ஞாயிறு, 15 ஜனவரி, 2017

முயற்சி திருவினையாக்கும் திரு இராஜமாணிக்கம்.

முயற்சி திருவினையாக்கும் திரு.இராஜமாணிக்கம்.




முயற்சி திருவினையாக்கும் திரு.இராஜமாணிக்கம்.

முயற்சி திருவினையாக்கும் திரு.இராஜமாணிக்கம்

 

தீர்க்கமா சிந்தியுங்கள் தீர்மானமா முடிவெடுங்கள் ஜெயிப்பீர்கள் என்கிறார் வலையப்பட்டி திரு இராஜமாணிக்கம் அவர்கள். சுயம்பு எனக் கேள்விப்பட்டிருப்பீர்கள். தன்னைத் தானே வடிவமைத்துக் கொண்ட சுயம்பு இவர்கள்.

அம்பத்தூரில் இவரது பெயர் சொன்னால் போதும் சிக்கலான ஹைட்ராலிக் காம்போனெண்ட்ஸையும் டிசைன் செய்து தரும் திறமையாளர் என அடையாளம் காட்டுவார்கள். நகரத்தாரில் ஒரு ஜிடி நாயுடு என இவரைக் குறிப்பிடலாம். எந்த சிக்கலான அல்லது புதுமையான ஹைட்ராலிக் காம்போனெண்ட் வேண்டுமென்றாலும் அதை டிசைன் செய்து உருவாக்கிக் கொடுப்பதில் வல்லவர்கள். இதைச் செய்ய இவர்களை விட்டால் வேறு யாரும் அவ்வளவு தெளிவாகச் செய்யமுடியாது என்னும்படிச் செய்து கொடுப்பார்கள். இதுபோல ஹைட்ராலிக் காம்பொனெண்ட்ஸில் புதுமையான பலவற்றை உருவாக்கிக் கொடுத்திருக்கிறார்கள்.

 

’யாரும் செய்யாததை, யாராலும் செய்ய முடியாததை, சிக்கலானதை எடுத்துச் செய்’, ’செய்வன திருந்தச் செய்’ என்பதும் ’அகலக் கால் வைக்கக் கூடாது’ என்பதும் இவரது பிசினஸ் அட்வைஸ். சாதனைகள் பல செய்தும்  தன்னம்பிக்கையோடும் தன்னடக்கத்தோடும் அணுக்கத்துக்கு உரியவராகவும் அமர்ந்திருந்த இவரை இவரது மூத்த மைந்தரின் (அண்ணாநகர் இராஜமாணிக்கம் என்க்ளேவில் அமைந்திருக்கும் பிரம்மாண்டமான) ’ஐ ஓபன்’ அலுவலகத்தில் சந்தித்து உரையாடினேன். அலுவலக நடை முறையில் மட்டுமல்ல ஆரோக்கியத்தைப் பேணுவதிலும் இவர் ஒரு சிறந்த வழிகாட்டி.

 

சில வருடங்கள் முன்பு வரை காலை ஆறரை மணிக்கே வீட்டை விட்டுப் புறப்பட்டுத் தொழில் நிமித்தம் சென்று இரவு ஒன்பதரை மணிக்குத் திரும்பி வருவதுதான் இவரது தினசரி நடைமுறை. தற்போது 77 வயதாகி வரும் இவர்கள் இன்றும் அதிகாலை எழுந்து ஒரு மணி நேரம் யோகாசனா தியானம் ஆகியன செய்து தனது அலுவலகத்தில் வந்திருந்து கோப்புகளில் கையெழுத்திட்டு பணி மேற்பார்வை செய்து வருகிறார்கள். சோம்பல் என்பதே துளியும் கிடையாது. தனது சுறுசுறுப்புக்கும் தொய்வில்லாத பணிக்கும் தனது உடற்பயிற்சி முறைகள் பெரிதும் உதவுவதாகச் சொல்லிப் பிரமிக்க வைத்தார்கள்.

