செவ்வாய், 10 செப்டம்பர், 2019

ஜெர்மனியில் பண்ணாகமும் நமது இலக்கும்..

ஜெர்மனிக்குச் சென்றதும் நான் தமிழர் என்று சந்தித்தது என்னுடைய ஈழத்தமிழ்ச் சொந்தங்களையே. இவர்கள் எல்லாம் முகநூல் நண்பர்கள் என்றபோதும் என்னைத் தங்கள் உறவினராக உணரச் செய்தார்கள். சென்றதில் இருந்து திரும்பி வரும் வரைக்கும் விருந்துகளாலும் பரிசுப் பொருட்களாலும் தங்கள் அன்பாலும் மூழ்கடித்தார்கள்.

ஜெர்மனியில் திருமதி நிம்மி சிவா அவர்கள் , திருமிகு முருகையா கந்ததாசன் சார் அவர்கள், திருமிகு பண்ணாகம் கிருஷ்ணமூர்த்தி அவர்கள், ஜெர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் செயலாளர் திருமதி கௌரி சிவபாலன் அவர்கள் , ஜெர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் திருமிகு அம்பலவன் புவனேந்திரன் அவர்கள், ஜெர்மனி தமிழ்க் கல்விச் சேவையின் தலைவர் திருமிகு சிறிஜீவகன் அவர்கள் ஆகியோரை சந்திக்கும் பொன்னான வாய்ப்புக் கிட்டியது. அவர்களின் அன்பும் கவனிப்பும் உபசரிப்பும் அவர்கள் தமிழ்நாட்டு எழுத்தாளராக எனக்கு அளித்த கௌரவமும்  ஈழத்தமிழ் நூல்களும் மறக்க இயலாதவை.


முதலில் பண்ணாகம் கிருஷ்ணமூர்த்தி சார் அவர்கள் பற்றி. ஹம் காமாட்சி அம்மன் கோவிலில் குடும்பத்தினருடன் சென்றிருந்தபோது அவர்களைச் சந்தித்தேன். இல்லத்துக்கு அழைத்ததோடு டோட்மெண்ட் நகர் புகைவண்டி நிலையத்துக்கு வந்து கிட்டத்தட்ட 70 - 80 கிலோமீட்டர் தூரத்தில் சுந்தர்ன், ஆன்ஸ்பர்க்கில் இருந்த  தன் இல்லத்துக்குக் காரில் அழைத்துச் சென்று பின் திரும்பவும் டோட்மெண்டுக்குக் கொண்டு வந்தும் விட்டார். அன்றைக்கு மட்டும் 300 கிலோமீட்டர்களுக்கு மேல்  அவரது கார் எங்களுக்காக ஓடியுள்ளது. இந்த அன்புக்கெல்லாம் என்ன கைமாறு செய்யப் போகிறோம். இந்த நட்பையும் அன்பையும் கடவுள் கொடுத்த பரிசாகவே எடுத்துக் கொள்கிறேன். 

பண்ணாகம் திருமிகு . கிருஷ்ணமூர்த்தி கந்தசாமி அவர்களின் வீட்டில். இது சுந்தர்ன் என்னும் மலைவாசஸ்தல நகரில் இருக்கிறது.

காய்கறித் தோட்டம், தையற்கலை, ஆன்லைன் உடைகள் விற்பனை என அசத்துகிறார் திருமதி சர்வோஜினி கிருஷ்ணமூர்த்தி அவர்களும்.

பண்ணாகம் இணையத்தை ஆரம்பித்துப் பதிமூன்று ஆண்டுகளுக்கும் மேலாக இணையத்தில் தமிழ்ச் சேவை செய்வது மட்டுமல்ல.  தமிழ் ஆலயங்களுக்கும் வார இறுதி நாட்களில் சென்று தமிழ் கற்பித்து வருகிறார்கள் இத்தம்பதிகள்.

மனமொத்த தம்பதியரின் உள்ளம் போலவே இல்லமும் குழந்தைகளும் வெகு அழகு. மிக அருமையான உணவு அளித்தார்கள்

பண்ணாகம் இணையத்தின் பத்தாம் ஆண்டு நிறைவின் நினைவுச் சின்னம்,  bundeshauptstadt berlin  என்று கூட்டாட்சி மூலதன பெர்லின் நினைவுப் பரிசு,  புடவை, தோட்டத்துக் காய்கறிகள் என எங்கள் பையை நிரப்பிவிட்டார்கள். அது மட்டுமல்ல.

