சனி, 8 டிசம்பர், 2018

சாட்டர்டே ஜாலிகார்னர். செந்தில் நடேசனின் - வரிசை கொடுத்ததும் வங்கி அனுபவமும்.

ஏழெட்டு ஆண்டுகளாக முகநூலில் நண்பராயிருப்பவர் செந்தில் கே நடேசன். அவ்வப்போது குண்டச்சி தேவசேனாவுக்கு ( அனுஷ்கா) என்று குறிப்பிட்டுக் கவிதைகள் படைத்து சிரிக்க வைத்தவர். இதை காதலும் காதல் சார்ந்த இடமும் என்ற வலைப்பதிவில் பதிவேற்றி இருக்கிறார். !

இவரின் முகநூல் பக்கத்தில் நிறைய தன்னம்பிக்கை போஸ்டுகள் பார்த்திருக்கிறேன். அவரிடம் சாட்டர்டே ஜாலி கார்னருக்காக எழுதித்தரும்படிக் கேட்டிருந்தேன் . அவர் எழுதியது உங்களுக்காக இங்கே.

சாட்டர்டேன்னா இரண்டு. ஏன் பத்ரிக்கை எல்லாம் சண்டேன்னா இரண்டு பதிவு போடுறத ஆதரிக்கிறீங்கள்ல. அதுனாலதான் இன்னிக்கு விவிஎஸ் சாரோட ஜாயிண்ட் அக்கவுண்ட் பதிவும், செந்திலோட இந்தப் பதிவும். போஸ்ட் மழையில் என்ஜாய் பண்ணுங்க. :)

///பெயர்:- செந்தில் கே நடேசன் தந்தை: நடேசன் தாய்: அலமேலு ஆச்சி ஊர் :- சிலம்பவேளாங்காடு - பட்டுக்கோட்டை தொழில்: விவசாயம் தற்போதைய வசிப்பிடம்: தோஹா - கத்தார் தற்போதைய வேலை:- கொள்முதல் அலுவலர் பொழுதுபோக்கு: வாசித்தல், யோசித்தல் மற்றும் எழுதுதல் அவ்ளோதான்/////

என்னதான் கன்டினியூ ரீடிங் வர அளவுக்கு பெரிசு பெரிசா எழுதி பேஸ்புக்ல போஸ்ட் பண்ணாலும்....சார்ட்டர்டே போஸ்ட் க்கு எழுதுங்கன்னு ஆச்சி சொன்னப்போ.... ​ ஒன்னுமே தோணல... சார்ட்டர்டே போஸ்ட்ல ஏற்கெனவே போட்ட போஸ்ட்களை எல்லாம் பார்த்தப்போ , அங்கே ஏற்கெனவே பெரிய பெரிய ஜாம்பவான்களை எல்லாம் எழுத வச்சிருந்தாங்க ஆச்சி....
மெரண்டுபோய் சின்னப்புள்ள மாதிரியே மறுபடியும் ஆச்சிகிட்ட ஓடி "ஆச்சி.. ஆச்சி.... எத பத்தி எழுதணும்னு தெரியலையே.."ன்னு கேட்டப்போ..."அட.... சின்னப்புள்ள மாதிரியே ஓடிவந்து கேக்குறீங்க.... அப்போ உங்க சின்ன வயசு பத்தி எழுதுங்களேன்"ன்னு ஆச்சி ஒரு நூல் தலைப்பை கொடுத்தாங்க....

 அந்த தலைப்ப புடிச்சுக்கிட்டே கொஞ்சம் கொஞ்சமா பின்னோக்கி பயணிக்கும்போது நிறைய விஷயங்கள் அங்கங்கே ஞாபக முடிச்சுகளா நின்னு நம்மை நிறுத்த.... அப்படியே கடந்து கடந்து இரண்டு முடிச்சுகளை மட்டும் இங்கே அவிழ்த்து கொட்டலாம்னு நினைச்சேன்..

 முடிச்சு 1 ல் சிக்கியது....