 

இவர்களது தந்தை பர்மாவில் வட்டிக்கடை நடத்தி வந்தார்கள். இவர்கள் வலையப்பட்டியில் உள்ள பள்ளியில் பயின்றார்கள். பள்ளி முடித்ததும் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தார்கள். எனவே பியுசி முடித்ததும் கல்லூரிக்குச் செல்லும் பருவத்தில் மருத்துவம் படிப்பதா பொறியியல் படிப்பதா என்று கேள்வி வரும்போது இவர்கள் ஊரில் இருந்த ஒரு மருத்துவரிடம் யோசனை கேட்டிருக்கிறார். அந்த டாக்டரின் மகன் அழகப்பா பொறியியல் கல்லூரியில் படித்துவிட்டு இன்ஜினியராக இருந்தார்.  டாக்டர் என்றால் இரவில் சென்று கூடப் பணியாற்ற வேண்டிவரும். இன்ஜினியர் என்றால் பகலில் பணி செய்தால் போதும் என்று கூற இவரது ஆச்சியின் கணவரின் ஆலோசனையின் படி பொறியியல் பயின்றார்கள்.

 

கோவை சிஐடி கல்லூரியில் 1963 இல் மெக்கானிக்கல் இன்ஜினியராக சிறந்த மதிப்பெண்கள் பெற்றுத் தேர்ச்சி பெற்றார்கள். பி டபிள்யூ டி ,நெய்வேலி லிக்னைட் கார்ப்பொரேஷனில் இருந்து எல்லாம் அப்பாயிண்மெண்ட் வந்தது. ஆனாலும் இவருக்கு  இண்டஸ்ட்ரியில்தான் விருப்பமா இருந்திருக்கிறது. கல்லூரியில் பயிலும் போது மிக அழகாக செமினார் வகுப்புகள் எடுத்ததால் இவரை ஆசிரியர் பணிக்கே வரும்படிக் கல்லூரியில் கோரிக்கை விடுத்தார்களாம். ஆனாலும் தொழில் விருப்பம் மனதில் ஊறிக் கொண்டிருந்ததால் இவர் மறுத்திருக்கிறார்.

 

முதலில் கோவை சோமசுந்தரம் பேப்பர் மில்லில் வேலை செய்தார்கள். பின் சென்னையில் உள்ள எஸ் ஆர் பி டூல்ஸில் எட்டு ஆண்டுகள் ஃபாக்டரி மேனேஜராகப் பணிபுரிந்தார்கள். எல்லா இண்டஸ்ட்ரிகளிலும் பணி புரிந்து எந்தப் ப்ராடக்டில் ( TOOLS, HYDRAULIC PRECISION COMPONANTS – VALVES, CRITICAL VALVES ) பிரச்சனை ஏற்பட்டாலும் அதற்குத் தீர்வு கண்டார்கள்.

 

ஓரளவு நல்ல வருமானம் வந்தும் உத்யோகம் பரம சௌக்கியம் என்று இல்லாமல் அடுத்து என்ன செய்யலாம் ? தானே தொழில் துவங்கினால் என்ன என்ற சிந்தனைகள் இவர் மனதில் ஓடியது. ஆச்சியின் கணவர் மற்றும் தம்பியின் துணையோடு ஒரு ப்ராடக்ட் தேர்ந்தெடுத்து அதைச் செய்ய  1965 இல் சென்னை வந்தார்கள்.

 

1972 இல் ஐயப்பன் இண்டஸ்ட்ரீஸ் துவங்கினார்கள். இவரின் சீதனப் பணத்தை முதலீட்டுக்குக் கொடுத்து ஆச்சியின் கணவர் உட்பட மொத்தம் ஐந்து பங்குதாரர்கள் சேர்ந்து சுமார் இரண்டு லட்சம் போட்டுத் தொழில் தொடங்கி விட்டார்கள். இவரது தம்பி வொர்க்கிங் பார்ட்னராகக் கரம் கோர்த்தார். அரசாங்கத்தின் ஊக்கம் கிடைத்தது. சென்னை வரும்போது ஒரு பெட்டியுடன் வந்தவர்கள் ஒரு தொழில் தொடங்கும் அளவு தன்னம்பிக்கை பெற்றார்கள்.

 

அடுத்தடுத்து நிறைய ப்ராஜக்டுகள் செய்ய வாய்ப்புகள் வந்தன. ஃபாக்டரியை ஆரம்பித்தாகிவிட்டது . ஆனால் பவர் சப்ளை இல்லை மின்சாரம் இல்லை.  அது 1971- 72 ஆம் வருடங்கள். உடனே அடுத்தது என்ன என்று தீர்மானித்து கல்கத்தா சென்று  ஜெனரேட்டரை வாங்கி வந்து தொழிலைத் தொடர்ந்தார்கள். அன்றையக் காலகட்டத்தில் அனைவரும் செய்யத் தயங்கியதை இவர்கள் துணிவுடன் முடிவெடுத்துச் செய்தார்கள்.

