செவ்வாய், 20 டிசம்பர், 2016

கணவன் மனைவி உறவும் பாதிக்கப்படும் குழந்தைகளும்.

கணவன் மனைவி உறவும் பாதிக்கப்படும் குழந்தைகளும்.

திருமணம் என்பது ஒரு கோட்டை வெளியே இருப்பவர்கள் உள்ளே செல்லத் துடிக்கிறார்கள். உள்ளே இருப்பவர்கள் வெளியேறத் தவிக்கிறார்கள் என்று சொல்வதுண்டு. எந்த விஷயத்திலும் நீயா நானா என்று வலுவாக முழு எதிர்ப்போடு ஆண் பெண் இருவரும் சண்டையிடும் பந்தம் இந்தக் கணவன் மனைவி உறவுதான். 

இரண்டு வேறு வேறு குடும்பங்களைச் சேர்ந்த மனிதர்கள் ஒன்றிணையும்போது பல்வேறு கருத்து மாறுபாடுகளைச் சந்திக்க நேர்கிறது. அன்றைய திருமணங்களில் பெரும்பகுதியும் பெண் ஆணைச் சார்ந்து இருந்ததால் கருத்துவேறுபாடுகள் முடங்கிப் போய்விட்டன. விட்டுக் கொடுத்து போதல் பெண்ணின் கடமையாகவே வலியுறுத்தப்பட்டது. ஆனால் இன்றோ ஆண் பெண் இருவரும் இணையர்கள். இருவரும் வேலைக்குச் செல்கிறார்கள் கை நிறைய சம்பாதிக்கின்றார்கள். எனவே யார் விட்டுக் கொடுப்பது எனப் பட்டிமன்றங்கள். 

காதல் திருமணமோ, பெற்றோர் பார்த்து நடத்தி வைத்த திருமணமோ இருமணம் ஒன்றிணையாவிட்டால் அதிருப்தி, அக்கறை இன்மை, சுயநலம், ஈகோ, சலிப்பு, வெறுப்பு,  கோபம், வெறுமை, விரக்தி, சண்டை ஆகியன தலை எடுக்கத் துவங்கி விடுகின்றன. 

மோகம் முப்பது நாள் ஆசை அறுபது நாள் என்பார்கள். இன்றைய காலகட்டத்தில் ஜாதி மதம் இனம் ஜாதகப் பொருத்தம் பார்த்துப் பெற்றோர் செய்யும் திருமணங்களில் பெற்றோர் கட்டாயத்துக்காகத் திருமணம் செய்யும் ஜோடிகள் அதன் பின் ஒருவருக்கொருவர் பிடித்தமில்லாமல் தங்கள் தங்கள் கூட்டுக்குள் முடங்கிக் கொள்கிறார்கள்.  ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பும் விழைவும் வேறாக இருப்பதால் வெறுப்புக் கூடிவிடுகிறது. 



கால மாற்றத்தால் கூட்டுக் குடும்பம் சிதைந்து தனிக்குடும்பங்கள் உருவாகத் துவங்கி அவை இப்போது மைக்ரோ குடும்பங்களாகச் சுருங்கிவிட்டன. இந்த ந்யூக்ளியர் குடும்பங்களில் நாமிருவர் நமக்கிருவர் என்றிருந்தது போய் நாம் இருவர் நமக்கு ஒருவர் என்ற நிலை வந்தது. இனி நாமே இருவர் நமக்கேன் ஒருவர் என்ற நிலையும் வந்து கொண்டிருக்கிறது.

