வெள்ளி, 13 டிசம்பர், 2019

ஜபத்தால் உயர்ந்த ஜபேஸ்வரன். தினமலர் சிறுவர்மலர் - 44.


ஜபத்தால் உயர்ந்த ஜபேஸ்வரன்.

நாம் ஆசைப்படும் ஒரு விஷயம் கிடைக்க நாம் தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும். அப்படி முயற்சி செய்தோர் யாரும் இகழ்ச்சி அடைந்ததில்லை. உயர்வே அடைந்திருக்கிறார்கள் என்பதற்கு ஜபேஸ்வரனின் உயர்வே சாட்சி. மேலும் அவர் கருடனையே தன் மூச்சுக் காற்றால் வீழ்த்தியவர். யார் அந்த ஜபேஸ்வரன் எப்படி உயர்வடைந்தார் அவர் என்று பார்ப்போம் குழந்தைகளே.

சிவனுக்குத் திருக்கைலாயத்தில் தொண்டு புரிந்து கொண்டிருந்தவர் வீதஹவ்யர். அவர் கர்மவினைப் பயனால் பூமியில் சிலாதர் என்ற பேரில் பிறப்பெடுத்தார். தன் ஊழ்வினைப்பயன் கழிய அவர் கல்லை உணவாக உண்டு வந்தார். அவரது மனைவி பெயர் சித்ராவதி.

சிலாதர் ஒரு நாள் இரவு உறங்கும்போது அவரது முன்னோர்கள் தாகத்தால் தவிப்பதாகக் கனவு கண்டார். அதைக் கண்டு வருந்திய அவர் சிவனைக் குறித்து முன்னோர்களைக் கடைத்தேற்றவும் தன் குலம் விளங்கவும் ஒரு பிள்ளை வேண்டுமெனத் தவம் செய்தார். கடுந்தவத்தின் பலனாக சிவன் தோன்றினார்.

“சிலாதரா உன் தவம் கண்டு மகிழ்ந்தேன். நீ சைலமலைக்குச் சென்று புத்ரகாமேஷ்டி யாகம் செய்தால் உனக்கு சிறந்த மகன் கிடைப்பான். “ என்று வரம் கொடுத்தார். அதைக் கேட்டு மகிழ்ந்த சிலாதரும் சித்ராவதியும் சைலமலை சென்று யாகம் செய்தனர். அதன் பின் யாகபூமியில் ஏர்பூட்டி கலப்பையால் உழுதனர்.

’டங்’ என்று எதன் மீதோ கலப்பை மோதிற்று. அங்கே பூமியைத் தோண்டிப் பார்த்தபோது அங்கே ஒரு பெட்டி தென்பட்டது. அதைத் திறந்து பார்த்தால் அஹா என்ன இது . கொள்ளை அழகோடு ஒரு ஆண்குழந்தை அதில் சிரித்துக் கொண்டிருந்தது. வானவரும் அமரரும் அக்காட்சியைக் கண்டு பூமாரி பொழிந்தனர். தெய்வக் குழந்தையைப் பெற்றவர்களான சிலாதருக்கும் சித்ராவதிக்கும் உள்ளம் மகிழ்ந்தது.

ஈஸ்வரனின் பஞ்சாட்சரம் ஜபித்துப் பிறந்த மகவாகையால் அவனுக்கு ஜபேஸ்வரன் என்று பெயரிட்டு வளர்த்தனர். அக்குழந்தை அனைவரும் வியக்கும் அறிவோடும் அழகோடும் வளர்ந்தது.

அக்குழந்தைக்கு ஏழு வயதாகும்போது அவனுக்கு வேதக்கல்வி புகட்டினார் அவன் தந்தை சிலாதர். அதை ஒரு விழாவாக எடுப்பித்தபோது அங்கே வாழ்த்த வந்த தேவர்கள் அவனுக்கு அற்ப ஆயுள் என்பதைத் தங்கள் தூரதிருஷ்டியால் கண்டு வாழ்த்தத் தயங்கினார்கள். சிலாதர் அவர்கள் வாழ்த்தாதன் காரணம் கேட்டபோது அவரிடம் உண்மையைக் கூறிவிட்டார்கள்.

மனம் நொந்த சிலாதரும் சித்ராவதியும் சிவனிடம் தம் கவலைகளை ஒப்புவித்துத் தங்கள் மகனைக் கண்போலக் காத்து வந்தார்கள். தனக்கு அற்ப ஆயுள் என்பதை எப்படியோ தெரிந்துகொண்ட ஜபேஸ்வரன் தந்தை தாயின் துயரை அறிந்தான். “ அன்னையே, தந்தையே , கவலற்க. நான் சிவனைக் குறித்து ஜபிப்பேன். சிவ மந்திரத்தைத் தவிர பிற மந்திரம் அறியேன். அரன் என்னை அரணாகக் காப்பார். “ என்று நம்பிக்கை அளிக்கிறான். அச்சிறு வயதிலேயே அவன் ஞானமும் தெளிவும் பெற்றவர்களுக்கு நம்பிக்கையளிக்கிறது.

