வெள்ளி, 20 செப்டம்பர், 2019

சிறந்ததை அளித்த அதிபத்தர். தினமலர் சிறுவர்மலர் - 32.

சிறந்ததை அளித்த அதிபத்தர்.
மனிதர்கள் பொதுவா தனக்கு எந்த விதத்திலும் தேவைப்படாது என்று கருதும் பொருளையே பிறருக்கு எந்தத் தயக்கமுமில்லாமக் கொடுப்பாங்க. எவ்வளவு இருந்தாலும் தனக்கு தனக்கு என முடிந்துவைத்துக் கொள்வார்கள். அப்படி இல்லாமல் மீன் பிடிக்கும் தொழிலைச் செய்து வந்த ஒருவர் மிகச் சிறந்ததையே கொடுக்கும் வழக்கமுள்ளவராக இருந்தார். அப்படி அவர் கொடுத்த மிகச் சிறந்த பொருள் எது, அதை யாருக்குக் கொடுத்தார்னு பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
சோழநாட்டில் நாகப்பட்டினம் என்ற ஒரு ஊர் உள்ளது. இந்த ஊர் கடற்கரையை ஒட்டி அமைந்துள்ளது. இதன் பக்கமுள்ள நுழைப்பாடி என்ற இடத்தில் பரதவர் பலர் வசித்து வந்தார்கள். அவர்களின் தலைவரான அதிபத்தர் என்பாரும் அங்கேயே வசித்து வந்தார். அவர் சிவனின் மேல் பக்தி கொண்டவர்.
தினந்தோறும் மீன் பிடிக்கச் செல்கையில் முதலில் பிடிக்கும் மீனை சிவனுக்கு என்று சொல்லிக் கடலிலேயே விட்டுவிடுவார். இப்படி ஒரு நாளில் எத்தனை மீன் கிடைத்தாலும் சரி அல்லது ஒரு மீன் மட்டுமே கிடைத்தாலும் சரி அந்த முதல் மீனை சிவனுக்கு அர்ப்பணம் செய்துவிட்டு மீதி மீன்களை விற்றுத் தன் அன்றாட செலவுகளைச் செய்து வாழ்ந்து வந்தார்.

