கூடை கூடையாய் தன்னம்பிக்கை கொடுக்கும் விஜயலெக்ஷ்மி
மெல்லிய உருவம், உறுதியான குரல், தீர்க்கமான பார்வை, கொண்ட கொள்கையில் உறுதி இதுதான் விஜி என்ற விஜயலெக்ஷ்மி.
எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியர்
திண்ணிய ராகப் பெறின்.
என்ற குறள் இவருக்குத்தான்
பொருந்தும். நகரத்தார் சமூகத்தில் பத்தாவது படித்துவிட்டுத் திருமணமான, இரண்டு
குழந்தைகளுக்குத் தாயான பெண் ஒரு பெண் தொழிலதிபராக உருவெடுக்க முடியுமா என்பது
ஆச்சர்யமாகத்தான் இருக்கும். சிறுவயதில் பொழுது போக்குக்காக கைத்தொழிலாகக் கற்றுக்
கொண்ட கூடை பின்னும் தொழிலையே தனது வாழ்வியல் ஆதாரமாக கொண்டு இன்று ஒரு கடை போடும்
அளவு பெருகி துணிச்சலோடும் தன்னம்பிக்கையோடும் வியாபாரம் செய்து வருகிறார்
விஜயலெக்ஷ்மி.
குன்றக்குடி தாண்டி
பிள்ளையார்பட்டிக்கு முன்னே குபேரன் கோயிலுக்குத் திரும்புமிடத்தில் திருவீச
நகரில் இருக்கிறது ஸ்ரீ வள்ளியம்மை செட்டிநாட்டு ஒயர் கூடைக் கடை.
விஜயலெக்ஷ்மியின் அம்மா நாகம்மை, அப்பா லெட்சுமணன் இவர்களின் ஆதரவோடு கடை நடத்தி
வருகிறார் இந்தத் தன்னம்பிக்கைப் பெண். பெயர் விஜயலெக்ஷ்மி பிறந்தது பி அழகாபுரி.
கூடப்பிறந்தவர்கள் தங்கை இருவர் தம்பி ஒருவர்.
பொழுதுபோக்காக ஓய்வு நேரங்களில் கூடை
பின்னிக்கொண்டிருந்தவர் இன்று 30 பெண்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் அளவு
வளர்ந்துள்ளார்.. பட்டை, நரம்பு, ஸ்வஸ்திக் கூடைகளைப் பின்னி வருகிறார். ஒயர்களை
வெட்டி டிசைனைச் சொல்லி கூலிக்குப் பின்னித் தரும் பெண்களிடம் அளித்து விடுவார்.
அவை உருப்பெற்று வந்ததும் ஃபினிஷிங் வேலைகள் செய்து விற்பனைக்கு அடுக்கி விடுவார்.
அர்ச்சனைக் கூடை, காய்கறிக் கூடை., விளக்குக் கூடை, 5 அடுக்குகள் கொண்ட பட்டைக்
கூடை சதுரக்கூடை, செவ்வகக்கூடை, மூடி போட்ட வக்கூடு, கொட்டான்கூடை லஞ்ச் கூடை
ஆகியன இவரது ஸ்பெஷல். ஒரு நாளைக்கு சுமார் ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கிறார்.
ஓரிரு கூடைகள் பின்னிக்
கொண்டிருந்தவர் ஒரு கடையே போடும் அளவு இது எல்லாம் எப்படி சாத்தியமானது ?. அதன்
பின் ஒரு நீண்ட நெடிய சோகக் கதையே இருக்கிறது.எல்லாவற்றையும் தாண்டி வந்து
சமாளித்து இரு பிள்ளைகளையும் தாய் தந்தை துணையோடு வளர்த்து வியாபாரமும் செய்து
வரும் இவருடைய கதையைக் கேட்டால் கல்லும் கசியும்.
