திங்கள், 1 அக்டோபர், 2018

கர்வம் அழிந்த இந்திரன். தினமலர். சிறுவர்மலர் - 38.


கர்வம் அழிந்த இந்திரன்.

பதவி என்பது எப்பேர்ப்பட்டவரையும் ஆணவம் கொண்டவராக்கிவிடும் தன்மை வாய்ந்தது. சாதரண பதவி கிடைத்தவர்களே இப்படி என்றால் அமரர்களுக்கெல்லாம் தலைவனாகும் பதவி கிடைத்த இந்திரனுக்கு ஏற்பட்ட கர்வமும் அது எப்படி நீங்கியது என்பதையும் பார்ப்போம் குழந்தைகளே.

அமராவதிபட்டிணத்தை ஆண்டுவந்த இந்திரனுக்குத் தான் எல்லாரினும் மேம்பட்ட பதவி வகிப்பவன், தேவலோகத்தின் அதிபதி என்ற மண்டைக்கர்வம் ஏற்பட்டது. அதனால் அனைவரையும் உதாசீனப்படுத்திவந்தான். அமிர்தம் அருந்தியதால் தான் இறப்பற்றவன், ஈரேழு பதினான்கு லோகத்திலும் அதிகமான சம்பத்துக்களை உடையவன் என்ற இறுமாப்பில் இருந்தான்.

இந்திரசபையில் அவனுக்குக் கீழ்தான் அனைத்து தேவர்களும் கிரகங்களும் அமர்ந்திருப்பார்கள். ரம்பா, ஊர்வசி, மேனகை, திலோத்தமை, அப்ஸரஸ் கன்னிகளும் ததாஸ்து தேவதைகளும் அவனது கையசைவுக்குக் காத்திருப்பார்கள். கலா நிகழ்ச்சிகளும் கேளிக்கை கொண்டாட்டங்களும் அவன் விருப்பப்படிதான் நடந்துவந்தன. இப்படி இருக்கும்போது அவன் தன்னை விண்ணளவு அதிகாரம் கொண்டவனாக நினைத்துக் கர்வம் கொண்டான்.

அதனால் கர்வம் தலைக்கேற ஒரு முறை பிரகிருதிதேவியை உதாசீனப்படுத்தினான். கோபமடைந்த பிரகிருதி தேவி அவனது இந்திரலோகத்தில் மிதமிஞ்சிய செல்வம் கொழிப்பதால்தான் அவன் இப்படி கர்வமாக நடந்துகொள்கிறான் . அதனால் அச்செல்வம் அழியட்டும் என சாபம் கொடுத்தாள்.

செல்வம் அழிந்தாலும் எப்படியோ ஒரு வழியாக மீண்டு நகரை புனர்நிர்மானம் செய்ய விரும்பினான் இந்திரன். ஆனால் அவன் திருந்தவேயில்லை. தன் நகரைப் புதுப்பிக்க விஸ்வகர்மா என்ற தேவதச்சனின் உதவியை நாடினான். அவனோ மயன் மாளிகை மாதிரி இந்திராபுரியைப் புதுப்பித்துக் கொடுத்தான்.

காண்போர் வியக்கும் வண்ணம் இந்திரலோகம் மின்னியது. எங்கெங்கு நோக்கினும் நெடிதுயர்ந்த தங்கநிறத் தூண்கள். வெள்ளி விதானங்கள், பொன்னும் மணியும் நவரத்தினமும் பதித்த இந்திரசபை, விசாலமான ஆடல் அரங்கம், கேளிக்கை அரங்கம், சூரிய ஒளியில் மின்னும் மாடமாளிகைகள், கூட கோபுரங்கள், சந்திர ஒளியில் நிரம்பி இருக்கும் உப்பரிகைகள், அந்தப்புரங்கள், தாமரையும் அல்லியும் நிரம்பிய நீர்த்தடாகங்கள், இருவாட்சியும் ஷெண்பகமும் பாரிஜாதமும் மணக்கும் நந்தவனங்கள், பட்சிகளின் கானம் ஒலிக்கும் தோட்டங்கள் என்று எங்கெங்கும் அழகு பொலியும் ஒரு நகரைச் சமைத்துத் தந்தார் விஸ்வகர்மா.

இருந்தும் தினமும் ஏதேனும் கோளாறு சொல்லிக் கொண்டே இருந்து தினம் ஒரு மாற்றம் செய்யும்படிக் கூறிவந்தான் இந்திரன். கடினமாக உழைத்தும் களைத்தும் போன விஸ்வகர்மா செய்வதறியாது திகைத்தார். இந்திரனை திருப்திப்படுத்த அவரால் இயலவே இல்லை. தினம் தினம் எதையாவது மாற்றி அமைக்கச் சொல்லும் இந்திரனைப் பார்த்து அவருக்குச் சலிப்பு ஏற்பட்டது. மனம் சோர்ந்த அவர் பிரம்மனிடம் சென்று முறையிட்டார்.  

பிரம்மன் அவரை மகாவிஷ்ணுவிடம் அழைத்துச் சென்றார். விஸ்வகர்மா அவரிடமும் முறையிட்டார். இந்திராபுரியில் நடக்கும் லீலாவிநோதங்களை அறிந்தவர்தானே இறைவன். அவர் விஸ்வகர்மாவிடம் தான் இந்திரனிடம் பேசி ஆவன செய்வதாக வாக்குக் கொடுத்தார்.

மனம் நிம்மதியான விஸ்வகர்மா திரும்பிச் சென்றார். இந்திரனின் ஆணவத்தையும் ஆர்ப்பாட்டத்தையும் ஆரம்பத்தில் இருந்து கவனித்து வந்த விஷ்ணு ஒரு சிறு பாலகனின் வடிவம் எடுத்தார். நேரே இந்திரலோகம் சென்றார்.