 இப்போ கூட எங்க ஊர்ப்பக்கம் பொங்கலுக்கு முந்தின நாள் "வரிசை கொடுக்கிறது"ன்னு ஒரு பழக்கம் இருக்கு... ஆனா நான் சின்னபுள்ளையா இருந்தப்போ எங்களுக்கு இருந்த கொண்டாட்ட மனநிலை இப்போ இருக்க குழந்தைங்களுக்கு கிடைக்காத ஒரு விஷயம்... நம்ம தாத்தா கூட, அப்பா கூட, நம்ம கூட பொறந்து உள்ளூர்லயோ, வேற ஊர்லயே கட்டிக்கொடுக்கப்பட்ட பெண்களுக்கு அவர்களின் பொங்கல் பண்டிகையை கொண்டாட சீர் கொடுத்து அனுப்புவார்கள்.... இதைத்தான் "வரிசை கொடுக்கிறது" என்று சொல்வார்கள் .

 பச்சரிசி, வெல்லம், கரும்பு, வாழைப்பழம், காய்கறிகள், மஞ்சள் கொத்து, மளிகை பொருட்கள் ன்னு எல்லா பொருட்களும் வாங்கி மாட்டுவண்டியில் வைத்தோ, தலைச்சுமையாகவோ பொங்கலுக்கு முதல்நாளே கொண்டுபோய் கொடுத்துவிட்டு வருவார்கள்... இதற்கான கொள்முதல் ஓரிரு நாட்கள் முன்பாக நடக்கும். இந்த பிறந்தவீட்டு வரிசை என்பது பெண்களின் கௌரவம், உரிமை, பெருமை.... அதாவது கெத்து....

இதுக்காக அவங்க வீட்டு தூறியடிய ( நுழைவாயில்) எட்டி எட்டி பார்த்தபடியே வரப்போகும் அண்ணனுக்காகவோ, தம்பிக்காகவோ, அப்பாவிற்காகவோ, அண்ணன் /தம்பி மகன்களுக்காகவோ காத்திருப்பார்கள்.... பக்கத்து ஊர்ல கட்டிக்கொடுத்த எங்க அத்தைக்கு வரிசை கொடுக்க மாட்டுவண்டி கட்டிக்கிட்டு நானும் எங்க சித்தப்பாவும் ஒரு வண்டிலயும்.. பெரியப்பா ஒரு வண்டிலயும், இன்னொரு சித்தப்பா வீட்டு அண்ணன் ஒரு வண்டிலையுமா போவோம்....

அத்தைக்கு எங்களை பார்த்ததும் முகமெல்லாம் பூரிக்கும்..... அத்தை கறிக்கொழம்பு வச்சு, கறி பெரட்டல் செஞ்சு, முட்டை அவிச்சு வச்சு மொனை எலைல விருந்து வைப்பாங்க... நல்லா சாப்பிட்டுட்டு கிளம்பும்போது ஆளுக்கு அஞ்சுரூபா திட்டு காசு ( 5 ரூபா காயின்) ஆளுக்கு ஒண்ணா கொடுப்பாங்க....

அப்போ எல்லாம் இந்த 5 ரூபா காயின் அதிகளவுக்கு புழக்கத்தில் இருக்காது.... எங்களுக்கு கொடுக்கணும்ன்னே அத்தை அது கிடைக்கும்போது எடுத்து பத்திரப்படுத்தி வச்சிடுவாங்க..... அந்த அஞ்சு ரூபாய்ங்கிறது நமக்கு பெரிய காசு.... பொங்கல் அமோகமா போகும்.... இப்போ அக்காளுங்களுக்கு வரிசை கொடுக்க காரோ/டெம்போவோ (வாடகை வண்டிதான்) போகுது....

போறவங்களுக்கு அக்கா 500 ரூபாயோ, 1000 ரூபாயோ கொடுக்கிறாளுங்க.... ஆனா வாங்கிக்கிற அவளுங்க முகத்துலயோ, கொண்டுபோற புள்ளைங்க முகத்துலயோ, ஏன் எனக்கும் எங்க அத்தைக்கும் இருந்த பூரிப்பு இல்லேன்னு புரியவே இல்ல.... எங்க தொலைச்சோம்??? அடுத்தமாசம் பொங்கல் வரப்போறப்போ இந்த ஞாபகமும் கேள்வியும் பொருத்தமா இருக்கும்னு நினைச்சேன்


 முடிச்சு 2 ல் கிடைத்தது...

 காசாங்காடு பள்ளிக்கூடத்துல ஏழாப்பு படிச்சப்ப்போ கூட்டாளி ஒருத்தன் மத்தியான சாப்பாட்டு இடைவெளில "வாடா பேங்குக்கு போயிட்டு வருவோம்"ன்னான்....

