வெள்ளி, 1 பிப்ரவரி, 2019

உணவை வீணாக்கியதால் வந்த தொல்லை !. தினமலர் சிறுவர்மலர் - 3.

உணவை வீணாக்கியதால் வந்த தொல்லை. 
காசி மாநகரில் வசித்துவந்த இரு சகோதரர்கள் பற்றிய கதை இது. இதில் ஒருவன் பணக்காரனாகவும் ஒருவன் ஏழையாகவும் இருந்தார்கள். முற்பிறப்பில் தனக்கு வழங்கப்பட்ட உணவை வீணாக்காதவன் அடுத்தபிறவியில் செல்வந்தனாக விளங்கினான். ஆனால் வீணாக்கியவன் அடுத்தபிறவியில் வறுமையில் உழலும் ஏழையாக துயருற்றான். அந்தக் கதை என்னவென்று பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
விசுவநாதரும் விசாலாட்சியும் குடி கொண்டிருக்கும் காசி மாநகரம். அங்கே அன்னபூரணியும் அனைவருக்கும் அன்னம் பாலித்து வருகிறாள். ஆனால் நகரின் ஒரு கோடியில் மாபெரும் மாளிகையில் தேவதத்தன் என்ற செல்வந்தன் வாழ்ந்து வந்தான். அவன் தினமும் அறுசுவை உணவை உண்டு இன்பமாய் இருந்தான்.
ஆனால் அவனது சகோதரன் தனஞ்செயனோ கங்கையின் மணிகர்ணிகை கட்டத்தில் நீராடி காலை உணவு கிடைக்குமா என்று கவலையோடு விசுவநாதர் கோயிலுக்கு வந்து நின்றான். பசி வயிற்றைக் கிள்ளியது. ஆனால் அவனிடம் சல்லித்துட்டு கூட இல்லை. தன் அண்ணனுக்கு அனைத்து செல்வங்களும் கிடைத்திருக்கும்போது தான் மட்டும் தரித்திரனாய் உழலும் காரணம் என்ன என்று அவன் கோயில் மண்டபத்தில் அமர்ந்து இறைவனிடம் கேட்டான்.
பசிக்கிறக்கத்தில் அவனுக்கு உறக்கம் வந்தது. அப்போது அவனுக்கு ஒரு கனவு வந்தது. அதில் ஒரு சாமியார் காட்சி தந்தார். “ தனஞ்செயா உனக்கு வறுமை ஏன் ஏற்பட்டது என்பதை நான் கூறுகிறேன்.  காஞ்சி மாநகரத்தை சத்ருதர்மன் என்ற அரசன் ஆண்டு வந்தான். அவனது தோழன் ஹேரம்பனுடன் ஒருமுறை வேட்டைக்குச் சென்றான். அப்போது அவர்கள் காட்டில் வழி தவறி விட்டார்கள். அவர்களைப் பார்த்த முனிவர் ஒருவர் பரிவோடு அழைத்து உணவு வழங்கினார். “

