வெள்ளி, 25 ஜூன், 2021

தனவணிகனில் கொரோனா கூட்டுப் பிரார்த்தனை.

 சென்ற மாதம் (மே 16 ) அன்று கொரோனா பெருந்தொற்று நீங்க வேண்டிக் கூட்டுப் பிரார்த்தனை ஒன்று ஜூம் மீட்டில் நடைபெற்றது.  இந்நிகழ்வை ஹேப்பி டூர்ஸ் என்ற வாட்ஸப் குழுமத்தின் அட்மினாக இருக்கும் பள்ளத்தூரைச் சேர்ந்த திரு விஸ்வநாதன் அவர்கள்,  குழுமத்தில் இருக்கும் அனைவரையும் ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்திருந்தார். தேவகோட்டையைச் சேர்ந்த வீர சுப்பு அவர்கள் தன்னுடைய யூ ட்யூப் சேனலில் இதை லைவ் ஸ்ட்ரீமாகப் பதிவேற்றி இருந்தார். கிட்டத்தட்ட ஆறு மணி நேரத்துக்கும் மேலாக அனைவரும் இதில் நல்ல உற்சாகத்துடன் பங்கேற்றுப் பேசிச் சிறப்பித்தார்கள். செல்வன் அ. சொ. கி. முருகப்பன் இறைவணக்கம் பாட விழா இனிதே தொடங்கியது. திரு விஸ்வநாதன் அண்ணன் வரவேற்புரை நல்கினார்கள். 

திரு கண்ணப்பன் அழகன் முருகனுக்குக் குளிரக் குளிர அபிஷேக ஆராதனைகள் செய்து மனம் கனியக் கனியக் கந்தர் அலங்காரம் சொன்னார். இன்னும் கூடக் கேட்டுக் கொண்டிருக்கலாம் போலிருந்தது. பேச வேண்டியவர்கள் அதிகம் மற்றும் நேர மேலாண்மை காரணமாக அவர் சட்டென முடிக்க வேண்டியதாயிற்று.  திரு வெங்கட் கணேசன், திருமதி கமலா பழனியப்பன் இன்னும் திரு. வீரப்பன்,திரு. பழனியப்பன், திரு மோகன் ஆகியோர் பாமாலைகள் பாடிச் சிறப்பித்தார்கள். 

இந்நிகழ்வில் தனவணிகன் மற்றும் கமலா சினிமாஸின் அதிபர் திரு. வி என் சிடி வள்ளியப்பன் அவர்கள் தலைமை ஏற்று மிக அழகாக உரையாற்றினார்கள். ”எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்னும் நிலை வேண்டும். சங்கத் தமிழ், மதுரைத் தமிழ், தங்கத் தமிழ் வேண்டும்” என்று சங்கநாதத்தோடு முழங்கியது அவரது  உரை.  பங்கேற்ற ஒவ்வொருவர் பெயரையும் சொல்லி, அவர்களைப் பற்றிய அறிமுகமாய்ச் சில நல்வார்த்தைகளையும் கூறி வாழ்த்தினார்கள். இதுதான் மரபு என்றும் அவர்கள் கூறியதில் இருந்து ( அன்று புதிதாய்க் ) கற்றுக் கொண்டேன். 

 பக்தியின் மகத்துவத்தையும் இறைநம்பிக்கையைக் கைக்கொண்டதால் ஒருவர் எப்படிக் கடவுளின் கைப்பிடிக்குள் பாதுகாக்கப்பட்டார் என்பதையும் நெகிழ்வு ஏற்படும் வண்ணம் (வடநாட்டில் நிகழ்ந்த நிகழ்வு ஒன்றினைக் கதையாகக்) கூறினார்கள். 

மேலும் கொரோனா தொற்றை ஒழிக்க தடுப்பூசி போட்டுக்கொள்வதே சிறந்தவழி என வலியுறுத்தினார்கள். நெருக்கமாக அடுக்கப்பட்ட ஸ்கெட்ச் பேனாக்களை வைத்துக் கொரோனாத் தொற்று எப்படி அடுத்தடுத்த கண்ணிகளில் பரவுகிறது என்றும், அதில் நடுவில் இருக்கும் ஒன்றை எடுத்துவிட்டு அதனால் இடைவெளி ஏற்படுவதைக் காண்பித்து  -  தடுப்பூசி போட்டுக் கொள்வதன் மூலமும் பாதுகாப்புக் கவசம் அணிதல், கை கழுவுதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் மூலம்  தொடர் சங்கிலியை உடைத்தால் ( BREAK THE CHAIN )  அதை எப்படித் தடுக்கலாம் எனவும் விழிப்புணர்வு உரை நிகழ்த்தினார்கள். நிகழ்வின் கடைசிவரை ( ஆறு மணி நேரத்துக்கும் மேல்) இருந்து அனைவரையும் ஊக்கமூட்டினார்கள். 

