புதன், 20 டிசம்பர், 2023

மனிதவள மேம்பாட்டுப் பயிற்சியாளர், தொடர் வெற்றியாளர் திரு சோம.வள்ளியப்பன்

மனிதவள மேம்பாட்டுப் பயிற்சியாளர், தொடர் வெற்றியாளர் திரு சோம.வள்ளியப்பன்





 

பொருளாதாரம் கூறும் நல்லுலகிலும் சரி, நிதி நிர்வாகம், பங்குச்சந்தை என்ற பேருலகிலும் சரி இவர் பெயர் தெரியாதவர் இருக்க முடியாது. யூ ட்யூப் சானல்களிலும் பல்வேறு பிரபலங்களால் சுட்டப்படும் ஒரு பெயர் என்றால் அது டாக்டர் சோம வள்ளியப்பன் அவர்களின் பெயர்தான். இவர் ஒரு சிறந்த எழுத்தாளர் மற்றும் மனிதவள மேம்பாட்டு பயிற்சியாளர். பல்வேறு துறைகளில் இவரின் பட்டங்கள் வியக்க வைக்கின்றன.  இவரின் தொடர் சாதனைகளும் அசர வைக்கின்றன.


 

டாக்டர் சோம  வள்ளியப்பன் தேவகோட்டைக்காரர். இளையாற்றங்குடி கோவில். சிடி. சோமையா செட்டியார் மற்றும் சிவகாமி ஆச்சியின் மகன்.  மனைவி செல்வலட்சுமியும் தேவகோட்டையை சேர்ந்தவர். அவர்களுக்கு இரு மகன்கள். சோமையா மற்றும் கார்த்திகேயன். ஸ்ரீவள்ளி மற்றும் மீனாட்சி மருமக்கள். அனுஸ்ரீ உமையாள் மற்றும் சாய் ஜானவி என இரு பேத்திகள்.

 

இவர் படித்த கோர்ஸ்களைப் பட்டியலிட்டால் அசந்து போவீர்கள். கேட்டரிங், BA பொருளாதாரம்,  முதுகலையில் பர்சனல் மேனேஜ்மென்ட்,MBAல் மனித வளம் & மார்க்கெட்டிங், யூனிவர்சிட்டி ஆப் மெட்ராஸ்சில் எமோஷனல் இண்டெல்ஜென்ஸ் தொடர்பான Ph.D.  மற்றும் NLP  மாஸ்டர் பிராக்டிஷனர் என இவரது கற்றல் இன்றளவும் தொடர்கிறது.

 

BHEL வேர்ல்பூல், பெப்சிகோ, டாக்டர் ரெட்டிஸ் பவுண்டேஷன், கேமியோ, நவியா மார்க்கெட்ஸ் என, 7  நிறுவனங்களில், 25 ஆண்டுகளுக்கு மேலாக மனிதவளத்துறையில் பணிபுரிந்தவர். தற்பொழுது கடந்த 10 ஆண்டுகளாக மேன்மை மேனேஜ்மென்ட் கன்சல்டன்சி என்கிற ஆலோசனை நிறுவனம் நடத்தி வருகிறார்.

 

டைம்லர் பென்ஸ், செயின் கோபேன்போன்ற   பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள், பெல், ஐபிசிஎல், LIC  போன்ற  பொதுத்துறை நிறுவனங்கள், பல பெரும் கார்ப்பரேட்டுகள், IIT, IIM, PSG, BIM, IFMR, Greatlakes, ITM, St Joseph’s, Bishop Heeber கல்லூரிகள் ஆலோசகராகவும் பயிற்சிகள் கொடுப்பவராகவும் இருக்கிறார். 500 க்கும் மேலான முழுநாள் பயிற்சி வகுப்புகள் நடத்தியிருக்கிறார். 

 

இவர் எச் ஆர் ஆலோசகராக 6.5 ஆண்டுகள் பணியாற்றிய டோயென்சிஸ் நிறுவனம், பிசினெஸ் வேர்ல்ட் பட்டியலில், இந்தியாவில் ’பெஸ்ட் பிளேஸ் டு ஒர்க்’  பிரிவில் 19 வது இடம் பெற்றது. கிரிஸ்டல் டெல்டா நிறுவனத்திற்கு எச் ஆர் ஆலோசகராக 5 ஆண்டுகளாக பங்களித்து வருகிறார்.

