ஞாயிறு, 9 பிப்ரவரி, 2020

இராம கீதை - ஒரு பார்வை.


இராம கீதை – ஒரு பார்வை.

பகவத்கீதை படித்திருக்கிறோம். அதென்ன இராம கீதை. கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு உபதேசித்ததே பகவத் கீதை. இராமன் உதாரபுருஷனாய் வாழ்ந்து காட்டியதே இராம கீதை. அப்படி லட்சியபுருஷனாய் வாழ்ந்து வரும்போது உறவுடையோருக்கு, உறவு கொண்டோருக்கு ஏன் பகைவருக்குமே வழங்கியதுதான் இராம கீதை.

உரையாடலே உபதேசமாகக் கூறப்பட்டுள்ளதனால் இது இராமோபதேசம் என்றும் குறிப்பிடப்படுகிறது. பகவத்கீதையின் சுலோகங்களுடன் இராமனின் மொழியாடலும் ஒப்புமை சொல்லப்பட்டுள்ளது இதில். செயல், கடமை, கடவுள் ஆகியன பற்றிய விளக்கங்கள் அற்புதம்.



தாய் கைகேயிடம், தம்பி இலக்குவனிடம், சகோதரனாகச் சேர்த்துக்கொண்ட குகனிடம், சுக்ரீவனிடம், விபீஷணனிடம், மேலும் பகைவர்களான வாலியிடம், இராவணனிடம் நிகழ்த்திய ஏழு உரையாடல்கள், உபதேசித்த மொழிகள், சதுர்வேதங்களின் மகாவாக்கியங்களாகப் பரிமாணம் எடுக்கும் அற்புதத்தை இந்நூலில் வாசித்து மகிழலாம்.

கானகம் சென்றுவா என்று கைகேயி கட்டளையிட்டபோதும் அன்றலர்ந்த தாமரையாய் விளங்கும் இராமனின் முகம் பற்றிய குறிப்பு அவன் பற்றற்ற தன்மையினை விவரிக்கிறது. அதேபோல் “உள்ளத்தின் உள்ளதை உரையின் முந்துற மெல்லத் தம் முகங்களே விளம்பும்” (1023/88) என்ற வரிகளும் சிந்திக்க வைத்தவை.  

தன்னை வளர்த்த தாய் கைகேயிடம் பரிவு, ( என் பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றதன்றோ ) முதல் மரியாதை காட்டுதல், சகோதரன் இலக்குவனிடம் சினம் தவிர்க்கச் சொல்லுதல் ( நதியின் பிழையன்று நறும்புனலின்மை) , தான் சகோதரனாய்ச் சேர்த்துக் கொண்ட குகனிடம் பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்த அவன் பரிவை சுவீகரித்தல் (பரிவின் தழீஇய என்னின் பவித்திரம் ) , சுக்ரீவனிடம் அரசியல் அறம் கூறுதல் – தந்தை தயரதனும் வாலியும் அழிந்து பட்ட காரணம் ( மங்கையர் பொருட்டால் எய்தும் மாந்தர்க்கு மரணம் ), எதிரியின் சகோதரன் ஆனாலும் சரணாகதி என்று வந்த வீடணனிடம் காட்டும் சகோதரத்துவம் ( எம்முழை அன்பின் வந்த அகன் அமர் காதல் ஐய ! நின்னொடும் எழுவரானோம்”, ), பகைவனான வாலியிடம் பிறன்மனை நயந்த பிழையைச் சுட்டிக்காட்டல்,  ( தக்க இன்ன, தகாதன இன்ன என்று ஒக்க உன்னலர் ஆயின் உயர்ந்துள மக்களும் விலங்கே) , இராவணனிடம்  “ அறமே வெல்லும் பாவம் தோற்கும் என்றது (அறத்தினால் அன்றி அமரர்க்கும் அருஞ்சமம் கடத்தல் மறத்தினால் அரிது ) .

உறவானாலும் அறமற்றதை எதிர்த்துப் போர்புரியச் சொல்வது பகவத் கீதை. உறவானாலும் பகையானாலும் உள்ளத்தையும் உள்ளதையும் உரைத்து துறவு மனப்பான்மையோடு தான் விலகி, மற்றவர்க்கு உலகத்தோடு ஒட்ட வாழும் நன்மையைக் கூறி ஒழுகச் சொல்வது இராம கீதை.

