும் மூன்று சபைகளுக்கு செப்பு ஓடுகள் வேய்ந்த விமானங்களும் அமைத்தான்.
ராஜசபை என்னும் ஆயிரங்கால் மண்டபமும் சிவகங்கைத் தீர்த்தத்தில் நாற்புறமும் படிக்கட்டுகளும் மண்டபங்களும், விநாயகர் கோவிலும் சுப்பிரமணியர் கோவிலும் மற்றும் பல மூர்த்தங்களையும் அமைத்தான். இவ்வாறு கோவில் கட்டி சுவாமிக்கும் அம்பாளுக்கும் நித்திய பூஜைகளுக்கும் ஏற்பாடு செய்தான். வேதவிதிப்படி தினசரிப் பூசைகள் நிகழ்த்தவும் அதற்கெனவே தில்லை மூவாயிரவர்களையும், பதஞ்சலியையும் கொண்டு பூசைகள் செவ்வனே நடைபெற்று வரச் செய்தான்.
தன்னைத் தங்கமயமாக ஆக்கிய இறைவனுக்கு இரண்யவர்மன் உள்ளன்போடு தங்க ஓடுகளால் கோபுரம் சமைத்துக் கோவில் அமைத்தான் என்பதும் வெகு சிறப்புத்தானே






கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)