அழகான சிறுவனைக் கண்ட இந்திரனின் உள்ளம் களிப்படைந்தது. அக்குழந்தையின் தெய்வீக அழகு மயக்க கண்கொட்டாமல் பார்த்தான். யார் இந்தக் குழந்தை, இதுவரை இங்கே பார்த்ததே இல்லையே என அழைத்துக் கொஞ்சினான். அக்குழந்தையோ அவனிடம் ” இந்த நகரம் மிக அழகாக இருக்கிறது “ என்று கூறியது.

சந்தோஷம் மிகுந்த இந்திரன் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டான். ”இது என்னுடைய நகரம். விஸ்வகர்மாவின் துணை கொண்டு அமைத்து வருகிறேன்.”  என்று கூறிப் பெருமைப்பட்டான். தன் நகரின் சிறப்புகளைக் காட்டினான்.

அடுத்து அந்தக் குழந்தை கேட்ட கேள்வி இந்திரனைத் துணுக்குறச் செய்தது, “ அது சரி அழகான நகரைத்தான்  அமைத்துக் கொடுத்துவிட்டாரே. இன்னும் எத்தனை காலம்தாம் விஸ்வகர்மாவை வதைப்பாய் “ ஒரு குழந்தையின் வாயில் இருந்து இச்சொற்களை எதிர்பாராத இந்திரன் வெறுப்புற்றான்.

அழகான குழந்தை என்றாலும் நாம் ஏன் அவனுக்கு மதித்துப் பதில் சொல்ல வேண்டும் என்ற ஆணவம் எழுந்தது. “ என் நகரம் இது. நான் எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றுவேன். எனக்காகப் பணி செய்யப் பணிக்கப்பட்டவர் விஸ்வகர்மா. நான் சொல்லியதைச் செய்தே ஆகவேண்டும்., அது எத்தனை முறையானாலும். “ என்றான் இந்திரன்.

மேலும் தொடர்ந்தான். “ சிறுவனே , உனக்கு என் நகரின் பெருமை பற்றியும் என்னைப் பற்றியும் என்ன தெரியும். நான் இந்த இந்திரபுரியின் தலைவன். வானளாவிய அதிகாரம் உள்ளவன், சாகாவரம் பெற்றவன்” என்றான்.

இதைக் கேட்ட சிறுவன் அடக்கமாட்டாமல் சிரித்தான். “ நீர் ஒருவர்தான் இந்திரனா ?” 

கோபத்தில் சிவந்த இந்திரன் “ அனுபவமற்ற சிறுவன் நீ. உனக்கு எத்தனை இந்திரன்களைத் தெரியும்? எத்தனை விஸ்வகர்மாவைப் பற்றி நீ அறிவாய் ?” என உறுமினான்.



அயராத சிறுவன் அழகாய் தைரியமாய் இந்திரன் முன் நின்று பதில் அளித்தான். ” இந்திரரே கர்வம் கொள்ளாதீர். மணல்துளிபோல் எண்ணற்ற இந்திரர்கள் இருக்கிறார்கள். நீங்கள் மட்டும்தான் இந்திரனா?  இந்தப் பிரபஞ்சத்தில் ஒவ்வொரு உலகத்திலும் ஒவ்வொரு இந்திரன். இந்திரனுக்கும் ஆயுட்காலம் உண்டு. எழுபத்தியோரு யுகம்தான் அவனது ஆயுள். இதுவரை இருபத்தி எட்டு இந்திரர்கள் தோன்றி மறைந்தார்கள்’

சிறுவன் சொல்வதைக் கேட்ட இந்திரனுக்கு மனமயக்கம் ஏற்பட்டது, “ என்னது இந்திரபதவிக்கும் அழிவு உண்டா. “

அங்கே அச்சமயம் ஓரத்தில் சாரை சாரையாக எறும்புக் கூட்டம் ஒன்று கடந்து போனது. அதைப் பார்த்துக் கொண்டிருந்த சிறுவன் சொன்னான். “இவற்றை நான்தான் படைத்தேன். இவை ஒவ்வொன்றும் முற்பிறப்பில் இந்திரன்தான். இப்போது எறும்பாகப் பிறந்திருக்கின்றன. “

”என்னது தானும் ஒருநாள் இப்படி எறும்பாகி ஊர்ந்து போவோமா ? “ சப்த நாடியும் அடங்கி ஒடுங்கிப் போனது இந்திரனுக்கு. வந்த சிறுவனின் கூற்றில் இருந்த உண்மைகளை உணர்ந்தான். உணர்ந்ததுமே  தன் கர்வம் அடங்கி ஒடுங்க விஸ்வகர்மாவைப் போக விட்டான்.  இந்திரபதவி என்பதும் சாதாரணம்தான் என்றும் இருக்கும்வரை பதவிமோகம் தலைக்கேறாமல் நல்லதையே செய்யவேண்டும் என திருந்தி வாழ்ந்தான்.    

டிஸ்கி:-  இந்தக் கதை இதிகாச புராணக் கதைகள் என்ற தலைப்பில் 28. 9. 2018  தினமலர் சிறுவர்மலர் இதழில் இடம்பெற்றுள்ளது. நன்றி தினமலர் சிறுவர் மலர் & தேவராஜன் ஷண்முகம் சார்..

டிஸ்கி 2.:- அரும்புகள் கடிதத்தில் ரேணுகை கதையைப் பாராட்டிய வாசகர் வேதாரண்யம் ஆர். ஜானகிராமன் அவர்களுக்கு நன்றிகள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)