வியாழன், 25 ஜனவரி, 2018

தவப்பயனால் தனித்துவம் பெற்ற துருவன். தினமலர் சிறுவர்மலர் - 2

தவப்பயனால் தனித்துவம் பெற்ற துருவன்.

பளிச் பளிச் என்று கண்ணைச் சிமிட்டிக் கொண்டிருந்தது வடக்கு வானில் ஒரு நட்சத்திரம். நிலவு, மற்ற நட்சத்திரங்கள் ஒளிர்கின்றனவோ இல்லையோ தினமும் மாலையிலிருந்து காலைவரை இந்த வடக்கு நட்சத்திரம் மட்டும் ஒளிவீச மறப்பதில்லை.

காந்தப் புலத்தின் மைய ஈர்ப்பாய் ஜொலிக்கும் அந்த நட்சத்திரம் யார் ? நட்சத்திர மண்டலத்துக்கும் சப்தரிஷி மண்டலத்துக்கும் தேவாதி தேவர்களுக்கும் அதி தலைவனாக ஆகும் பாக்கியம், யுகம் யுகமாய் கல்பகாலம் வரை ஜொலிக்கும் பாக்கியம் எப்படிக் கிடைத்தது ? 

அவன்தான் என்றும் நிலையான துருவன். அவன் யார் ? அவனுக்கு நிலையான இடம் கிடைத்தது எப்படி எனப் பார்க்க நாம் வைகுண்டத்துக்கும் அதற்குமுன் சுவாயம்புவமநுவின் மகன் உத்தானபாதனது அரண்மனைக்கும் போகவேண்டும்.


ந்திரன் சந்திரன், சூரியன், குபேரன் வருணன் மற்றுமுள்ள முப்பத்து முக்கோடி தேவர்களும் ஸ்ரீமன் நாராயணன்.. காப்பாற்று எங்கள் பதவியைக் காப்பாற்று என்று கதறிகொண்டே ஓடிவந்தார்கள்.

அப்படி அவர்கள் பயந்தது எதைப்பார்த்து ?

பூலோகத்தின் கானகம் ஒன்றில் ஐந்து வயதே ஆன பச்சைப் பாலகன் பச்சைத்தண்ணீர் கூட அருந்தாமல் கடுந்தவம் புரிந்துவந்தான். எதற்காம் அந்தக் கடுந்தவம். ?  சர்வ உத்தமமான உன்னத ஸ்தானத்தை அடையவே .

தந்தையின் மடியாசனம் கிட்டவில்லையே என்ற ஏக்கத்தில் வாடிச் சுருண்டு நிற்கும் அச்சிறுவன் தனது கட்டைவிரல்களினால் நின்று கொண்டே கடுந்தவம் புரிந்து கொண்டிருந்தான். அவனது அகோர தவத்தினால் அக்கம் பக்கமெங்கும் நெருப்பு கொழுந்துவிட்டெறிந்தது போல் உஷ்ணமாக இருந்தது.

ஆமாம். இப்படிக் கடுந்தவம் புரியும் அந்த துருவன் யார் ?

த்தானபாதன் மன்னனுக்கு இரு மனைவியர். சுருசி, சுநீதி என்பது அவர்கள் பெயர். சுருசிக்கு உத்தமன் என்றொரு மகனும் சுநீதிக்கு துருவனும் பிறந்திருந்தார்கள். மன்னன் உத்தானபாதனுக்கோ சுநீதியைவிட சுருசியின் மேல் அதிக பிரியம் இருந்தது.

ஒரு நாள் தந்தையைக் காணச்சென்ற துருவன் அவரது மடியில் தனது சகோதரன் உத்தமன் அமர்ந்திருந்தைக் கண்டான். அவனுக்கும் தன் தந்தையின் மடியில் அமர ஆசையாக இருந்தது.

சின்னக்குழந்தைதானே எனவே ஓடிச்சென்று தந்தையின் மடியில் அமர முயற்சித்தான் துருவன். அப்போது அங்கே வந்த சுருசி அவனை உத்தானபாதனின் மடியிலிருந்து இறக்கிவிட்டு ”என் மகன் உத்தமன்தான் தந்தையின் மடியில் அமர அருகதை பெற்றவன். சுநீதியின் வயிற்றில் பிறந்ததனால் நீ தந்தையின் மடியில் அமர அருகதை இல்லாதவன். “ என்று காழ்ப்புணர்வோடு அவனை அனுப்பினாள்.

தந்தை அதைத் தடுக்காததோடு கண்டும் காணாமலும் இருந்ததைக் கண்ட பிஞ்சு உள்ளம் கொதித்தது. தன் தாய் சுநீதியிடம் போய் நீதி கேட்டான் பாலன். கல்லும் கண்ணீர்விடும் அவனது துயரம் பார்த்து அவனைப் பெற்றவள் பரிதவித்தாள்.

