வெள்ளி, 2 ஜூன், 2017

செட்டிநாடும் செந்தமிழும். தேனார் மாணிக்கனார் இயம்பும் அகத்திணையின் அகம் :-

செட்டிநாடும் செந்தமிழும். தேனார் மாணிக்கனார் இயம்பும் அகத்திணையின் அகம் :-



செட்டிநாடும் செந்தமிழும். 

9. 4. 2017 அன்று கோட்டையூரில் நடைபெற்ற உலத்தமிழ் நான்காம் கருத்தரங்கத்தில் வெ.தெ. மாணிக்கனார் பற்றி நான் வாசித்தளித்த ஆய்வுக் கட்டுரை.  

தேனார் மாணிக்கனார் இயம்பும் அகத்திணையின் அகத்தினை :-

சங்க இலக்கிய நூல்களில் ஐவகைத் திணைகளில் மருதத்தின் வாழ்வு சீர்மிகு ஒன்றாகும். செட்டிநாட்டில் இன்றைய திருமணவாழ்வியலின் அத்யாவசியத் தேவையாய் ஊடாடி நிற்கும் கனிந்த காதலையும் ஊடலையும் கூடலையும் விதந்தோதுவதால் நகரத்தார் மாணிக்கம், நற்றமிழ் மாணிக்கனார் அவர்கள் எழுதிய ஆராய்ச்சி நூலான மருதத்திணையின் பயன்பாடு இன்றியமையாததாகிறது.

மனிதர்கள் பிறக்கிறார்கள், வாழ்கிறார்கள் மடிகிறார்கள், ஆனால் மாமனிதர்களோ மொழிகளில் நிரந்தரத்துவம் கொண்டு உறைகிறார்கள். வேந்தன் பட்டியில் பிறந்து காரைக்குடி ஆவுடையான் செட்டியார் வகையறாவில் பிள்ளை வளரவந்து சேந்தணியார் இல்லத்தின் சேயிழையைக் கைப்பிடித்து, அதன்பின் முதுகலைத் தமிழ் முடித்து பச்சையப்பர் கல்லூரியில் பணிபுரிந்த பெருந்தகை மாணிக்கனார் அவர்கள் தம் தமிழ்ப் பணியால் சிறப்புற்றவர்கள்.

உடம்புக்கு உணவு. உயிருக்கு வழிபாடு என்று வாழ்த்துப் பொருளாக மட்டுமின்றி வாழ்வுப் பொருளாகவும் இறைவனைப் பற்றியவர்கள். குழந்தைகளுக்குக் கூட செந்தமிழ்ப் பெயர் சூட்டியவர்கள். அப்பர் மேல் கொண்ட காதலால் திருநாவுக்கரசு என்றும், தமிழ்க் கடவுள் மேல் கொண்ட ப்ரேமையால் முருகன், வேலன், என்றும் மாமனார் மேல்கொண்ட பேரன்பால் ராமசாமி என்றும் பெயரிட்டிருக்கின்றார்கள். முழுவதும் கடல்நீரின் கீழ் அமிழ்ந்து பருப்பொருளாய் மேல் தெரியும் பனிக்கட்டியின் ஒரு துளி எடுத்து தேமா அவர்களின் சிற்பம் செய்ய முயன்றிருக்கிறேன்.

கி.ஆ.பெ. விசுவநாதன் அவர்களின் மாணாக்கருக்கு என்ற நூலின் மதிப்புரையில் தேமா அவர்கள்,

“இன்சொல் விளைநிலமா ஈதலே வித்தாக
வன்சொல் களைகட்டு வாய்மை எருவட்டி
அன்புநீர் பாய்ச்சி அறக்கதிர் ஈன்றதோர்
பைங்கூழ் சிறுகாலைச் செய்.

என்று அறநெறிச்சாரத்திலிருந்து எடுத்துக்காட்டுக் கூறி வழிநடத்தி இருப்பது சிறப்பு.

மாணாக்கப் பருவம் பற்றியும் ஒழுக்கம் மற்றும் மொழிப்பற்றின் இன்றியமையாமைபற்றியும் கி ஆ பெ அவர்களின் நூலுக்குக் கொடுத்த முன்னுரையில் சிறப்புற மொழிகிறார். ஒரு மொழி அழிந்தால் அந்த இனம் அழியும் அவர்கள் வாழும் நாடு பாழ்படும் எனவும் தமிழ்மொழியில் மட்டுமே ஒழுக்கத்தையே பொருளாகக் கொண்ட இலக்கியங்கள் உள எனவும் கி ஆ பெ அவர்களின் கருத்தை வழி மொழிகிறார். மாணவர் தமிழ் உணர்வோடு நெஞ்சில் உரமும் நேர்மைத் திறமும் கொண்டு குன்றா ஒழுக்கமும் கொள்கைப் பிடிப்பும் உடையவராய் வாழவும் வாழ்த்துகிறார்.

