சனி, 28 மார்ச், 2020

டிடிஸி லேக்கும் ப்ளாக் ஃபாரஸ்டின் பியர் கார்டனும்.


தெற்கு ஜெர்மனியின் பாடன் வூடன்பர்க் என்னுமிடத்தில் அமைந்துள்ளது இந்த டிடிஸி ஏரி. ப்ளாக் ஃபாரஸ்ட் என நெடிதுயர்ந்த ஊசி மரங்கள் இந்த ஏரியா முழுவதும் சூழ்ந்துள்ளன.
அலமெனிக் பேச்சு வழக்கில் “டெட்டி” என்றால் குட்டிக் குழந்தை என்று அர்த்தம். ஐரோப்பா முழுவதும் நிலவும் தொன்ம கதைப்படி ஏரிகளில் இருக்கும்  வெள்ளைக் கொக்கு/நாரைதான் குழந்தைகளைப் பெற்றெடுக்கின்றன.  இதன்படி இது மிக உயரமான இடத்தில் அமைந்திருப்பதால் இதற்கு சிறப்பு சக்திகள் ( அமானுஷ்ய ) இருப்பதாக நம்புகிறார்கள் !

ரோமன் ஜெனரல் டைடஸ் ஒரு சமயம் இங்கே முகாமடித்துத் தங்கிய போது இதன் அழகில் மயங்கி அவர் தன் பெயரையே இதுக்கு வழங்கிட்டதால டிடிஸி என்றழைக்கப்படுதுன்னும் சொல்றாங்க. அதுனால கால்லி ( GALLY) ன்னு சொல்லப்படுற பாய்மரக் கப்பலோட மினியேச்சரை இங்கே வைச்சிருக்காங்க.

இன்னொரு கதைப்படி பன்னிரெண்டாம் நூற்றாண்டில் டிடினி என்ற ஒரு அறிஞர் இங்கே துரத்தித் துரத்தி வேட்டையாடப்பட்டாராம். அவர் நினைவா டிடிஸி வந்துச்சுங்குறாங்க.

அரும் லில்லிங்கிற ஒரு தாவரம் முன்பு டிடிலி என்று அழைக்கப்பட்டது. அது இந்த ஏரியா பூரா நிரம்பி இருந்துச்சாம். ( வெங்காயத்தாமரை மாதிரி ஆக்கிரமிச்சிருந்துச்சுச்சாம். ) அது இப்போ இல்லாட்டாலும் அதன் நினைவா டிடிஸி என அழைக்கிறாங்களாம். உஸ் அப்பாடா மூச்சு வாங்குது . எவ்ளோ ஸ்டோரி இந்த டிடிஸி என்கின்ற மூன்றெழுத்தின் பின்னாடி.

வாங்க அப்பாலிக்கா போய் அந்தக் குடையில் உக்காரலாம். ஏதாவது வாங்கி சாப்பிட்டாத்தான் அந்தக் குடையில் உக்காரலாமாம்.சரி வாங்க மெல்லமா சுத்திட்டு வருவோம். 


இங்கே போட்டிங் கூட உண்டு.

நமக்குக் கிடைத்த நேரம் குறைவு என்பதால் போட்டிங் செல்ல முடியவில்லை.


எனவே நின்று நிதானமாக இந்த குட்டி பீச்சை சுற்றிவிட்டு போஸ் மட்டும் கொடுத்து ஒரு ஃபோட்டோ எடுத்துக் கொண்டோம். 


தூரத்தில் தெரியும் ப்ளாக் ஃபாரஸ்ட் காடுகளில் கிடைக்கும் மரத்தில் இருந்துதான் உலகம் முழுவதும் பிரபலமாக இருக்கும் குக்கு கெடிகாரம் தயாரிக்கிறார்கள்.

நாங்கள் சென்ற ஜூன் ஜூலை மாதங்கள் தவிர அநேக மாதங்கள் குளிர் வாட்டி எடுக்கும் என்பதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாமல் பனி உறைந்திருக்கும். அப்போது இங்கே வாழும் மக்கள் இந்த மரத்தை வெட்டி எடுத்து இதன் மென்மையான துண்டுகளைச் செதுக்கி குக்கு கெடிகாரத்தை உருவாக்குகிறார்கள்.

