திங்கள், 9 ஆகஸ்ட், 2021

குலதெய்வ வழிபாடும் சேங்கை வெட்டுதலும் புரவி எடுப்பும்.

குலதெய்வ வழிபாடும் சேங்கை வெட்டுதலும் புரவி எடுப்பும்.

வேட்டைச் சமூகமாக இருந்த நாம் வேளாண் சமூகமாக மாறும்போது நமது தெய்வ வழிபாடுகளும் இன்னொரு பரிமாணம் அடைந்தன. நா. வானமாமலையின் மார்க்ஸிய தத்துவமும் இந்திய நாத்திகமும் என்ற நூலில் இறைமையைக் கற்பித்ததே முடியாட்சிதான் என்றும் வணிகம், மதம் பேரரசு போன்றவை மக்களின் வழிபாடுகளையும் விருப்பங்களையும் நிர்ணயிக்கின்றன என்பதும் ஓரளவு ஒப்புக்கொள்ளக்கூடியதுதான் என்றாலும் நாட்டார் தெய்வங்கள், குலதெய்வங்கள் போன்ற சிறுதெய்வ வழிபாட்டை மக்கள் தாங்களாகவே கைக்கொள்ளுகிறார்கள்.

யுத்தங்கள், காலனி ஆதிக்கம், ஏகாதிபத்தியம், மதமாற்றங்கள் போன்றவை நிகழ்ந்தாலும் ஓரிறை வழிபாட்டை அவை வலியுறுத்தினாலும் நம் அடிப்படையான பல தெய்வ வழிபாட்டையே கைக்கொண்டிருக்கிறோம். இனக்குழுக்களாக நாம் இடம் விட்டு இடம் பெயர்ந்தபோது நம் இறை நம்பிக்கையையும் எடுத்தே சென்றிருக்கிறோம்.

ஐம்பெருங்காப்பியங்கள் இயற்கையையே தெய்வமாக போற்றித் துதித்தன.  சங்கப்பாடல்களில் ஐந்திணைகளிலும் அந்த நிலத்துக்கான கடவுளை வழிபாடு உண்டு. பத்துப்பாட்டு எட்டுத்தொகை நூல்களில் இறைவணக்கம் இடம்பெற்றுள்ளது. தொல்காப்பியம் வாயிலாக ஐவகை நிலத்தைச் சார்ந்த மக்களும் அவரவர் நிலத்துக்குரியதெய்வ வழிபாடு செய்து வந்தனர் என அறிய முடிகிறது. ஆதிபகவன் என இறைவழிபாடு பற்றி திருக்குறள் கூறுவது நம்மைப் பெற்றவர்களையும் நம் முன்னோர்களையும் பற்றியதே எனக் கருதுகிறேன்.

நடுகல் வழிபாடு பற்றி புறநானூறு கூறுகிறது. இறந்த வீரர்களுக்கு நடுகல் நட்டு அவர்களை வருடந்தோறும் வழிபட்டு வணங்குதல். கிராமிய தெய்வ வழிபாடு, குலதெய்வ வழிபாடு, சிறுதெய்வ வழிபாடு இவற்றோடு வீட்டுத் தெய்வம், இன தெய்வம், ஊர்த்தெய்வம் ஆகிய வழிபாடுகளும் செய்கிறோம். வீட்டு தெய்வத்தில் முன்னோர் வழிபாடு, கன்னித் தெய்வம் என சிறு குழந்தைகள், வாழ்வரசி என பல்லாண்டுகாலம் நிறைவாழ்வு வாழ்ந்தவர்கள், இல்லுறைத் தெய்வம் என முன்னோர்களை வழிபடும் பழக்கம் உண்டு. குலத்தைக் காக்க உயிர்த்தியாகம் செய்தவர்கள் குலதெய்வம் என்றொரு கூற்றை எங்கோ படித்திருக்கிறேன். கண்ணதாசன் நம் கிராமிய தெய்வ வழிபாட்டை அர்த்தமுள்ள இந்து மதத்தில் சிறப்பித்துக் கூறி இருப்பார். சிறு தெய்வங்களைப் பெஞ்ச் கோர்ட் நீதிபதி என்று கூறி இருப்பார்.