2013 இல் கர்நாடகா மாநிலம்
வெங்கடேஸ்வரா எஸ்டேட்டில் பணிபுரிந்த கீழச்சிவல்பட்டியைச் சேர்ந்த கண்ணப்பன் மதம்
பிடித்த யானையால் மிதிபட்டு இறந்துவிட்டார். அவரது மனைவிதான் விஜயலெக்ஷ்மி. மகன்
அருண்குமார், மகள் நாச்சம்மை,
தேவகோட்டையைச் சேர்ந்த இவரது
அத்தைக்குப் பிள்ளை இல்லாததால் ( அத்தையும் முன்பே இறந்துவிட்டார்.) அத்தையின்
கணவர் கண்ணப்பனை சுவீகாரம் செய்து தனது மச்சினன் மகள் விஜயலெக்ஷ்மியை மணம் செய்து
வைத்திருக்கிறார்.
பதினைந்து வயதில் கல்யாணம் என்பதால்
பத்தாவது வரைதான் படிக்க முடிந்தது என்று வருத்தப் படுகிறார். பிறகு கூடை பின்னத் துவங்கியதாலும்
திருமணமானதாலும்
படிப்பைத்தொடர முடியவில்லை. கணவருடன் வெங்கடேஸ்வரா எஸ்டேட்டுக்குக் கனவுகளுடன்
பயணம். ஆனால் நினைத்தபடி எல்லாம் வாழ்க்கை இனித்துவிடுகிறதா என்ன. கணவருடன்
சேர்ந்து வாழ்ந்த வாழ்கை 2003 இலேயே சொற்பமும் அற்பமுமாகப் போய்விட்டது.
வாழ்க்கைக்கு ஆதாரம் வேண்டுமே. மனதை
ஒருமுகப் படுத்த கூடைகள் பின்ன ஆரம்பித்தார். சின்னப் பிள்ளையிலிருந்தே பேக்
பின்னுவதில் இண்ட்ரஸ்ட் அதிகம் என்பதால் அதில் இருக்கும் நுணுக்கங்களைக் கற்றுக்
கொண்டு வந்தார். ஏகப்பட்ட தொழில் இருந்தும் இதுல கொஞ்சம் ஆர்வம் அதிகம் என்பதால்
இதற்கே வந்துவிட்டதாகக் கூறினார்.
திருமணமாகி 2000 இல் இருந்து எஸ்டேட்டுக்குப்
போயிட்டுப் போயிட்டு வரும்போது இப்பிடி ஆரம்பிச்சதுதான். வாழ்க்கையில் மிஸ்
அண்டர்ஸ்டாண்டிங் இருந்ததுனால கூடைபின்ன ஆரம்பிச்சு இதுலேயே கவனம் செலுத்தினேன்
கடைசியா இந்த துர்ச்சம்பவம் நடந்ததுக்கு அப்புறம் முழுசா இதுல ஈடுபட்டேன்
என்கிறார் விஜி நாகம்மை. முதலீட்டுக்கான முயற்சிகள் ஏதும் எடுக்கவில்லை. எல்லாம்
கைப்பணம்தான். கணவர்
தவறினபோது வந்த பணத்தை வைச்சு 2013 இல் முழுமூச்சா ஆரம்பிச்சது
தாயார் நாகம்மை தொடர்கிறார். ” ரெண்டு
மாசக் கரு இந்தப் பையன் 2003 இல் பிறந்தான். ரொம்ப வாழ்க்கை கிடையாது இவளுக்கு.
வாழ்க்கையே கிடையாதுன்னு சொல்லலாம். (காத்தடிச்சிதோ தோலாப் பெத்துதோன்னு = ஏனோதானோ
) என்று
இந்தப்புள்ள பிறந்தான்.. இவனுக்கப்புறம் அஞ்சு வருஷத்துக்கப்புறம் 2008 இல் இந்தப் பொம்பளப் புள்ள
பொறந்துச்சு. இந்த ரெண்டாவது புள்ளைக்கப்புறம் சுத்தமாத் தொடர்பே இல்லை.