இங்கே கடிகாரம் தயாரிப்பது சிறந்த குடிசைத்தொழில். சுமார் 50 யூரோவிலிருந்து 3000 யூரோக்களுக்கும் மேற்பட்ட கடிகாரங்கள் அணிவகுக்கின்றன. 



வெய்யிலுக்காகத் தொப்பி வாங்கலாம் என்று போய் அது பத்து யூரோ எனத் தெரிந்ததும் வாங்கவில்லை.

மிக அழகான இந்த ஏரியில் மக்கள் அமர அங்கே இருந்த பழைய மரங்களையே வெட்டி ஆசனங்களாக உருமாற்றி இருந்தது வெகு உபயோகமானது. 


இரவெல்லாம் குளிர். பகலெல்லாம் கொளுத்தும் வெய்யில். எப்படித்தான் இங்கே எல்லாம் ஜீவிக்கிறார்களோ. 


இந்தியன் ரெஸ்டாரெண்டுக்குத் திரும்பும் வழியில் அநேக கடைகள் இருக்கின்றன.  இங்கே உள்ள மக்கள் மலர் அலங்காரத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

ஃப்ரான்ஸ் நாட்டை ஒட்டியும் இந்த ஏரி அமைந்துள்ளது. ஜெர்மனி பூராவுமே கூம்பு வடிவக் கூரை கொண்ட வீடுகள்தாம். பனிக்காலத்தில் வெய்யில் வரும்போது பனி உருகி கீழே விழுவதற்காகத்தான்.


கடிகாரம் போக காய்கறிகளும், பழங்களும், பதப்படுத்தப்பட்ட அசைவ உணவு வகைகள், குளிர்பானங்கள், குடி பானங்கள், வாசனை திரவியங்கள் எனக் கொட்டிக் கிடக்கின்றன கடை எங்கும்.

அங்கங்கே புகை போக்கிகளும் விதம் விதமான கொடிகளும் அலங்கரிக்கின்றன. 


மெகா சைஸ் கோன் ஐஸ் வேணுமா.


பியர் கார்டன் என்று ஒன்று ஏரியைப் பார்த்தாற்போல மாலை வேளைகளில் மக்கள் அமர்ந்து பியர் அருந்துவதற்காகவே அமைக்கப்பட்டுள்ளது.  மரபெஞ்சுகள், நாற்காலிகள் போடப்பட்டிருந்தும் வெய்யில் கொளுத்திய சமயம் என்பதால் அங்கே அப்போது யாரும் அமரவில்லை. அழகுக்காக ஆண் மற்றும் பெண் குழந்தைகளின் பினோஃபார்ம், கவுன் வடிவில் பலூன்கள் அமைக்கப்பட்டிருந்தது வெகு அழகு. 


பியர் கார்டனுக்கு அருகில் ஒரு சர்க்கிள் வடிவ தளம். அதன் பேஸ்மெண்ட் ஏரிக்குள்ளும் செல்கிறது. ஓரங்களில் கூடை கூடையாய்ப் பூக்கள். நடுவில் ஒரு பிரம்மாண்டமான பூந்தொட்டி.  அலையும் காற்றும் அடிக்க அதன் கரைப்பக்கம் நின்று புகைப்படம் எடுப்பது த்ரில்லாக இருக்கிறது. 


பெர்க்ஸீயில் ஃபேர்/ மேளா போல் சுற்றிலும் குடை ராட்டினம், ஜெயண்ட் வீல் போல பலவகையான விளையாட்டுக்கள் உள்ளன. குழந்தைகளும் பெரியவர்களும் ஏறி அமர்ந்து சுற்றி விளையாடலாம். 


அங்கே இருந்த ஒரு விளக்குக் கம்பத்தைப் பிடித்தபடி மட்ட மதியான வெய்யிலில் ஒரு டூயட் பாடினோம் :)  ஹார்ன் அடிக்கத்தான் யூரோப் முழுதும் தடை. மெல்லிசாக ரொமாண்டிக் பாட்டுப் பாடி டான்ஸ் ஆடத் தடை இல்லை :)


இங்கே குக்கூ கெடிகாரங்களோடு ரோலக்ஸ் வாட்சுகளுக்கான கடைகளும் உள்ளன. ட்ருபா எனப்படும் டைம் பீஸ் கடைகளும் உள்ளன.

