சனி, 18 ஜனவரி, 2020

அனைத்துலகத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம்.

அனைத்துலத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவரான திரு பாரதிசுகுமாரன் ஐயா அவர்களின் முகநூல் பதிவைப் பகிர்வதில் மகிழ்கிறேன்.

///// *மகாகவி பாரதி பிறந்த நாளை எழுத்தாளர் தினமாக அறிவிக்க வேண்டும்...*
*அனைத்துலகத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் தொடக்க விழாவில் கோரிக்கை.*
சென்னை.11, சென்னை சாலி கிராமத்தில் உள்ள தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க அலுவலகத்தில், உலகத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தின் தொடக்க விழா இன்று நடைபெற்றது..
எழுத்தாளர். சும்மாடு.ஜெ.வ.கருப்புசாமி வரவேற்புரையாற்ற, தமிழ்ச்செம்மல் முத்துக்குமாரசாமி அவர்கள் தலைமையில் கூட்டம் தொடங்கியது.
தமிழ்நாடு அரசின் மகாகவி பாரதியார் விருதாளர். பாவரசு.பாரதிசுகுமாரன், சங்கத்தின் நோக்கம் குறித்தும் எதிர்கால வேலைத் திட்டம் குறித்தும் கருத்துரை வழங்கிட, அதன்மீது பத்திரிகையாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர்.டி.எஸ்.ஆர்.சுபாஷ், தமிழ்நாடு அரசின் பாரதிதாசன் விருதாளர். கவிஞர்.தியாரூ, திரைப்பட இயக்குநர். ஈ.ராமதாஸ், எழுத்தாளர். பெருமாள் ஆச்சி, தமிழ் இயலன், பரணி.சுப.சேகர், கவி.செங்குட்டுவன்,க.நா.கல்யாணசுந்தரம், ப.தமிழரசன்,அகநம்பி, தஞ்சை எழிலன், ஆகியோர் பேசினர்.

