செவ்வாய், 14 மே, 2019

கவிதாயினியின் பார்வையில் என் இரு கவிதைகள்.


முபின் ஸாதிகா.. இவங்க எழுதுற கவிதைகளைப் படிச்சா என் மூளை ஸ்தம்பிச்சிடும். நவீன கவிதைகளில் இவங்களை விஞ்ச ஆளே கிடையாது. இவங்க பூக்கோ, மதிப்பீடு எல்லா எழுதுறதப் படிச்சா நாம் எழுதுறதெல்லாம் கவிதையான்னு திகைப்பு வந்திடும்.
இவங்க ஒரு விமர்சனம் எழுதி அனுப்பி இருந்தாங்க. என் இரண்டு கவிதைகளைப் படிச்சிட்டு. அதையே ரெண்டு தரம் படிச்சேன்னா பார்த்துக்கோங்க. நன்றி ஸாதிகா மேம்.

ஒட்டுக் கேட்கும் யந்திரம்..


பூச்சிகள் வண்டுகள் அளவில்
ஒலிவாங்கிக் கடத்தும் யந்திரங்கள்
குவிந்து கிடந்த கடை வழியே
கடக்க வேண்டி வந்தது.

எதிர்முறைக்காரர் வீட்டு அலமாரி.,
மேலதிகாரியின் மேசையடி.,
கட்சிக்குள்ளே கோஷ்டியானவனின்
சின்ன வீட்டின் பரண்.,
கையூட்டு வாங்குபவர்களை
சந்திக்கச் செல்பவரின் கைப்பை.,
இவற்றில் பதுக்கி உண்மையை
ஒட்டுக்கேட்கலாம் சத்தமில்லாமல்.

தொலைபேசி உரையாடல்
கண்காணிக்கப்படும் கோபுரங்களின்
கூர்ச் சாணையை விட
சாணிச் செருப்புக்களைப்
படிகளில் தேய்ப்பதாய் இருக்கிறது
உண்மைக் கடத்திகளின் பணி.

யதேச்சையாய்ச் சிக்கும்
வார்த்தைக் கடத்திகளைச்
சோதிக்கும் போது
ஏதும் கொள்ளளவு இல்லை
அதில் என்றாலும்
யார் வைத்திருப்பார்களோவென்று
யாரைப் பார்த்தாலும்
சந்தேகத்துடன் சிக்காகிறது.,
எங்கும் பேச பயந்து.

எதிர்பாராமல் அப்பியோரும்
அப்பப்பட்டவரும் சந்திக்கும் நேரம்
யதார்த்தமாய்ப் புன்னகைப்பது
இலகுவாய் வருவதில்லை.

இந்தக் கவிதைக்குள் இருக்கும் இணைகள் புற உலகப் பொருளுடன் வெளிப்படையாகச் சேர்கின்றன.

ஒட்டுக்கேட்டல்xகண்காணிப்பு
எந்திரம்xஇயற்கை
உண்மைxபொய்

கண்காணிப்பின் சிக்கலை பூக்கோ பேனாப்டிகன் கோபுரம் என்பார். அரசு எனும் எந்திரம் சிறை, போன்ற அமைப்புகளால் மக்களைத் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருக்கின்றன. அந்தக் கண்காணிப்பு அரசு என்ற அமைப்பிடமிருந்து தனிமனிதருக்குக் கடத்தப்பட்டதை எளிமையாகப் பதியவைத்திருக்கிறது இந்தக் கவிதை.

ஒட்டுக்கேட்கப்படுதல் இன்றைய காலகட்டத்தின் மற்றொரு செவி உறுப்பை உருவாக்கியிருக்கிறது. யாரும் யாரையும் கண்காணிக்கப் பயன்படுவது ஒட்டுக்கேட்பு என்ற செயல்பாடு. எல்லோரும் எல்லோரையும் கண்காணிப்பதற்கு இன்றைய காரணம் தனிப்பட்ட வாழ்க்கை என்பதை அழித்தொழிப்பு செய்யும் இலக்கு இருப்பதுதான். இதில் பேச்சு தடைபடுகிறது. அது எங்கும் வெளிப்படுவதில்லை. யாரிடமும் வெளிப்படுவதில்லை. உள் முகப் பேச்சாக அது வளர்கிறது. இதில் இருக்கும் துயரமும் விளையாட்டும் ஒட்டுக் கேட்கப்படும் கண்காணிப்பிலிருந்து தப்பிப்பதும் அதற்காக மௌனமாவதும்தான்.