 

“இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல் “

 

என்ற குறளுக்கு ஏற்ப இவரைப் பார்த்தே ஆர்டர்கள் கொடுத்துவிடுவார்கள். அம்பத்தூரில் எந்த சிக்கலான ஐட்டமாக இருந்தாலும் இவரைத் தேடிவந்து கொடுப்பார்கள். இன்றும் ஐயப்பனுக்கு ( கம்பெனி ) வந்தால் தீர்வு கிடைக்கும் என்று தேடி வருகிறார்கள். ’தேடு கண்டடைவாய்’ என்று தேடிக் கண்டடைந்து ஹைட்ராலிக் சம்பந்தப்பட்ட எந்த ஐட்டம் கொடுத்தாலும் ட்ராயிங் போட்டு டெக்னாலஜியால் அதை இவர் தீர்க்காமல் விட்டதே இல்லை.

 

இன்றும் தொடர்ந்து வெற்றிக் கொடி நாட்டி வரும் இவர் சொல்லும் பிசினஸ் டிப்ஸ். ”தொழில் தொடங்க ஒன்று திறமை இருக்க வேண்டும். டெக்னாலஜி தெரியணும். அதையும் அப்டேட் செய்துக்கணும். இல்லாட்டி ( ஃபைனான்ஸ் ) முதல் இருக்கணும். என் திறமைதான் என் அசட் ( ASSET ). ”

 

”நாங்க பண்றது எல்லாமே புதுசுதான். எல்லாமே க்ரிட்டிகல் அப்ளிகேஷன். இது பெயிலானா கொடுக்க யோசிப்பார்கள். எல்லாமே சாலஞ்சிங்கான ஐட்டம். இது வரை நல்லா பண்ணிட்டு இருக்கோம். சின்ன ப்ராடக்டில் ஒரு சிறு தவறு செய்தாலும் கம்பெனிக்கு பெரிய நஷ்டம் உண்டாகும். எனவே கவனமெடுத்து அக்கறையுடன் பார்த்துச் செய்யணும். ”

 

”இன்னிக்கு மிலிட்டிரி டாங்க், பி ஹெச் இ எல், என் டி பி சி கம்பெனிகளுக்குத் தேவையான ப்ராடக்ட்ஸை டெவலப் பண்ணிட்டு இருக்கோம். மார்க்கெட்டிங்க் இருக்கு, லைட்டா டல்லா இருந்தாலும் தொடர்ந்து வேலை வந்துட்டுத்தான் இருக்கு. திடீர்னு ஏற்றத்தை எதிர்பார்க்கவில்லை. நிதானமாகத்தான் பண்றோம். அகலக்கால் வைக்கலை. எந்த லிமிட் இருக்கோ அதைத்தான் பண்றோம். பொதுவா அதை ரீச் ஆக பண்றோம். ”

 

”எங்களோட ஆரம்பிச்சு கோடிக்கணக்குல ( 200 கோடி , 300 கோடின்னு ) பிஸினஸ் பண்ணிட்டு  நிலைச்சிருக்க முடியாம உத்யோகத்துக்குக்குப் போனவங்க இருக்காங்க. நாங்க இரண்டரை லட்சத்துல ஆரம்பிச்சோம். இப்ப 24 கோடி டர்ன் ஓவர்ல இருக்கோம். ஒஹோன்னு பெரிசா பண்ணி காணாமப்போக  விருப்பப்படல, எங்கள் லிமிட்டுக்குள்ள அமைச்சுக்கிறோம். 

”ஹைட்ராலிக் சைடில் நிறைய இருக்கு. புது ஆளுகளைப் போட்டு செயல்படுகிறோம். என் சகோதரர் மகன் பழனியப்பன் டெக்னிகல் சைடிலும் என் மருமகள் உமா கமர்ஷியல் சைடிலும், என் தம்பி மனைவி மல்லிகா அக்கவுண்ட்ஸ் சைடிலும் உதவி வருகிறார்கள். ப்ராடக்டை டெவலப் பண்றதுக்கு என்ன என்ன பண்றதுன்னு நான் சொல்லி இருக்கேன். அதன்படி செயல்படுகின்றார்கள். நியூ டெவலப்மெண்ட்ல ஃபுல்லா இன்வால்வ்மெண்டா இருப்பேன்.”  .