இறுதியில், சங்கத்தின் உயர் மட்டக்குழு நிர்வாகிகளாக, முன்னாள் காவல்துறை தலைவர்.திலகவதி, முனைவர்.பாலரமணி, முனைவர்.சரஸ்வதி இராமநாதன், இயக்குநர்.ஈ.ராமதாஸ், எழுத்தாளர். தர்ஷிணிமாயா ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர், அவைத்தலைவராக,தமிழ்ச்செம்மல். முத்துக்குமாரசாமி, ஒருங்கிணைப்பாளராக, டி.எஸ்.ஆர்.சுபாஷ், தலைவராக, பாவரசு.பாரதிசுகுமாரன், துணைத்தலைவர்களாக, எம்.இராமலிங்கம், ஜெ.வ.கருப்புசாமி, க.நா.கல்யாணசுந்தரம், பெருமாள் ஆச்சி, தஞ்சை எழிலன், பொதுச்செயலாளராக, அரங்க.சுப்ரமணியம், செயலாளர்களாக,பேராசிரியர். சத்தியமூர்த்தி, கவிஞர்.தியாரூ, இருகூர்.இளவரசன், தேனம்மை லட்சுமணன், மார்ஷல். முருகன் பொருளாளராக,தமிழ் இயலன், செயற்குழு உறுப்பினர்களாக, குடந்தை.கீதப்பிரியன், பி.சிவசுப்பிரமணியம், கல்யாண்குமார், தாய்.பிரபு, ப.தமிழரசன், கவி.செங்குட்டுவன், பரணி.சுப.சேகர், முனைவர்.விஜயராணி, அருணா செல்வம்- பிரான்சு, இன்பா- சிங்கப்பூர், எம்.எஸ்.லட்சுமி- மலேசியா, சந்திரகௌரி
சிவபாலன்- ஜெர்மனி ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர்.
இறுதியில், அனைத்து நிர்வாகிகளாலும் கீழ்க் கண்ட கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டு, இக்கோரிக்கைகளை, மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை சந்தித்து கோரிக்கை மனுவாக வழங்குவது என்றும் தீர்மானிக்கப் பட்டது.
*மாண்புமிகு. தமிழக முதல்வர் அவர்களுக்கு வழங்கும் கோரிக்கை மனு..*
1, தமிழ் எழுத்தாளர்களின் நலனைப் பாதுகாத்திடும் வகையில் எழுத்தாளர் நல வாரியம் அமைத்து எழுத்தாளர்களின் வாழ்வாதாரத்திற்கு தாங்கள் வழிவகை காண வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
2, மொழி நலனைப் பாதுகாத்திடும் வகையில், தமிழகத்தில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளும் மூன்றில் இரண்டு மடங்கு தமிழ் மொழியில் மட்டுமே இருந்திட வேண்டும் என்ற சட்டத்தை தீவிரமாக நடைமுறைப் படுத்தி தமிழ் மொழியைப் பாதுகாத்திட தாங்கள் ஆவன செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.
3, தமிழில் பெயர்ப் பலகை வைக்காத நிறுவனங்கள் மீது அபராதம் விதித்திட, தற்போது தொழிலாளர் நலத் துறையிடம் இருக்கும் அதிகாரத்தை, தமிழ் வளர்ச்சித்துறையிடம் ஒப்படைப்பதுடன், தமிழில் பெயர்ப்பலகை வைத்திடாத வணிக நிறுவனங்களுக்கு குறைந்த பட்சம் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்திட சட்டமியற்றிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
4, எழுத்தாளர்களின் நலன் கருதி, நூலகத் துறைக்கு, முழுமையான அதிகாரம் கொண்ட ஒரு இயக்குநரை நியமித்து நூலகத்துறையை மேலும் விரிவு படுத்திட தங்கள் அரசு ஆணையிட வேண்டுமென பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.
5, நூலகங்களுக்கு புத்தகம் வாங்கிடும்போது, எழுத்தாளர்களின் நிலையை உயர்த்தி அவர்களின் வாழ்வாதாரத்திற்கு வழி காணும் வகையில், எழுத்தாளர்கள் சுயமாக வெளியிடும் புத்தகங்களை வாங்குவதற்கு முன்னுரிமை வழங்கிட வேண்டுமென்றும், நாட்டுடமையாக்கப்பட்ட நூல்கள் மட்டுமன்றி, ஒரே தலைப்பில் பல பதிப்பகங்களில் இருந்து வெளியாகும் நூல்களை அனைத்துப் பதிப்பகங்களில் இருந்தும் வாங்குவதை நிறுத்தி, ஒரு பதிப்பகத்திடம் இருந்து வாங்கப்பட்ட நூலை வேறு பதிப்பகத்திடம் இருந்து வாங்கிடக் கூடாது என்று நூலகத் துறைக்கு தங்கள் அரசு ஆணையிட வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.
