செவ்வாய், 1 நவம்பர், 2016

காரைக்குடிச் சொலவடைகள். சமத்தியும் ராராட்டும், இங்காவும் ரெங்காவும்.

456. பொழுதெப்ப விடியும்
பூவெப்ப மலரும்
சிவனெப்ப வருவார்
பலனெப்பத் தருவார்

பொழுதும் விடிந்தது
பூவும் மலர்ந்தது
சிவனும் வந்தார்
பலனும் தந்தார்.

-- எங்கள் அப்பா அத்தைகள் இரவு தூங்கப் போகும்போதும் காலையில் கண்விழிக்கும்போதும் சொல்வார்களாம்.

457.சமத்தி சந்தைக்குப் போனாளாம்
வட்டி கிண்ணியா மாறிருச்சாம்.

-- அதிக புத்திசாலியான பெண் பாத்திரக் கடையில்  வட்டி ( சாப்பிடும் தட்டை ) விலைக்கு வாங்கும்போது விலை கம்மியாக பேரம் பேசி கிண்ணி ( சைட் ப்ளேட் )  க்குக் கொடுக்கும் விலையில் கேட்டாளாம்.

458.சங்குச்சக்கர சாமி வந்து
ஜிங்கு ஜிங்குன்னு ஆடிச்சாம்.

- திருவிழாவில் (சங்கு சக்கர சாமி - திருமால் - கள்ளழகராக இருக்கலாம் ) சாமியை ஆட்டத்துடன் பல்லாக்கில் கொண்டு வருவதைப் போல வீட்டில் இருக்கும் ஆண்மக்கள் கோபப்படும்போது - சங்குச்சக்கர சாமியைப் போல ஆடுகிறார் என்று பெண்கள் குறிப்பிடுவது.

459.ஆரடிச்சா ஏனழுதே
அடிச்சாரைச் சொல்லி அழு
மாமன் அடிச்சாரோ
மல்லியப்பூச் செண்டாலே

-- இது தாலாட்டுப் பாட்டு. ராராட்டு என்றும் சொல்வார்கள்.  மாமா அடிச்சா அது மல்லியப்பூச் செண்டாம்.

460.அத்தை அடிச்சாளோ
அரளிப்பூச் செண்டாலே

அதையே அத்தை அடிச்சா அரளிப்பூச் செண்டாம். 

461.உந்தி உந்திக் காசு
பப்பு உந்திக் காசு
மாமா தந்த காசு
மச்செரம்பிப் போச்சு

-- இதுவும் குழந்தையை ஏந்திப் பாடும் பாட்டு. மடியில் உக்காரவைத்து ( ஆறுமாதக் குழந்தை ) அதன் இரு கைகளையும் பிடித்து விரித்து ஒரு உள்ளங்கையில் இன்னொரு ஆள்காட்டி விரலால் உந்தி உந்திக் காசு சொல்வதுண்டு. மாமா தந்தால் மச்செரம்பிப் போகுமாம் :) 

462.இங்கா இங்கா இங்கா
காவேரி ரங்கா
கஸ்தூரி ரெங்கா
எங்கே இருக்குமாம்
ரெங்கம்பழம்
தீர்த்தக் கரைக்கும்
திருவானைக்காவலுக்கும்
நடுவிலே இருக்குமாம்
என்னைப் பெத்த ரெங்கம்பழம்.

-- தொட்டில் குழந்தைக்குப் பாடும் பாட்டு. அது இங்கா இங்கா என்று சொல்லிக் கொண்டு தரையில் படுத்திருக்கும்போது அல்லது தொட்டிலில் விழித்துக் கொண்டு பேசும்போது இதை ராகத்தோடு சொல்வார்கள் பெரியவர்கள்.  ஸ்ரீரங்கத்துப் பெருமாளாக குழந்தையை உருவகித்துக் கொஞ்சுவது.

463.தொட்டிலிலே அட்டணக்கால்
தூங்குறது ஆரு மகன்.

-- சில குழந்தைகள் தொட்டிலில் அட்டணக்கால் போட்டுத் தூங்குவார்கள். அவர்களுக்காகப் பாடுவது.

464.ஊருக்குக் கடைசி உலகம்பட்டி.

-- நகரத்தார் வாழ்ந்த 96 ஊர்களில் ( தற்போது 72 ) மிக மிகக் கடைசியான ஊர் உலகம்பட்டி. அதனால் அங்கே இருந்து பெண்ணெடுத்தாலோ பெண் கொடுத்தாலோ ஊருக்குக் கடைசி உலகம்பட்டியிலா எடுத்தீர்கள் என்பார்கள். 