வணிகர் குலத்தில் பிறந்து, வட்டிக்கணக்கை விட வாழ்வியல் நலத்தையும், ஆன்மீகத் துணைக்கோடலையும் மேற்கொண்டவர்கள். நிறைய ஆராய்ச்சி மாணாக்கருக்கு வழிகாட்டியாக அமைந்து வழி நடத்தி உள்ளார்கள். கல்விக் கொடையாளர். தமிழ்ப்பண்பாட்டினையும் இல்லொழுக்கம் பற்றியும் வலியுறுத்தும் அதே நேரம் மருதத்தின் சிறப்பான தலைவன் தலைவி மட்டுமே சம்பந்தப்பட்ட மருதத்தின் கருப்பொருளான ஊடலும் ஊடல் நிமித்தமும் பற்றி சுமார் 122 பக்கங்கள் வரை திறம் பிரித்து எழுதி உள்ள அவர் அதில் ஊடாடும் பரத்தையர் என்னும் பொதுமகளிர் பற்றி அதிகமாகவோ, தரம் தாழ்த்தியோ எழுதவேயில்லை என்பது வியப்பில் ஆழ்த்திய விஷயம்.  

தமிழ் மொழிச் சிறப்பு.

”கண்ணார்
பொருள்தரும் தமிழே நீயோர்
பூக்காடு நானோர் தும்பி” 

என்று அவர் கூறுவதை நாமும் மறுமொழிகிறோம். 

மருத்தத்திணையின் சிறப்பு கனிந்த காதல். (SWEET AFFECTION ). திருமணத்துக்கு முன்னும் பின்னும், இணைவிலும் பிரிவிலும் , களவும் கற்பும் என இருநிலைகளிலும் பொருள் தேடும் உலகில் மனம் தேடும் மனிதராய் எழுத்திலும் வெளிப்பட்டிருக்கிறார் தேமா அவர்கள்.

நதிக்கரை நாகரீகத்தால் செழிப்படைந்த மனிதன் பெறும் மாபெரும்வாழ்வியல் இன்பங்களைப் பற்றிக் கம்பன் உரைப்பதைப் பாருங்கள்.

” தாமரைப் படுவவண்டும் 
தகை வரும் திருவும்தண் தார்க்
காமுகர்ப் படுவமாதர் 
கண்களும் காமன் அம்பும்;
மா முகில் படுவவாரிப் 
பவளமும் வயங்கு முத்தும்;
நாமுதல் படுவமெய்யும் 
நாம நூல் பொருளும் மன்னோ”

இவ்வாறான இனிய வாழ்வியல் இன்று எப்படி எல்லாம் திசைதேய்ந்து திரும்பி இருக்கிறது என்றும் பாருங்கள். ஜான்மில்டனின் கவிதையான இழந்த சொர்க்கமும் மீண்ட சொர்க்கமும் போல அமைந்திருக்கிறது மருதத்தின் வாழ்வு.

அல்லி, ஆம்பல், குவளை, கழுநீர், நெய்தல், குமுதம், தண்ணீர்ப்பூக்களின் ராணியாம் தாமரை நிறைந்த வாவிகள், பூ மருது, வஞ்சி , காஞ்சி, செந்நிறப் பூக்கள் கொண்ட நிலப்பூக்களின் ராணியாம் மருதம், கமுகு, தென்னை, நெல், மா, பலா, வாழை, ஆகிய தாவரசங்கமம் நிரம்பியது மருதம். எருது, நீர்நாய், முதலை,நண்டு, ஆமை, நத்தை, சங்கு,வாளை, விரால், கெண்டை, கெளுத்தி, அன்னம், மகன்றில், வாத்து, நாரை, மீன்கொத்தி,சேவல், கோழி, கம்புள், செம்பங்கோழி, நீலநிற நீர் வாத்து, தும்பி, தேனி சுரும்பு, நிமிறு, வண்டு ஆகிய மிருகங்களும் பறவைகளும் நிரம்பி உள்ளன. அரிசி, கரும்பு, பொன்னேர் பூட்டுதல், உழவுப்பாட்டு, ஏற்றப்பாட்டு, குலவையிடுதல், அறுவடைப் பாட்டு என பசுமையாலும் பாடல்களாலும் நிறைந்து செழிப்பமாக இருக்கிறது. இதற்குத்“ தண்டலை மயில்கள் ஆடும், தாமரை விளக்கும் தாங்கும் “ என்ற கம்பரின் பாடல் ஒன்றும் உண்டு.

தீம்புனல், மென்பால், நன்புலம் நிரம்பிய, இயற்கை விவசாயத்தால் செந்நெல்லும் வெந்நெல்லும் முப்போகமும் விளையும் பூமி, போகத்தின் கடவுள் இந்திரன், களியாட்டங்களில் மூழ்கிய கோன், திருமகள் போன்றிருக்கும் ஊடல் கொண்ட தலைவி, கற்புநெறிக் காதலுக்கும் களவுநெறிக் காதலுக்கும் இடையில் புகும் பொதுமகளிர் உறவுகள், இவர்களைச் சமன் செய்யும் பாணர், விறலியர், (சூதர், மாகதர், வேதாளிகர் ) முருகனைப் போன்ற மூத்த புதல்வன், இளையமகன், தோழி, தாய், செவிலித்தாய், பாங்கன்,வேதியர், வேலைக்காரர்கள்,பணிப்பெண், விருந்தினர்கள், ஆண் பெண் நடனக்காரர்கள், சாதுக்கள், பார்வையாளர்கள் என செழிப்பமான ஒரு சித்திரம் கலைந்து கிடக்கிறது.