இன்றும் கிராமங்களில் ஒருவருக்கு ஒருவரை பகை, பிராது என்றால் காசு வெட்டிப் போடுதல், மிளகாய் சாந்து அரைத்துத் தடவுதல் போன்ற வேண்டுதல்கள் உண்டு. சிறு தெய்வங்களின் கோபத்துக்கும் அது அளிக்கும் தண்டனைக்கும் பயந்து உண்மையை ஒப்புக் கொள்வோரும் உண்டு. சொக்கட்டான் கோவிலில் இம்மாதிரிக் காசு வெட்டிப் போட்டு வேண்டிக் கொள்வார்கள் எனக் கேள்வியுற்றிருக்கிறேன்.

எளிய கிராமத் திருவிழாக்களில் சாமியாடிகளிடம் அருள்வாக்கு கேட்போம். மேலும் கோமரம் என்றும் அவரைச் சொல்கிறார்கள். கேரளாவில் வெளிச்சப்பாடு என்று சொல்வார்களாம். பல்வேறு விஷயங்களில் நமக்குத் தீர்வு கிடைக்காதபோது அதைக் கடவுள் தீர்ப்பார் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம். அதற்கு இம்மாதிரிச் சாமியாடிகளிடம் அருள் வாக்குக் கேட்கிறோம். இம்மாதிரி நாம் கோரிக்கைகள் வைக்கும் தெய்வங்களையும் பிரம்மாண்டமாகக் குதிரை, யானை போன்ற வாகனங்களில் எழுந்தருளி இருப்பவர்களாக கருப்பர், ஐயனார் , சுடலை மாடசாமி எனப் படைக்கிறோம்.

அங்காளம்மா, பேச்சியம்மா, பாவாடை ராயன், முனிஸ்வரர், பாண்டிமுனி, முத்தையா,காளியம்மா, பத்ரகாளி, முத்து வெள்ளைச் சாத்தையனார், ஆதினமிளகி ஐயனார், நரியங்குடி கருங்குளம் கருப்பர், நொண்டிக் கருப்பர்,  காட்டுக் கருப்பர், கரைமேல் அழகர்,  கண்மாய் ஆயிமார்,  உன்மத்த பைரவர், பண்டாரத்தையா, சோணையன், அசிதமுகம் போன்ற உக்கிரப் பேர்களும் உக்கிர உருவங்களுமாக நம் கோபம், சன்னதம், உன்னதம் கொண்டு நம் மனசாட்சி போல வீர்யமாய் இருக்கும் தெய்வங்கள் பலப்பல. அரிவாளும் தண்டமும் சூலாயுதமும் வேலாயுதமும்தான் அவர்களின் நீதி ஆயுதங்கள். இவர்களோடு நாம் முன்னோடி என்ற தெய்வத்துக்கும் படையல் போடுவோம்.

வேட்டைக்கு வந்து கோட்டைக்குப் போகும் சுடலை மாட சாமி என்ற பாடலைக் கேட்கும்போதே சும்மா அதிருதுல்ல நெஞ்சம். அதிலும் இந்தச் சாமியாடிகள் நம் நாட்டுப்புற இசைக்கருவிகளான பம்பை, உடுக்கை போன்றவற்றை அடித்து விபூதி வீசி அருள் கூறும்போது நம்மையும் சன்னதம் ஆட்கொள்கிறது.

அந்தக் காலத்தில் கண்மாயைக் காக்கவும் விளைநிலங்களைக் காக்கவும் விளைச்சல் பெருகவும் ஆடு மாடு போன்ற கால்நடைகளைக் காக்கவும் இக்குலதெய்வக்கோயில்களுக்கு நேர்ந்து கொண்டு விளைச்சலில் முதல்போகத்தை அளந்து கொடுப்பார்கள். பழங்கள் காய்கள் கனிகள் என்று சிவன் ராத்திரி அன்று கோயிலின் தானியம் அளக்குமிடம் நிறைந்து கிடக்கும். வண்டி கட்டிக் கொண்டு சிவன்ராத்திரிக்குக் கோயிலுக்கு வந்து அபிஷேக தீப தூபங்கள் முடித்து அலங்காரம் செய்து சாமிகளுக்கு எல்லாம் தலைப்பா கட்டி மாலை போட்டு ஆடு, கோழி போன்றவற்றைப் பலியிட்டு உறவினரோடு கூடி ஆக்கி உண்டு களித்துச் செல்வது நம் மக்களின் பழக்கம். 