465.ஆதாயம் - ஆதானம்-  இல்லாத செட்டி ஆற்றோடு போனானாம்.

--  ஆ - பசு தானம் செய்யாவிட்டால் அவர் தனது கடமையை ஆற்றாது  போகிறார் என்று குறிக்கச் சொல்லப்பட்டு ஆதானம்- ஆதாயம்  என மருவி விட்டது. ஆதானம் இல்லாத செட்டி தன் கடமையை ஆற்றாது போகிறார் என்பதே சரி.

466.குடிக்கிறது கூழாம் கொப்புளிக்கிறது பன்னீராம்.

-- வீட்டு நிலைமையைப் புரிந்து கொள்ளாமல் ஆடம்பரம் செய்பவர்களைக் குறிப்பிடுவது. 

467.ஆற்றில் கொட்டினாலும் அளந்து கொட்டணும்.

-- அகத்தில் கொட்டினாலும் அளந்து கொட்டணும். சுயநலத்தோடு தனக்கு தனக்கு என அதிக அளவில் உணவைக்கூட எடுத்துக் கொட்டிக் கொள்ளக் கூடாது. எனச் சொல்ல வந்த சொலவடை இது. பேச்சு வழக்கில் ஆற்றில் கொட்டினாலும் அளந்து கொட்டணும் என்று வந்திருக்கிறது.

468.குந்தித் தின்றால் குன்றும் மாளும்.

-- எப்பேர்ப்பட்ட ராஜாவீட்டுச் சொத்து என்றாலும் ஒரு வேலையும் செய்யாமல் குந்தித் தின்றால் குன்று போல இருக்கும் செல்வமும் அழியுமாம். 

469.முன்னோர்கள் ஆண்டதைப் பின்னோர்கள் ஆளனும்.

--ஆடம்பரச் செலவு செய்யாமல் பின் வரும் தலைமுறைக்கும் சேர்த்து வைத்து அவர்களும் முன்னோர்கள் போல ஆளச் செய்யணும். 

470.இட்ட போசனத்தை இன்பமாச் சாப்பிடு.

-- வீட்டில் செய்யும் உணவை விரும்பி உண்க. (இட்ட போசனம்.- போடப்பட்ட உணவு.  )

471.ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம் உள்ளே இருக்குமாம் ஈறும் பேனும்.

-- வெளியே அலங்காரமாகத் தெரிவது உள்ளே ஊழலாக இருக்கலாம். அழகை மட்டும் பார்க்கும் பெரும்பாலோர் அதனுள்ளே இருக்கும் சிக்கலை உணர்வதில்லை. பெண் அழகு என்றும் இன்னபிறவும் கண்டு மகனுக்குக் கொள்வார்கள்.  அதன்பிந்தான் தெரியும் அதில் உள்ள சிக்கல் எல்லாம். இதேபோல் வீட்டில் பல பிரச்சனைகளை வைத்துக் கொண்டு வெளி உலகத்துக்கு நடித்துக் கொண்டிருப்பவர்களையும் இது குறிக்கும். ஒரு விஷயம் உயர்வு என்று நினைப்போம் ஆனாஅது மகா மட்டமாக இருக்கும்.

472.எல்லாம் நெரம்ப/எரம்ப இருக்கு.

-- ஒருவர் ஒரு பொருளை, உணவை, உடையை, வேறு ஏதேனும் ஒன்றைக் கேட்டால் காரைக்குடி மக்கள் இல்லை என்று சொல்லவே மாட்டார்கள். ( அது இல்லாமல் இருக்கும் அல்லது தீர்ந்து போய் இருக்கும். ) ஆனால் நெரம்ப இருக்கு என்பார்கள். இல்லாட்டி பால் கேட்டால் பால் பவுடர் இருக்கு, இல்லாவிட்டால் கண்டென்ஸ்ட் மில்க் இருக்கு என்பார்கள். கீரை கேட்டால் மிச்ச காய் பெயரைச் சொல்லி இருக்கு என்பார்கள். கீரை தீர்ந்து விட்டது என்றோ. இல்லை என்றோ சொல்லவே மாட்டார்கள். இல்லை என்ற சொல் வாயில் இருந்து வரக்கூடாதாம். வந்தால் அந்தப் பொருள் வீட்டில் இல்லாமல் போய்விடுமாம். என்ன ஒரு தற்காப்பு. வார்த்தைகளுக்கும் பவர் இருக்குல்லா :) 

473.மதிப்பு மசால்வடை பிச்சுப்பார்த்தா ஊசவடை:-

-- ஒய்யாரக் கொண்டைக்குச் சொன்னதேதான் இதுக்கும்.  வெளிய பார்த்தா அழகா இருக்கும் உள்ளே கெட்டுப் போய் பூசரம் பூத்துப் போய் இருக்கும். உறவுமுறைகளைப் பேணாதவர்களையும் சொல்வதுண்டு.

