சீரும் சிறப்புமாக ஜொலித்துக் கொண்டிருக்கிறது வாரணாசி. காசி என்னும்
இப்பதியில் விசுவநாதரும் விசாலாட்சியும் ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள். நானோ
நாகத்தால் தீண்டப்பட்டுக் கங்கைக் கரையின் ஓரத்தில் கிடக்கிறேன். ஆனால் என் தாயோ காசிராஜன் குழந்தையைக் கொன்றதாக
குற்றம் சாட்டப்பட்டு என் தந்தையாலேயே வெட்டுப்படப் போகிறாள்.
இதெல்லாம் எதனால் என நினைக்கிறீர்கள்.? வாய்மையே
என்றும் வெல்லும் என்று என் தந்தை கொண்ட விடாப்பிடியான கொள்கையால்தான்.
மனைவியானால் என்ன மகனானால் என்ன சத்யமேவ ஜெயதே என்று கடமையில் கண்ணாய் இருக்கிறார்
என் தந்தை.
மனைவியும் மகனும் இறப்பின் நுனியில்
இருக்கும்போதும் தன் வாய்மையை விடாத அந்த மயானக் காவலர் யார் ? அவர் தான் என்
தந்தை அரிச்சந்திர மகாராஜா. இந்தத் தாரணியே போற்றும் அயோத்தியின் பேரரசர்.
விண்ணுலகத்திலும் மண்ணுலகத்திலும் எக்காலத்திலும் வாய்மைக்காகப் போற்றப்படக் கூடிய
மன வலிமை வாய்ந்தவர் என வசிஷ்டரால் புகழப்பட்டவர். ! அதனாலேயே விசுவாமித்திர
மகரிஷியின் அழுக்காறுக்கும் அளவற்ற சோதனைக்கும் ஆளானவர்.
வாருங்கள் காசி மாநகரம் அழைத்துச் செல்கிறேன்.
எங்கள் கதையைப் பார்த்து வாய்மையைக் கடைப்பிடிப்பது குறித்து முடிவெடுங்கள்.