”சுருசி உன் தந்தையின் பிரியத்துக்குரியவள். அதனால் உத்தமனுக்கு அனைத்து ஐஸ்வர்யங்களும் அரியாசனமும் கூடக் கிட்டியுள்ளன. ”என்று சுநீதி கூறவும். “ அம்மா. அரியாசனம் கேட்கவில்லை நான். சரியாசனமும் கேட்கவில்லை. என் தந்தையின் மடியாசனத்தைத்தானே கேட்டேன். என் சகோதரனுக்குக் கிட்டிய பாக்கியம் எனக்குக் கிட்டவில்லை. இதைவிட உன்னத ஸ்தானத்தை நான் என் தவத்தால் அடைவேன்” என்று கூறி கானகம் சென்றான்.

அருகே இருந்த கானகத்தில் தவம் செய்த சப்த ரிஷிகளும் அவனுக்கு எப்படி தவம் செய்வதென ஆலோசனை சொன்னார்கள்.  மரீசி முனிவர், அத்திரி முனிவர், ஆங்கீரச முனிவர், புலஹ முனிவர், கிருதுமாமுனிவர், புலஸ்திய முனிவர், வசிஷ்ட முனிவர் ஆகியோர் கோவிந்தனை வணங்கினால் மூவுலகங்களுக்கும் மேலான ஸ்தானத்தை அடையலாம் எனச் சொன்னார்கள்.

இதயத்தில் விஷ்ணுவை நினைத்துத் தவம் செய்துகொண்டிருந்தான் துருவன். பேய்களும் பூதங்களும் அவனது தவத்தை இம்சித்துக் கெடுக்கப் பார்த்தன. ஒன்றுக்கும் கலங்காமல் தன் தவத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தான் துருவன். அவன் உள்ளத்தில் மகாவிஷ்ணு குடியேறி இருந்ததால் பூமாதேவியும் பாரம் தாங்காமல் தவித்தாள். அவனைச் சுற்றி இருந்த இடம் அனைத்தும் வெப்பத்தால் தகிக்கத் தொடங்கின. அவனது தவநெருப்பு தேவலோகம் வரை எட்டியது.

தேவர்கள் கதி கலங்கினர். ஓடிச்சென்று எம்பெருமானிடம் முறையிட்டனர். தங்கள் பதவியைக் காப்பாற்றுமாறு வேண்டிய  அவர்களிடம் எம்பெருமான் துருவனின் மனோரதம் அழியக்கூடிய பதவிகளல்ல.அழியாத நிலையான உன்னதமான இடம் வேண்டும் தவம் எனக் கூறினார்.

தனது திவ்ய சொரூபத்தைக் காட்டியபடி தோன்றிய இறைவன் தனது பாஞ்சசன்யத்தினால் துருவனைத் தொட அவன் பெருமாளைப் பல்வேறு தோத்திரங்களால் தொழுது அடிபணிந்து தனது கோரிக்கையைச் சொல்கிறான். “ எம்பெருமானே ! எனது தந்தையின் மடியாசனம் எனக்குக் கிட்டவில்லை. அதற்குச் சரியாசனம் எதுவுமே கிடையாது. ஆயினும் எனக்கு அதைவிட உன்னத இடத்தை அளிக்க வேண்டுகிறேன். ”

அதைக் கேட்ட வரசித்தியான இறைவன், “ மூன்று உலகங்களுக்கும் மேலானதான, ஸ்தானத்தை அடைந்து கல்பகாலம்வரை இருக்கக் கடவாய். உன்னைப் பெற்ற பாக்கியவதி சுநீதியும் உன் அருகிலேயே இருக்கும் வரம் தருகிறேன் . வானத்தில் வட துருவப் பகுதியில் மின்னும் உன்னை வணங்குவோர்க்கு இஷ்டசித்திகள் நிறைவேறும் என வரமளித்தார்.

”அதோ வடக்கு திசையில் ஈசான்யத்தில் எந்நாளும் மின்னிக் கொண்டிருக்கிறானே அவன் தான் துருவன். தனது தவப்பயனால் தனித்துவம் பெற்றான் அவன். அவனை உதார புருஷனாகக் கொண்டு நாமும் நமது குறிக்கோளுக்காகக் கடுமையாக உழைப்போம். நிச்சயம் வெற்றி பெறுவோம். 

டிஸ்கி:- இந்தக் கதை இதிகாச புராணக் கதைகள் என்ற பகுதியில் 19. 1. 2018 தினமலர் சிறுவர் மலரில் இடம் பெற்றுள்ளது. நன்றி தினமலர் சிறுவர் மலர்  & தேவராஜன் ஷண்முகம் சார்.  

4 கருத்துகள்:

  1. துருவ நட்சத்திரத்திற்கும் இவ்வளவு அழகான புராணப் பின்னணி
    தங்களது | நடையழகில் இன்னும் மின்னுகிறான் துருவன்.
    வாழ்த்துகள் அக்கா.

    பதிலளிநீக்கு
  2. நன்றி திருக்கண்ணபுரத்தான் :)

    நன்றி ஸ்ரீராம்

    நன்றி கீத்ஸ்

    நன்றி தென்றல்.

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)