எந்திரச் செயல்பாடாக உண்மைகள் எங்கும் பொங்கி வழிகின்றன. ஒட்டுக் கேட்பு மூலம் ஒருவரின் சிந்தனைகள், பின்புலங்கள் எல்லாம் ஒட்டுக் கேட்க விரும்புபவருக்குள் நிறைகின்றன. அவை உண்மைகளாக உரைத்துப் பார்க்கப்படுகின்றன. சாணி தோய்ந்த செருப்புகளைப் போல் உண்மைகளைக் கடத்தும் பணி இருக்கிறது. எந்திரம் இயற்கையைச் சங்கேதங்களாய் மாற்றி உண்மைகளைக் கடத்துகிறது.

ஒட்டுக்கேட்பதால், கண்காணிப்பதால் உண்மை வெளிச்சமிட்டுவதாகவும் ஒட்டுக்கேட்கப்படாமலும் கண்காணிக்கப்படாமலும் இருந்திருந்தால் பொய் நிறைந்திருப்பதாகவும் ஊடாட்டம் தொடர்கிறது. கண்காணிப்பில் இருப்பவரும் இருத்தப்படுபவரும் சந்திக்கும் போது புன்னகைகள் தொடர்கின்றன. யதார்த்தமாய் இல்லாதிருப்பது மட்டுமே சங்கடமாகத் தொடர்கிறது. கண்காணிப்பு தவிர்க்க முடியாது. புன்னகைகளும் தவிர்க்க முடியாதவை. எந்திரப் புன்னகைகள் கண்காணிப்பின் விளைவாக உருமாறி உண்மைகளைக் கொட்டும் என்று கவிதை வர்ணிக்கிறது.


காலசர்ப்ப தோஷம்..:-

நல்ல நட்சத்திரக்காரர்
நீங்கள் என்று
புகழப்படுகிறீர்கள்.

இது இதற்கு உகந்தது என்று
ஒரு சுபயோகக்காரனாகப்
பிறப்பித்திருக்கிறது அது உங்களை..

போர்வாளாய்ப் போரிடத்
தயாராயிருக்கும் போதெல்லாம்
மழுங்கடிக்கப்படுகிறீர்கள்.
நீங்கள் ஷத்ரியனல்லவென்று.

வசியமும்., வைசியமும்
செய்யத் தெரியவில்லை
உங்களுக்கு ..வாய்ப்பூட்டும் கூட.

யோகம் கரணம்., சூத்திரம் நீக்கி
ராஜயோகம் என நினைக்க
விபரீத யோகமாய் இருக்கிறது.

நாலு வண்ணத்தில் அடங்கி
அட்டவணையில் சேராமல் போகிறீர்கள்.
சலுகைச் சால்வை கிடைக்காமல்.

சகடயோகம் சடசடவென இறங்க
கால சர்ப்பம் தீண்டித் தோஷமாக்க
பாம்புக்கடியின் விஷப்பல்பட்டு
பரமபதத்திலிருந்து இறங்குகிறீர்கள்.

நீங்கள் இறங்கிவந்த இடத்திலிருந்து
உங்கள் மகனோ பேரனோ திரும்ப
நடக்கத் துவங்குகிறான், திரும்ப
பாம்புக்கடிபட்டு இறங்க..