நம்பி அகப்பொருளில் மனைவிமேல் கொண்ட பெருமிதம் பாடுபொருளாகிறது.

தலைவன், தலைமகன், திருமகன், கோ, கோன், ஊரன், மகிழ்நன், கிழவோன் என அழைக்கப்படுகிறான் நாயகன். MEN OF MEN !. பரத்தையரோடு இருந்தாலும் மனைவி பற்றிய பெருமிதம், குழந்தைகள் மேலான பாசம் என இல்லம்திரும்பி மன்னிப்பு வேண்டி நிற்கும் தலைவன் அகத்திணையின் எழுத்துச் சித்திரம். முதலில் திருமணத்துக்கு முன் ஆண் தன்னைச் சோதித்துக் கொள்ளவும், இளமைக்கேயுரிய குறுகுறுப்பாலும் பொதுமகளிரிடம் செல்கிறான். இரண்டாவதாக வேண்டி வேண்டிக் காதலித்துத் திருமணமானபின் அந்த மாயக்காதல் அறுந்தபின் அதன் வண்ணங்கலைந்தபின் பரத்தையரை நாடிச் செல்கிறான். மூன்றாவதாக மனைவிக்குக் குழந்தை பிறந்தபின் வாழ்வில் காதல் காமம் முதலானவற்றில் உச்சமெய்தியபின், நிறைவெய்தியபின் பரத்தையிடம் செல்கிறான். அதைக் குறித்து 

”கற்றைக் குழலார் கவினெல்லாம் ஓர் மகவைப்
பெற்றக் கணமே பிரியுமே “ – நீதிவெண்பா -82. 

என அதிக அளவிலான மருதப் பாடல்கள் இந்த மூன்றாவது பிரிவிலேயே பாடப்பட்டுள்ளன. 

மனைவியின் கவனம் அவன் மேலிருந்து குழந்தை வளர்ப்பில் சென்றுவிடுவதாலும் பிள்ளைப்பேறுக்குப்பின் உடல் ரீதியான உபாதைகளால் மனைவியிடம் ஏற்படும் உடல் மாறுதல்களும் அவனை இந்நிலைக்கு இட்டுச் செல்கின்றன. பொறாமை உணர்வைத் தூண்டி மனைவியின் கவனம் பெற வேண்டித் தலைவன் இவ்வாறு செய்வதாகக் கூறப்படுவதுண்டு. அதன் பின் வாயில் வேண்டல், வாயில் மறுத்தல், ஊடல் திறத்தல் ஆகியன நிகழ்கின்றன. பாங்கன், விருந்தினர், செவிலித்தாய், தோழி துணைக்கொண்டு 

“எமக்கே வருகதில் விருந்தே: சிவப்பாளன்று
சிறியமுள் ளேயிறு தோன்ற
முறுவல் கொண்ட முகங்காண் கம்மே – நற்றிணை 120:10-2 )

கோபங்கொண்ட மனைவியை அன்பாலே மீட்டெடுக்கிறார்கள் கணவர்கள். பரத்தையரிடம் செல்வதால் உடல்நலம் சீர்கெடும். வீட்டின் செல்வமும் கெடும். அது ஊழ்வினைப் பாவம், மனைவிதான் மாபெரும் சொத்து , முறையற்ற காமம் வறுமையில் செலுத்தும், ஊரார் அலர் தூற்றுவர் என்றெல்லாம் சொல்லி தோழி தலைவனை நேர்படுத்துகிறாள்.

இயலும் இசையும் நாடகமும் அதன் மூலம் ஊடலும் உடல்தேடலும் காமமும் காதலும் பிரிவும் கோபமும் கிளைக்குமிடம். பெருந்தன்மை கொண்ட மனைவியின், காத்திருத்தலின், கனிந்த காதலின், கோபத்தின், எதிர்பார்ப்பின் துயரம் தோய்ந்த பாடல்கள். ’புலவி’யும் ’ஊடலு’ம் இனியன. ’துனி’ இருவருக்குள்ளும் புகுந்து மாறா வெறுப்பாய்த் துணித்துவிடுகிறது இன்றைய திருமணங்களை. இன்றைய திருமணங்களில் சம்பாதிக்கும் கணவன் மனைவி இருவருக்குமான பொது ஈர்ப்பு இணைய மற்றும் வெளி உலகம். அதன் தொடர்பான கருத்து மோதல்கள், பேதங்கள் பிரிவுகள் தொடர்கின்றன. 

பொதுவாக கணவன் ஊடல் கொள்வதை விட மனைவி ஊடல்கொள்ளும் பாடல்களே அகத்திணையில் அதிகம். கணவன் மனைவியின் சந்தேகத்தை நிவர்த்தி செய்ய முழுமையான சரணாகதிக்குத் தன்னை ஆட்படுத்திக் கொள்வதும் உண்டு

“நும்மோ டூடினால் சிறுதுனி செய்து – அக. 306:14.
ஊடலிற் றோன்றும் சிறுதுனி – திருக்குறள் 1322.

