புதன், 14 நவம்பர், 2018

நண்பனால் நலம்பெற்ற சுதாமா. தினமலர். சிறுவர்மலர் - 43.

நண்பனால் நலம்பெற்ற சுதாமா.
வந்தி நகரத்தில் சாந்தீபனி முனிவரின் ஆசிரமத்தில் இரு நண்பர்கள் இணை பிரியாதவர்களாய் இருந்தார்கள். அவர்கள்தான் சுதாமனும் கிருஷ்ணனும். அந்த குருகுலக் கல்வி முறையில் அரசனும் ஒண்ணுதான் ஆண்டியும் ஒண்ணுதான். அனைவரும் குருவின் கட்டளை ஏற்றி செயலாற்றி வரவேண்டும். அவர் அனைவருக்கும் சமமாகவே கற்பிப்பார். அனைவரையும் சமமாகவே நடத்துவார். அனைவருக்கும் சமமாகவே வேலைகள் கொடுப்பார்.
ருமுறை அவரது வயலில் மடையை அடைக்கும் பொறுப்பை கிருஷ்ணரிடம் ஒப்படைத்தார் குரு. ஆனால் கிருஷ்ணருக்கோ உடல் நலமில்லாமல் இருந்தது. அவருக்குப் பதிலாக சுதாமா தான் அந்த வேலையை நிறைவேற்றுவதாகக் கூறிக் காலையில் சென்றார். மதியம் ஆயிற்று, மாலை ஆயிற்று, இரவும் ஆயிற்று. காற்றும் குளிரும் மழையும் சுற்றி அடிக்க சுதாமாவைக்காணவில்லை. மறுநாள் அதிகாலை கிருஷ்ணர் குருவிடம் இது விபரம் தெரிவித்து வயலில் சென்று பார்த்தால், வெள்ளமாய்ப் பொங்கி வரும் மடையை அடைக்க இயலாமல் அந்த மடை வரப்பில் தன் உடலை வைத்து அடைத்துப் படுத்துக் கிடந்தார் சுதாமா. மடையை அடைக்கா விட்டால் பயிர்கள் அழிந்து மூழ்கிவிடுமே.
இதைப்பார்த்ததும் கிருஷ்ணரின் கண்களில் நீர் துளிர் விட்டது. எப்பேர்ப்பட்ட தியாகம். தனக்காக தன் உடலையே வைத்து அடைத்த அந்த நண்பன் சுதாமா கிருஷ்ணரின் அத்யந்த நண்பனாக ஆகிப்போனான்.
து நடந்து பலவருடங்கள் ஆயிற்று. கிருஷ்ணர் இப்போது துவாரகையின் அரசர். அவரைப் பார்க்க அங்க வங்க கலிங்க தேசத்து அரசர்கள் பொன்னும் பீதாம்பரமும் பட்டும் நவரத்தினங்களும் எடுத்துக்கொண்டு வந்து காத்துக் கிடக்கிறார்கள்
குசேலருக்கு சுசீலை என்ற பெண்ணுடன் திருமணம் நடந்து இருபத்தி ஏழு குழந்தைகள் பிறந்துவிட்டார்கள். கொடிய வறுமை வாட்டியது. வீட்டில் இருந்த கொஞ்சம் அவலை வைத்து அனைவரும் பசியாறிக் கொண்டிருந்தார்கள். குடும்ப செலவுக்குப் பொருள் தேவையாக இருந்தது. சுதாமாவின் நண்பன் கிருஷ்ணர்தான் இப்போது துவாரகையின் அரசராய் இருக்கிறாரே அவரிடம் பொருள் உதவி கேட்டுப் பெறலாமே என்று சுசீலை எண்ணினாள்.