"என்னது பேங்குக்கா... அங்கபோய் நீ என்ன செய்யப்போற...??" "பணம் எடுத்துட்டு வருவோம்...

." நமக்கெல்லாம் பள்ளிக்கூட வாசல்ல எலந்தகா விக்கிற பாட்டிகிட்ட எலந்தகா வாங்கவும், ஐஸ் விக்கிற அலைபாய்கிட்ட ஐஸ் வாங்கவும் அம்பது காசு ஒரு ரூபா வாங்கவே வீட்டுல அழுது அடம்புடிச்சு பெரிய அகிம்சா போராட்டமே நடத்தணும்... இவன் என்னன்னா பணம் எடுக்கணும்னு பேங்குக்கு கூப்பிடறானேன்னு ரொம்ப ஆச்சர்யமா போச்சு.... சரின்னு அவன்கூட போனேன்...

அவன் நேரா போனான்... அங்க கொத்தா தொங்கிக்கிட்டிருந்த ரோஸ் கலர் பேப்பர்ல ஒன்ன எடுத்து , இவன் கொண்டு வந்திருந்த ஒரு சின்ன நோட்டுப்புத்தகத்தை பார்த்து என்னவோ எழுதினான்.. கம்பி வலைக்குள்ள உக்காந்திருந்த ஆள்கிட்ட கொடுத்தான்.... அவர் அத வாங்கிட்டு நடுவுல ஒரு ஓட்டை இருந்த இரு இரும்பு காசு மாதிரி என்னத்தையோ கொடுத்தார்... அவன் செயறதை எல்லாம் நான் பெரிய ஆச்சர்யமா பார்த்துகிட்டே இருந்தேன்...

 அப்புறம் கொஞ்ச நேரம் அப்புறம் அவன் பேர சொல்லி அந்த கம்பி வளைக்குள்ள இருந்தவர் கூப்பிட.. இவன் போனதும் இவன் கைல பத்துரூபா பணத்தையும் இவன் கொடுத்த ஒரு சின்ன நோட்டையும் கொடுத்தார்...

 இதெல்லாமே எனக்கு புதுசா தெரிஞ்சுது.... அதுக்கப்புறம் இந்த வங்கி தொடர்புகள் எல்லாம் ஏற்பட நமக்கு 25-30 வயசு கூட ஆகி இருக்கும்... ஆனா.. அந்த நண்பனுக்கு 11-12 வயதிலேயே வங்கி பரிமாற்றத்தை அறிமுகப்படுத்திய ஒரு தந்தை எனக்குள் வந்து அப்போதே அமர்ந்து விட்டார்.... என் மக்களுக்கும் அதை அறிமுகம் செய்ய வேண்டும் என்ற ஆவலுடன்...

டிஸ்கி :- செந்தில் பொங்கலுக்கு வரிசை வைக்கிறது சொல்லி நெகிழ வைச்சிட்டீங்க. இப்போதெல்லாம் இதில் ஆர்வமும் ஈடுபாடும் குறைந்துவருவது வருத்தத்திற்குரியதே. வங்கி அனுபவம சூப்பர். குழந்தைகளுக்கு நாம எதையும் பழக்குவதில்லை என்ற உண்மையைப் போட்டு உடைசிச்ருக்கீங்க. சிலரே எல்லாத்தையும் சொல்லிக் கொடுக்குறாங்க. அப்படி சிறு வயதில் இருந்தே பணத்தைக் கையாளக் கற்றுக் கொடுப்பது சிறந்ததுன்னு சொல்லிய விதம் அற்புதம். சாட்டர்டே ஜாலி கார்னரை உபயோகமுள்ள கார்னராக்கியதற்கு நன்றி செந்தில் :)

2 கருத்துகள்:

  1. ஆச்சியின் பிளாக்கில் ஒரு அற்பனுக்கும் இடம்.... நன்றி ஆச்சி

    பதிலளிநீக்கு
  2. உங்கள் கவிமனம் எழுத்தாற்றல் தெரிந்துதான் எழுத அழைத்தேன் செந்தில். மிக அழகாக எழுதி இருக்கீங்க. வாழ்த்துக்கள்.

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)