குழந்தைப்பேறின் சிறப்புப் பற்றி

மயக்குறு மக்களை யில்லோருக்குப்
பயக்குறை இல்லைதாம் வாழு நாளே. – புற.188.

தளர் நடைப் புதல்வனை உள்ளி, நின்
வளமனை வருதலும் வௌவியோளே?

குழந்தைப்பேறைத் தள்ளிப் போடுவதும் எவ்வளவு குறையுற்ற வாழ்க்கை என்று போதிக்கிறது புறநானூறு. கணவன் மனைக்கிடையேயான ஊடலை மகனின் மேல் கொண்ட பாசம் தீர்த்து வைப்பதும் அழகாக சித்தரிக்கப்படுகிறது. அதே போல் இங்கே முதற்பொருள் , உரிப்பொருள், கருப்பொருள் எல்லாம் காதலும் ஊடலும்தான். அதுவும் மனைவியின் சந்தேகத்தின் பாற்பொருட்டு எழுந்த ஊடல். 

இல்லாத ஒன்றை அல்லது ஒருவரைக் கற்பித்துக் கணவனோடு ஊடுதல் புராண இதிகாச கதாபாத்திரங்களுக்கே உண்டு என்று பிரபுலிங்கலீலையில் சிவன் பார்வதி ஊடல் பற்றி சிவப்ரகாசரும், பரிபாடலில் வள்ளி தெய்வானை முருகனின் ஊடல் பற்றி குன்றம்பூதனாரும் சரஸ்வதி அந்தாதியில் பிரம்மா சரஸ்வதி ஊடல் பற்றி கம்பரும் நயந்து பாடியிருக்கின்றார்கள். ஊடலென்பது காதலில் உணவில் உப்பைப் போல அளவோடு இருக்கவேண்டும் என்பார் திருவள்ளுவர். இதற்கான எனது கவிதை ஒன்று.  

ஊடல்மழை..

முகம் கருக்க
சண்டையிட்டுக்கொண்டார்கள்.
மின்னலாய்க்
கீறிக் கொண்டார்கள்.
வார்த்தைகள் தடித்தபோது
பளீர் என இடி இறங்கியது.
மழை வடியும் இமைகளோடு
குனிந்திருந்த மரத்தை
தழுவச் சென்ற தென்றலை
குளிர்காய்ச்சலாக்கி
விரட்டியது ஈரக்கிளைகள்..
கூதலோடு திரும்பிய
தென்றலுக்குக்
கூடலைவிட
இன்பமாய் இருந்தது
அந்த ஊடல்..

மாணிக்கனாரின் காலகட்டத்தைச் சார்ந்த  ( 1924 ) நிஸிம் இசக்கியேலின் கவிதை ஒன்றைப்போல இன்றைய தலைமுறையைப் பற்றி இருப்பது எந்த விதத்திலும் புரிந்து கொள்ளாத வெறுப்பு மட்டுமே.

QUARREL.

ALL NIGHT I TALKED TO YOU
A TROUBLED DREAM
OF MANY WORDS
AND NOT A SINGLE KISS
LET US NOT QUARREL AGAIN
SO I MAY NEVER DREAM
IN ARGUMENTS ALONE.

உள்ளுறை உவமைகள்:- உள்ளுறை, உவமை, இறைச்சி ஒன்றைக் கொண்டு இன்னொன்றை உவந்து அல்லது இழித்துப் பேசுதல் இப்பாடல்களில் காணப்படுகிறது. பிறிது மொழிதல் அணி, வஞ்சப் புகழ்ச்சி அணி ஆகியன இடம் பெறுகின்றன. நடுகல் வழிபாடு, நினை ஒன்று வினவுதல் உடையேன் என்று கம்பீரமாகக் கேட்பது, துஞ்சுமனை நெடுநகர்வருதி, வளநகர் என்று இல்லங்களைக் குறிப்பது, நின் பெண்டு என உரைப்பது, செந்நெல், வெந்நெல் அரிசி உண்பது, மார்பில் சந்தனம் பூசுவது, வட்டியுள் உண்பது, கழனியூரான் மகன், அவன் புதல்வன் தாயே, இளையமகன் என்று எல்லாம் குறிப்பிடுவது பொருள்வயிற் பிரிந்த கணவனுக்காகக் காத்திருப்பது, இல்லத்துக் கடமைகளை ஆற்றுவது, தமிழ்க்கடவுள் முருகன் வழிபாடு, தாமரையில் உறையும் இலக்குமி வழிபாடு, இசை, நடனம் போன்ற கலைகள் செழிப்பது,  என எல்லாமே மருதம் சார்ந்த நிலத்தைச் சித்திரமாக்கிக் காட்டுகின்றன.   