ராஜாவான கிருஷ்ணரைப் பார்த்துப் பொருள் பெற்று வருமாறு சொல்லி சிறிது அவலை எடுத்து ஒரு பழந்துணியில் மூட்டையாகக் கட்டிக் கொடுத்து வழியில் பசியாறுமாறு கூறி அனுப்பினாள். சுதாமாவுக்கோ கிருஷ்ணரிடம் யாசிப்பதில் கொஞ்சம் கூட விருப்பமில்லை. நண்பனிடமே கையேந்துவதா என்று நாணத்தோடு துவாரகை நோக்கி நடந்தார். ராஜாவாகிவிட்ட கிருஷ்ணன் தன்னை ஞாபகம் வைத்திருப்பானோ என்றும் அவருக்கு ஐயமாயிருந்தது.
மிகப்பெரும் கோட்டை கொத்தளங்கள், மாட மாளிகைகள், கூட கோபுரங்கள் எளிமையான சுதாமாவை அச்சுறுத்தின. கோட்டைக் கதவுகளுக்கு அருகில் சென்றவர் அங்கே இருந்த வீரனிடம் தயங்கித் தயங்கி “ என் பெயர் சுதாமா. அரசர் கிருஷ்ணனின் பால்யகால நண்பர். அவரைப்பார்க்க வந்திருக்கிறேன். “ என்று சொல்லி அனுப்பினார்.
அவர் வந்திருக்கிறார் என்ற விபரம்  தெரிந்ததும் உடனே தனது அரசவையிலிருந்து வாயிலுக்கு ஓடோடி வந்து வரவேற்றார் கிருஷ்ணர். அவரை மறக்காதது மட்டுமல்ல. தன் மனைவி ருக்மணியோடு பாதபூஜை செய்து சப்ர மஞ்சத்தில் அமரவைத்தார்.  அறுசுவை உணவுப்பதார்த்தங்கள் கொடுத்து உபசரித்தார்.
“உன் மனைவி சுசீலை, குழந்தைகள் அனைவரும் நலமா. உன் மனைவியும் நீயும் நல்லறம் நடத்துகிறீர்களா. எந்தக் குறையும் இல்லையே . எல்லாம் சிறப்பாகத்தானே செல்கிறது “ என்று அன்புடன் விசாரித்தார் கிருஷ்ணன். கிருஷ்ணன் மட்டுமல்ல அவரது மனைவியும் அந்த அரண்மனையின் ஏவலாட்கள் அனைவருமே அவருக்குக் கவரி வீசியும் தேவையறிந்து இனிய பொருட்களைப் பரிமாறியும் அவரைச் சுற்றி நின்று சேவகம் செய்தார்கள்.
ஏழையான சுதாமாவுக்கு அங்கே இருக்கவே கூசியது. தன்னைச் சமமாக நடத்தும் கிருஷ்ணரைப் பார்த்து வியப்பாய் இருந்தது. அவல் முடிச்சைக் கட்டிய தனது கோலை எடுத்து மறைவாய் வைக்க முயன்றார் சுதாமா.
“அஹா சுதாமா எனக்காக என்ன கொண்டு வந்திருக்கிறாய். ஏதோ மறைக்கிறாயே அதைக் கொடு” என்று கேட்டு வாங்கி அந்த மூட்டையைப் பிரித்து அதிலிருந்த அவலில் ஒரு பிடி அள்ளி வாயில் போட்டுக் கொண்டார்.  
’ஆஹா.. என்ன இனிமையா இருக்கிறது இந்த அவல்’ என்று பாராட்டி இன்னும் ஒரு பிடி போட்டுக் கொண்டார். சுதாமாவுக்கோ அங்கே அறுசுவை உணவு இருக்க தன் அழுக்குத் துண்டில் இருந்து அவலை கிருஷ்ணர் உண்பது பார்த்து வெட்கமாய் இருந்தது. எனவே அவர் ஏதுமே பேசவில்லை. கிருஷ்ணரிடம் ஏதுமே கேட்கவில்லை. சுசீலை சொல்லி அனுப்பிய கோரிக்கைகள் ஏதுமே அவர் ஞாபகத்துக்கு வரவே இல்லை.
