புதன், 8 மே, 2019

பரதன் என்னும் பத்தரை மாற்றுத் தங்கம். தினமலர் சிறுவர்மலர் - 16.

பரதன் என்னும் பத்தரை மாற்றுத் தங்கம்
அண்ணன் தம்பி பாசத்துக்கு எத்தனையோ பேரை உதாரணமாகக் கொள்ளலாம். ஆனால் மாற்றாந்தாய்க்குப் பிறந்து தன் சகோதரன் மேல் அதீத பாசம் வைத்து அவன் வராததால் தீப்பாயத் துணிந்தவனை நீங்கள் எங்கேனும் கண்டதுண்டா. இல்லைதானே அப்படிப்பட்ட பாசக்காரப் பரதன் என்னும் தம்பியைப் பற்றிப் பார்க்கப் போகிறோம் குழந்தைகளே இன்று.
அயோத்தி அரண்மனையில் ஒரே மக்கள் வெள்ளம். அமைச்சர்களும் அரச மாதாக்களான கைகேயி கோசலை சுமித்திரை ஆகியோரும் பரிதவித்துப் பார்த்திருக்கிறார்கள்.
அவர்கள் எதிரே ஒரு அக்னி குண்டம். அதில் நெருப்பு வானளாவி எழுகிறது. அதன் முன் நின்றிருக்கிறான் கட்டழகான வாலிபன் ஒருவன். அட அவந்தான் இராமரின் தம்பியான பரதன் என்னும் இராஜகுமாரன். அவன் ஏன் அக்னி குண்டத்தைச் சுற்றி வருகிறான். அன்னையர் மூவருக்கும் அடங்காத வருத்தம். அதிலும் கைகேயிக்கோ பெரும் மனத்துயர். தன்னால்தானே விளைந்தது எல்லாம். தானும் தன் மகனான பரதனோடு தீப்பாயச் சித்தம் ஆகிறாள்.
அப்படி அவள் செய்த தவறுதான் என்ன ? பதினான்கு ஆண்டுகளுக்கு முன் அவள் நினைவு சென்று மீள்கிறது. சக்கரவர்த்தி தசரதன் தன் மூத்த மகன் இராமனுக்குப் பட்டாபிஷேகம் செய்ய எண்ணுகிறார். ஆனால் அவர் இளைய மனைவியான கைகேயியோ மந்தரை என்னும் கூனியின் சொற்கேட்டு தன் மகன் பரதன் நாடாள வேண்டும் இராமன் காடாளப் போக வேண்டும் என்று வரம் கேட்கிறாள்.
அதைக்கேட்ட தசரதர் அவ்வரத்தைக் கொடுத்துவிட்டு இறைவனடி ஏகுகிறார். அப்போது பரதன் தன் பாட்டனார் நாடான கேகய தேசத்துக்குச் சென்றிருந்தான். செய்தி கேட்டு ஓடோடி வருகிறான். தன் தாயை இகழ்ந்து அவன் அதன் பின் அவளிடம் பேசுவதேயில்லை
எத்தனை கொடுமையான விஷயம் ஒரு தாய்க்கு. ஆனால் பரதன் தன் அண்ணன் இராமன் மேல் அளவற்ற பாசம் வைத்திருந்தான். அதனால் அவரைத் தேடி ஓடுகிறான். நாட்டைத் தாண்டி ஆரண்யம் புகுமுன் அவர் பாதங்களில் வீழ்ந்து நாடு திரும்பும்படி நீர் வரி ஓடிய கண்களோடு மன்றாடுகிறான்.
அவரோ தந்தை தாயின் சொற்படி பதினான்கு ஆண்டுகள் ஆரண்யவாசம் முடிந்து திரும்புவதாக உறுதி அளிக்கிறார். தானும் அவருடன் கானகம் ஏகுவதாகப் பிடிவாதம் பிடிக்கிறான் பரதன். ”இளவல் இலக்குமணன் என்னைப் பார்த்துக் கொள்வான் , ஆட்சியாளர் யாருமற்ற நாட்டை பகைவர் கொள்வார்கள், நம் அன்பிற்கினிய அன்னையரை யார் காப்பார் . ஆகவே நாடு திரும்பிச் செல்வாயாக “  என்று அவனை ஆற்றுப்படுத்தி நாட்டுக்கு அனுப்புகிறார் இராமர்.
அரை குறை மனதோடு நாடு திரும்ப சம்மதிக்கும் பரதன் இராமரிடம் இரண்டு கோரிக்கை வைக்கிறான். முதலாவதாக “ அண்ணலே தாங்கள் திரும்பி வரும் வரையில் நான் அந்த இராஜ சிம்மாசனத்தில் அமரமாட்டேன். அதற்குப் பதிலாக தாங்கள் அணிந்திருக்கும் இந்த மரப்பாதுகைகளைத் தாருங்கள். அவற்றை சிம்மாசனத்தில் அமர்த்தி உங்கள் பிரதிநிதியாக நாட்டைக் காத்து வருகிறேன். “ என்று கேட்கிறான்.  