யானை மிதிச்சதுக்கு அப்புறம் இவ
கல்யாணம் நடந்ததையே எங்கேயுமே காட்டிக்கல. புள்ளைகளைக் காட்டல.எதுவுமே காட்டல இவ
மாமியார் வீட்டு ஆளுக வந்து ஒப்புக்குக் கூட்டிக்கிட்டுப் போனாக. வன இலாகாவுல
பார்த்துட்டு அவன் கொடுத்தான் அஞ்சு லெட்சம். அதுலயும் இந்தப் புள்ளைகளுக்கு
அப்பத்தா (அப்பா பொறந்த இடத்து அப்பத்தா ) எனக்குப் பாதி உங்களுக்கு ரெண்டு
புள்ளைகளுக்கும் பாதின்னு கொடுத்தாக.
கமலம் ஆச்சிங்கிறவங்க வனத்துறையில
பணத்தை வாங்கி இவ
மாமியார் கையில கவரைக்கொடுத்திட்டாக. அவுக இந்தப் புள்ளைகளுக்கு ஆளுக்கு ஒன்னேகால்
ஒன்னேகால் ரெண்டரை லட்சம் கொடுத்துட்டு தனக்கு ரெண்டரை லட்சம் அப்பிடின்னு
எடுத்துக்கிட்டாக.
அப்புறம் எல் ஐ சி போட்டதுல (அவுக அண்ணன்
ஏஜெண்டு. அண்ணன் பொண்டாட்டியும் ஏஜெண்டு. ) நாமினி பூரா அவுகளே தங்களைப் போட்டுக்கிட்டாக. இவ
ஆம்பிள்ளையான் 60 லட்ச ரூபா போட்டிருக்காக. எல்லாம் மாப்பிள்ளையோட சுய
சம்பாத்தியம் அலைஞ்சாக, பாத்தாக, எல் ஐ சி போட்டாக. இவ பேர்ல போட்டது மூணு பாலிசி. மூணு பாலிசியும் லோன்
வாங்கிட்டாக முன்னாடியே .
அவுக தன் பேர்ல போட்ட எல் ஐ சி பூரா நாமினி அப்பச்சி ஆத்தா பேர்ல
போட்டுருக்காக. 60
வயசுக்கு மேல வட்டிஅதிகம்கிறதால அவுக பேர்ல போயிருச்சு பெருங்கொண்ட தொகை பூரா.
இவுகளுக்குக் குடுத்தது கம்மின்னு
அந்தப் பஞ்சாயம் பண்ணி இந்த பஞ்சாயம் பண்ணி கட்டப் பஞ்சாயத்து மாதிரி வைச்சு அந்த
நாமினி அவுக பேர்ல போட்டிருந்ததை 60 லட்சத்துல 17 லட்சம் இவுகளுக்குக்
குடுக்கணும்னு சொல்லிப் பேச்சு. அதன்படிக் குடுத்தாக. அந்தத் தொகையை இந்தப் புள்ளக பேர்ல
போட்டுறோணும்னு முடிவு பண்ணி பேங்குல போட்டு ரசீதைக் காமிச்சோம். இப்ப அதன்படி
அந்தப் பணம் பூராவும் பேங்குல டெப்பாசிட்டா கிடக்கு பணம். ரசீது இவட்ட இருக்கு.
புள்ளக பேர்ல போட்டிருக்கு. பணம் பக்காவா இருக்கு.
இப்ப நகைகளை வைச்சு இந்தத் தொழில்
பண்ணிக்கிட்டு இருக்கோம். நகையை வைக்கிறது, ஒரு ஆர்டர் வந்தோடனே அந்த நகையைத்
திருப்புறது. திருப்பி நகையைக் கொண்டே வைக்கிறது. அந்த மாதிரி ஓடிக்கிட்டு
இருக்கு. நாங்க கைக்காசையும் அதிகமா செலவு பண்ணல. நகையை வைக்கிறது போடுறது
பண்ணுறதுதான். ” என்றார்.