 

NSE, BSE, SEBI, Rotary, IBCN, NBC, வெற்றி வாசல், சிகரம், வல்லமை தாராயோ, பபாசியின் புத்தககாட்சிகள்  NIPM, NHRD SICCI, Several Industry Associations போன்ற அமைப்புகளுக்காகவும் கூட்டங்களில் பேசுகிறார். கொரானா கால கட்டத்திற்குப்பின் ஜூம் மூலம் பல கூட்டங்களிலும் பேசிவருகிறார்.


 

சன், சன் நியூஸ், ஸ்டார் விஜய், பொதிகை, தந்தி டிவி, புதிய தலைமுறை, கலைஞர், கலைஞர் செய்திகள்,சத்யம், ராஜ், தொலைகாட்சிகளில்’நீயாநானா’ (11 முறை)  வணக்கம் தமிழகம் (3 முறை) தமிழா தமிழா (3 முறை) கல்யாணமாலை, சந்தித்த வேளையில் (2), நம் விருந்தினர், ஆயுத எழுத்து, நேர்பட பேசு, விவாத மேடை, வணிக வளாகம், சந்திப்போம் சிந்திப்போம், போன்ற பல்வேறு தொலைக்காட்சி நிகழ்சிகளில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பலநூறு நிகழ்ச்சிகளில் பங்களித்துவருகிறார். இதில் தங்க சேமிப்புப் பற்றியும் குடும்பப் பெண்கள் எதனால் தங்க சேமிப்பில் அக்கறை காட்டுகிறார்கள் என்பது பற்றியும் இவர் கூறிய கருத்துக்கள் அசர வைத்தன. பிரச்சனைகளை எல்லாரின் பார்வையிலும் உணர்ந்து பேசுவது இவரது ஸ்பெஷாலிட்டி

 

அகில இந்திய வானொலி, சிங்கப்பூர் ஒலி, ஆஸ்திரேலியா வானொலி, ரேடியோ மிர்ச்சி, ஹலோ எஃப் எம், ரேடியோ சிட்டி, பிஃக் எஃப் எம், சூரியன் எஃப் எம் ஆகியவற்றில் 100க்கும் அதிகமான பேட்டிகள் வழங்கியிருக்கிறார்.

 

பிகைண்ட் வுட்ஸ், நியூஸ்கிலிட்ஸ், கலாட்டா டாட்காம், குமுதம், நக்கீரன் போன்ற யுடியூப் சேனல்களில் 50க்கும் அதிகமான பேட்டிகள் கொடுத்தது தவிர அவரது யுடியூப் சேனலான Soma Valliappan ல் 200 வீடியோக்கள் பகிர்ந்திருக்கிறார். இவரது இட்லியாக இருங்கள் புத்தகம் குறித்து மட்டும் 25 க்கும் மேற்பட்டோர் வீடியோக்கள் போட்டிருக்கிறார்கள். இந்த வீடியோக்களில் பேசியவர்கள் எல்லாம் சாதாரணப்பட்டவர்கள் அல்லர். எல்லோருமே பிரபலங்கள். இவரைப் பற்றியும் இவரது நூல்கள் பற்றியும் மேற்கோள் காட்டிக் கூறியவை அனைத்துமே சிறப்பு. மேனேஜ்மெண்ட் குரு கம்பன் என்ற இவரது நூலும் பலராலும் தங்கள் உரையில் எடுத்தாளப்பட்டிருக்கிறது. கவிப்பேரரசு வைரமுத்து, சொற்பொழிவாளர் சுகிசிவம், பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், இசைக்கவி ரமணன், செய்தியாளர் ரங்கராஜ் பாண்டே, சுப்பையா ஆகிய பிரபலங்கள் இவர் பற்றியும் இவரது நூல்கள் பற்றியும் புகழ்ந்துரைத்திருக்கிறார்கள். இவர் புத்தகங்களால் பயனடைந்தவர்கள் மின்னஞ்சல்மூலம் இவருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டேயிருக்கிறார்கள்!

 

தன்னம்பிக்கை, நிதி நிர்வாகம், அலுவலக மற்றும் ஊழியர்கள் நிர்வாகம், எமோஷனல் இண்டலிஜென்ஸ்,தலைமைப் பண்பு, ஆளுமைத்தன்மை, முதலீட்டாளர்களுக்கு ஏற்பட்ட கொரோனாகாலத் தாக்கத்திலிருந்து மீள்வது பற்றி, திருக்குறள் மேலாண்மைச் சிந்தனைகள், தனக்குப் பிடித்த புத்தகங்கள், மனிதர்களை அணுகும் முறை, மனித உறவுகளைப் பேணும் முறை, எல் ஐ சி, வங்கி டெபாசிட் எனப் பரந்துபட்ட தலைப்புக்களில் தொடர்கிறது இவரது உரைகளும் வழிகாட்டுதலும்.  

