வியாழன், 29 ஆகஸ்ட், 2019

நசிகேதன் கேட்ட கேள்விகள் . தினமலர் சிறுவர்மலர் - 30.

எமனையே கேள்வி கேட்ட நசிகேதன்.
சில குழந்தைகள் எதற்கெடுத்தாலும் கேள்வி கேட்டுக்கொண்டே இருப்பார்கள். பெற்றோர் முடிந்தவரை குழந்தைகளுக்கு விளக்கம் சொல்வார்கள். ஆனால் நசிகேதன் என்ற சிறுவன் எமனிடமே சென்று சில கேள்விகள் கேட்டான். அதற்கு எமனும் பதில் அளித்தார். அக்கேள்விகள் என்னென்ன என்று பார்ப்போம் குழந்தைகளே.
வாஜ்ரவஸ் என்றொரு முனிவர் இருந்தார். அவர் வாழ்வின் சகல சௌபாக்கியங்களும் பெற விஸ்வஜித் என்னும் யாகத்தை நடத்தி வந்தார். அவரது மகன்தான் நசிகேதன். மிகுந்த அறிவாற்றலும் அழகும் நிரம்பிய குழந்தை அவன்.
யாகம் நடத்தியவர்கள் யாகத்தின் முடிவில் எளியோர்களுக்குத் தானம் கொடுப்பார்கள். கோதானம் என்று பசு தானமும், பூமிதானம் என்று நிலமும் கொடுப்பார்கள். இது அவரவர் சக்திக்கு உட்பட்டது. ஆனால் வாஜ்ரவஸ் முனிவர் பால் சுரப்பு வற்றிய பசுக்களை கோதானம் கொடுத்தார். தரிசான நிலங்களை பூமிதானம் செய்தார்.
அதைப் பார்த்து நசிகேதன் வருந்தினான். சிறுவனாய் இருந்தாலும் அடுத்தவர்க்குச் சிறந்ததையே கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் அவன் மனதில் வேரோடி இருந்தது. அதனால் அவன் தன் தந்தையிடம் சென்று “ தந்தையே என்னை யாருக்குத் தானம் கொடுக்கப் போகின்றீர்கள் ? “ எனக் கேட்டான்.

