செவ்வாய், 6 மார்ச், 2018

சுந்தரமாய் உதித்த சொல்லின் செல்வன். :- தினமலர் சிறுவர்மலர் - 8.

சுந்தரமாய் உதித்த சொல்லின் செல்வன். :-

ராம் ராம்”என்றொரு ஒலி எங்கும் ஒலிக்கிறது. நித்ய பிரம்மச்சாரி ஒருவன் சிரஞ்சீவியாய் இதைச் சொல்லியபடி தன் நெஞ்சில் ராமரை நிலை நிறுத்திவிட்டான். அவன் இதயமே அவர் உறையும் கோயில் என்றானது. யார் இந்த சிரஞ்சீவி, இவன் சொல்லும் ’ராம்’ எல்லோரும் எழுதும் ராமஜெயமானது எப்படி ?

சொல்லின் செல்வன் என்று ராமராலேயே அழைக்கப்பட்டவர் யார் தெரியுமா ? அதைத் தெரிந்து கொள்ள நாம் ரிஷியமுக பர்வதத்துக்குப் போகவேண்டும். அது எங்கே இருக்கிறதா.. ராமாயணத்தின் சுந்தரகாண்டத்தில் இருக்கிறது. வாருங்கள் நாம் ஒரு சொல்லின் செல்வன் சுந்தரமாய் உதித்த சுந்தரகாண்டத்துள் நுழைவோம்.

ஆம் யார் இந்த சொல்லின் செல்வன் ? அவர் ஏன் சுந்தர காண்டத்தில் உதித்தார். இவர் சுந்தகாண்டத்தில் உதிக்கக் காரணமானவர்கள் யார்?

ரிஷியமுக பர்வதத்தின் ஆரண்யம் அழகு மிக்கதுதான். செடி கொடிகளும் அவற்றில் தேன்கனிகளும் நிரம்பிக் கிடக்கின்றன. வண்டினங்கள் முரல்கின்றன. பறவைகள் பாடித் திரிகின்றன. ஆனால் துயரம் தோய்ந்த முகத்தோடு அங்கே இரு மானுடர்கள் முதுகில் அம்பறாத்துணியும் அவை நிறைய அம்புமாய் கைகளில் வில்லேந்தி வருகிறார்களே.

வேட்டையாட வந்தார்களோ அப்படியும் தெரியவில்லை. அவர்களுக்கு அங்கே என்ன வேலை. தொலைந்த எதையோ தேடுவதுபோல வருகிறார்களே. எதைத் தொலைத்தார்களோ எங்கே தொலைத்தார்களோ தெரியவில்லை. ஆனால் கம்பீரமான வீரர்கள். என்னதான் துயரம் தோய்ந்திருந்தாலும் முகத்தில் அரசகளை பொலிகிறதே.

ஒரு பாறையின் ஓரத்தில் ஒளிந்திருந்து பார்க்கிறான் அஞ்சனை மைந்தன். யாரிவர்கள்.. சுக்ரீவன் சந்தேகப்பட்டதுபோல் வாலி அனுப்பிய வீரர்களா.. இவர்களைப் பார்த்தால் மனதில் ஏனோ இனம் புரியாத பாசமும் பக்தியும் பெருகுகிறதே. என்ன செய்யலாம். ?

கேசரி மைந்தன் தாடையைத் தடவுகிறான். பிறந்தவுடன் சூரியனைச் செந்நிறப்பழம் என்று பிடிக்கத் தாவியதால் அவர் கதாயுதம் கொண்டு தாடையில் அடித்ததில் உருவான பெரிய தாடை இடைஞ்சலாயிருக்கிறதே. அதற்குப் பிரதியாக அவர் வழங்கிய மணிமா அரிமா லஹிமா கரிமா போன்ற அட்டமா சித்திகளில் ஒன்றைப் பயன்படுத்தி ஹனுமன் ஒரு அந்தண இளைஞனாய் உருவெடுக்கிறான்.

திடீர் என எதிர்வந்து நிற்கும் அந்த இளைஞனைப் பார்த்ததும் இருவரும் திகைக்கிறார்கள்.

”யார் நீங்கள் இருவரும் ?. இந்த வனாந்திரத்தில் என்ன செய்கிறீர்கள்? பார்த்தால் அரசிளங்குமரர்கள் போல் தெரிகிறது. ”

“நாங்கள் அயோத்தி தேசத்து தசரத ராஜாவின் புதல்வர்கள். எனது பெயர் ராமன். இவர் எனது சகோதரர் இலக்குவன்.”