நடைபாதையில் உள்ள இந்த விளக்குக் கம்பம் வெகு அற்புதம். டிடிஸி லேக்குக்கு எதிரில் அமைந்துள்ளது இந்த பெர்க்ஸீ ரெஸ்டாரெண்ட் . இந்த ரெஸ்டாரெண்டில் விதம் விதமாக சமைத்துக் கொடுப்பதை சிற்பமாகச் செதுக்கி இருக்காங்க இந்தக் கம்பத்தில். மேலே ஒருவர் காஃபி அருந்துகிறார். பக்கவாட்டில் இருவர் சமைக்கிறார்கள். இன்னொரு இடத்தில் ஆண் வெயிட்டர் பரிமாற வாடிக்கையாளப் பெண்மணி உணவருந்துகிறார்.  

 இதன் அருகில்  ஒரு ஏடிஎம் அமைந்துள்ளது.  அதன் அருகே உள்ள பெர்க்ஸீ போர்டில் உணவுப் பொருட்களின் காம்போவும் விலைப்பட்டியலும் உள்ளன. அதைத் தேர்ந்தெடுத்து உள்ளே சென்று ஆர்டர் செய்தால் ஓய்வெடுக்கக் குடைகளும், விளையாட விதம்விதமான ராட்டினங்களும் அருந்த பானங்களும் உண்டு. 

இங்கே எதையுமே உண்ணாமல் வெறுமனே பீரை மட்டும் கூட வாங்கி அருந்துகிறார்கள். 


மதியான வெய்யிலில் காற்றாடுகிறது இந்த ஜெயண்ட் வீல். நமக்கு இதை எல்லாம் பார்த்தாலே குலை நடுக்கம். அதனாலே கிட்டே கூடப் போகலை. 


காஃபிக்கடைகளும் உண்டு. வழி நெடுக உள்ள கட்டிடங்கள் எல்லாமே கடைகள் & ஹோட்டல்கள்தான். இங்கே பயணியர் அதிக அளவில் வந்து செல்வதால் உள்ளூர் மக்கள் ரோட்டில் தங்கள் வாகனங்களில் செல்லமுடியவில்லை என்று வெளியூர்ப் போக்குவரத்து ஊர்திகளை எல்லாம் ஊர் எல்லையிலேயே ஓரம் கட்டி விடுகிறார்கள். சின்ன ஊர்தான் என்பதால் நாம் நட ராஜா நட என்று நடந்தே சுற்றிப் பார்த்துவிட்டு வந்தோம். 


இதோ வந்திடுச்சே கிறிஸ்மஸ் மார்க்கெட். இங்கேதான் குக்கு க்ளாக் கிடைக்கும். ஒன்றல்ல இரண்டல்ல ஓராயிரம் பார்க்கலாம். அடுத்த இடுகையில். :)  இந்த விதமா நாம் இப்போ டிடிஸி லேக்கையும் ப்ளாக் ஃபாரஸ்டின் பியர் கார்டனையும் சுற்றிப் பார்த்துட்டோம்.

இங்கே ஒரு வீடியோ போட்டிருக்கேன். இதுலயும் நீங்க டிடிஸி லேக்கைச் சுற்றிப் பார்க்கலாம். வீடியோவின் கடைசியில் வர்றோம் நாங்க. எங்க பையன் எடுத்த வீடியோ. அவர் இயற்கைக் காட்சிகளை எடுக்கும்போது அகஸ்மாத்தா அங்கே நாங்க இருந்தா காமிராவில் தென்படுவோம் என்பதைச் சொல்லிக் கொண்டு குக்கூ என்று கூவிச் செல்கிறேன் :) 

2 கருத்துகள்:

  1. அழகான இடம். காட்சிகள் அனைத்துமே சிறப்பு.

    பதிலளிநீக்கு
  2. நன்றி வெங்கட் சகோ

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)