**வாழ்ந்திருந்தது ஒரு காலம்
வாழ்ந்ததை நினைத்திருப்பது ஒரு காலம்
காலங்கள் மாறுகின்றன நினைவுகள் மாறுவதில்லை.
**நிலவுடன் உருண்டு
இருளுடன் இணையுமுன்
பெருநெருப்பொன்று
உரசி எழுகிறது தினசரி..
சூரியனாம்.
**நிலவு வராதபோதும்
நட்சத்திரம் இல்லாதபோதும்
இருளும் கருக்கிருட்டும்கூட கைவிட்டபோதும்
தினமும் பரந்து விரிந்த கண்களோடு
நிச்சயம் உண்டு
ஜன்னலோரம் எட்டிப்பார்த்து
அவள் இருப்பை உறுதி செய்யும்
இளஞ்சூட்டு வெய்யில்.
**வண்ணக் காடொன்றில்
கைகாட்டி மரமாய் அலைகிறது
பட்டாம்பூச்சி இறக்கைகளோடு
**வேண்டாத பொருட்களால்
திணறிக் கிடக்கிறது வீடு
மனத்தைப் போல.
**காஃபியைத் தவிர்க்கலாம்
குளிர்பானத்துக்கு மாறலாம்
இனிப்பு தொண்டையை ராவ
எதைக்குடித்தாலும்
கமறும் மனதை என் செய்ய.
**பிரதிகளை
உண்மையெனப் பதியும் உலகில்
கண்காணிப்புகளைக்
கடந்து உலவுகிறது
பிரதிகளுக்குள் பிரதிகள்
நகலுக்குள் நகல்பார்த்து
நகைக்க நினைத்தும்
நாவடைத்துக் கடக்கிறது
அசல்.
**காலி மைதானத்தின்
கால்பந்துகளாய் எங்கோ நோக்கி
உருண்டு கொண்டிருக்கின்றன
அவள் கண்கள்.
**பறவையாய் குறுக்கே
பாயும் விரல்கள்
காற்றைக் கீறிக்
கவனம் திருப்புகின்றன.
பொதிந்து வீழ்ந்த கால்பந்தாய்
களைத்துத் தனக்குள் வீழ்கின்றன
அவள் கண்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)