474.நல்ல பாம்பு ஆடுதுன்னு நாக்ளாம்பூச்சி ஆடமுடியுமா.

-- நல்ல பாம்பு  படம் எடுக்குதுன்னு மண்புழுவும் ( நாக்ளாம் பூச்சி ) படம் எடுக்க முடியுமா.  தகுதிக்கேற்ப செயல்படணும் என்பதற்காகச் சொல்லப்பட்டது.

475.பழமொழி பொய்யின்னா பழையதும் சுடும்.

-- பொய்யைத் தொடர்ந்து சொல்வோரை எள்ளி நகையாடுவது. தான் சொன்னது பொய் என்றால் பழையதும் - முன்னே செய்தது - சுடுகிறது என பம்மாத்து செய்பவரை கிண்டலடிப்பது. . 

476.எண்ணிச் செய்கிறவன் செட்டி எண்ணாமல் செய்கிறவன் மட்டி.

-- எதையும் திட்டமிட்டுச் செய்பவர் செட்டி. திட்டமிடாமல் அகலக் கால் வைத்து மாட்டிக் கொள்பவன் மக்கு - மட்டி. 

477.துட்டுக்கு எட்டுச் சட்டி வாங்கி சட்டி ஒண்ணு எட்டுத் துட்டுன்னு விற்றாலும் வட்டிக்கு ஈடாகுமா. ?

-- செட்டியார்களின் கணக்கு அறிவுக்கு சொல்லப்படும் பழமொழி இது. ஒரு துட்டுக்கு எட்டுச் சட்டி வாங்கி ஒவ்வொரு சட்டியையும் எட்டு துட்டுக்கு வித்தாலும் வட்டித் தொழிலில் சம்பாதிப்பதற்கு  ஈடாகாது எனச் சொல்வதாம்.

478.சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்.

-- சஷ்டியில் விரதம் இருந்தால் அகப் பையில் ( கருப்பையில் ) குழந்தை வரம் கிடைக்குமெனச் சொல்லப்படுகிறது. 

479.குருவிக்குத் தக்கன ராமேஸ்வரம்

-- குறி வைக்கத் தப்பாது ராமசரம் என்பது மருவி உள்ளது. இதையே நமது உழைப்புக்கும் தகுதிக்கும் தக்கதுதான் கிடைக்கும் என்றும் அர்த்தம் கொள்ளலாம்.

480. சமத்தி என்ன பெத்தா
தலைச்சன் பொண்ணு பெத்தா

-- முதன் முதலில் பெண் குழந்தை பிறந்தால் தகப்பன் கூட சிக்கனமாகப் பெண்ணுக்குத் திருமணம் செய்ய படிக்க வைக்க பொருள் சேர்க்கத் துவங்கி விடுவார். முதல் பேத்தி என்பதால் ஆயா வீட்டிலும் அப்பத்தா வீட்டிலும் அதிகச் செல்லமும் மற்றும் திருமண சமயங்களில் பெரியவர்கள் நடையுடையுடன் இருக்கும் போதே சீர் செனத்திகளும் கேட்காமலே வந்து சேரும்.  படிக்க வைப்பதும் திருமணம் செய்வது எளிது. ஆள் அம்பு படை கிடைக்கும். ஆண் குழந்தை முதலில் பிறந்து அதற்குத் திருமணம் செய்தால் அவன் மணந்த பெண் நாத்தனாருக்குஅதிகம் சீர் செய்ய விடமாட்டாள்., அவர்கள் குடும்பத்தாரும் தன் பெண்ணுக்கு உள்ளது பங்கு போடப்படுகிறதே என்று பேச வாய்ப்புள்ளது. அதனாலேயே சமத்தி முதலில் ஆசைக்கு ஒரு பெண் பெற்றுவிட்டு அடுத்து ஆஸ்திக்கு ஒரு ஆண்குழந்தை பெற்றுக் கொள்வாள் என்பார்கள்.