நண்பர் லேனா தமிழ்வாணன், மக்கள் கவிஞர் திரு. அரு நாகப்பன் ஆகியோர் இன்னும் பலரும் கலந்து கொண்டு பக்தியைக் கைக்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும், மருத்துவ விழிப்புணர்வு, தடுப்பூசி, இன்சூரன்ஸ், பொருளாதாரச் சரிவு , பொதுவாழ்வில் ஏற்பட்ட இடர்கள் , உலகளாவிய இன்னல்கள்  , அன்றாட வாழ்வியலில் சாமான்யன் படும் துயரங்கள், வேலையின்மை, அரசின் நலப்பணிகள், நம் முன்னோர்களின் ஆன்மீக நம்பிக்கைகள், வழிபாடுகள், அறப்பணிகள், கொரோனா தடுப்பு சேவைகள், மருத்துவ உதவிகள், மருத்துவ உபகரண உதவிகள் பற்றி எல்லாம் பேசினார்கள். 

உங்களுடன் நாங்கள் இருக்கிறோம் என்று பங்கேற்ற நிறையப் பேர் மற்றவர்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் வண்ணம் பேசினார்கள். நிறைவான நிகழ்வு. 

அருமையான இந்த ஆன்மீக நிகழ்வில் கலந்து கொண்டது மனநிறைவளித்தது. கடைசிவரை இருந்து அனைவரது பேச்சையும் கேட்டுக் கைதட்டிப் பாராட்டிய வள்ளியப்பன் சார் அவர்களுக்கு மகிழ்வான நன்றிகள். மதிப்பிற்குரிய விசு அண்ணன், சகோ வீரசுப்பு இன்னும் இந்நிகழ்வில் பங்களிப்பு செய்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். இளம் நெறியாளர்களுக்கு (பெட்டகம், சிறகுகள்) இன்னும் சிறக்க  அன்பும் வாழ்த்தும் 😊

இந்நிகழ்வைப் பற்றி தனவணிகன் மாத இதழ் சிறப்புக் கட்டுரை வெளியிட்டுள்ளது. ஒவ்வொருவரின் உரையையும் அழகாகச் சுருக்கி அவர்களின் புகைப்படங்களுடன் வெளியிட்டுக் கௌரவம் அளித்துள்ளார்கள். மிக்க நன்றியும் அன்பும். 



சொல்வதோடு மட்டுமல்ல செயலிலும் அதைச் சிறப்பாகக் காட்டியுள்ளார்கள் தனவணிகன், கமலா குடும்பத்தார்/குழுமத்தார். கமலா சினிமாஸ் சார்பாக திரு வி என் சிடி வள்ளியப்பன் அவர்களின் சகோதரர் திரு வி என் சிடி நாகு சிதம்பரம் அவர்கள் 50 லட்சம் ரூபாயை, முதலமைச்சர் திரு ஸ்டாலின் அவர்களிடம் கோவிட் நிவாரண நிதியாக அளித்துள்ளார். பாராட்டத்தக்க விஷயம். 

இதுபோல் நம் நகரத்தார் தொழிலதிபர்கள் பலர் நிதி கொடுத்த விபரங்களையும் மூன்று பக்கங்களில் தனவணிகன் வெளியிட்டுப் பெருமைப்படுத்தி உள்ளது. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.  



எனக்கு நெட் பேக்கேஜில் ஒன்றரை ஜிபியும் காலியாகும் தருணம். எனவே விட்டு விட்டுத்தான் நிகழ்ச்சியை ஜூமில் ஆன் செய்து கலந்து கொண்டேன். 

என் முறை வருவதற்குள் இரவு ஒன்பது மணி ஆகிவிட்டது. :) பெட்டகம் சிறகுகள் பிள்ளைகள் மிக அழகாக அறிமுகம் கொடுத்தார்கள். 