கருத்து முரண்பாடு, உறவில் நாட்டமின்மை, பொறுப்பைச் சுமக்க பயம், உடல் நலக்கோளாறுகள், சம்பாதிக்கும் மனைவியானால் குடும்பத்தின் நிதி நிர்வாகம் தொடர்பான பிரச்சனைகள், ஆணோ பெண்ணோ டாமினண்ட் ஆக நடந்துகொள்ளுதல், தங்கள் கட்டுக்குள் இணையை வைத்திருக்க கண்டிப்புடன் இருத்தல், குழந்தைகளை கவனிப்பது, அவர்களுக்குக் கல்வி புகட்டுவது, வீட்டு வேலைகள் ஆகியவற்றை யார் பொறுப்பெடுத்துச் செய்வது ஆகியன இருவருக்கும் இடையில் இன்னும் பிரிவை அதிகப்படுத்துகின்றன.

வெளிநாட்டில் வேலை செய்தல், வெளியூர்களில் பணி நிமித்தம் காரணமாகப் பிரிந்திருத்தல் ஆகியன சில தம்பதிகள் அதிகம் இணைந்திருக்கவும் சில தம்பதிகள் அதிகம் பிரித்திருக்கவும் கூடக் காரணமாகிவிடுகின்றன. உறவுமுறைகளை சிதைத்துக் காட்டும் தொலைக்காட்சித் தொடர்கள் இந்தப் பிரிவினையில் அதிகம் பங்கு வகிக்கின்றன என்றால் மிகையில்லை.  
   
திருமணம் ஆகி ஏழாண்டுச் சலிப்பு ஏற்படும்போது எதற்காக வாழ்கிறோம் என்ற விரக்தி ஆண் பெண் இருவருக்குமே ஏற்படுகிறது. வெளியுலக நட்புகள், ரகசியத் தொடர்புகள் ஈர்க்கும்போது அது குடும்பத்தில் புகுந்து குழப்பம் விளைவித்து விவாகரத்தில் கொண்டுபோய் விடுகிறது. கணவன் குடிப்பது, மனைவியை அடிப்பது இதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. சொல்லாலும் செயலாலும் கணவன் மனைவி இருவருமே தங்கள் இணையரைத் துன்புறுத்துவதாலும் விவாகரத்து நிகழ்கிறது. 


இப்படி தினம் ஒரு சண்டை ஏச்சு பேச்சு இவற்றோடு தன்னிடம் அக்கறை இன்றி வளர்க்கும் பெற்றோர் பார்த்து வருந்தும் குழந்தைகள் திசை மாற வாய்ப்பிருக்கிறது. விவாகரத்தாகிப் பிரிந்து வாழும் பெற்றோரின் குழந்தைகள் தங்கள் பெற்றோரின் மற்றொரு வாழ்வினை எதிர்கொள்வது மிகச் சிரமம் மிகுந்த செயலாகும்.

குழந்தைகளின் எதிர்காலம் முக்கியம் தங்கள் வாழ்வு முக்கியம் எனக் கருதும் தம்பதிகள் சிலவற்றைக் கைக்கொள்ளலாம். இணையரிடையே காணப்படும் சின்னச்சின்னத் தவறுகளை மன்னித்து மறந்துவிடலாம். ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளவும் தேவைப்படும்போது விலகி இருந்து வழிகாட்டவும் செய்யுங்கள். 

ஒவ்வொருவரின் பிரச்சனையையும் அக்கறையுடன் காது கொடுங்கள் கவனியுங்கள். கவனிப்பு முக்கியம்.. வீட்டு வேலைகளைப் பிரித்துக் கொள்ளுங்கள். திருமணநாள் பிறந்தநாள்களில் மட்டுமல்ல. அவ்வப்போது கூட சின்ன சின்னப் பரிசுகள் அளியுங்கள். 