இதைக் கேட்டதும் மாருதியின் உள்ளம் துள்ளியது. இவர்கள்தானா அவர்கள். தன் உள்ளம் கவர் இராமன் இவர்தானா. இவரைப் பார்க்கத்தான் தான் இத்தனை காலம் காத்துக் கிடந்தோமா. உடனே தனது சுய உருவத்துக்குத் திரும்பிய ஹனுமன் அவர்களை வரவேற்கிறார்.

”அஹா வாருங்கள். வாருங்கள்.. நான் வாயுபுத்திரன் ஹனுமன். ”

பரவச முகத்தோடு இருவரையும் மாறி மாறிப் பார்க்கிறார் அந்த பஜ்ரங் பலி. உடனே ராமபிரானின் பாதங்களைத் தொட்டு வணங்குகிறார் கேசரீநந்தன். முதல் சரணாகதியே முழுமையான சரணாகதி.

ஒரு கணம் அயர்ந்த இராமர் உடனே அவரைத் தொட்டு எழுப்பித் தழுவிக் கொள்கிறார். இரு மனங்களின் சங்கமம் அங்கே நிகழ்ந்துவிடுகிறது.  ராமருக்காகத் தனது உடல் பொருள் ஆவியைக் கொடுக்க அங்கேயிருந்தே சித்தமாகி விடுகிறார். அப்போதே கூடுவிட்டுக் கூடு பாய்ந்தது போல் ராமநாமம் அவர் நெஞ்சில் தங்கிவிடுகிறது. அங்கேயே சுந்தரமாய் உதித்தெழுகிறார் சொல்லின் செல்வன்.

”தாங்கள் இங்கே வரக் காரணம் என்ன என நான் அறியலாமா ?””

”தந்தையின் கட்டளைப்படி ஏழிரண்டாண்டு வாழக் காடு வந்தடைந்தோம். நாங்கள் வேட்டையாடச் சென்றிருந்த போது எனது மனைவி சீதை எங்கள் பர்ணசாலையோடு காணாமல் போய்விட்டாள். அவளைத் தேடியே அலைந்து திரிகிறோம். “

”எங்கள் மன்னர் சுக்ரீவனிடம் செல்லலாம் வாருங்கள்”. என அழைத்துச் செல்கிறார். அதன்பின் சுக்ரீவனுக்காக வாலியை ராமர் வதம் செய்து அவனை அரசாட்சியில் அமரவைக்கிறார். அதன் பிரதியாக ஆஞ்சநேயர் உதவியுடன் அவர்கள் சீதையைக் கண்டுபிடிக்கிறார்கள்.

ஜடாயு என்ற பறவை அரசன் சீதையைக் கவர்ந்து சென்றவனைப் பற்றிச் சொன்ன குறிப்புகளோடு அவன் இராவணன்தான் என்றும் அவன் இலங்காதிபதி என்றும் கண்டுபிடித்து சீதையைக் காணக் கடல் கடந்து அசோகவனத்துக்குச் செல்கிறார் அனுமன்.

அங்கே துயரே உருவாய் அமர்ந்திருக்கிறாள் அன்னை. பார்த்ததும் துணுக்குறுகிறது அனுமனுக்கு. மரத்தின் மேல் அமர்ந்து ”ராம், ராம்” என்று ராம நாமத்தை உச்சரிக்கத் தொடங்குகிறார்.

ல மாதங்களாகியும் ராமனைக் காணாமல் வருந்திய சீதை தன் உயிரை மாய்த்துக் கொள்ள முனைகிறாள். அப்போது அவள் காதுகளில் ஒலிக்கிறது ஒரே சீரான ராம் ராம் என்றொரு ஒலி. அக்கம் பக்கம் பார்க்கிறார். அண்ணாந்து மரத்தைப் பார்க்கிறார். 

ஓங்கி வளந்திருக்கும் அம்மரங்களின் இடையில் இருந்து அனுமன் குதிக்கிறார். அன்னையிடம் அனைத்தையும் இயம்புகிறார். ராமன் அளித்த கணையாழியைக் காட்டுகிறார்.

உயிர் நீக்க இருந்த அன்னை அதைக் கண்டதும் உயிர்பெற்று எழுகிறார். தன்னை உயிர்ப்பித்த அந்த வானர இளைஞன் சிரஞ்சீவியாக இருக்க வரம் அருள்கிறாள்.