கூடைபின்னும் தொழிலிலும் வியாபாரப்
போட்டி இன்னிக்கு ஜாஸ்தி ஆகிருச்சு. ஆளுக கிடைக்கல இதில போராடித்தான்
சமாளிக்கிறோம். ஏகப்பட்ட போட்டி பொறாமை சவால் எல்லாம் இருக்கு அதையும்
தாண்டித்தான் சமாளிச்சுத்தான் பண்ணிக்கிட்டு இருக்கோம் பின்னடைவுன்னு ஏதும் இல்ல.
வரும், ஏறும், இறங்கும், கண்டின்யூவஸா போயிட்டு இருக்கு
புதுமைத் திட்டங்கள்னு பார்த்தா
ஏற்கனவே பட்டை ஒயர்ல வச்சித்தான் பண்ணுறது அத இன்னிய காலகட்டத்துல யாரும்
விரும்பல. அதுல சின்னச் சின்ன மாடல் யுக்தி டிசைன்களைக் கொண்டு வந்து அத மாத்தி
பண்ணிட்டு இருக்கோம்.
இன்றைய பிசினஸ் நார்மலா போயிட்டு
இருக்கு. வ. தேனப்பன் அவர்கள் மூலமா ஃபுல் நகரத்தார் சப்போர்ட்டுலதான்
போயிக்கிட்டு இருக்கு. இந்த மாதிரிப் பண்ணுங்க உங்களால கண்டிப்பா முடியும்னு
ஊக்கத்தை விடாதம்மா என்று தைரியம் சொன்னவர் அவர்தான்
அடுத்த கட்டமா டெய்லரிங்கில் ரொம்ப
இண்ட்ரஸ்ட். சின்னப் பிள்ளையில் இருந்து ஆர்வம் அதிகம்.இப்ப வந்து எம்ப்ராய்டரி
போடுறதுன்னு அதிகம் காசு கொடுக்க வேண்டி இருக்கு. இங்கேயே எனக்கு ஜாஸ்தி ஆள்
கிடைச்சு முதலீடு இருந்தது என்றால் அதைப் போட்டு கம்மியா தச்சுக் கொடுக்கணும்,
இப்ப ஒரு ப்ளவுஸோட தையல் கூலி 50 , 100 என்று சார்ஜ் பண்ணுறாங்க அத கம்மியான
விலையில் தச்சுக் கொடுக்கோணும் அப்பிடின்னுஒரு ஆசை. இடமும் அதிகம் வேண்டும். கடையை
விரிவுபடுத்த வேண்டும் என்பது அவர் எண்ணம்.
கூடை பின்னிக் கொடுக்கும் பெண்
தொழிலாளர்கள் இங்கேயிருந்து கொஞ்சம் தள்ளித்தான் ஐந்து கிலோமீட்டர் பத்துக்
கிலோமீட்டர் தொலைவுலதான் இருக்காங்க. நம்ம ஒயரை வெட்டிக் கொடுத்திட்டா பின்னிக்
கொடுத்தபிறகு ஃபினிஷிங் நாம பார்த்தபிறகு விற்பனைக்கு அனுப்புறது. ஓராளால
இதெல்லாம் செய்ய முடியாததால ரவுண்டு கூடை ஓவல் கூடை என்று டிசைன் சொல்லி
அனுப்பிடுறது
லேபர் கொடுத்து வாங்குறது.
இதுவரை எந்த அவார்டும் வாங்கல.
இனிமேல்தான் வாங்கணும். கோட்டையூர் காரைக்குடிபோன்ற ஊர்களில் திருமணத்துக்கு மொத்த
ஆர்டரா கூடைகள் சப்ளை செய்திருக்கோம். காரைக்குடியிலிருந்து வீரப்பன் என்ற லாயர் வாங்குனார்.
லேட்டஸ்டா 300 பேக் வாங்கினாக. காரைக்குடி காவேரி ஆச்சிக்கு 400 கொடுத்தோம்.
கல்லல் போன்ற ஊர்களுக்கும் நிறையப் போகுது. அமெரிக்க ஹூஸ்டனுக்கு 500 பேக் அனுப்பி இருக்கோம்
என்கிறார் தந்தை. இப்ப லண்டனுக்கும் போகுது என்கிறார் பெருமிதத் தாய்.