 

பங்குச்சந்தை முதலீட்டில் டி மேட் கணக்கு ஆரம்பிக்கும் அடிப்படையான விஷயத்தில் இருந்து ஃப்யூச்சர் ஆப்ஷன் வரைக்கும், ம்யூச்சுவல் ஃபண்ட், சிஸ்டமேடிக் இன்வெஸ்ட்மெண்ட் ப்ளான், போனஸ், டிவிடெண்ட், நிஃப்டி, சென்செக்ஸ், இண்டக்ஸ் ட்ரேடிங், பேப்பர் கோல்ட் இன்வெஸ்ட்மெண்ட் மற்றும் பங்குச்சந்தை முதலீட்டின் ரிஸ்குகள் வரைக்கும் இவர் தன் உரைகளில் பட்டியலிட்டிருக்கிறார்.


 

கல்கி, ஆனந்தவிகடன், குமுதம், குமுதம் சினேகிதி, அமுதசுரபி, குங்குமம், சாவி, ராணி, தமிழ் இந்தியா டுடே,புதியதலைமுறை, நாணயம் விகடன், மங்கையர்மலர்,  நக்கீரன், நமது நம்பிக்கை, கிராஸ்ரூட், சைரன், மல்லிகை மகள், பாவையர் மலர், புன்னகை, தமிழ் ஆழி, சினேகிதி, சொற்கோவில், யோசி, தேவதை,  இதழ்களிலும் தினமணி தினத்தந்தி தினகரன் தினமலர் தமிழ் இந்து தென்திசை போன்ற தினசரிகளிலும், BBC தமிழ், விகடன் டாட் காம் தினமணி டாட் காம், தமிழ் இந்து இணைய  இதழ் போன்ற இணைய இதழ்களிலும் 23 தொடர்கள்  எழுதி இருக்கிறார். தற்போது விகடன் டாட் காம் மற்றும் தமிழ் இந்துவில் இரண்டு தொடர்கள் எழுதிக் கொண்டிருக்கிறார்.

 

குமுதம் பத்திரிக்கையில், அடுத்தடுத்து என்று தொடர்ந்து மூன்று தொடர்கள் எழுதியதும், குமுதம் சினேகிதி மற்றும் நமது நம்பிக்கை இதழ்களிலும் அதேபோல இடைவிடாமல் தொடர்ந்து மூன்று தொடர்கள்  எழுதியதும் வெகுஜன பத்திரிக்கைகளில் இவர் எழுத்துகளுக்கு இருக்கும் வரவேற்பைக் காட்டுவன. நகரத்தார் மலர், ஆச்சி வந்தாச்சு, நகரத்தார் திருமகள், நமது செட்டிநாடு, தனவணிகன் இதழ்களில் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதுகிறார். என்னுடைய சோகி சிவா என்ற நூல் வெளியீட்டு விழாவில் தனவணிகன் ஆசிரியர் திரு வி என் சிடி. வள்ளியப்பன் அவர்கள் இவரைப் புகழ்ந்து உரைத்ததுடன் தன் இதழுக்கு இவர் எழுதும் கட்டுரைகள் கல்லூரிக்குப் போகாமலே எம் பி ஏ சப்ஜெக்ட்டை எளிய தமிழில் வழங்குவதாகவும் சிறப்புரைத்தார். 

 

34 சிறுகதைகள் கல்கி, மங்கையர்மலர், அமுதசுரபி, ஆனந்தவிகடன்,தினமலர் வாரமலர், தமிழரசி பத்ரிக்கைகளில் பிரசுரம் ஆகியிருக்கின்றன. பாதிப்புகள் என்ற சிறுகதை இலக்கிய சிந்தனையின் மாத சிறந்த சிறுகதையாக தேர்வானது. ’ஜெமினி சர்கிள்’ என்ற இரண்டாவது சிறுகதை தொகுப்பிற்கு கம்பம் பாரதி தமிழ் இலக்கிய பேரவையின் முதல்பரிசு, சிறுகதைகளுக்கு இலக்கிய சிந்தனை மாத சிறந்த சிறுகதை, இலக்கியபிடம் பரிசு மற்றும் மாம்பலம் சந்திரசேகர் பரிசு வழங்கப்பட்டிருக்கின்றன

 

அள்ள அள்ளப் பணம் (9 புத்தகங்கள்), இட்லியாக இருங்கள், ஆளப்பிறந்தவர் நீங்கள், நேரத்தை உரமாக்கு, உறவுகள் மேம்பட, சொல்லாததையும் செய், நீங்கள் அசாதாரணமானவர், நாட்டுக்கணக்கு, சிக்கனம் சேமிப்பு முதலீடு, எமோஷனல் இண்டெலிஜென்ஸ் 2.0 என தமிழில் 72 புத்தகங்களும், ஆங்கிலத்தில் மூன்றும், இந்தி (மொழிமாற்றம்) ஒன்றும் எழுதியிருக்கிறார்.