நேற்று அவர்கள் இல்லத்துக்குச் சென்றது ஈழம் பற்றிப் பல்வேறு விஷயங்களையும் தெரிந்து கொள்ள வாய்ப்பாக அமைந்தது. 

இன்னும் உங்கள் சேவையில் ஜெர்மனி தமிழ் மக்கள் சிறக்க வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் :)

திருமிகு பண்ணாகம் கிருஷ்ணமூர்த்தி சார் அவர்களின் முகநூல் பதிவு..


////ஒரு எதிர்பாராத விதமாக யேர்மனி கம்அம்பாள் ஆலயத்தில் தமிழ்நாடு நண்பி தமிழ்அறிஞர் தேனம்மையின் இனிய சந்திப்பு.

யேர்மனியில் உள்ள கம் அம்பாள் ஆலயத்தின் குருவானவரின் 25வது திருமணநாள் விழாவில் நான் என் மனைவி சர்வாஜினியுடன் கலந்துகொண்டு நின்றவேளை  அங்கு சிரித்தமுகத்துடன் ஒருபெண்மணி என்னைநோக்கி வந்து நீங்கள் பண்ணாகம் கிருஷ்ணமூர்த்தி சார் தானே என்றார்.

அவரின் பேச்சில் இந்திய பேச்சுச்சாயல் இருந்தது நான்சற்று தயங்கி நீங்கள் யார் என்றேன்

நான்தான் சார் தேனம்மை என அறிமுகப்படுத்தினார் நான் சற்றும் எதிர்பார்க்காத சந்திப்பு

இவர் 2014ம் ஆண்டிலிருந்து எழுத்துத்துறையில் நண்பராக இணையம் மூலம் இணைந்தார் நேரடியாக சந்திக்கவில்லை

இன்று அம்பாள் ஆலயத்தில் அவரின் மகன் மருமகளுடன் காட்சி தந்து எனக்கு ஆச்சரிய மகிழ்ச்சி.

இவரின் மகன் யேர்மனியில் iTபொறியிலாளர்களாக வேலை செய்கிறார்

தனது மகனையும் மருமகளையும் பார்க்க வந்திருந்த தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானப் பட்டதாரியும் எழுத்தாளருமான திருமதி.தேனம்மை லட்சுமணணன் அவர்கள்  எம்மால் 26 எழுத்தாளர்களை இணைத்து எழுதிய ஒருவருடத்திற்கு மேலாக பல நாட்டு இணையங்களில் பிரசுரமான "விழுதல் என்பது எழுகையே" என்றதொடர்கதையில் இணைந்து எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.முகநூல் ஊடாக தொடர்புகளை பேணியே இத்தகு நல்லுறவை வளர்க்கக்கூடிய சாத்தியம் ஏற்பட்டது.

முகநூல் வழியாக நல்ல நட்பைப் பேணலாம் என்பதற்கு நானும் திரு. ஏலையா முருகதாசன் அவர்களும் உதாரணமாக இருக்கிறோம்.

இருவரும் இணைந்து "தமிழ் எழுத்தாளர் இணைய அகம்" என்ற அமைப்பை உருவாக்கி பல்நாட்டு எழுத்தாளர்களை இணைத்து வெற்றி கண்டோம். நன்றி

///எந்த நாட்டில் இருந்தாலும் தமிழ் என்ற உணர்வு இணைத்த பெருமைகொண்டவர் திருமதி .தேனம்மை இலட்சுமணன் அவர்கள்.
இந்திய பூர்வீக இடமான காரைக்குடியை சேர்ந்தவர் (கவிஞர் கண்ணதாசன் ஊர்)

இவர் தனது கணவர் இலட்சுமணன் அவர்களின் ஆதரவுடன் 10 மேற்பட்ட கவிதைகள் மற்றும் நாவல் கதைகள் போன்ற நூல்களை வெளியிட்ட தமிழ் ஆர்வலர்

அவர் எமது பண்ணாகம்.கொம். இணைய யேர்மனி அலுவலகம் வந்து எம்மை ஊக்கப்படுத்தியது எமக்கு பெருமையாகும். வாழ்க வளமுடன்///

#மிக்க நன்றியும் மகிழ்ச்சியும் சார் :)

டிஸ்கி :- இவர் பண்ணாகம் என்ற இணைய இதழோடு நமது இலக்கு என்ற பத்ரிக்கையையும் 2005, 2006 ஆம் ஆண்டுகளில் நடாத்தி வந்தவர்.  இவரது இலக்கு இன்னும் தொடரவேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறேன். 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)