பரத்தையரின் சேரியிலிருந்து முதல்நாள் இரவில் ஒலித்த பாணனின் பாடல் பேய்க்கூட்டத்தின் ஒலி போல் இருந்ததாகத் தாய் சொன்னதாகவும், நாயின் ஊளை போன்றிருந்ததாக தோழி சொன்னதாகவும், நரியின் சப்தம்போல இருந்ததாகப் பிறர் சொன்னதாகவும் தலைவி பாணனிடம் கூறியது உவமைகளில் சிறந்த எடுத்துக்காட்டு. 

அதேபோல் அழியும் ஆம்பலையும் மீனையும் விலை மகளிர்க்கும் தாமரையைத் தலைவிக்கும், வேழம், களவன், எருமை ஆகியவற்றின் குணநலன்களைத் தலைவனின் செயலோடு ஒப்புமைப் படுத்தியும் கூறியுள்ளது சிறப்பு. 

தோழி/செவிலித்தாயின் பங்கு :- கணவன் மனைவிக்கிடையே நிகழும் ஊடலில் தோழி/செவிலித்தாயின் பங்கும் பாராட்டற்குரியது. தலைவியை சமன்படுத்துதல், தலைவனை நயந்து கடிதல், தோழமையுடன் தலைவிக்குத் தூது செல்லல், தலைவியைக் கவனித்தல். பரத்தையர், பாணருடனான தலைவனின் நட்பைத் துண்டித்தல், பணிவு, துணிவு, பொறுப்பு, தலைவன் தலைவி வாழ்வைச் சீர்செய்தல், ஆகியன அவள் ஆற்றும் பெறும் பணிகள்.

பொதுமகளிர் பற்றிய செய்திகள்:-

ஆய கலைகள் அறுபத்திநான்கிலும் தேர்ச்சி பெற்ற அறிவார்ந்த, அன்பார்ந்த, பெருந்தன்மை மிக்க, மனைவிக்கு நிகரான பரத்தையர் பற்றிய சித்திரம் ஆச்சர்யப்படுத்தியது. அழகுணர்ச்சி, வண்ண உடைகள் அணிதல், வாசனைத் திரவியங்கள் பூசிக்கொள்ளுதல், நகைகள் பூக்கள் அணிதல், இல்லங்களை ஓவியங்கள், சிற்பங்களால் அலங்கரித்தல், இனிமையாகப் பேசுதல், இசை, நடனம் ஆகிய எண்ணென் கலைகளில் தேர்ச்சி உடையவர்கள். மதியூகிகள், மனதைப் படிப்பதில் வல்லவர்கள், மந்திராலோசனை சொல்வதிலும் சிறந்தவர்கள். பல்மொழி கற்றவர்கள். 

சிலர் ஏமாற்றுக்கார சாகசக்காரிகளாகவும் இருப்பதுண்டு. அகட விகடம் செய்து மகிழவைப்பவர்கள். விளையாட்டுக்களில் சிறந்தவர்கள். இரட்டை இதயம் படைத்தவர்கள், தந்திரமிக்கவர்கள், சுயநலமானவர்கள், தூது, உலா, கோவை, கலம்பகம் ஆகியவற்றில் குறிப்பிடப்படுபவர்கள்.

கலித்தொகையில் ஆம்பல் மலரணிந்து துணங்கைக்கூத்தாடும் பொதுமகளிர் பற்றியும் மலைபடுகடாமில் குரவைக் கூத்துப் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. விளையாட்டுத் தோழியர் போலப் பழகுவதிலும் அன்பான தாய் மற்றும் தாதி போலும், உண்மையான காதல் மனைவி போலும் நடந்து தலைவனின் பிரிவில் வருந்தியும் ஊடல் கொண்டும், தலைவியிடம் கோபம் கொண்டும் வாழ்பவர்கள் கணிகையர்கள் என்றால் வியப்பு மிகும். 

கோயில்களில் நடனமாடவும் உழவாரப்பணிகளிலும் தேவதாசிகள் ஈடுபடுத்தப்பட்டார்கள். இவர்களில் தலைக்கோலரிவை என்று அரசனிடம் 1008 கழஞ்சுபொன் பெற்றவரும் உண்டு. நாகரீகம் அடைந்த சமூகங்களிலே கூட பரத்தையரின் பங்கு இருக்கிறது. பொது அமைதிக்கும் சமூகத்தில் குடும்பப் பெண்களுக்கு அவதி நேராமலிருக்கவும் பரத்தைத் தொழில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

”காதற் பரத்தை எல்லாருக்கும் உரித்தே “- இறையனார் அகப்பொருள் – 40. கூறுகிறது. ஒரு முறை பெண்சிசுக்கொலை, கருக்கொலை தொடர்பாக பொதிகைத் தொலைக்காட்சியில் நடைபெற்ற காரசாரம் நிகழ்ச்சியில் நாங்கள் கலந்துகொண்டபோது இதுபோல் சமூக அமைதிக்குப் பங்கம் நேராமலிருக்க, முறையற்ற உறவில் குழந்தைகள் பிறக்காமலிருக்க விலைமகளிருக்கு சமூகத்தில் பிறநாடுகளில் இருப்பது போன்ற அனுமதிச்சீட்டு வழங்க வேண்டும் என ஒரு சமூக சேவகி கருத்தை மொழிந்தார்.