அம்சதூளிகா மஞ்சத்தில் அவரை இளைப்பாறச் சொன்னார் கிருஷ்ணன். தன்னைப் பார்க்க வெகுதூரம் நடந்து வந்த சுதாமாவின் கால்களைப் பரிவோடு பிடித்து விட்டுக் களைப்பை நீக்கினார். அவரது ஒவ்வொரு செயலும் சுதாமாவை நாணச் செய்தது.
கிருஷ்ணரிடமும் ருக்மணியிடமும் மறுநாள் விடைபெற்றுகொண்டு திரும்பினார் சுதாமா. அரண்மனைவிட்டு கோட்டைக் கதவுகளைத் தாண்டும்போதுதான் அவருக்கு சுசீலையின் கோரிக்கைகள் ஞாபகம் வந்தன. தன் நண்பனிடம் ஏதும் யாசிக்காமல் வந்ததே அவருக்கு நிம்மதியாய் இருந்தது. இருந்தும் வீட்டின் துயரையும் செலவையும் எப்படி சமாளிக்கப் போகிறோம் ?. இருபத்தி ஏழு குழந்தைகளும் அவரும் மனைவியும் எப்படி வரும் நாட்களில் பசியாறப்போகிறோம் என்று அவருக்குக் கவலையாய் இருந்தது.
நடந்து நடந்து வீட்டின் அருகில் வந்துவிட்டார். இதென்ன அவரின் குடிசை வீடு இருந்த இடத்தில் ஒரு மாபெரும் மாளிகை இருக்கிறதே. யாருடைய மாளிகை இது. அவருடைய வீடுதான் அது. உள்ளே நெருங்கிப் பார்த்தால் அவரது குழந்தைகள் பட்டும் பீதாம்பரமும் அணிந்து அறுசுவை உண்டி அருந்திக்கொண்டிருக்கிறார்களே. அட யார் இந்த அழகான யுவதி.. அவர் மனைவி சுசீலைதான் அவளும் பொன்னும் மணியும் பட்டும் அணிந்து துலங்கிக் கொண்டிருக்கிறாளே. இவ்வளவும் யார் கொடுத்தது. அவருக்குப் புரிந்தது.. இவ்வளவும் அவரது அத்யந்த நண்பன் கிருஷ்ணன் அவரது தேவை என்ன என்று கேட்காமலே பார்வையாலேயே உணர்ந்து கொடுத்தது. கிருஷ்ணனை மனதார  மனதுக்குள் வாழ்த்துகிறார். மாபெரும் ராஜாவாக ஆனபின்னும் என்றோ தன் நண்பன் செய்த உதவியை மறக்காமல் நினைவில் வைத்திருந்து தகுந்த சமயத்தில் திரும்ப உதவிய கிருஷ்ணரின் பேருள்ளம் வணங்கத்தக்கதுதானே குழந்தைகளே.

டிஸ்கி:-  இந்தக் கதை இதிகாச புராணக் கதைகள் என்ற தலைப்பில் 9 . 11. 2018  தினமலர் சிறுவர்மலர் இதழில் இடம்பெற்றுள்ளது. நன்றி தினமலர் சிறுவர் மலர் , தனது அழகான படங்களால் கதைக்கு அழகூட்டும் ஓவியர் அஷோக் & தேவராஜன் ஷண்முகம் சார்.

டிஸ்கி :- குகன் கதையைப் பாராட்டிய பிள்ளையாம்பேட்டை வாசகி எம். சுந்தராம்பாள் அவர்களுக்கு நன்றிகள். 

2 கருத்துகள்:

  1. துளசிதரன் : வாழ்த்துகள்..

    கீதா: சுதாமா கதை அருமை தேனு...வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  2. நன்றி துளசி சகோ & கீத்ஸ்

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)