முடிந்தவரை பிள்ளைகள் எதிரில் சண்டையிடாதீர்கள். அது அவர்கள் கல்வி , எதிர்காலம் மனநிலை ஆகியவற்றைப் பாதிக்கும். பிரச்சனையின் தாக்கம் தாளாமல் சில பிள்ளைகள் வீட்டைவிட்டு ஓடிவிடவும் , சிறுவயதுக் குற்றவாளிகளாகவும் ஆகிவிடும் பாதகம் நடந்துவிடும். எனவே உங்கள் சண்டையில் பிள்ளைகளையும் அடிக்காதீர்கள். பிள்ளைகளுக்கு அப்பா அம்மாதான் ஹீரோ ஹீரோயின். ரோல்மாடல். நீங்கள் சண்டையிட்டு மறந்துவிட்டாலும் நீங்கள் பேசிய வார்த்தைகளை அவர்கள் நினைவில் வைத்துக் கொள்வார்கள். 

தொலைக்காட்சித் தொடர்களுக்கு முக்கியத்துவம் அளித்து அது குடும்பத்தில் நடப்பதைப் போன்ற பிரம்மைகளை வளர்த்துக்கொள்ளாதீர்கள். குழப்பம் விளைவிக்கும் நட்புகளையும் உறவுகளையும் அண்டவிடாதீர்கள். 

அலுவலக வேலைகளை வார விடுமுறைநாட்களிலும் வைத்துக்கொள்ள வேண்டாம் . எல்லாருக்கும் அவுட்லெட் தேவை. வாரம் ஒருமுறை குடும்பத்தோடு அவுட்டிங். கோயில் சினிமா பீச், ஷாப்பிங் மால் அல்லது பிடித்த இடங்களுக்குச் சென்று புதுப்பித்துக் கொள்ளுங்கள்.  

யார் சரி யார் தப்பு என்பதை நிரூபித்து ஒன்றும் ஆகப்போவதில்லை. விட்டுக் கொடுங்கள்.  உங்கள் எதிர்மறை உணர்வுகளைக் கண்காணியுங்கள். பிரச்சனை தீர்க்கமுடியாது என்று தோன்றினால், தேவைப்பட்டால் இருவரும் ஒரு சைக்காலஜிஸ்ட்டிடம் கவுன்சிலிங் செய்து கொள்ளலாம். 

குழந்தைகள் நமது பொக்கிஷங்கள். அவர்களைக் காக்கவேணும் குடும்ப நல் உறவுகளைப் பேணுங்கள். 

ை இங்கேயும் பிக்காம். 

http://www.vikatan.com/news/womens/74770-what-happens-to-children-when-parents-fight.art

பெற்றோர்களின் சண்டை குழந்தைகளை எப்படியெல்லாம் பாதிக்கும்? #GoodParenting

 

7 கருத்துகள்:

  1. இன்றைய காலத்திற்கு, ஒவ்வொருவருக்கும் விழிப்புணர்வு ஊட்டி யோசிக்க வைக்கும், மிகவும் பயனுள்ள கட்டுரை. பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  2. விட்டுக் கொடுத்தலும்
    அனுசரித்துப் போகலுமே
    குடும்பத்தை அமைதியாய் நகர்த்திச் செல்லும்
    குழந்தையின் நிலைமையினை ஒரு நிமிடம் நினைப்பார்களேயானால்,
    இன்றைய நீதி மன்றங்கள் விவாகரத்து வழக்குகளால் நிரம்பி வழியாது என்பது உறுதி

    பதிலளிநீக்கு
  3. மிக்க நன்றி விஜிகே சார்

    ஆம் ஜெயக்குமார் சகோ

    பதிலளிநீக்கு
  4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  5. காலத்திற்கேற்ற அருமையான கட்டுரை சகோ/தோழி...குழந்தைகள் மனக்கண்ணில் தோன்றினால் பல பிரச்சனைகளுக்குத் தீர்வுகள் கிடைத்துவிடும்!

    பதிலளிநீக்கு
  6. ஆனந்தவிகடனில் வெளியான தங்கள் கட்டுரையையும் வாசித்தோம். மிக மிக அழாகன கருத்துகளை முன்வைத்திருக்கிறீர்கள். எழுதியவிதம் அருமை சகோ!/தோழி!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)