 

இவர் ஃப்ளூயிட் பவர் சொசைட்டி ஆஃப் இந்தியாவில் சேர்மனாக இருந்தபோது நிறைய ஹைட்ராலிக் ஃபோர்ஸ் செமினார் எல்லாம் நடத்தி இருக்கிறார். சி ஐ டி ( CIT )  alumini க்கு பிரசிடெண்டா இருப்பதால் அதன் மூலம் அங்கே படித்தவர்கள் ஒன்று சேர்ந்து நல்ல மதிப்பெண் எடுப்பவர்களுக்கு ஸ்காலர்ஷிப் கொடுக்கிறார்கள். அதில் நிறையப் பெருந்தலைகளைக் கொண்டு செமினார் நடத்தி இருக்கிறார். வலையப்பட்டி நகரத்தார் சங்கத்தில் பிரசிடெண்டாகவும்  ( VNS) , ரோட்டரி கிளப்பில் ( முன்னாள் பிரசிடெண்ட் ) இந்நாள் வரை ஆக்டிவான உறுப்பினராகவும் செயல்படுகிறார்.

 

இவருடன் பிறந்தவர்கள் ஏழு அக்கா. அடுத்து இவர். இவருக்குப் பின் ஒரு தம்பி. தந்தை பர்மா போனதால சிறுவயதில் ரொம்ப கஷ்டம். இவர் சம்பாத்தியத்துலதான் அனைத்துச் சகோதரிகளுக்கும் திருமணம் செய்திருக்கிறார்.

 

கட்டும் செட்டும் சீரும் சிறப்புமாக இவர் தனது சகோதரிகளுக்குச் செய்த திருமணங்கள் பற்றிக் கேள்விப்பட்டு ராஜா சர் முத்தையா செட்டியார் கார் அனுப்பி தனது இல்லத்துக்கு வரவழைத்து விருந்து கொடுத்துக் கௌரவித்திருக்கிறார். ராஜா இவருடன் உரையாடும்போது சவுத் இந்தியா கார்ப்பரேஷனில் நல்ல பதவி கொடுப்பதாகக் கூறியபோதும், இல்லாவிட்டால் இந்தியன் வங்கியில் நல்ல பணியிடம் கொடுப்பதாகக் கூறியபோதும் மறுத்துவிட்டு வந்திருக்கிறார். ( அன்றைய காலகட்டத்தில் இந்தப் பணி இடங்கள் கிடைக்காதா என ஏங்கியுள்ளோர் ஏராளம் என்பதைக் கணக்கில் கொள்க !!! )

 

இவரது மனைவி மீனாக்ஷி ஆச்சி கண்டவராயன்பட்டியில் பிறந்தவர்.  அந்தக் காலத்திலேயே எஸ் எஸ் எல் ஸி படித்தவர்கள். இவர் அதிகாலை தொழில் நிமித்தம் சென்று இரவுதான் வருவார். பேசக்கூட நேரம் இருக்காது. இருந்தும் தனது மனைவி ’எந்த பிரச்சனையையும் கேட்பதில்லை. ஏதும் விபரம் சொன்னா கேட்டுக்குவாங்க’ என்றார்.

 

இவருக்கு இரண்டு மைந்தர்கள், ஒரு மகள். மகன்கள் இருவரும் பொறியாளர்கள். இருவருக்கும் அமெரிக்காவில் பணி கிடைத்தது. பெரிய மகனை இந்தியாவில் இருக்கும்படி இவர் அழைத்ததால் சென்னை அண்ணாநகரில் சாஃப்ட்வேர் கம்பெனி – EYE OPEN  என்ற பெயரில் – நடத்துகிறார்.

 

பெரிய பையன் மெய்யப்பனுக்குத் திருமணமாகி ஒரு பெண் ஒரு பையன் இருக்கின்றார்கள். இவர் சென்னை அண்ணாநகரில் ‘EYE OPEN’ SOFTWARE TRAINING CENTRE வைத்திருக்கிறார். இவரது மனைவி உமா பிட்ஸ் பிலானியில் படித்துவிட்டு எம் என் சியில் மார்க்கெட்டிங் ஹெட்டாக ப்ராண்ட் ஸ்ட்ரேடஜிஸ்ட் ஆகவேலை பார்த்து வந்தார். இப்போது குடும்ப பிஸினஸ் பார்த்துக் கொள்ள மாமனாருடன் ஃபேக்டரி செல்கிறார். சின்ன மகன் மாணிக்கம் மேல்படிப்பு முடிந்த கையோடுஅமெரிக்காவில் வேலை பார்க்கிறார். அங்கேயே சிட்டிசன்ஷிப். மகள் பி ஆர்க் படித்தார். கோல்ட் மெடலிஸ்ட். அவர் தனது கணவருடன் பெங்களூருவில் ஆர்க்கிடெக்ட் ப்ராக்டீஸ் செய்கின்றார்கள்.