டிஸ்கி :- 1 :- இவற்றைப் பாருங்க. 

1. ஆச்சியும் அய்த்தானும் 

2. அப்பச்சியும் ஆத்தாவும்.

3. அயித்தையும் அம்மானும்.

4. ஆயாவின் வீடு. 

5. ஐயாக்காளையும் ஆத்தாப் பொண்ணும். 

6. செட்டிநாட்டு வீடுகள் முகப்பு. CHETTINADU HOUSES

7. செட்டிநாட்டு வீடுகள். பட்டாலை. (CHETTINADU HERITAGE HOUSES )

8. செட்டிநாட்டு வீடுகள் -வளவு (CHETTINADU HERITAGE HOUSES )

9. செட்டிநாட்டு வீடுகள் மேங்கோப்பு:- CHETTINAD HOUSES. CEILING


10.  செட்டிநாட்டு வீடுகள்- பத்தி . ( CHETTINAD HERITAGE HOUSES )

11. செட்டி நாட்டு வீடுகள் . இரண்டாம் கட்டும் ஆல்வீடும். அறைகளும். (CHETTINAD HERITAGE HOUSES - ROOMS )

12. செட்டிநாட்டு வீடுகள். சாமி வீடும் படைப்பும் . CHETTINAD HERITAGE HOUSES - SAAMI VEEDU & PADAIPPU.

13.செட்டிநாட்டு வீடுகள். சூர்யப் பலகையும் நிலைகளும். CHETTINAD HERITAGE HOUSES, SURYA PALAGAI

14.செட்டிநாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 1
 
15.செட்டி நாட்டு வீடுகளும் & கலைப்பொருட்களும். CHETTINAD HOUSES & ARTIFACTS. பாகம் -2.

16. செட்டிநாட்டு வீடுகளும் கலைபொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 3

17. செட்டி நாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 4.

18. செட்டிநாட்டு வீடுகள் & கலைப்பொருட்கள் & ஏடுகள். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 5

19. காரைக்குடி வீடுகள் & பொருட்கள். CHETTINAD HERITAGE HOUSES பாகம் - 6.

20. காரைக்குடி வீடுகள் . CHETTINAD HERITAGE HOUSES - பாகம் - 7.

21. காரைக்குடி வீடுகள். CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 8

22. காரைக்குடி வீடுகள்.- தேர்முட்டியார் வீடு. CHETTINAD HERITAGE HOUSES - பாகம் -9

23. காரைக்குடி வீடுகள். கானாடுகாத்தான் அரண்மனை. CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 10. 

24. காரைக்குடி வீடுகளில் ஓவியங்கள். - தனலெக்ஷ்மியும் தான்யலெக்ஷ்மியும்.PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES - DHANALAKSHMI & DHANYALAKSHMI. பாகம் 11.


25. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். -2.TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 12.

26. காரைக்குடி வீடுகளில் ஓவியப் படங்கள். PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் 13.

27. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 14

28. காரைக்குடிச் சொல்வழக்கு. - ஆத்தீயும் அடியாத்தீயும் ஆத்தாடீயும்.

29. காரைக்குடிச் சொல்வழக்கு - பாயிவரப்பான், பட்டுக் கிடப்பான், அரசாளுவ . !!!

30. காரைக்குடிச் சொல்வழக்கு :- மக்களுக்கு அப்பச்சியும் நாச்சியா மகனும்.

31. காரைக்குடிச் சொல்வழக்கு. :- கழுத்துருவும் ( கழுத்தீரு ) கால்மோதிரமும்.

32. காரைக்குடி ஸ்பெஷல் உணவு வகைகளும் பந்தி விசாரணையும்.

33. காரைக்குடிச் சொல்வழக்கு :- கூடி ஆக்கி உண்ணுதலும் கோட்டை கட்டுதலும். 

34. காவடிகள் ஆடி வரும் ஆட்டத்திலே.

35.முளைப்பாரி/முளைப்பாலிகை தயாரித்தல். 

36.ஆடி வெள்ளியில் திருவிளக்கு பூஜை.

37. காரைக்குடிச் சொல்வழக்கு - வேவும் திருவாதிரைப் புதுமையும் சூள்பிடியும்/சூப்டியும். 

38. காரைக்குடிச் சொல்வழக்கு - போரிடுதலும் கிலுக்கி எடுத்தலும் கொப்பி கொட்டலும். 