குகன் தான் உண்ணும் பொருட்களையே ராமனுக்கும் கொண்டு வந்தது கண்ணப்பர் அன்பினைப் போன்றது என்கிறான் கம்பன். மேலும் பகவத் கீதையின் கண்ணன் ராஜகுஹ்ய யோகத்தில் சொன்னதுபோல் தனக்குப் பக்தியுடன் கொடுக்கும் இலை பூ பழம் நீர் ஆகியவற்றைத் தான் ஏற்பதாகக் கூறுவதுபோல் இராமனும் குகன் தனக்கு அன்போடு அளித்த பொருட்களை ஏற்றுக் கொண்டதே அவற்றை உண்டதற்குச் சமம் என்கிறார்.

“ஸர்வதர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ |
அஹம் த்வா ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா சுச: ||

என்று பகவத் கீதையில் கண்ணன் எல்லா தர்மங்களையும் விட்டுவிட்டுத் தன்னைச் சரணடைபவனைக் காத்தளிப்பேனென்று கூறுகிறார். அதேபோல் இங்கும் விபீஷணன் ராமனின் தாளே சரணாகதி என்றும் பரதனுக்கு அளித்தது போல் தனக்கும் இராமனின் திருவடியையே முடிசூட்டும்படி வேண்டுவதும் சிறப்பு, அதேபோல் ராமன் “நின்னொடும் எழுவரானோம்” என இணைத்துக்கொள்வதும் சிறப்பு என்று ஆசிரியர் ஒப்புமை காட்டியுள்ளார். 

“அறம் அழிந்து போய் மறம் மேலெழுகிறதோ அப்போதெல்லாம் நான் பிறக்கிறேன் “ என்று கீதையில் கண்ணன் சொன்னது போல் இராவணனிடம் இராமன் “அறத் திறனாலே எய்தினை அன்றோ ? அது, நீயும் புறத் திறத்தினாலே பின்னும் இழக்கப் புகுவாயோ ? “ என்று கேட்கிறான்.

இவ்வுபதேசங்கள் போக கூனியின் மனம் நோகச் செய்தமைக்காக வருந்தி இராமன் ”சிறியர் என்று இகழ்ந்து நோவு செய்யன செய்யல் “ என்பதையும் வலியுறுத்துகிறான். இவற்றுக்கெல்லாம் மூலகாரணம் நாகணை வள்ளல் கோவிலில் முடிசூடும் முன்பு வசிஷ்டரிடம் அரசியல் அறங்குறித்த உறுதிப்பொருள் உபதேசம் பெற்றதும் ஒரு காரணமாய் இருக்கக்கூடும். ஆனாலும் அரசபாரம் என்பதைச் சுமையாய்க் கருதிய இராமன் அதை பரதனுக்கு வழங்கிக் காடேகியதும், பதினான்கு ஆண்டுகள் கழித்து வந்தும் பரதனுக்கே இளவரசுப் பட்டம் கட்டி ஆட்சியில் நியமித்ததும் அவன் சொன்ன கீதைப்படியே ஒட்டுதலின்றி அவன் வாழ்ந்தான் என்பதற்குச் சான்று.

இராமனையும் கிருஷ்ணனையும் ஒப்புமைப்படுத்தி எழுதப்பட்டிருக்கும் இந்த வித்யாசமான நூலை ஆய்வு மாணாக்கர் அனைவருமே படிக்க வேண்டும். சாதாரணர்களும் படித்து மேன்மை உய்யலாம். :) 

நூல் :- இராம கீதை
ஆசிரியர் :- கம்பன் அடிசூடி பழ. பழனியப்பன்
வெளியீடு :- இராஜபாளையம் கம்பன் கழக அறக்கட்டளை
விலை :- ரூ 100/-

4 கருத்துகள்:

  1. இராமன் கூறியதாக வரும்வரிகளே இராம கீதை ஆயிற்றோ

    பதிலளிநீக்கு
  2. நன்றி வெங்கட் சகோ

    நன்றி ஸ்ரீராம்

    ஆம் பாலா சார் :)

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)