இல்வாழ்வின் சிறப்பு.

திருமணவாழ்வின் புனிதத்தைக் காக்க அல்லதைக் கைவிட்டு நல்லதைக் கைக்கொள்ள இயம்புவது மருதத்திணை. மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் முன்னுரையில் சக்தியின்றி சிவமில்லை, சிவமின்றை சக்தியில்லை என்றும் சக்திநிபாதத்தின் சிறப்புப் பற்றியும் தேமா அவர்கள் இயம்புகிறார்கள். மனைவியைக் குறிக்க இல்லாள், மனைவி என்ற பதத்திற்கு நேர் எதிர் வார்த்தைகள் ஏதும் ஆணுக்கு இல்லை. தொட்டிலாட்டும் கைகள் சட்டமும் இயற்றுகின்றன ( பக் .64).

எல்லையற்ற கருணை, தூயமனம், பெருந்தன்மை, இரக்கம், மென்மை, தன்மை, பாந்தம், பொறுமை, விட்டுக் கொடுத்தல், ஆளுமைத்தன்மை, அறத்தோடு நிற்றல், விருந்தோம்புதல், நல்லுறவு பேணல், அனுசரித்துப் போதல், நீதி நேர்மை தவறாமை, கல்வியறிவு, சூழ்நிலைக்கேற்ப பொருந்திக் கொள்ளுதல், ஆழ்ந்த காதல், கணவனிடம் இடையறாத நேசிப்பு, மரியாதை ஆகிய குணநலன்கள் பொருந்தியவள் அகத்திணை மனைவி.

“கண்டாரி கழ்வனவே காதலன்றன் செய்திடினும்
கொண்டானை யல்லா லறியாக் குலமகள்போல் ( நாலாயிரந்திவ்யப்ரபந்தம் – 689.) (பக் 67)

க்ரேக்கத்துப் பெண்களின் வாழ்வியலுடன் எப்படித் தமிழ்ப் பெண்டிரின் வாழ்த்தும் இயைந்து செல்கிறது என்பதனை – குழந்தைகளை வளர்த்தல், தினசரிக் கடமைகளைத் தடையறாது செய்து வருதல் என - இவர் ஒப்புமைப்படுத்திச் சுட்டியிருக்கிறார். 

தற்போது திருமணம், பிள்ளைப்பேறைத் தள்ளிப்போட்டுத் தொழில், சம்பாத்தியம், சுதந்திரம், வேலை,தனித்து வாழ்தல்  போன்ற போக்கு நிலவி வருகிறது பெரும்பாலும். சொந்தக்காலில் நிற்கும் சுதந்திரத்தை வேறேதும் கொடுப்பதில்லை. ஆனாலும் உறவினர் அனைவருடனும் இனிய கணவனுடனும் இயைந்து வாழும் வாழ்வில் ஏற்படும் இன்பத்திற்கு ஈடு இணை இல்லை.

இன்னுமொரு நிஸிம் இசக்கியேலின் கவிதையுடனும் குறுந்தொகைப் பாடல் ஒன்றுடனும் நிறைவு செய்கிறேன்.

THE COUPLE:-
HIS LOVE IS SMALL
A FLICKERING LAMP
WHILE HERS LIGHTS UP
THE UNIVERSE.
ARE THEY TO SEE EACH OTHER
IN ITS NORMAL DARKNESS?
ONLY THE GODS
CAN HELP THEM NOW.

இம்மை மாறி மறுமை ஆயினும்
நீயாகியர் என் கணவனை
யானாகியர் நின் நெஞ்சு நேர்பவளே. – குறுந்தொகை 49. 

என கற்பு ஈறாய அனைத்தையும் இருபாலாருக்கும் பொதுவில் வைத்து இயைந்து வாழ்ந்தால் தம்பதியர் அனைத்தும் பெற்றவர்களாவார்கள். இவ்வாறு வாழ்ந்தவர்கள் வாழ்பவர்கள் அகத்திணையில் அகத்தினை பெற்ற மாண்பினராவார்.

என் திருமணத்தின் போது இல்வாழ்வின் சிறப்புப் பற்றியும் பதினாறு பேறுகள் பற்றியும் உரையாற்றியதும், என் மூத்த புதல்வன் மூன்று வயதில் ஒரு திருக்குறள் சொன்னதற்காகத் தேமாஅவர்கள் திருக்குறள் புத்தகம் வழங்கி வாழ்த்தியமையும் நனி சிறந்தது.

மொழி வளம்:-

என்னை வியக்க வைத்தது சிறப்பான மொழி வளத்தோடும் ஒப்பு நோக்குதலோடும் ஆங்கிலத்தில் இருக்கும் இந்நூலின் சில வார்த்தைகளுக்கீடாக கூகுளில் கூட சரியான தமிழ் மொழிபெயர்ப்புக் கிடைக்கவில்லை. அருஞ்சொற்கள் அயரவைக்கின்றன. 