39. 16 மாற்றுத் தங்கமும் 500 மாற்றுத் தங்கமும்.

40. புகைப்பட தின ஸ்பெஷல் 2016. காரைக்குடி வீடுகள். - KARAIKUDI HOUSES FOR CAMERA DAY SPECIAL.

41.சாரட்டில் மாப்பிள்ளை அழைப்பும் பெண்ணுக்குக் கொடுக்கும் சீரும்.

42.சிவப்பு ஓலைக் கொட்டான்கள் & வெள்ளி வேவுக் கடகாம்கள்.

43. பூந்திக் கொட்டங்காயும் பட்டுப்புடவை பராமரிப்பும்..

44. காரைக்குடிச் சொல்வழக்கு. கொரக்களியும் வர்ணக்கோமாளியும். 

45. அகத்திலும் அகத்திலும் ”எங்கள் ஆத்தாள் ”.

46. காரைக்குடி வீடுகள். - ஏழு வாயிற்கதவுகளும் மணிப்பூட்டும் காசாணி அண்டாவும். ( தண்ணிக்கிடாரம்)

47. வெற்றி ”இணைய”ர்கள் வெங்கடாசலம் & பழனியப்பன். ( ஐபிசிஎன் கட்டுரை )

48. மார்கழித் திருவாதிரைப்புதுமைப் பாடலும் திருவாதிரை நாச்சியார்களும்.

49. காரைக்குடிச் சொல்வழக்கு :- ரேடியோப் பெட்டி அலமாரியும் ரொட்டிப் பொட்டித் தகரங்களும். 

50. கோவிலூர் மியூசியம்.

51. கலாச்சாரப் பயிற்றுவிப்பு முகாம் .:-

52. காரைக்குடிச் சொலவடைகள். சமத்தியும் ராராட்டும், இங்காவும் ரெங்காவும்.

53. காரைக்குடிப் பெயர்கள். அம்மைகளும் அப்பன்களும்.

54. காரைக்குடி - வீடாகு பெயர்கள்.


டிஸ்கி :- 2 :- இவற்றையும் பாருங்க. 

 1. மானகிரிக்கு காசியிலிருந்து உலா வந்த (3 1/2 கிலோ தங்கம் ) சொர்ணலிங்கம் 

2. குமுதம் பக்தி ஸ்பெஷலில் திருவாசகம் என்னும் தேன்....

3. காரைக்குடியில் கார்த்திகை வேல் பூசை

4. நவராத்திரி கொலுவும் மகர்நோன்பும் அம்மன் அம்பு போடுதலும்.

5. ராமாயணம் பாராயணமும், ராமர் பட்டாபிஷேகமும்.

6. மகாகவி பாரதியும் காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கமும்

7. கவியரசர் இல்லமும் கர்னகை கதையும்

8. காவிரிப்பூம்பட்டினமும் கண்ணகியும்

9.செட்டிநாட்டு அரசர்..டாக்டர் திரு. எம்.ஏ.எம். ராமசாமி செட்டியார் .ஒரு சகாப்தம்.
 
10. குமுதமும் யவண்டம் வைரவன் செட்டியார் அவர்களும்..

11. இது நகரத்தார் வீட்டுக் கல்யாணம், இவள் புதியவளில்.

12.கல்யாணத்திலே இத்தனை சடங்கா..?! (நகரத்தார் திருமணம் நம் தோழியில் )

13. வைரமே வைரம்...

14. குங்குமம் தோழி இணைப்பில் செட்டிநாடு ஸ்பெஷல் - 30 விதமான சமையல் குறிப்புக்கள்.

15. நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு - புத்தகம் ஒரு பார்வை

16. மங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம்

17. செட்டிநாட்டு காரசார சமையல் ரெசிபிஸ் 32 - மங்கையர் மலர்

5 கருத்துகள்:

  1. அறியாத சொலவடைகள் பல அறிந்தேன்
    நன்றி சகோதரியாரே

    பதிலளிநீக்கு
  2. சிறப்பான முயற்சி! தொடருங்கள்! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  3. நம் ஊர் சொலவடைகள் பலவற்றையும் அருமையாகத் தொகுத்திருக்கிறீர்கள். மகிழ்ச்சி!!

    பதிலளிநீக்கு
  4. நன்றி ஜெயக்குமார் சகோ

    நன்றி சுரேஷ் சகோ

    நன்றி சுஜா :)

    பதிலளிநீக்கு
  5. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)