சோதிடம், வருமுன் கூறல் என்ற கலையின் விளைவு பற்றிப் பேசுகிறது கவிதை.
-சோதிடம்xநம்பிக்கை இன்மை
-விளைவுxஇயல் வாழ்வு
-பரம்பரைxமரபு

இந்தக் கவிதை சோதிடத்தின் மீதான நம்பிக்கையையும் நம்பிக்கை இன்மையையும் ஒரு சேர பதிவு செய்கிறது. இதில் இருக்கும் கவிதை சொல்லி சோதிட நம்பிக்கை வைத்திருப்பவர்களைச் சுட்டிக் கூறுவதாக உள்ளது. சோதிட நம்பிக்கை உருவாக்கும் செயல்பாடுகளை அடுக்குவதும் அதனால் ஏற்படவேண்டிய நம்பிக்கை இன்மையையும் அடையாளம் காட்டுகிறது கவிதை. நட்சத்திரம், யோகம், காலசர்ப்பம் என்ற சோதிட முடிச்சுகளுக்கு இணையாக அவற்றுக்கு எதிரான அம்சங்கள் இருப்பதைச் சுட்டிக் காட்டுகிறது இந்தக் கவிதை.

நான்கு வண்ணக் கட்டங்கள் வாழ்க்கையை விளக்கிவிடும் என்ற முன் கூறல் சொல்லும் விளைவைக் காண வாழ்க்கைப் பயணிக்கிறது. விளைவை முன்பு பார்த்துவிட்டு வாழ்க்கை பின்பு பயணிக்கிறது. விளைவு கற்பனையாக வாழ்வு உண்மையாகிறது. விளைவும் கற்பனையும் வாழ்வில் இடம் மாறிப் போகின்றன. சோதிடத்திற்கு மாற்றாக இயல் வாழ்வு புதிய திசைகளைக் கண்டடைகிறது. இருந்தும் விளைவுகளுக்கான காரணம் ஒன்றை சோதிடம் முன்வைக்கிறது. காலசர்ப்ப தோஷம் என பாம்பின் விடத்தை வருங்காலத்தில் வைத்துவிடுகிறது சோதிடம். பரமபத விளையாட்டாய் வாழ்க்கை ஏறவும் இறங்கவும் செய்கிறது. சோதிடக் கட்டங்களில் விளையாடிய வாழ்வு இயல் உலகின் விடத்தால் தீண்டப்படுகிறது.

தொடர்ந்து இந்தப் பயணம் பரம்பரையாக நடந்துவருகிறது. வழிவழியாக வாழ்வு தொடர்கிறது. மரபின் பிடியில் சிக்கி மீண்டும் இயல் வாழ்வு சிதற. ஆனாலும் சோதிடம் பரம்பரை வழமையுடன் புதிய முடிச்சுகளை உருவாக்கி மேலும் பல பாம்புகளைப் படைத்துவிடுகிறது. மரபுகளை மீறாமல் விடத்தின் உருத் தெரியாமல் ஏறி இறங்கிவிடுகிறது மனித இனம்.

{{இதில் முதல் கவிதை சிங்கப்பூர் சென்றிருக்கும்போது ஒரு ஷாப்பிங் மாலில் உள்ள கடையில் கண்டது. இவ்வாறான வண்டு பூச்சி அளவிலும் ஒலிக்கடத்திகளை விற்கிறார்கள் எனத் தெரிந்து கொண்டேன். தொடர்ந்து என் கொழுந்தனாரும் கணவரும் பேசியதையே கவிதையாக்கி இருக்கிறேன் J

அதே போல் இரண்டாம் கவிதை சலுகைச் சால்வை கிடைக்காதவர்களின் ஆதங்கம். கட் ஆஃப் 99 எடுத்தாலும் 95 கிடைத்தவருக்குக் கிடைக்கும் சலுகை கிடைக்காமல் உழைத்த உழைப்பெல்லாம் வீண் என்பது போல பரமபத விளையாட்டில் ( ஸ்நேக்ஸ் & லாடர்ஸ் ) இரண்டாம் கட்டத்துக்கு ஆயாசத்துடன் வந்து விழுவது J }}

-- இந்த கருத்துரை 2017 நவம்பரில் அழகப்பா பல்கலையில் நடைபெற்ற ஆசியான் கவிஞர்கள் சந்திப்பில் அனுராகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட “தேனம்மை லெக்ஷ்மணனின் படைப்புலகம் “ என்ற நூலில் இடம் பெற்றுள்ளது. 

டிஸ்கி:- அருமையான பகுப்புரைக்கு நன்றியும் அன்பும் ஸாதிகா. 


1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)