ராவணன் அவையில் சீதையை விட்டுவிடும்படி எச்சரித்தும் கேளாத அவன் அனுமனின் வாலில் தீவைக்கும்படிக் கூற அசோகவனத்தைத் தீக்கிரையாக்கி உடன் ரிஷியமுக பர்வதம் திரும்புகிறான் அனுமன்.

சீதையைக் காண ஏங்கி ஆவலுடன் காத்திருக்கும் ராமனைக் காண்கிறான் அந்தச் சொல்லின் செல்வன். காத்திருக்கும் ராமரைத் தவிக்கவிடாமல் சீதையைக் கண்டதை ராமனிடம் இரண்டே வார்த்தைகளில் தெரிவித்துவிடுகிறான் அனுமன்.

“கண்டேன் சீதையை “

இவ்வளவுதான் விஷயம். அதைக் கேட்டதும் புத்துயிர் பெறுகிறார் ராமர். வானர சேனைகள் கொண்டு கடலுக்குப் பாலம் அமைத்து இராவணனை இராமன் வெற்றி கொள்ளத் துணை நின்றதும் அதன் பின்னும் ராமரைத் தன் நெஞ்சில் சுமந்து தன் உண்மையான பக்தியை யுகம்தோறும் நிரூபித்து அவரின் சிறிய திருவடியாகத் திகழ்ந்து வருகிறார் அனுமன்.

ராம ராவண யுத்தத்தில் ராமர் வெற்றி பெற்றதும் அதைச் சீதையிடம் தெரிவித்தவரும் அனுமனே. தன் நாயகனை எண்ணித் தவமியிற்றிக் காத்திருக்கும் தேவியின் செவிகள் போரின் முடிவென்ன என்றெண்ணிக் கலங்கிக் கொண்டிருக்கின்றன. நல்ல சேதி கிட்டாதா தம் நாயகனைக் காண்போமா என்ற ஆவலில் அவள் காத்திருக்கும்போது அசோகவனத்தில் புகுகிறார் அனுமன்.

சீதை கேட்கத் துவங்குமுன்னே சொல்கிறார்.

“ராமஜெயம் “ அகமகிழ்கிறாள் அன்னை.

இத்துடன் தெரிந்து விடுகிறது நல்லவை ஜெயிப்பதும் கெட்டவை அழிவதும் திண்ணமென்பது. எனவே அவர் கூறிய இந்த ராம மந்திரம் மக்களால் ஜெபிக்கப்படவும், நூற்றுக்கணக்காக, ஆயிரக்கணக்காக, லட்சக்கணக்காக கோடிக்கணக்காக ராமபக்தர்களால் எழுதப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. ஏனெனில் அது சொல்லின் செல்வனின் வாயிலிருந்து உதிர்ந்த சக்திவாய்ந்த மந்திரமல்லவா. !. 

இதிகாச புராணக் கதைகள் கூறி சிறுவர்களுக்கு நன்னெறியைப் போதிக்கும் சிறுவர் மலருக்குப் பாராட்டுகள் என்று அரும்புகள் கடிதத்தில் தெரிவித்திருந்த பந்தநல்லூர் வாசகர். வீர. செல்வம் அவர்களுக்கு நன்றிகள். 

இதைப் பற்றிக் கேள்வி பதில் பகுதியிலும் வந்திருப்பது சிறப்பு ! 



டிஸ்கி:-  இந்தக் கதை இதிகாச புராணக் கதைகள் என்ற தலைப்பில் 2. 3. 2018  தினமலர் சிறுவர் மலர் இதழில் இடம்பெற்றுள்ளது. நன்றி தினமலர் சிறுவர் மலர் & தேவராஜன் ஷண்முகம் சார்.

5 கருத்துகள்:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு
  2. ராமஜெயம். ஒரே சொல்லில் அனைத்தும் நிறைவு. குழந்தைகளுக்கு மட்டுமல்ல, அனைவருக்குமே ஏற்ற, தேவையான கதை.

    பதிலளிநீக்கு
  3. நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே;
    தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே;
    சென்மமும் மரணமும் இன்றித் தீருமே-
    இம்மையே இ‘ராம’ என்று இரண்டு எழுத்தினால்.

    பதிலளிநீக்கு
  4. நன்றி ஸ்ரீராம்

    நன்றி ஜம்பு சார்

    நன்றி முத்துசாமி சார்

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)