SULKING, LASCIVIOUS BEHAVIOUR, CAJOLINGLY,LOVE BICKERING,ORGY, LANGUOR, BOUDERIE, WARRING, ABJECT, ADMONISHING, LUCRE, FEIGNED, FATHOM, ALLUREMENT, PROFLIGACY, DEVOID, CHASTITY, DEBAUCHERY, KINSHIP, DALLIANCE, MOLLIFYING, CLANDESTINE, MOCK, TAUNT, VANQUISHED, NEFARIOUS, SCORN, SERMONIZINGS, VANQUISH, ONEROUS, DOE EYED, COITION, PARAMOUR, ELOQUENCE, SMOULDERING, DECOY, PERSEVERENCE. 

அதே போல் ஓரம்போகியார், மருதநிலநாகனார், கணிமேதாவியார், பரணர், மூவடியார், புல்லங்காடனார், கண்ணன் சேந்தனார், மாறன் பொறையனார்,ஆலங்குடிவங்கனார், இளங்கடுங்கோ, கம்பர் ஆகியோரோடு ஔவை துரைச்சாமி, ஆர்.சாரங்கபாணி, பேராசிரியர் மு. இராகவையங்கார், வெள்ளைவாரணார் ஆகியோரையும் ஆங்கிலக் கவிஞர்கள் NORMAN HURST, JOHN BUNYAN, MR.KENNETH WALKER,( PHYSIOLOGY OF SEX) ஆகியோரையும் சுட்டி இருப்பது சிறப்பு.

இந்த நூலுக்கு அணிந்துரை திரு வ. சுப மாணிக்கனார் அவர்கள். ஆங்கிலத்தில் இருக்கும் இந்நூலில் இடம் பெற்றிருக்கும் தமிழ்ச் சொற்களுக்கு ஈடான ஆங்கில வடிவமைப்புகளையும் உச்சரிப்புகளையும் ப்ரயோகப்படுத்தி இருப்பது வெகு சிறப்பு. ஆசாரக் கோவையிலிருந்து யசோதரா காவியம் வரை கிட்டத்தட்ட 130 நூல்களை ஆய்வு செய்து இந்நூலைப் படைத்திருக்கிறார்கள். 

மருதத்திணை, ஊடல், நிலவியல், உள்ளுறை உவமை,தலைவியின் பங்கு, தலைவனின் பங்கு, தோழியின் பங்கு, தேவதாசிகளின் அழகியல் பண்புகள், சமூகத்தில் அவர்களின் பங்கு ஆகியவற்றை சிறப்பாகச் சொல்லிச் சென்றுள்ளார்கள். மிகச் சிறந்த இந்நூல் தமிழாக்கம் பெறுவதோடு அவரால் தொகுக்கப்பட்ட மற்ற நூல்களும் ஆக்கம் பெற்றால் தமிழ் கூறும் நல்லுலகும் தமிழ்ச் சமூகமும் பெருமைபெறும்.

மாணிக்கனாரின் எண்ணரும் தமிழ்ச்சேவை பற்றி. :-

*வெ. தே. மாணிக்கனார் உதித்தது :- 14.10.1933.

*வெ. தே. மாணிக்கனார் சிவபதவி அடைந்தது :- 31.7. 2002.

*பள்ளிப் படிப்பு – சி எஸ் எம் பள்ளி புதுக்கோட்டை.

*கல்லூரி :- புனித சூசையப்பர் கல்லூரி, திருச்சியில் இளங்கலை கணிதம் மற்றும் அழகப்பா கல்லூரியில் முதுகலை தமிழும் பயின்றவர். 

*பேராசிரியர் டாக்டர் வ.சுப. மாணிக்கனாரின் மாணாக்கர். சென்னைப் பல்கலைக் கழகத்தில் கோல்டு மெடலிஸ்ட். 

*டாக்டர் மு.வ அவர்களின் வழிகாட்டுதலில் (1962 – 1969) ”மருதத்திணை ” பற்றிய ( பி ஹெச்டி ). ஆய்வு முடித்தவர்கள்.

*திரு. அ. ச. ஞான சம்பந்தம், திரு. துரை அரங்கனார், திரு. அ.மு. பரமசிவானந்தம், திரு. அன்பு கணபதி, திரு ந. சுப்பு ரெட்டியார் போன்ற பேராசிரியர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புப் பெற்றவர். ஆழ்வார்களைப் பற்றி திரு. ந.சுப்பு ரெட்டியார் அவர்கள் எழுதிய நூலுக்குப் பெரும் பங்களிப்பு செய்தவர்கள். 

*1970 – 1977. வரை தமிழ்த்துறைத் தலைவர், பச்சையப்பன் கல்லூரி, காஞ்சிபுரம் & சென்னை. 

*சிங்கப்பூர் ரேடியோவில் பணிபுரிந்திருக்கிறார்கள். 

*30 க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார்கள். 

*மூன்று முறை உலகத்தமிழ் மாநாட்டில் பங்கேற்றுள்ளார்கள். முதலாம், இரண்டாம், ஐந்தாம் சர்வதேச தமிழ் மாநாட்டுக் கருத்தரங்குகளில் ( முறையே கோலாலம்பூர்-மலேஷியா, சென்னை, மதுரை )  தனது ஆராய்ச்சிக் கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ளார்கள். 