“சத்ருதர்மன் மிகுந்த பசியால் ஒரு துளிகூட வீணாக்காமல் உண்டுவிட்டான். ஆனால் ஹேரம்பனோ ருசி குறைவாயிருக்கிறதென்று அவ்வுணவை சிறிது உண்டுவிட்டு மீதியை குப்பையில் போட்டுவிட்டான். அந்த அன்னத்தை வீணாக்கியவன் நீதான் அதனால்தான் இப்பிறவியில் அன்னம் கிடைக்காமல் கஷ்டப்படும் தனஞ்செயனாய் பிறந்திருக்கிறாய். ராஜா சத்ருதர்மன் அன்னத்தை மதித்ததால் செல்வவளம் கொழிக்கும் உன் அண்ணன் தேவதத்தனாகப் பிறப்பெடுத்திருக்கிறான். இப்போது புரிந்ததா உன் தவறு. நீ ஏன் அன்னம் கிடைக்காமல் கஷ்டப்படுகிறாய் என்று தெரிந்திருக்கும். “
கனவிலேயே தனஞ்செயன்” தேவரீர் சுவாமி, நான் செய்தது மன்னிக்க முடியாத தவறுதான். இருந்தாலும் என்னை மன்னித்தருளும். இதற்கு நான் என்ன பரிகாரம் செய்தால் சரியாகும் ? “ என வினவினான்.
”உலகத்தோர் அனைவருக்கும் அன்னம் அளிக்கும் அன்னபூரணியைச் சரணடைந்து தொழுதால் உன் நிலைமாறும். “ என்று கூறி மறைந்தார் சாமியார். கனவும் கலைந்து எழுந்து அமர்ந்தான் தனஞ்செயன்.
அன்னபூரணியைத் தேடி அவன் காமரூபம் என்ற நகரை அடைந்தான். அங்கே சில தேவகன்னியர்கள் ஒரு மலையடிவாரத்தில் ஏதோ பிரம்மாண்ட பூஜையில் ஈடுபட்டிருந்தார்கள். அவர்களிடம் சென்று அந்த விரதம் பூஜையை யாருக்காகச் செய்கிறார்கள் என விசாரித்தான்.
அவர்கள் ” பிரம்மஹத்தி தோஷம் பீடித்த சிவனின் கையில் இருக்கும் பிரம்ம கபாலம் சிவனுக்கு அளிக்கப்படும் உணவை எல்லாம் அதே உண்டு முடித்தது. அதனால் சிவன் பசிப்பிணியால் துயருற்றார். அவரின் பசிப்பிணி பொறுக்காத தேவி அன்னபூரணியாய் மாறி அன்னமிட்டாள். அதனால் ஈசனின் கையில் இருந்த கபாலம் நிரம்பி ஈசனின் பசிப்பிணி நீங்கியது. மகத்துவம் மிக்க அந்த அன்னபூரணியைத்தான் நாங்கள் பூசிக்கிறோம் “ என்றார்கள்.
அதற்கான நியம நிட்டைகளையும் விரத முறைகளையும் கேட்டறிந்து சிரத்தையுடன் செய்து வந்தான் தனஞ்செயன். அதைக் கண்டு மகிழ்ந்த அன்னபூரணி அவன் எதிரில் தோன்றினாள். அவளிடம் தான் உணவை வீணாக்கியது குறித்து மன்னித்து அருளும்படியும் தன் பசிப்பிணியைத் தீர்க்கவும் வேண்டினான்.  தனஞ்செயன் திருந்தியது குறித்து மகிழ்ந்த அன்னபூரணி அவனுக்கு அருளும் நிறைந்த பொருளும் அள்ள அள்ளக் குறையாத அறுசுவை உண்டியும் வழங்கினாள்.
தன் ஊரான காசிக்குத் திரும்பிச் செல்ல விரும்பிய தனஞ்செயன் தன் பசிப்பிணி போக்கிய அன்னபூரணி தன்னுடன் நிரந்தரமாக இருக்க வேண்டினான். ஒப்புக்கொண்ட அன்னபூரணியும் அவன் காசியில் கட்டிய கோவிலில் வந்து குடிபுகுந்தாள். அதனால் காசி மாநகரமே பசிப்பிணி நீங்கிய நகரமாயிற்று.
இந்தவிதத்தில் முற்பிறவியில் தான் உணவை வீணாக்கியதால் அடைந்த துன்பத்திலிருந்து விடுதலையானான் தனஞ்செயன். தன் அண்ணன் தேவதத்தன் போல் அவனும் செல்வந்தனானான். உணவைப் பயிரிடவும், பண்படுத்தி உணவாக சமைக்கவும் எவ்வளவோ பேர் உடல் பொருள் ஆவியைக் கொடுத்துத் தயாரிக்கிறார்கள். அவர்கள் உழைப்பின் பலனை வீணக்கலாமா. எனவே உணவை வீணாக்காததால் செல்வந்தனான தேவதத்தன் , தனஞ்செயன் போல நீங்களும் உணவை வீணாக்காமல் உண்டால் செல்வந்தர்கள் ஆவீர்கள் குழந்தைகளே.

டிஸ்கி:-  இந்தக் கதை இதிகாச புராணக் கதைகள் என்ற தலைப்பில் 1 . 2. 2019  தினமலர் சிறுவர்மலர் இதழில் இடம்பெற்றுள்ளது. நன்றி தினமலர் சிறுவர் மலர், தனது அழகான ஓவியங்களால் கதைக்கு எழில்கூட்டும் ஓவியர் அஷோக் & தேவராஜன் ஷண்முகம் சார்.

2 கருத்துகள்:

  1. துளசிதரன் : அருமையான கதை. வாழ்த்துகள்!

    கீதா: என் சிறு வயதில் என் பாட்டி அடிக்கடி சொந்னது "நாம் வேஸ்ட் செய்யும் ஒரு பருக்கை சாதம் கூட சாக்கடை வழியாக ஆறு வழியாக கடலில் கலக்கும் அப்ப சமுத்திர ராஜா கோபப்பட்டு யார் வேஸ்ட் பண்ணினதுனு கண்டு பிடிச்சு கடவுள்ட சொல்லுவான் அப்புறம் சாப்பாடு கிடைக்காது பட்னிதான்' அப்படினு சொல்லுவாங்க. இப்ப கல்யாணங்கள் ல எல்லாம் எவ்வளவு வேஸ்ட் ஆகுதுனு பார்க்கும் போது மனசு கஷ்டப்படும்

    பதிலளிநீக்கு
  2. நன்றி துளசி சகோ

    ஆம் கீத்ஸ்.

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)