ஞாயிறு, 17 மார்ச், 2019

பூச்சிகளைத் துன்புறுத்தியதால் பெற்ற தண்டனை. தினமலர். சிறுவர்மலர் - 8.


பூச்சிகளைத் துன்புறுத்தியதால் பெற்ற தண்டனை. :-

சும்மா பறக்கும் தட்டாரப் பூச்சியைப் பிடித்து வாலில் நூல் கட்டிப் பறக்கவிட்டு மகிழ்வார்கள் சிலர். அதே போல் பொன்வண்டைப் பிடித்துத் தீப்பெட்டிக்குள் அடைத்து வைப்பார்கள். ஓரமாக தேமே என்று போகும் எறும்பைக் கண்டால் கூட காலால் நசுக்குவதும் தண்ணீரில் பிடித்துப் போட்டுச் சித்திரவதை செய்வதுமாக இருப்பார்கள் சிலர். அந்தப் பூச்சிகளுக்கு எல்லாம் அது எவ்வளவு கொடுமையாக இருக்கும் என்பதை உணரவே மாட்டார்கள். அப்படி சிறுவயதில் செய்த முனிவர் ஒருவர் பெற்ற தண்டனையை இப்போ உங்களுக்குச் சொல்லப் போகிறேன் குழந்தைகளே.

து ஒரு அழகான ஆரண்யம். அங்கே கிளைவிரித்துப் பரந்திருக்கிறது மாபெரும் ஆலமரம். அதனருகே ஒரு எழில் மிகு பர்ணசாலை அமைக்கப்பட்டிருக்கிறது. அந்த ஆலத்தின் தண்ணென்ற நிழலில் ரிஷி ஒருவர் யோகத்தில் இருக்கிறார். அவர் பெயர் மாண்டவ்யர். பத்மாசனத்தில் அமர்ந்து கைகள் இரண்டையும் மடியில் மேல் நோக்கிப் பார்த்தபடி வைத்து கண்கள் மூடி அமர்ந்திருக்கிறார்.

அந்த ஆரண்யத்தின் அமைதியைக் குலைப்பது போல பலர் தடதடவென ஓடிவரும் சத்தம் கேட்கிறது. முரட்டு உருவத்தோடும் முறுக்கிய மீசையோடும் மிரட்டும் கண்களோடும் வடுக்கள் நிறைந்தமுகத்தோடும் வந்தவர்கள் முனிவரின் பர்ணசாலைக்குள் ஒளிந்து கொள்கிறார்கள். சும்மாவா ஒளிந்திருக்கிறார்கள். ஒவ்வொருவர் கையிலும் மூட்டை மூட்டையாய்ப் பொன்னையும் பொருளையும் அரண்மனையில் இருந்து கொள்ளையடித்துக் கொண்டு வந்தல்லவா ஒளிந்திருக்கிறார்கள். இது எதுவுமே முனிவருக்குத் தெரியாது.


அடுத்து சில நொடிகளில் டக், டடக் டக் டடக் என்ற குதிரைகளின் குளம்பொலி. அரசாங்கக் காவலாளிகளும், படைத்தளபதியும் வீரர்களும் அந்த ஆலத்தையும் பர்ணசாலையையும் சுற்றி வளைக்கிறார்கள். குதிரையின் லகானை இழுத்துப் பிடித்தபடி படைத்தளபதி முனிவரிடம் “இங்கே சந்தேகத்துக்கிடமாக யாராவது வந்தார்களா “ எனக் கேட்கிறான். 

யோகத்திலும் மோனத்திலும் முனிவர் ஆழ்ந்திருந்ததால் அவருக்கு எதுவுமே காதில் விழவில்லை. அன்றைக்கு என்று அவர் மௌன விரதம் வேறு மேற்கொண்டிருந்தார். அதனால் அவர் பதில் ஏதும் அளிக்காமல் தவத்தில் ஆழ்ந்திருந்தார்.

பதில் சொல்லாமல் அமர்ந்திருந்த முனிவரைப் பார்த்துக் கோபமான படைத்தளபதி அந்த ஆசிரமத்தைக் கைப்பற்ற ஆணையிடுகிறான். சுற்றிலும் ஆக்கிரமித்த வீரர்கள் ஆசிரமத்தின் உள்ளே சென்று பார்க்கிறார்கள். அங்கே ஒளிந்திருந்த கொள்ளைக்காரர்களை அதிரடியாய்க் கைது செய்து பிணைத்துச் செல்கிறார்கள்.

கஜானாப் பொருட்களைக் கட்டிச் செல்லும் அவர்கள் இதற்கெல்லாம் முனிவரும் உடந்தை என நினைத்து அவரையும் அரசனிடம் கொண்டு ஒப்படைக்கிறார்கள். மன்னர் என்ன கேள்வி கேட்டும் மாண்டவ்யர் பதில் சொல்லாததால் சினமடைந்த மன்னன் அந்தக் கொள்ளையர்களோடு மாண்டவ்யருக்கும் மரணதண்டனை விதிக்கிறான்.