*நிறைய ஆராய்ச்சி மாணக்கரையும் உருவாக்கி இருக்கிறார்கள். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் தற்போது சிங்கப்பூரில் வசித்து வரும் ( நமது செட்டிநாடு இதழின் ஆசிரியர்களில் ஒருவரான ) திருமிகு. இலட்சுமி அவர்கள்.

*கவர்னர்  சித்து அவர்களுக்குத் தமிழ் கற்றுத் தந்தவர்கள். 

*அப்பரைப் பற்றி ஆராய்ச்சி செய்து ”அப்பர் அருள் வாக்கு” என்ற நூல் வெளியிடப் பொருளுதவி செய்துள்ளார்கள்.

*சிங்கப்பூர், சிலோன், மலேஷியா, லண்டன் ஆகிய நாடுகளில் தமிழ்ச்சங்கத்தில் தமிழ் மொழியின் சிறப்புப் பற்றி சொற்பொழிவு ஆற்றியவர்கள். 

*இரத்தினைகிரி முருகனிடம் ஈடுபாடு கொண்டு இரத்தினகிரி சென்று ”திருமுருகாற்றுப்படை” தொடர் சொற்பொழிவு செய்திருக்கிறார்கள்.

*”பலன் தரும் திருமுறைகள்” என்று  தேவாரப் பாடல்களைத் தேர்ந்தெடுத்து வெளியிட்டிருக்கிறார்கள். 

*காஞ்சியிலிருந்தபோது பெரியவரின் அருளாசியுடன் காஞ்சி மடத்தில் சொற்பொழிவாற்றி இருக்கிறார்கள்.

*சிவனடியார் திருக்கூட்டத்திலும் நால்வர் நற்றமிழ் மன்றத்திலும் சொற்பொழிவு ஆற்றி இருக்கிறார்கள். 

*திருப்புகலூர் ”சித்திரை சதயவிழா”வின்போது பத்து நாட்களும் அங்கேயே தங்கி தமிழ் வல்லுநர்களை வரவழைத்து அவர்களுடன் பட்டிமன்றம், சொற்பொழிவு என உரையாற்றி மகிழ்வார்கள். 

*திருப்புகலூர் பசுமடத்தை நிர்வகிப்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பதோடு அங்கே தேவாரம் பாடும் ஓதுவார் மூர்த்திகளுக்கு திருவிழாக்காலங்களில் மிகுந்த சிறப்பு செய்தவர்கள். 

*தேமா பதிப்பகத்தின் மூலம் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழும், மருதம் என்ற ( ஆங்கில ஆராய்ச்சிக்கட்டுரை நூலையும் ) பதிப்பித்துள்ளார்கள். 

*இவர் தொகுத்த இன்னும் எட்டு நூல்கள் பதிப்பிக்கப்படாமல் போய்விட்டன. நாலாயிரம் திவ்யப் பிரபந்தத்தையும் தமிழில் தொகுத்து குறிப்புகள் எடுத்து வைத்துள்ளார்கள். 

பச்சையப்பன் கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற பின் அண்ணாநகர் தமிழ்ச்சங்கத்தின் துணைத் தலைவராகவும் தலைவராகவும் பொறுப்பேற்று சில ஆண்டுகள் வழி நடத்தினார்கள்.  புரவலராகவும் புரந்தளித்துள்ளார்கள். 

*21.11. 1993 இல் மணிவிழா கண்டமைக்காக அண்ணா நகர் தமிழ்ச்சங்கத்தால் தம்பதி சமேதராகச் சிறப்பிக்கப்பட்டவர்கள்.

*20.4.2003 இல் அண்ணா நகர் தமிழ்ச்சங்கத்தின் சார்பாக மாணிக்கனார் நினைவு நூலகம் திறப்பு விழா நடந்தது. டாக்டர் திரு. ந. சுப்பு ரெட்டியார் தலைமை வகிக்க திரு. இரா செழியன், திரு பா. சடகோபன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்கள். 

*இவரது நூல்களை ( கிட்டத்தட்ட 7,000) அண்ணா நகர் நூலகத்துக்கு இவரது துணைவியார் திருமதி மீனாட்சிமாணிக்கம் அவர்கள் வழங்கி இருக்கின்றார்கள்.

தரவுகள்:-

*MARUTAM – AN ASPECT OF LOVE IN TAMIL LITERATURE.  - Dr.V.T.MANICKAM.

*இராமசாமி செட்டியார் – ஆயிரம் பிறை விழா மலர். ”வழிகாட்டும் வள்ளல்” – வெ. தெ. மாணிக்கம் எம். ஏ, பி. ஹெச் டி. 

*”பலன் தரும் திருமுறைப் பதிகங்கள்.” – முன்னுரை மற்றும் பாராயணம் செய்யும் எளிய விளக்கங்களுடன் உள்ளது.  

*மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் – தேமா பதிப்பகம். முன்னுரை – வெ. தெ. மாணிக்கம், எம். ஏ. பி. ஹெச் டி. 


3 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)