 

புதிதாகத்  தொழில் துவங்குவோருக்கு அதை வெற்றிகரமாகச் செயல்படுத்த இவரது அட்வைஸ் இதுதான்., லாபகரமான தொழில் செய்யணும்னா நாம எடுக்கக் கூடிய ப்ராடக்ட் யாரும் பண்ண முடியாத, எடுக்காத ப்ராடக்டா செலக்ட் பண்ணனும், இருக்கணும். அது மாதிரிப் பண்ணா லாபம் இருக்கும். காம்பெடிஷன் கூடக்கூட நிறையப் பேர் பண்றதையே பண்ணா லாபம் இருக்காது.

 

ஒரு வேளை முதலீடு நல்லா போடலாம்னா அவங்க அப்பா அம்மா பணத்தை வைச்சு ப்ராடக்ட்ல யார் எக்ஸ்பர்ட்டோ அவர்களை வைத்துச் செய்யணும். வசதி இல்லாதவங்க தொழில் நுட்பத்தைக் கத்துகிட்டு செய்ய முயலணும். சேல்ஸ்ல டிமாண்டும் மார்க்கெட்டிங்கும் முக்கியம். எந்த ப்ராடக்ட்ல டிமாண்ட் இருக்குன்னுதெரிஞ்சுதான் ப்ராடக்டை மார்க்கெட் பண்ணனும். தொழிலுக்கு வேண்டிய திட்டமிடல் இருக்கணும். ப்ளானிங் முக்கியம். எங்கே கிடைக்கும் எங்க பண்ணலாம் என்று ஆராயணும். தைரியம் வேணும். முதல் போட்டவங்க மார்க்கெட்டைக் கவனிச்சிட்டே இருக்கணும். வாங்கி விற்கப் போறமா, எவ்வளவு லேபர், எவ்வளவு கமிட்மெண்ட் எல்லாம் ஆராய்ச்சு செய்யணும்.

 

எந்தத் தொழிலிலும் லாபம் கிடைக்கும்.  கால்குலேட்டிவ் ரிஸ்க் எடுக்கணும். ரிஸ்க் இல்லாத பிஸினஸ் இல்ல. அதுவும் இல்லாம லாபம் என்பது தயாரிப்பு, பொருள் விளைவிப்பு, சந்தைப்படுத்துதலை அதிகப்படுத்துவதைப் பொறுத்து ( மானுபாக்சரிங், ப்ரொடக்‌ஷன் ,இன்க்ரீஸிங் மார்க்கெட்டிங்)  இருக்கு. முதலீட்டுப் பொருட்கள் எங்க சீப்பா கிடைக்கும்னு  தேடிக் கண்டுபிடிப்பதில் இருந்தே லாபம் கிடைக்கத் தொடங்கும். திட்டமிட்ட உழைப்பே வெற்றியை ஈட்டித்தரும் என்பதே இவர் சொல்லும் சேதி. 


11 கருத்துகள்:

  1. சிறப்பான தன்னம்பிக்கை மனிதர்...

    அறிமுகத்திற்கு நன்றி சகோதரி...

    பதிலளிநீக்கு
  2. சிறப்பான பகிர்வு. முயற்சி திருவினையாக்கும் என்பதற்கு நல்லதொரு எடுத்துக்காட்டு.

    பதிலளிநீக்கு
  3. நல்ல இன்ஸ்பயரிங் வாழ்க்கை .நன்றி

    பதிலளிநீக்கு
  4. பொதுவாகவே நகரத்தார்கள் பிசினெஸில் ஈடுபாடு உஇடையவர்கள் அது அவர்கள் ஜீன்ஸிலேயே இருப்பது சாதாரணர்களுக்கு அறிமுகம் இல்லாதவர் பற்றிய பதிவு நன்று

    பதிலளிநீக்கு
  5. அரிய மனிதரை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  6. நன்றி டிடி சகோ

    நன்றி ஜெயக்குமார் சகோ

    நன்றி வெங்கட் சகோ

    நன்றி அபயா அருணா

    நன்றி நாகேந்திர பாரதி சகோ

    நன்றி பாலா சார்

    நன்றி ஜம்பு சார்

    பதிலளிநீக்கு
  7. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  8. ஒரு மாமனிதரைப் பற்றி தங்கள் மூலம் அறிய முடிந்ததில் மகிழ்ச்சி. பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)