அதோடு அதாகக் குலதெய்வக் கோயில்களில் சாராயமும் சுருட்டும் ஊண் சோறும் படைத்து வழிபடுவது நம் வழக்கம். நாம் உண்ணும் உணவையே படைக்கிறோம். இதற்கு நாம் நம் சிவன் கண்ணப்பர் வழிபாட்டையே உதாரணமாகக் கொள்ள முடியும். சங்ககால தெய்வ வழிபாடு. 5000 ஆண்டுகளுக்கு முன்பே சிவ தெய்வ வழிபாடும், நந்தி வழிபாடும் இருந்துள்ளது.

சேங்கை வெட்டுதல், புரவி எடுப்புப் பற்றிப் பேசியே ஆகவேண்டும். ஏனெனில் இவைதான் விவசாயம், நீர்ப்பாசன வசதிகள் எல்லாம் செழிக்கச் செய்து வருபவை. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை குலதெய்வக் கோயில்களில் சேங்கை வெட்டுதலும் புரவி எடுப்பும் நடைபெறும். அதில் சேங்கை வெட்டுதல் மூலம் குலதெய்வக் கோயில் ஊரணிகளில் இருக்கும் மண்ணைக் கொண்டு வந்து புரவி செய்வார்கள். அதேபோல் நிறைய மண்ணை வெட்டிக் கரையையும் உயர்த்துவார்கள். இது கோடைக் காலத்தில் நடைபெறுவதால் மழைக்காலம் வரும்போது கண்மாய் நிறைந்து நீர்ப்பிடிப்புப் பகுதி அதிகமாகி வருடம் முழுதும் விவசாயத்துக்கான நீர் கிடைக்கிறது.

அதேபோல் ஊர்க்காரர்கள் ஒன்று கூடிப் பங்களிப்புச் செய்து புரவி எடுப்பு நிகழ்த்துவதன் மூலம் கோயிலும் உறவுகளும் புதுப்பிக்கப்படுகின்றன. ஒரு சமூக நிகழ்வாக இது அமைந்து அனைவரையும் ஒன்றிணைக்கிறது. வெளிநாடுகளில் வாழ்வோர் கூடக் குலதெய்வக் கோயில் திருவிழாக்களில் கலந்து கொள்ள வந்து விடுகிறார்கள்.  

நம் வாழ்வியல் முறைகளோடு ஒத்திசைந்த கிராம தெய்வ, குல தெய்வ வழிபாடே எந்த ஊரில் இருந்தாலும் எந்த நாட்டில் இருந்தாலும் நம்மை, நம் குடும்பங்களை, நம் உணவுப் பொருளாதாரத் தேவைகளை, நம் வாழ்வியல் இறையாண்மையை இன்றளவும் காத்து வருகிறது என்பது உண்மை.

 இதை யூ ட்யூபிலும் சித்திரை நிகழ்வுக்காக அப்லோட் செய்திருக்கிறேன்.


குலதெய்வங்களும், சேங்கை வெட்டுதலும், புரவி எடுப்பும் - தேனம்மை லெக்ஷ்மணன்.


குலதெய்வங்களும், சேங்கை வெட்டுதலும், புரவி எடுப்பும் - தேனம்மை லெக்ஷ்மணன்.


இங்கே பாருங்கள் & கேளுங்கள். கருத்துப் பதிவு செய்யுங்கள் மக்காஸ். நன்றி :)




2 கருத்துகள்:

  1. இவ்வாறான வழிபாடு எங்கள் சிறிய தாத்தா வீட்டில் நடப்பதைப் பார்த்துள்ளேன். ஒருமுறை என் தங்கையின்மீது சாமி வந்தது இன்னும் நினைவில் உள்ளது. அப்போதுதான் என் இறை நம்பிக்கை அதிகமானது.

    பதிலளிநீக்கு
  2. அதைப் பற்றி வலைப்பதிவில் எழுதி இருக்கீங்களா ஜம்பு சார் ?

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)