திங்கள், 20 ஜனவரி, 2020

கம்பராமாயணம் – 6 தொகுதிகள் ஒரு பார்வை


கம்பராமாயணம் – 6 தொகுதிகள் ஒரு பார்வை

கம்பராமாயணம் பத்தாயிரத்து ஐநூறு பாடல்களையும் ஆறு காண்டங்களையும் 118 படலங்களையும் உடையது. இதை ஒருவர் செய்யுள் வடிவில் படித்து உணர்ந்து உய்ய ஓரிரு ஆண்டுகள் பிடிக்கலாம். ஆனால் உமா பதிப்பகம் வெளியிட்டுள்ள இக்கம்பராமாயணம் அவற்றின் சாறைப் பிழிந்து பக்குவமாய்ப் பருகத் தருகிறது.

கம்பன் அடிசூடி திரு பழ. பழனியப்பன் அவர்கள் எழுதிய இந்நூல் ஆறு தொகுப்புகளாக வெளிவந்துள்ளது. பாலகாண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் என்று ஆறு காண்டங்களை ஆறு தனி நூல்களாகப் பொழிப்புரையுடன் தொகுத்திருக்கிறார்கள்.

தேவையான இடங்களில் பாடல்களையும் அவற்றின் விளக்கத்தையும் அருஞ்சொற்பொருட்களின் விரிவுடன் கொடுத்துள்ளார். கம்பனின் தமிழைப் பழனியப்பனாரின் தமிழ் வளமையோடு பருகத் தந்திருப்பது நனி சிறப்பு. தான் பெற்ற இறைப்பயனை ஒளிக்காது ஊருக்கே வழங்கினார் இராமானுசர். உலகம் உய்ய அவர் விரும்பியது போல் தனக்குக் கிடைத்த கம்ப அமுதத்தைப் பழனியப்பனாரும் கார்மேகம் போல் பொழிந்து நம்மைப் புதுப்பித்துள்ளார்.

கவிச்சக்கரவர்த்திக் கம்பன் பற்றிய சித்திரத்தோடு அவர் ராமாயணம் படைத்த காலத்தையும் ( சகாப்தம் 807, விசுவாவசு ஆண்டு, பங்குனி மாதம் 4 ஆம் தேதி, - கிபி 886 பெப்ருவரி, 23, புதன் கிழமை, துவிதியை திதி, அத்த நட்சத்திரம், திருவெண்ணெய்நல்லூர்  ) குறிப்பிட்டுள்ளது சிறப்பு. இக்காப்பிய நூலுக்குக் காவியக் கவிஞர் வாலியின் முன்னுரை வெகு சிறப்பு. 

பால காண்டத்தில் 23, அயோத்தியா காண்டத்தில் 13, ஆரண்ய காண்டத்தில் 13, கிட்கிந்தா காண்டத்தில் 16, சுந்தர காண்டத்தில் 14, யுத்த காண்டத்தில் 39 படலங்களையும் தனித்தனியாக விவரித்துக் கதையை வெகு நேர்த்தியாகக் கொண்டு சென்றுள்ளார்.

இராமன் சீதை திருமணத்துக்காய் உழுந்து இடக்கூட இடமில்லாமல் கொழுந்துபோல மக்கள் வெள்ளம் அயோத்தியில் இருந்து மிதிலை வரை சென்ற காட்சியை விவரித்திருக்கும் விதம் எல்லாம் அற்புதம். அதேபோல் ஒவ்வொரு காண்டத்திலும் இறை வணக்கம் போக விராதன், கவந்தன், இந்திரன், அனுமன், பிரகலாதன், பிரமன், வருணன், கருடன், தேவர் ஆகியோரின் துதிகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

இதில் ஆசிரியரின் நடைத்திறத்தால் என்னைப் பெரிதும் கவர்ந்தவர்கள் சீதை, தாரை, குகன், கும்பகர்ணன், அக்ககுமாரன், அதிகாயன், இந்திரசித்தன், இராவணன் ஆகியோர். 

பெரியவாச்சான் பிள்ளை அருளிய திவ்யப் ப்ரபந்தப் பாசுரப்படி இராமாணப் பாடல்கள் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. பரதனிடம் செல்லும் அனுமன் நிகழ்ந்தது கூறுமுகமாக குட்டிக் கம்பராமாயணமும் கொடுக்கப்பட்டுள்ளது வித்யாசம்.

சீதையின் காதல், துயரம், காகுத்தனின் வீரம், இலக்குவனின் சேவை, அனுமனின் தொண்டு, விபீஷணனின் சரணாகதி, பகைவனானாலும் இராவணனின் கம்பீரம், துணிவு ஆகிய அனைத்தையும் வெகு பாங்காக விவரித்துள்ளது கட்டாயம் ஒவ்வொருவரும் குறிப்பாக இளையர் அனைவரும் வாசிக்க வேண்டியது. ஒவ்வொரு இல்லத்திலும் இருக்கத்தக்கது.

இந்நூல் உண்மையிலேயே முன்பே இராமாயணம் படித்தவர்க்கு கையேடு. புதிதாய்ப் படிக்கப் புகுவோருக்குக் கைவிளக்கு என்பதில் ஐயமில்லை. 

கம்பனின் பன்முகத் தன்மையையும், பிரபஞ்ச ஆன்மீக உலோகாயதப் பொருண்மைகளை அவன் சித்தரிக்கும் விதத்தையும் கம்பன் அடிசூடி அவர்களின் பொழிப்புரை இலகுவாக்கி அளிக்கிறது. ஒவ்வொரு பள்ளி, கல்லூரி நூலகத்திலும் கட்டாயம் இடம்பெறவேண்டியது இந்நூல்.

நூல் :- கம்பராமாயணம்
ஆசிரியர் :- கம்பன் அடிசூடி திரு. பழ. பழனியப்பன்
பதிப்பகம் :- உமா பதிப்பகம்
விலை :- ரூ 150.

5 கருத்துகள்:

  1. ராமாயணம் ஆறு காண்டங்களையும் உள்ளடக்கி ஒரெ வாக்கியத்தில் சாதாரணன் ராமாயணம் எழுதி இருந்தேனே வாசித்தீர்களா

    பதிலளிநீக்கு
  2. நன்றி யாழ்பாவண்ணன் சகோ

    நன்றி பாலா சார். இல்லையே லிங்க் அனுப்புங்க ப்ளீஸ்

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)