ஐயாரப்பன் கோவிலில் உள்ள அரிஅயன் தீர்த்தத்தில் மூழ்கி பஞ்சாட்சர மந்திரத்தை ஜபிக்கத் துவங்குகிறான் ஜபேஸ்வரன். ஜலத்தில் வசிக்கும் சகலவிதமான ஜந்துக்களும் ஜபேஸ்வரனைக் கடித்து உதிரத்தை உறிஞ்சுகின்றன. ஜபேஸ்வரனோ கண்களையும் திறக்கவில்லை. தன் ஜபத்தையும் விடவில்லை. அவன் இரத்தமனைத்தையும் அப்பூச்சிகள் குடித்தபின்னும் அவன் அசைவற்று சிவனை ஜபித்தபடி இருந்தான்.



பொறுமையின் சிகரமான அவன் ஜபத்தின் வெப்பம் சிவனை எட்டியது. மனம் கனிந்த சிவன் ஜபேஸ்வரன் முன் தோன்றி “ ஜபேஸ்வரா உன் ஜபத்துக்கு மகிழ்ந்தோம். ” என்று கூறி அவனைத் தொட ஜந்துக்கள் உறிஞ்சித் தகடாய்க் கிடந்த அவன் உடல் தங்கமாய்த் தகதகத்துப் பொலிந்தது.

சிவனைக் குருவாகக் கொண்டு சிவகலைகளையும் ஆகமங்களையும் கற்றுக் கொண்டான் ஜபேஸ்வரன். இவ்வாறு கற்றுக் கொண்டதோடு மட்டுமல்ல. தான் கற்ற பதினாறு கலைகளையும் சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர், பதஞ்சலி, சிவயோக மாமுனி, வியாக்கிரத பாதர், திருமூலர் ஆகிய தன் எட்டுச் சீடர்களுக்கும் கற்பித்தான்.

இவர்களுள் வியாக்கிர பாதர் என்பாரின் மகள் சுயம்பிரபை என்ற கன்னிகையை மணந்தான். தங்கள் மகனின் பொன்னான வாழ்வு கண்டு சிலாதரும் சித்ராவதியும் மகிழ்ந்தனர். சிலாதரின் முன்னோர்களும் வீடுபேறு அடைந்தார்கள்.

சகல கலைகளிலும் வல்லவனாக விளங்கிய ஜபேஸ்வரனின் முகம் ரிஷபத்தை ஒத்து இருந்ததால் ஈசன் அவனை நந்தி தேவன் என்று பெயரிட்டு கணங்களுக்கு அதிபதியாகும் பேறைத் தந்தார். அவனைத் தன் வாகனமாகவும் கொண்டார்.

எனவே நந்திதேவர் சிவன் கோவில்கள் இருக்குமிடத்து வாசலிலேயே அமர்ந்து கொண்டார். இவரைத் தாண்டித்தான் சிவனைத் தரிசிக்கச் செல்லவேண்டும். வரும் எல்லாரும் இவர் அனுமதி பெற்றுத்தான் உள்ளே செல்வார்கள்.

ஒருமுறை சிவனைக் காண விஷ்ணு தன் வாகனமான கருடனில் ஏறிப் பறந்து வந்தார். வாயிலில் குறுக்கே மறித்து அமர்ந்திருந்த நந்திதேவனிடம் அனுமதி கேட்டு உள்ளே சிவனைப் பார்க்கச் சென்றார் விஷ்ணு. சென்று வெகு நாழிகை ஆகிவிட்டது. பொறுத்துப் பொறுத்துப் பார்த்தான் கருடன். நந்திதேவனின் அனுமதி பெறாமல் அவனும் சிவனையும் விஷ்ணுவையும் காண உள்ளே புக முற்பட்டான்.

வந்ததே கோபம் நந்திதேவனுக்கு. அவனைத் தன் கொம்புகளால் வீசியும், வாலால் துரத்தியும் விரட்டினார். திரும்பத் திரும்ப வட்டமிட்டு உள் நுழைய முயன்ற கருடனைத் தன் மூச்சுக் காற்றால் வீசி எறிந்தார். அலறித் துடித்து விஷ்ணுவை அழைத்தபடி விழுந்தான் கருடன்.

உள்ளே இருந்த விஷ்ணு சிவனிடம் அதைத் தடுக்குமாறு வேண்ட, சிவன் நந்திதேவனிடம் கருடனை விட்டுவிடும்படிக் கூறினார். அதன் பின்னரே நந்திதேவன் கருடனை விட்டான். தன் பணியில் அவ்வளவு  செம்மையானவன் நந்திதேவன்.

தன் ஜபத்தால் கைலாயம் வரை செல்ல முடிந்த ஜபேஸ்வரன் நம் அனைவருக்கும் கொண்ட கொள்கையில் உறுதியோடிருந்தால் உயரலாம் என்ற நம்பிக்கையைக் கொடுக்கும் ஒரு முன்மாதிரிதானே குழந்தைகளே.

டிஸ்கி :-  இந்தக் கதை இதிகாச புராணக் கதைகள் என்ற தலைப்பில் 29 .11. 2019  தினமலர் சிறுவர்மலர் இதழில் இடம்பெற்றுள்ளது. நன்றி தினமலர் சிறுவர் மலர், தனது அழகான ஓவியங்களால் கதைக்கு எழில்கூட்டும் ஓவியர்கள் அஷோக் &  ரஜனி & எடிட்டர் தேவராஜன் ஷண்முகம் சார்.

2 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)