அதுவும் சும்மா தண்டனை அல்ல. கழுவில் ஏற்றும்படி தண்டனை அளிக்கிறான். கொள்ளையர்களும் முனிவர் மாண்டவ்யரும் கழுவில் ஏற்றப்படுகிறார்கள். மூன்று நான்கு நாட்களாகின்றன. கழுவில் ஏற்றப்பட்ட கொள்ளையர்கள் இறக்க, மாண்டவ்யரோ அதேபோல் பத்மாசனத்தில் தியானத்தில் உயிரோடு இருக்கிறார்.

இதைக்கண்டு பயந்த படைவீரர்கள் இச்செய்தியை மன்னனிடம் தெரிவிக்கிறார்கள். அச்செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்த மன்னன் உடனே அவ்விடத்துக்கு விரைந்து வந்து மாண்டவ்யரிடம் மன்னிப்புக் கேட்கிறான். கழுவில் இருந்து அவரை இறக்குகிறார்கள் வீரர்கள்.

கழுவை அகற்றும்படி உத்தரவிடுகிறான் மன்னன். அது அவரது முதுகுத்தண்டைத் துளைத்துக் கழுத்து வரை சென்றுவிட்டதால் கழுவின் இரும்பு முனையை நீக்கமுடியவில்லை. உடனே மன்னன் வெட்டி எடுக்கும்படிக் கூற உள்ளே இருக்கும் பாகத்தை விடுத்து வெளியே இருக்கும் கழுவை வெட்டி எடுக்கிறார்கள் வீரர்கள். மன்னனும் வீரர்களும் மாண்டவ்யரின் பாதம் பணிந்து திரும்ப மன்னிப்புக் கேட்கிறார்கள்.

ர்மம் தவறாத தனக்கு இப்படி ஒரு துன்பம் ஏன் நிகழ்ந்தது என மாண்டவ்யருக்குப் புரியவே இல்லை. பூஜைக்குப் பூக்கொய்யும்போதும் , கடவுளை ஆராதிக்கும்போதும், தியானத்தில் அமர்ந்திருக்கும்போதும் இரவும் பகலும் எந்நேரமும் அவர் உடலில் அந்த கழுவின் ஆணி குத்திப் பதிந்து வலி கொடுத்துக் கொண்டே இருந்தது.

இதன் காரணம் அறிய விரும்பினார் அவர். தருமத்தின் தேவதையான எமனிடம், “ நான் தர்ம நெறி தவறாமல் வாழ்ந்தும் இப்படி துன்பம் அனுபவிக்கக் காரணம் என்ன ? நான் செய்த தவறென்ன?” என வினவினார்.

தர்மத்தின் தலைவனாம் எமன் அவரிடம் “ நீங்கள் சிறுவயதில் சின்னஞ்சிறு பூச்சிகளைத் துன்புறுத்தினீர்கள். அவற்றை ஆணியால் குத்தினீர்கள். அதனால்தான் கழுவில் ஏற்றப்பட்டீர்கள். அதன் மூலம் உங்கள் உடம்பில் ஆணி தங்கி துன்புறுத்துகிறது. வாயில்லாப் பூச்சிகள் கொடுத்த சாபம்தான் இது. இதை அனுபவித்தே ஆகவேண்டும். “ என்றார்.

ஆணி உள்ளே இருக்க அதன் வலியோடு மகரிஷி மாண்டவ்யரும் தன் வாழ்நாள் பூராவும் அத்துன்பத்தோடே வாழ நேரிட்டது. அதனால் அவர் ஆணி மாண்டவ்யர் என அழைக்கப்பட்டார். 

ந்த பூமி எல்லா உயிரினங்களும் வாழவேண்டியே படைக்கப்பட்டது. மனிதர்கள் அவற்றைப் பூச்சிகள் தானே என வாயில்லா ஜீவன்களைத் துன்புறுத்தக் கூடாது. நமக்கு ஒரு தீமையும் இழைக்காமல் தன் போக்கில் வாழும் பூச்சிகளை அப்படித் துன்புறுத்தினால் ஆணி மாண்டவ்யருக்கு நேர்ந்த கதி நமக்கும் நேரும் என்பதைக் கருத்தில் கொண்டு உயிர்களிடத்தில் அன்பாயிருப்போம் குழந்தைகளே. 

டிஸ்கி:-  இந்தக் கதை இதிகாச புராணக் கதைகள் என்ற தலைப்பில் 8 . 3. 2019  தினமலர் சிறுவர்மலர் இதழில் இடம்பெற்றுள்ளது. நன்றி தினமலர் சிறுவர் மலர், தனது அழகான ஓவியங்களால் கதைக்கு எழில்கூட்டும் ஓவியர் அஷோக் & எடிட்டர் தேவராஜன் ஷண்முகம் சார்.

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)