 

நெய்வேலி சிறந்த எழுத்தாளர் பரிசு, கவிதை உறவு பரிசு (4 புத்தகங்களுக்கு), தமிழக அரசின் சிறந்த எழுத்தாளர் பரிசு மற்றும் ஆங்கில புத்தகத்திற்கு ISTD பரிசு, பாரதி தமிழ் இலக்கிய பேரவையின் சிறுகதை தொகுப்பிற்கான முதல்பரிசு ஆகியவை இவர் எழுத்துக்கு கிடைத்திருக்கும் அங்கீகாரங்களில் சில. சொல்லேறுழவர், நகர்த்தார் ஸ்டார் போன்ற விருதுகளும் வழங்கப்பட்டிருக்கிறது.

 

சோம வள்ளியப்பன் எழுதிய ’இட்லியாக இருங்கள்’, ’அள்ள அள்ள பணம்’, ’திட்டமிடுவோம் வெற்றிபெறுவோம்’ மற்றும் ’நல்லதாக நாலு வார்த்தை; புத்தகங்கள் சில கல்லூரிகளில்  மாணவர்கள் படிப்பதற்காக சேர்க்கப்பட்டிருக்கின்றன.

 

லீடர்ஷிப், கம்பூனிகேஷன், பீப்பிள்மேனேஜ்மெண்ட், எமோஷனல் இண்டெலிஜென்ஸ், டைம் மேனேஜ்மெண்ட், சேல்ஸ், என்எல்பி என நிர்வாகம் மேலாண்மை போன்றவை குறித்து தமிழில் மிக அதிகமாக விற்பனையாகும் புத்தகங்களை எழுதியவர் சோம வள்ளியப்பன். 2004ல் வெளியான இவரது அள்ள அள்ளப்பணம் புத்தகம் இதுவரை ஒன்னரை லட்சம் பிரதிகள் விற்றிருக்கிறது.  இட்லியாக இருங்கள் 75000 க்கும் மேல்.

 


கிழக்கு பதிப்பகத்தின் எடிட்டரும் எழுத்தாளருமான பா ராகவன் கூறுவது, “சோம வள்ளியப்பனை இரண்டு விஷயங்களுக்காக நான் எப்போதும் வியப்பேன். சலியாத உழைப்பு, அடங்காத ஆர்வம். எழுதுபவர்களுக்கு இந்த இரண்டு குணமும் இன்றிமையாதவை. தனது துறை சார்ந்து அவர் பெற்ற அனுபவங்களை எழுத்தாக மாற்றும்போது,  அவர் எப்போதும் பாமர வாசகர்களை மனதில் கொள்கிறார். எளிமைக்கு முக்கியத்துவம் அளிக்கும் எழுத்து ஒன்றே எந்தக்காலத்திலும் மேன்மையுறுகிறது. கொண்டாடப்படுகிறது. வள்ளியப்பன் பேசுவதுபோல எழுதுவார். எழுதுவதுபோலவேதான் பேசவும் செய்வார்.

 

சோம. வள்ளியப்பனுக்கு  முன்னால் தமிழில் ஒரிஜினல் சுயமுனேற்ற எழுத்து என்பது இல்லை. பெரும்பாலும் மேல்நாட்டுத் தழுவல்களாகவும் நமது வாழ்வோடு சம்பந்தப்படாத வறட்டு உதாரணங்களாகவுமே இருக்கும். இந்த மண்ணின் மனிதர்களை, இங்கு நிகழும் சாதனைகளை , நமது தேவைகளை நமது சமூகத்தின் இருப்பு நிலையை மனதில் கொண்டு அவர் எழுதுகிறார். அதனால்தான் இந்த துறையில் மற்ற யாரைக்காட்டிலும் அவருக்கு அதிகம் வாசகர்கள். .. அலுவலகம், வீடு, எழுத்து என்று அனைத்தையும் சமாளித்துக்கொண்டு சுறுசுறுப்புடன் செயல்பட்டுக்கொண்டிருக்கும் வள்ளியப்பனிடமிருந்து நிறையப் பயில முடியும். படியுங்கள், அவர் வேறு அவரது எழுத்து வேறல்ல”.