தனவணிகன்  இதழைத் தொடர்ந்து நடத்தி வருவதற்காக திரு வி என் சிடி வள்ளியப்பன் சாருக்கு ஒரு ஃப்ரீலான்ஸிங் ஜர்னலிஸ்டாக எனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தேன். ( நிறைய பிரபல இதழ்கள் கொரோனா காலத்தில் மின்னிதழ்களாக ஆகிவிட்டன .) ஆனாலும் தரமான தாள்களில் நிறைவான செய்திகளை பாஸிட்டிவ் கண்ணோட்டத்தில் வருமானம் கருதாமல் வெளியிட்டு வரும் தனவணிகன்  தொடர்ந்து வெளிவந்து நூறாண்டு காணவும் வாழ்த்துகள். 

கொரோனா என்னும் நோயை முருகனின் வேல் கொண்டு அழிக்க வேண்டும் என ஸ்டேட் எக்ஸ்ப்ரஸ் அதிபர் திரு ராமனாதன் அண்ணன் கூறி இருந்தார்கள். அதேபோல் இக்குழுமத்தில் இதுவரை பேசிய அனைவரும் தமிழ் என்னும் வாள் கொண்டு போரிட்டார்கள். 

நாங்கள் மூவர் மட்டுமே பெண்கள். போரின் போது வாளோடு கேடயம் இருந்தால்தான் பாதுகாத்துக் கொள்ள முடியும். அந்தக் கேடயம் எஃகினால் செய்யப்படுவது. அதன் முன்புறத்தில் அஃகன்னா போல மூன்று புள்ளிகள் இருக்கும். அந்தப் புள்ளிகளைப் போல இங்கே ஆண்கள் அனைவரும் தமிழ் என்னும் வாள் கொண்டு போரிடும்போது பெண்களாகிய நாங்கள் மூவரும் கேடயம் போல கவசம் போல இருப்போம் என எண்ணித்தான் விசு அண்ணன் எங்களைச் சேர்த்துள்ளார்களோ. இந்தக் குழுமத்தில் மட்டுமல்ல குடும்பத்திலும் பெண்கள்தான் கேடயம் போன்றவர்கள். கவசம் போன்றவர்கள். இந்தக் கொரோனாப் பெருந்தொற்றுக் காலத்திலும் கணவனின் வருமானத்தில் குடும்பத்தைச் செம்மையாகக் கொண்டு சென்றார்கள் பெண்கள் எனவே அவர்களுக்குப் பாராட்டுகள் என்று சொன்னேன்.  ( எங்களை/பெண்களை அஃகன்னா என்று சொன்னதால் அஃகன்னா வடிவத்தில் எங்களுக்கு இடம் அளித்தமைக்குத் தனவணிகனுக்கு நன்றி :) )

கொரோனாவினால் ஏற்பட்ட மற்ற இடர்கள் என்றால் வங்கிகளில் நாம் டெபாசிட்டாகப் போட்டிருக்கும் பணத்துக்கு வட்டி விகிதம் குறைந்திருப்பது, மருத்துவச் செலவுகள், பணி ஓய்வு நிலைமை, வீடு கட்டி வாடகைக்கு விட்டால் வாடகைக்குப் போகாமலிருத்தல் அல்லது வாடகைக்குப் போனாலும் வாடகை வராமலிருத்தல், இன்வெஸ்ட்மெண்ட் என நினைத்து மியூச்சுவல் ஃபண்ட், ஷேர் மார்க்கெட்டில் போட்ட பணத்தின் அதலபாதாள நிலைமை என்று எல்லாவிதத்திலும் ஏற்பட்ட பண, ஆரோக்கியச் சீர்குலைவைப் பற்றிக் கூறினேன். 

ஐசோலேஷன், வாக்ஸினேஷன், ஹைபர்நேஷன் பற்றிக் கூறினேன். இந்த ஹைபர்நேஷன் பிரியடில் நிறைய வாசிக்க முடிந்தது பற்றிக் கூறி நிறைய நூல்களைப் பரிந்துரை செய்தேன். பவர் ஆஃப் பாஸிட்டிவ் திங்கிங், தெ சீக்ரெட், எட்வர்ட் கில்லின் வாழ்க்கை ஒரு பரிசு ( LIFE IS A GIFT )  ஆகிய நூல்களைப் பரிந்துரைத்தேன். தனிமைப்பட்டு இருக்கிறோமே என எண்ணாமல்  தங்களுடைய ஹாபீஸையும் குறிக்கோள்களையும் நிறைவேற்றிக் கொள்ள இக்காலத்தைப் பயன்படுத்திக் கொள்ளும்படிக் கூறினேன். 