ஒரு சமயம் கடலில் மீன் தட்டுப்பாடு நிலவியதுபோல் மீன்களே அவர்களின் வலைகளில் அகப்படவில்லை. ஒரு சிலநாட்களில் ஓரிரு மீன்களே அகப்பட்டன. அப்போதும் அதிபத்தர் அந்த ஒரு மீனையும் சிவனுக்கு அர்ப்பணம் செய்து கடலில் விட்டுவிடுவார். ”தலைவர் அதிபத்தரே இன்று அந்த மீனையாவது எடுத்து விற்று இன்றையச் செலவுக்கு வைத்துக் கொள்ளுங்கள் “ என்று மற்றைய பரதவர்கள் வலியுறுத்தினாலும் மறுத்துவிடுவார்.
நாளாக நாளாக இந்நிலை தொடர்ந்ததில் அதிபத்தரும் மற்ற பரதவரும் பசியால் வாடினர். இன்றைக்கு ஓரிரு மீன்களாவது கிடைக்குமா என வலையைத் தோளில் போட்டுத் தங்கள் கட்டுமரங்களை அலைகளில் தள்ளிக்கொண்டு கிளம்பினர்.
அன்றைக்கு ஏதோ சிறப்பான நாள் போல் கடல் வெள்ளிக் கொலுசாய் அலையடிக்கிறது, சூரியன் தங்கத்தட்டாய் மின்னுகிறது, கடற்கரை தெய்வீக அழகோடு பொலிகிறது. ”ஏலேலோ ஐலஸா “ எனக் கூவியபடி கட்டுமரங்கள் ஒன்றை ஒன்று பின் தொடர்கின்றன.
அலைகள் குறைந்த இடத்தில் கட்டுமரங்களை நிறுத்தி வலைவீசுகிறார்கள் வலைஞர்கள். யாருக்கும் மீன் அகப்படுமென்ற நம்பிக்கையில்லை. அதிபத்தரும் தன் வலையை நீருள் வீசிவிட்டுக் காத்திருக்கிறார். வலையை ஏதோ இழுப்பது போலிருக்கிறது. வலையைப் பிடித்து ஏதோ வெடுக் வெடுக்கெனக் கடிக்கிறது. அஹா இதென்ன அதன் பலத்தால் அதி வேகமாக கட்டுமரத்தையும் அசைக்கிறதே. மிகப் பெரும் சுறாவாக இருக்குமோ, என நினைத்தபடி வலையைச் சுருட்டி மேலே இழுக்கிறார்.
தாங்கமுடியாத கனம். அம்மம்மா இதென்ன. அவர் கடினப்பட்டு இழுப்பதைப் பார்த்துச் சில பரதவர்கள் தங்கள் கட்டுமரத்திலிருந்து அவர் கட்டுமரத்தில்  மாறி ஏறி வலையை இழுக்கிறார்கள். மேலே மேலே வருகிறது வலை. வாலைச் சுழற்றி அடித்தபடி துள்ளித் துள்ளியபடி அதில் மாட்டி இருக்கிறது மிகப் பிரம்மாண்டமாய் ஒரு பொன் மீன்.
“அஹா” என்று மகிழ்ச்சியில்  குதியாட்டம் போடுகிறார்கள் மற்ற பரதவர். பொன் மீன் சூரிய ஒளியில் மினுமினுவென மின்னுகிறது. அதன் உடலெங்கும் ரத்தினங்கள். உண்மை மீனா பொய் மீனா எனக் கண்ணை ஏமாற்றியது அந்தப் பொன் மீன். பார்ப்பவர் கண்கள் கூசுகிறது அதன் ஒளியில். ரொம்ப நாள் கழித்து இன்று நல்லவேட்டை என்ற திருப்தி நிலவுகிறது அவர்கள் முகத்தில். இந்த மீனைக் கொழுத்த விலைக்கு விற்றுவிட்டு இன்றாவது நல்ல உணவு உண்கவேண்டும் என்ற பேரவா கசிகிறது அவர்கள் கண்ணில்.
இவை எல்லாவற்றையும் அதிபத்தரும் கவனித்துக் கொண்டுதானிருந்தார். ஆனாலும் அந்தமீனை வலையோடு எடுத்துக் கட்டுமரத்தில் போட்டதும் வலையை நீக்கத் தொடங்குகிறார்.
“அதிபத்தரே என்ன காரியம் செய்கிறீர். பலநாட்களாகப் பட்டினி கிடக்கிறோம். இம்மீன் கொழுத்த விலைக்குப் போகும். இன்றைக்காவது இம்மீனை விற்று நீங்களாவது பசியாறுங்கள். ” ஒவ்வொருவருக்கும் அம்மீன் தங்கள் வலையில் மாட்டவில்லையே என்று ஏக்கம் மேலிடுகிறது.
“இல்லை. இது இன்று முதல் மீன். இதை வழக்கம்போல் சிவனுக்கே அர்ப்பணிப்பேன். என் அப்பன் இன்று வேறு ஏதும் மீன் கிடைக்கச் செய்து நமக்கு உணவளிப்பார் “ என்று வலையைப் பிரித்துக் கொண்டிருக்கிறார். மீனோ பற்களால் வலையைத் துண்டித்துக் கொண்டும் வாலை இடமும் புறமும் அடித்துக் கட்டுமரத்தை ஆட்டியும் கிடக்கிறது. அதன் வாயில் இருந்து வலையைப் பிரித்து மீனின் வாலை இருகரங்களிலும் பிடித்துத் தூக்குகிறார்.
“போயும் போயும் உமக்குக் கிடைத்ததே. அங்கே மக்கள் பெண்டுகள் பிள்ளைகளெல்லாம் பலநாட்களாகப் பட்டினி. கிடைத்த மீனை நழுவவிடலாமா. கொஞ்சம் யோசியுங்கள். இது மாபெரும் மீனாய் இருக்கிறது. இதை விற்றால் அனைவருமே பசியாறலாம் “
“இல்லை நண்பர்களே. முதல் மீனை என்றைக்குமே கடவுளுக்குக் கொடுத்து நன்றி கூறிவிட்டு அதன் பின்னரே வயிற்றுப் பாட்டைப் பார்ப்பது என் வழக்கம். இன்றும் இது முதல் மீன். இது தங்கமானால் என்ன ரத்தினமானால் என்ன . இன்றைக்கு இது நான் பிடித்த முதல் மீன்.  எனவே சிறந்தததாக இருந்தாலும் தன்னலத்தோடு அதை வைத்துக் கொள்ளாமல் சிவனுக்கே அர்ப்பணிக்கப் போகிறேன். “
அந்தோ. யாவரும் பார்க்கப் பார்க்க பரதவர் அனைவரும் பதைக்கப் பதைக்க அதிபத்தர் அம்மீனை அப்பொன்மீனைத் தூக்கிக் கடலிலேயே விட்டார். அது துள்ளித் துள்ளிப் பாய்ந்து செல்ல அங்கே அப்பொன்மீன் இருந்த இடத்தில் ஒளியோடு சிவன் தோன்றினார். ”அதிபத்தா உன்னைச் சோதிக்கவே அம்மீன் படைக்கப்பட்டது. எப்போதும் போல் சிறந்ததையே கொடுத்து நீயும் சிறந்தாய் வாழிய நீ “ என வாழ்த்தினார்.
அதிபத்தரின் தன்னலமின்மையையும் சிவனின் அருளாசியையும் பார்த்து மற்ற பரதவரும் மனம் பூரித்தனர். நாமும் அனைவருக்கும் சிறந்ததையே வழங்குவோம், நம்மையும் சிறப்பு வந்து எய்தும் குழந்தைகளே. 

டிஸ்கி 1 :-  இந்தக் கதை இதிகாச புராணக் கதைகள் என்ற தலைப்பில் 30. 8. 2019  தினமலர் சிறுவர்மலர் இதழில் இடம்பெற்றுள்ளது. நன்றி தினமலர் சிறுவர் மலர், தனது அழகான ஓவியங்களால் கதைக்கு எழில்கூட்டும் ஓவியர் ரஜனி & எடிட்டர் தேவராஜன் ஷண்முகம் சார்.

2 கருத்துகள்:

  1. அதிபத்தர் வரலாறு அறிவேன். இன்று உங்கள் மூலமாக மறுபடியும். நன்றி. நாகப்பட்டினம் அல்லது நாகை என்பார்கள். நாகைப்பட்டினம் என்று பயன்படுத்தியுள்ளீர்களே?

    பதிலளிநீக்கு
  2. திருத்திவிட்டேன். மிக்க நன்றி ஜம்பு சார் :)

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)