முதன்முறை அவன் கேட்டதை வஜ்ரவஸ் முனிவர் சட்டை செய்யவில்லை. இரண்டாம் முறையும் அப்படியே கேட்டான். முனிவருக்குக் கோபம் வந்தது. மூன்றாம் முறையும் அவன் அவரிடம் அக்கேள்வியைக் கேட்க கோபத்தில் அவர் பட்டென்று “ உன்னை யமனுக்குத் தானமாகக் கொடுத்தேன் போ “ என்று சொல்லிவிட்டார்.
சொன்னது சொன்னதுதானே. யாகத்தில் தானமாகக் கொடுத்தால் திரும்பப் பெற முடியாது. எனவே நசிகேதன் புறப்பட்டு யமலோகம் சென்றான். அங்கே வாயிலில் காவலாய் இருந்த யமகிங்கரர்கள் சிறுவன் ஒருவன் தானே யமலோகம் வருவது கண்டு அதிர்ந்து தடுத்தார்கள்.
“டேய் பையா. எங்கே வருகிறாய். இது யமலோகம் . திரும்பிப் போ “ என கர்ஜிக்கிறார்கள். பெரிய மீசையும் கரிய பெரிய உருவமுமாய் அவர்கள் இருந்தாலும் பயப்படவில்லை நசிகேதன்.
“என்னை என் தந்தை யமனுக்குக் கொடுத்துவிட்டார். ஆகையால் இங்கே வந்துவிட்டேன் “
“யமன் இங்கே இல்லை. பார்க்க முடியாது. போ.. போ “ என அவர்கள் துரத்த
“இல்லை எத்தனை நாளாயினும் பார்த்துத்தான் போவேன் “ என அடம்பிடித்து அங்கேயே அமர்ந்தான் நசிகேதன்.
மூன்று நாளாயிற்று. அன்னம் தண்ணீர் இல்லாமல் வாயிலிலேயே பழியாகக் கிடந்தான் நசிகேதன். யமன் வந்ததும் தன் கோட்டை வாயிலில் சோர்ந்து கிடக்கும் சிறுவனை அழைத்து வந்து ” குழந்தாய் . நீ யார்? ஏன் இங்கு வந்தாய் ? “ என வினவினான்.
“நான் வஜ்ரவஸ் என்ற முனிவரின் மகன். அவர் யாகத்தின் முடிவில் என்னை உமக்குத் தானமாக அளித்தார். அதனால்தான் வந்தேன் “ என்றான்.
“நான் மூன்று நாட்கள் இங்கே இருக்க இயலாமல் போயிற்று. அதனால் நீ மூன்று நாட்கள் பட்டினி கிடக்க வேண்டியதாயிற்று. ஆகையால் உனக்கு மூன்று வரம் தருகிறேன் குழந்தாய். அதை வாங்கிக்கொண்டு நீ பூலோகம் சென்றுவிடு.” என்றான் யமன்.
” நன்றி எமதர்மராஜா. நான் திரும்பிச் சென்றால் என் தந்தை என் மேல் கோபப்படாமல் என்னைப் புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்ள வேண்டும். இதுதான் முதல் வரம்”. என்றான். உடனே எமன் “ தந்தேன் “என வரம் கொடுத்தார்.
இரண்டாவதாக ” சொர்க்கத்தில் இருப்பவர்கள் பசி தாகம் தூக்கம் இல்லாமல் இருக்கிறார்களே. அப்படி இருப்பதற்கு என்ன யாகம் செய்யவேண்டும் என சொல்லுங்கள் எமதர்மராஜா ? “ என நசிகேதன் கேட்டான்.
அதற்கு என்ன யாகம் செய்யவேண்டும் எனக் கூறிய எமன் ”அந்த யாகம் இனிமேல் நசிகேதன் பெயராலேயே நசிகேதன் யாகம் என்று அழைக்கப்படும்” என்ற சிறப்பையும் அளித்தார்.
மூன்றாவதாக ” மரணத்துக்குப் பின்னும் வாழ்வு உண்டா ? “ எனக் கேட்டான். இதைக்கேட்டு எமன் நடுங்கினான். ஐயோ தெரியாத்தனமாக இக்குழந்தைக்கு மூன்று வரம் அளித்தோமே என நினைத்து. “ நசிகேதா இக்கேள்விக்கு பதில் அளிக்கக் கூடாது. ஏனெனில் அது பரம ரகசியம். அதற்கு பதிலாக என்ன வேண்டுமானாலும் தருகிறேன். ” என்றான்.
“இல்லை எனக்கு இக்கேள்விக்குப் பதில் வேண்டும். ஏனெனில் மரணம் என்றால் பூமியில் அனைவரும் கலங்குகிறார்கள். பதில் சொல்லுங்க எமதர்ம ராஜா “ என்றான் நசிகேதன்.
“ கண்ணே நசிகேதா உன்னை பெரிய ராஜ்யத்துக்கு அதிபதி ஆக்குகிறேன். நூறாண்டு காலம் ஆயுள் தருகிறேன். பொன் பொருள் நவரத்னக் குவியல் தருகிறேன். சுகபோக வாழ்வு தருகிறேன். இதுமட்டும் கேட்காதே “ எனக் கெஞ்சினான்.
நசிகேதனோ ”இல்லை எமதர்மராஜா. எனக்கு பதில் அளியுங்கள். இதை எல்லாம் அழிந்து போகும். ஆனால் அதைப் பற்றித் தெரிந்துகொண்டால் அனைவருக்கும் நலம்தானே “ எனச் சொன்னான்.
வேறுவழியின்றி எமதர்மராஜன் சொன்னார் “ மரணத்துக்குப் பின் நல்லது செய்தவர்கள் சொர்க்கம் அடைவார்கள். தீயது செய்தவர்கள் நரகம் அடைவார்கள். ஆனால் முக்கியமானது என்னவெனில் இந்த உடம்புக்குத்தான் அழிவு. ஆனால் அதில் குடிகொண்டிருக்கும் ஆன்மாவுக்கு அழிவு இல்லை. எனவே உடலை மனதால் கட்டுப்படுத்தி தீமை செய்யாமல் நன்மை செய்து நன்நெறிப்படி வாழ்பவர் மரணத்துக்குப் பின்னும் பேசப்படுவார். எனவே மரணத்துக்குப் பின்னும் புகழுடம்பு பெறுவார் “ எனச் சொல்லி நிறைய பொன்னும் மணியும் பொக்கிஷமும் கொடுத்து நசிகேதனை பூமிக்கு அனுப்பினார்.
பார்த்தீர்களா குழந்தைகளே தன்னுடைய புத்திசாலித்தனமான கேள்வியால் மனிதகுலத்துக்கே தேவையான ஒரு விஷயத்தை நசிகேதன் கண்டு கேட்டு வந்து நமக்குச் சொல்லியிருப்பது பாராட்டுக்குரியதுதானே. எனவே நாமும் நன்மையே செய்து வாழ்வோம்.

டிஸ்கி 1 :-  இந்தக் கதை இதிகாச புராணக் கதைகள் என்ற தலைப்பில் 16. 8. 2019  தினமலர் சிறுவர்மலர் இதழில் இடம்பெற்றுள்ளது. நன்றி தினமலர் சிறுவர் மலர், தனது அழகான ஓவியங்களால் கதைக்கு எழில்கூட்டும் ஓவியர் ரஜனி & எடிட்டர் தேவராஜன் ஷண்முகம் சார்.

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)