மேலும் கொரோனாவினால் கிடைத்த சில நன்மைகளையும் பட்டியலிட்டேன். 

நான் அமேஸானில் நூல்கள் சில  வெளியிட்டது, மேலும் உறவுகளின் வலிமையை உணர்ந்தது , குடும்ப ஒற்றுமை, ஒருவருக்கொருவர் அனுசரணையாய் இருப்பது, குடும்ப உறுப்பினர்கள் ஒரே இடத்தில் பல வருஷங்களுக்குப் பிறகு ஒன்றாக வசிக்கவும் விட்டுக் கொடுத்துப் பழகவும் கற்றிருப்பது, சரிவிகித உணவுகள் உண்பது, உடல் ஆரோக்யம் பேணுவது என நன்மைகளும் கிடைத்துள்ளன எனக் கூறினேன். உயிர் எவ்வளவு உன்னதமானது, வாழ்க்கை எவ்வளவு மகத்துவபூர்வமானதுன்னு கொரோனா உணர்த்தி உள்ளது எனவும் கூறினேன்.  

அனைவரின் உரைக்குப் பின் திரு வீர சுப்பு அவர்கள் நன்றியுரை நல்கினார்.

What you seeks is seeking you - quote by Rumi. ஆன்மீக எண்ணம் கொண்டவர்களை ஒருங்கிணைத்து இந்நிகழ்வை சிறப்பாக நடத்தி உள்ளார்கள் விசு அண்ணன். புரட்டாசி ராமாயணம் பாராயணம், கார்த்திகை வேல் பூசை, மார்கழி பிள்ளையார் நோன்பு, தை மாசம் காவடி பூசை, மாசி மாத படைப்புகள் இதுபோல் கூட்டு வழிபாடு கண்டவர் நாம். பொது நலனுக்காகக் கூட்டுப் பிரார்த்தனை என்பது இதுதான் முதலாவதாக இருக்கும். தேன்மொழி ஆச்சியின் கவிதையும், சித்ரா ஆச்சியின் குறிப்புகளும் வளம் சேர்த்தன. அனைத்துத் துறையினரின் பங்களிப்பையும் கொடுத்துள்ளீர்கள். அனைவருக்கும் நன்றி. 😊👍

நிகழ்வைத் தொகுத்து வழங்கிய செல்வி. முத்துப் பிரியா, செல்வி. ஜானகி, செல்வன். ஈஸ்வருக்கும் அமைப்பாளர்கள் திரு. ஸ்ரீனி, திரு. விஸ்வநாதன், திரு. வீர சுப்பு ஆகியோருக்கும் நன்றி.  







இந்த நிகழ்வுகள் அனைத்தையும் தொகுத்து வண்ணமயமாக அளித்த தனவணிகன் இதழுக்கும் எடிட்டோரியல் குழுமத்துக்கும் அதன் ஆசிரியர் திரு வி என் சிடி வள்ளியப்பன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். 



இந்த நிகழ்வை யூ ட்யூபிலும் காணலாம் . கிட்டத்தட்ட ஏழாயிரத்துச் சொச்சம் பார்வைகள் பெற்றுள்ளது. 

கொரனாவிலிருந்து விடுபட கூட்டு பிரார்த்தனை/ COVID - 19

https://www.youtube.com/watch?v=jGHZUfmWSYg&t=6199s


மேலும் மணி மடல்களில்  தனவணிகன் பற்றிய என்னுடைய கருத்தும் வெளியாகி உள்ளது . அதுவிவரம்  யூ ட்யூபில் என்னுடைய சேனலில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் விரிவாகக் காணலாம். கிட்டத்தட்ட 109 பார்வைகள் கடந்து இந் நூல்பார்வை முன்னணியில் இருப்பதே இதன் சிறப்பை உணர்த்தும். 

தனவணிகன் - மாத இதழ் - ஒரு பார்வை, தேனம்மை லெக்ஷ்மணன்.

 

”நல்லாரைக் காண்பதுவும் நன்றே; நலம்மிக்க
நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே-நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று.” 

- என்ற ஔவையின் மூதுரையை நினைவு கூர்கிறேன். நல்லோர் அனைவருக்கும்  நன்றி :)

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)