குடும்பத்தார் சப்போர்ட் இல்லாம
முடியாது. அப்பா அம்மா தங்கச்சி தம்பி ஊக்கம் கொடுக்கிறார்கள். தம்பி
பிள்ளையார்பட்டி நகரத்தார் ட்ரஸ்டில் வேலைபார்க்கிறார். தங்கச்சி இருவர்
இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. ஒருத்தி மாசமா இருந்து இங்கே இப்ப பிள்ளைப்
பேறுக்கு வந்திருக்கா.
மாமியார் வீட்டில் டச் இல்ல. பிள்ளை
கூட்டிக்கின இடத்தில் இப்ப யாருமே இல்ல. பிறந்த இடத்தில் அனைவருமிருந்தும் சம்பந்தமில்லை
. இவர்கள் அய்த்தைக்கே பிள்ளை கூட்டிக் கல்யாணம் செய்தது. அப்பவே இவர்கள் அய்த்தை
இல்லை. மாமா மட்டும் இருந்தார்கள். அவரும் இரண்டு வருஷத்துக்கு முன்னாடி
இறந்துட்டாக. என்கிறார் இவரது தாய்.
இங்கே தனக்குத் தெரிந்து செட்டிநாடு
ஸ்நேக்ஸ் & பாஸ்கெட்ஸ் நல்ல லாபகரமான தொழில்கள் என்று சொல்கிறார் விஜி. புதிதாகத் தொழில்
தொடங்குவோருக்கு ஆலோசனையாக இவரையே முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ள சொல்கிறார் விஜி.
எவ்வளவோ கஷ்டப்பட்டுத்தான் நான் வந்தேன் இதுக்கு. இன்னும் நான் இதில் வளரணும்
அதுனால என்ன கஷ்டம் வந்தாலும் பெண்கள் சோர்ந்து போய் இருக்காம நாம ஏன் பண்ணணும்னு
நினைக்காம அடுத்த கட்டத்துக்கு வர முயற்சி பண்ணனும்.
எதிர்காலத் திட்டம் சாதனை இலக்கு.
பெரிய எய்ம் இருக்கு. நிறையப்பேருக்கு வேலை கொடுக்கணும். ஷாப்பிங்க் மால் எல்லாம்
போய் கேட்டு போட்டு வியாபாரத்தை விரிவு படுத்தும் எண்ணம் இருக்கு. இனிமேல்தான்
செய்யணும். ஆள் ஜாஸ்தி வேணும் பணபலமும் வேணும் இடமும் வேணும். இதெல்லாம் இருந்தா
கண்டிப்பா பண்ணுவேன். என்று தன்னம்பிக்கையாகச் சிரிக்கிறார் விஜி. நிச்சயம்
அதையும் சாதிப்பார். குபேரன் கோயிலுக்கருகில் தன்னம்பிக்கையோடு உழைக்கும்
இவருக்குக் குபேரனும் மனமகிழ்ந்து கொட்டிக் கொடுப்பார். நல்லதே நடக்கட்டும்.
தன்னம்பிக்கையாளரை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி. இதழில் வெளியானமைக்கு பாராட்டுகள்.
பதிலளிநீக்குபோற்றுதலுக்கு உரியவர்
பதிலளிநீக்குஅருமையான பகிர்வு
பதிலளிநீக்குhttps://plus.google.com/u/0/communities/110989462720435185590
நன்றி ஜம்பு சார்
பதிலளிநீக்குநன்றி ஜெயக்குமார் சகோ
நன்றி யாழ்பாவண்ணன் சகோ
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
ஒரு தன்னம்பிக்கைப் பெண்ணை இங்கு அறிமுதப்படுத்தியதற்கு மிக்க நன்றி...
பதிலளிநீக்குநன்றி துளசி சகோ & கீத்ஸ்.
பதிலளிநீக்கு