 

வாரஇதழ்கள், தினசரிகள், இணைய இதழ்கள், வானொலிகள்,  தொலைகாட்சிநிகழ்சிகள், யுடியூப், நேரடி பயிற்சிகள், கூட்டங்களில் பேச்சு, ஆலோசனைகள் வழங்குவது, புத்தகங்கள் என வழி எதுவாக இருந்தாலும் தான் செய்வது ‘சிந்திப்பது-பகிர்வது என்ற ஒரே வேலையைத்தான் என்கிறார்.

 

சோம வள்ளியப்பன் கொட்டேஷன்ஸ்

 

• உன்னை யார் வேண்டுமானாலும் விட்டுக்கொடுக்கட்டும், நீ கொடுத்துவிடாதே

• மற்றவர்கள் நம்மை எப்படி நடத்த வேண்டும் என்பதை நாம்தான் தீர்மானிக்கிறோம். நம் நடத்தையின் மூலமாக

• எதை எங்கே எப்படி பேசவேண்டும் என்பதில் மட்டுமல்ல, எதை எங்கே பேச கூடாது என்பதிலும் தெளிவு வேண்டும்

• ஒருவர் அதிகம் பயணம் செய்யவேண்டியது அவரது சிந்தனையில்

• விவாதம் செய்யாத ஒருவருடன் விவாதம் செய்யவே முடியாது.

• You can’t argue with someone not arguing.

• Remain stay put, long enough to achieve.

• We determine how others should treat us by our behavior.

 

நிறைவாகத் தொழில் செய்ய விரும்பும் பெண்களுக்கான ஆலோசனையாக அவர் சொல்வதைப் பகிர்கிறேன். வீட்டில் உள்ளவர்கள் என்கரேஜ் செய்வதில்லை, குழந்தைகள் குடும்பத்தைப் பார்த்துக் கொள்ளும் கமிட்மெண்ட், குடும்பத்தையும் தொழிலையும் ஒருசேரப் பார்க்க முடியுமா என்ற யோசனை, பிஸினஸ் செய்து நஷ்டமாகிவிட்டால் வீட்டில் உள்ளவர்கள் கோபிப்பார்களே என்று பல்வேறு காரணங்களைப் பெண்கள் பட்டியலிட்டாலும், பெண்ணாக இருக்கிறேன் செயல்பட முடியவில்லை என்பதெல்லாம் விட அவர்களுக்கே பயம் தயக்கம் இருப்பதுதான் அடிப்படையான காரணம். மனசுக்குள் தடையை வைத்துக் கொண்டு எதையும் செயல்படுத்த முடியாது. எண்ணங்கள்தான் பாரியர். முடியும் என்று நினையுங்கள், ஆழ்மனதுக்குள் முடிவெடுங்கள் முடியும் என்கிறார் இந்தத் தன்னம்பிக்கைப் பேச்சாளர், தொடர் வெற்றியாளர்.  

 

மனச்சோர்வு, சுய இரக்கம், விரக்தி, மனத்தடை, எண்ணத்தடை ஏற்படும்போதெல்லாம் இவரது சில உரைகள், கொட்டேஷன்கள் தன்னம்பிக்கை தந்து எழுச்சியூட்டக் கூடியனவாக இருக்கின்றன. கிட்டத்தட்ட 200 க்கும் மேற்பட்ட பல்துறை வீடியோக்கள், 75 நூல்கள் எழுதியுள்ள இந்த சாதனையாளரைப் பார்க்குந்தோறும் வியப்பும், இன்னும் தொடர்ந்து நாமும் நம்முடைய துறையில் செயலாற்ற வேண்டும் என்ற ஊக்கமும் ஏற்படுகிறது. நமது செட்டிநாடு இதழில் தொடர்ந்து எழுதி வரும் இவரைப் பற்றி இதே இதழில் விரிவாக இவர் சாதனைகளை அனைவரும் அறியும் வண்ணம் எழுத நேர்ந்ததில் பெருமகிழ்வு கொள்கிறேன்.



டிஸ்கி:- ஜெர்மனி ரைன் தமிழ்ச்சங்கத்தில் எனது நூல் வெளியானது  பற்றி புகைப்படத்துடன் குறிப்பிட்டு இருக்கும் நமது செட்டிநாடு இதழுக்கு நன்றி. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)