6, பொருளாதாரத்தில் பின் தங்கிய எழுத்தாளர்களின் நூல்கள் அச்சினில் வெளிவர தற்பொழுது தமிழ் வளர்ச்சித்துறைக்கு அரசு வழங்கி வரும் உதவித் தொகையை மேலும் அதிகரித்து வழங்கி, நூல் வெளியீட்டிற்கு விண்ணப்பிக்கும் அனைவருக்கும் கிடைத்திடும் வழி செய்திட வேண்டும்.
7, நூல்கள் எழுதிய, வறுமை நிலையில் உள்ள அகவை முதிர்ந்த எழுத்தாளர்களுக்கும் தமிழறிஞர்களுக்கு வழங்குவதுபோல் தமிழ் வளர்ச்சித்துறையின் வாயிலாக மாதம்தோறும் உதவித்தொகை வழங்கிட வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.
8, எழுத்தாளர்களைக் கண்டறிந்து அவர்களை ஒருங்கிணைக்கும் வகையில் தமிழ் எழுத்தாளர்களின் முகவரிகள் அடங்கிய நூலினை, தமிழ் வளர்ச்சித்துறையின் வாயிலாக அரசு வெளியிட வேண்டும்.
9, எழுத்தாளர்கள் பயன்பெறும் வகையில், அரசு கண்டறியும் தமிழ் எழுத்தாளர்களுக்கு, அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள், அரசுப் பேருந்துகளில் பயணம் செய்திட இலவச அனுமதி ஆணை வழங்கியுள்ளது போல் எழுத்தாளர்களுக்கும் வழங்கிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
10, அரசு மருத்துவ மனைகளில் எழுத்தாளர்கள் சிறப்பு சிகிச்சை பெறும் வகையில், தமிழ் எழுத்தாளர்களுக்கு அரசு சலுகை வழங்கி ஆணை பிறப்பித்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
11, புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் பிறந்த நாளை கவிஞர் தினமாக மறைந்த முதல்வர் அம்மா அவர்கள் அறிவித்து ஆண்டுதோறும் தமிழ் வளர்ச்சித்துறை வாயிலாக விழாவெடுக்க ஆணை பிறப்பித்தது போல், உலக மகாகவி பாரதியின் பிறந்த நாளை, எழுத்தாளர் தினமாக அறிவித்து ஆண்டுதோறும் தமிழ் வளர்ச்சித்துறை வாயிலாக விழாவெடுக்க தங்கள் அரசு ஆணை பிறப்பித்திட வேண்டும் என்று எழுத்தாளர்கள் சார்பாக தங்களைப் பணிவுடன் வேண்டுகிறோம்.
12, தமிழ்மொழி நலனிலும், வளர்ச்சியிலும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டவர்களின் பெயர்களில் விருதுகள், நினைவுத்தூண்கள், ஆண்டு தோறும் 100 அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை, சிறந்த நூல்களுக்கு பரிசு, உலகமெங்கும் தமிழ் வளர் மையம் என்று தமிழ் வளர்ச்சித்துறை வாயிலாக சீரிய பணியாற்றி வரும் தங்களின் அரசு, அகவை முதிர்ந்த எழுத்தாளர்களின் வாழ்வாதாரத்திற்கும் திட்டமிட வேண்டுமென பணிவுடன் வேண்டுகிறோம்.
13, தமிழக அரசின் உயர் விருதுகள் புதுவை மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கும் வழங்கப் படுவதுபோல், மாவட்டம் தோறும் சிறப்பாக தமிழ்ப் பணியாற்றி வருபவர்களுக்கு ஆண்டிற்கொருமுறை தமிழ்ச்செம்மல் விருது வழங்கும்போது, புதுவை, மும்பை, தில்லி, கர்நாடகா, கேரளா மாநிலங்களில் சிறப்பாக தமிழ்ப்பணியாற்றி வரும் தமிழறிஞர்களுக்கும் தமிழ்ச்செம்மல் விருதினை வழங்கிட தாங்கள் வழிவகை காண வேண்டுகிறோம்
14, மறைந்த தமிழறிஞர்களை கவுரவிக்கும் வகையில், புதுவை அரசு மறைத்த எழுத்தாளர் பிரபஞ்சனுக்கு அரசு மரியாதை வழங்கி கவுரவித்தது போல், தமிழக அரசும், குறைந்த பட்சம் சாகித்திய அகாதமி விருதாளர்கள் மற்றும் தமிழக அரசின் விருதாளர்கள் மறைவின் போது அவர்களுக்கு அரசு மரியாதை வழங்கி கவுரவித்திட வேண்டும்.
15, நூலக நூல் தேர்வு ஆணைக் குழுவில் அனைத்துலகத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்திற்கும் பிரதிநிதித்துவம் வழங்கப் பட வேண்டும்.
என்று பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப் பட்டன.
இறுதியில்.தஞ்சை.எழிலன் நன்றி கூறினார்.

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)