அவன் அன்பிற்குத் தலைவணங்கும் அண்ணல் அந்தப் பாதுகைகளை வழங்குகிறார். அவற்றைப் பட்டுத் துணி விரித்த பொற்தட்டுகளில் ஏந்திப் பிடித்தபடி இரண்டாம் வரத்தைக் கேட்கிறான் பரதன். ” நீங்கள் மிகச் சரியாக இன்றிலிருந்து பதினான்காம் ஆண்டில் இதே தினத்தில் நாடு திரும்ப வேண்டும். அன்றேல் நான் என்னை எரியூட்டி முடித்துக் கொள்வேன் “ என்று உணர்ச்சிக் கொந்தளிப்பில் கலங்குகிறான் பரதன்.
அவன் தோள் தொட்டு சமாதானப்படுத்தி கண்கள் துடைத்து அணைத்துக் கொள்ளும் இராமர் ,” தம்பி பரதா. உன் அன்பு மெய்சிலிர்க்க வைக்கிறது. உன்னைத் தம்பியாக அடைந்தது என் பாக்யம் . நிச்சயம் அதே நாளில் வருவேன். கவலற்க. என் அன்பு உன்னைக் கவசமாகக் காக்கும் “ என்று கூறி கானகத்துள் செல்கிறார்.
இதோ பதினான்கு ஆண்டுகள் முடித்து அதே நாள் திரும்ப வந்துவிட்டது. ஆனால் திரும்பி வருவேன் என்று உரைத்த இராமரைக் காணவில்லை. கலங்கிப் போன பரதன் மனம் நொறுங்கி தீவளர்த்துப் பாயக் காத்திருக்கிறான். இன்னும் நாற்பது நாழிகைகள்தான் பாக்கி. நேரமோ கழிகிறது. இராமர் வரும் சுவடு தெரியவில்லை. இராஜபாட்டை வெறிச்சோடிக் கிடக்கிறது. குமுறுகிறது பரதனின் உள்ளம். அதைவிட வேகமாகக் குமுறுகிறது கைகேயின் உள்ளம்.
’பதினான்கு ஆண்டுகள் அண்ணனை எண்ணியே ஆட்சி செய்த தன் மகன் தான் ஆசைப்பட்ட அந்த இராஜ சிம்மாசனத்தில் அமரவே இல்லை. அவன் தன்னை அம்மா என்றும் அழைக்கவில்லை. இராமன் மாற்றாந்தாயான கோசலையின் மகனானாலும் பரதன் தன் அண்ணனின் மேல் வைத்த பாசம் எத்தகையது என்பதை அவள் உணர்ந்திருந்தாள். இராமன் வந்துவிட வேண்டும் அல்லது தானும் மகனுடன் தீப்பாய்ந்து மாய்ந்துவிட வேண்டும் என எண்ணி இருந்தாள்.
இதோ நெருங்கிவிட்டது. பரதன் நெருப்புக் குண்டத்தை நெருங்குகிறான். அக்கினி லாவுகிறது. ஆஹா அதோ ஒருவர் ஆகாயமார்க்கமாக பறந்து வருகிறாரே. அக்கினியே திகைத்துப் போய் பின்வாங்கிப் பார்க்கிறது. ஒரு நொடி தாமதித்திருந்தாலும் பரதன் தீப்பாய்ந்திருப்பான். கைபிடித்துத் தடுத்தாட்கொள்கிறார் ஆகாயத்திலிருந்து மண்ணில் இறங்கி நின்ற அனுமன். வலுவான அவர் பிடியில் காப்பாற்றப்பட்டான் பரதன்.
அண்ணலும் சீதாதேவியும் வந்துகொண்டிருப்பதாக அனுமன் புகல்கிறார். கேட்டுக்கொண்டிருந்த பரதனுக்கும் கைகேயிக்கும் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிகிறது. நெருப்பின் கொழுந்தில் மாசுமறுவற்ற பத்தரை மாற்றுத் தங்கம் போல பாசத்தால் ஜொலிக்கும் பரதனை அன்னை கைகேயி பிடித்துக் கொள்கிறார். அன்னையை அத்தனை வருடங்களுக்குப் பிறகு மன்னித்து அரவணைத்துக் கொள்கிறார் பரதன்.
இப்படி பரதன் போன்ற பத்தரை மாற்றுத்தங்கமான ஒரு தம்பி கிட்ட இராமர் கொடுத்துவைத்தவர்தானே குழந்தைகளே. 

டிஸ்கி 1 :-  இந்தக் கதை இதிகாச புராணக் கதைகள் என்ற தலைப்பில் 3. 5. 2019  தினமலர் சிறுவர்மலர் இதழில் இடம்பெற்றுள்ளது. நன்றி தினமலர் சிறுவர் மலர், தனது அழகான ஓவியங்களால் கதைக்கு எழில்கூட்டும் ஓவியர் ரஜனி & எடிட்டர் தேவராஜன் ஷண்முகம் சார்.

டிஸ்கி 2. :- இதிகாச புராணக் கதைகளைப் படிக்க விரும்பும் திருச்சி வாசகர் எஸ். கண்ணன் அவர்களுக்கு நன்றி. 

3 கருத்துகள்:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு
  2. அருமை! வாழ்த்துகள்

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  3. நன்றி துளசி சகோ

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)