வியாழன், 21 ஏப்ரல், 2016

ய்ன வும் ம்ட வும்.



ய்ன வும் ம்ட வும்.

இதென்ன ய்ன ம்ட என்கின்றீர்களா. இது ஒரு பாஷை. வாலைக்குமரிப் பருவத்தில் இருந்தபோது அறிமுகமானது. இதை உருவாக்கியவர் யார்னு தெரியாது. ஆனா நானும் முத்தாச்சியும் ( பெரியம்மா பெண் ) முகப்பின் ஜன்னலில் அமர்ந்துகொண்டு கதைபேசும்போது உபயோகமான மொழி.

வெளியில் வெய்யில் தங்கவண்ணம் பூச சிவன் கோயில் கோபுரம் ஜொலிக்கும். எதிரில் முனியன் ஆசாரி வீட்டிலிருக்கும் தூங்குமூஞ்சி மரமும் எங்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டிருக்கும். சத்யா பொட்டலுக்கு சந்தைக்குக் குறுக்கு வழியாகச் செல்பவர்கள், சிவன் கோயில் ஊரணியில் குளித்துவிட்டு ஈரச் சேலையைச் சுற்றித் தோளிலேயே ஈரத்துணிகளைப் போட்டுக்கொண்டு போபவர்கள், தெருப் பைப்பில் தண்ணீர் பிடிப்பவர்கள், சைக்கிள் பெல்லை ஏர் ஹாரன் போல அடித்து ஓட்டும் வாண்டுகள் என களை கட்டி இருக்கும் தெருவைப் பார்த்தபடி ஜன்னல் கம்பி பற்றி ஒஞ்சரித்து அமர்ந்து பேசிக்கொண்டிருப்போம்.

வீட்டில் இருப்பவர்கள் பருவப் பிள்ளைகள் நாங்கள் பேசுவதைக் கவனித்துவிடக்கூடாது என்பதற்கான ஒரு ஜாலி மொழி. ஆனால் அனைவருக்கும் புரியும். கேட்டுக் கொண்டாலும் போய்த் தொலையுது என்று விட்டு விடுவார்கள்.

ரேடியோவில் பாட்டு, ஒலிச்சித்திரம், அகில பாரத நாடகம், டிவியில் வெள்ளியன்று ஒளியும் ஒலியும், ஞாயிற்றுக்கிழமை மதியம் இந்திய சினிமா, மாலை தமிழ் சினிமா இவ்வளவே பொழுது போக்கு. எப்பவாவது சினிமா தியேட்டருக்குப்போய்ப் படம் பார்ப்போம்., அதுவும் கடுமையான காவலோடு. J

அப்போதெல்லாம் இந்தப் பரிபாஷைலதான் ஆச்சியோட பேசிக்கிறது. முதலில் இதன் விதிகளைச் சொல்லிடுறேன். ரொம்பப் பெரிசா ஒண்ணுமில்ல ஒவ்வொரு வார்த்தையின் முதல் & இரண்டாம் எழுத்துக்கு நடுவில் ய்ன வையும் ம்ட வையும் கலந்து பேசணும். அவ்வளவே. இதில் முதல் எழுத்து ஆ என இருந்தால் அ என்று குறுக்கி அடுத்த ம்ட அல்லது ய்ன வில் டா அல்லது னா என்று பேசணும். இதுவே முதல் எழுத்து இ என்று இருந்தால் டி அல்லது னி, அல்லது முதல் எழுத்து ஓ என்று இருந்தால் டோ அல்லது னொ. விளக்கம் போதுமென்று நினைக்கிறேன் J இனி உரையாடல் ஒரு பதம். J

அம்டாச்சி நிம்டீங்க இம்டின்னைக்கு சிம்டினிமாவுக்குப் பொம்டோகலாம்னு சொம்டொன்னீங்களே. ? எம்டப்போ பொம்டோகலாம்.

தெய்னேனு நய்நாம சய்னாங்காலம் பொய்னோகலாம்.

எம்டந்தத் திம்டேயட்டர்ல சம்டலங்கை ஒம்டொலி நம்டடக்குது அம்டாச்சி,

தெய்னெரியல தெய்னேனு, நய்னடராஜாவா, அய்னருணாசலாவான்னு அய்னண்ணன்கிட்டக் கெய்னேட்டுச் சொய்னொல்லுறேன்.

சம்டரி அம்டாச்சி நிம்டீங்க பொம்டோனா எம்டென்னையும் கும்டூட்டிட்டுப் பொம்டோங்க.

சய்னரி தெய்னேனு. !

[ ஆச்சி நீங்க இன்னைக்கு சினிமாவுக்குப் போகலாம்னு சொன்னீங்களே? எப்பப் போகலாம்.

தேனு நாம சாயாங்காலம் போகலாம்

எந்தத் தியேட்டர்ல சலங்கை ஒலி நடக்குது ஆச்சி

தெரியல தேனு நடராஜாவா அருணாசலவான்னு அண்ணன் கிட்ட கேட்டுச் சொல்லுறேன்

சரி ஆச்சி நீங்க போனா என்னையும் கூட்டிட்டுப் போங்க.

சரி தேனு ]

இப்படி ஆரம்பிக்கும் உரையாடல் மாலை வரை தொடர்ந்து சினிமா தியேட்டரிலும் சினிமாவுக்கு முன்னும் இடைவேளையிலும் பின்னும் கூட நடக்கும்.

ஒரு முறை தியேட்டரில் டிக்கெட் கொடுப்பவர் நாங்க பேசுவதைக் கேட்டு இந்தப் புள்ளக தெலுங்கோ கன்னடமோ போல இருக்கு என்றாரே பார்க்கலாம்.

அப்போது என் சின்னத் தம்பி வந்து தெம்டேனு மும்டுத்தாச்சி வம்டாங்க பொம்டோகலாம் டிம்டிக்கெட் எம்டெடுத்தாச்சு. மெம்டேல பம்டால்கனி. கும்டூட்டம் ஜம்டாஸ்தியா இம்டிருக்கு என்றவுடன் எங்கள் மூவரையும் பார்த்து அந்த டிக்கெட் கிழிப்பவர் முழித்த முழி இருக்கிறே.. ஹாஹா சொல்லில் அடங்காது

இப்பிடி புதுசா ஒரு பாஷையைக் கத்துக்கிட்டு பரிபாஷைல பேசிப்பழகுங்க பாஸ். லைஃப் இன்னும் சுவாரசியமா இருக்கும். இந்த செல்ஃபோன் வாட்ஸப் உலகில் இழந்து கொண்டிருக்கும் விஷயங்களில் ஒண்ணா இந்தமாதிரி நேரில் சந்தித்துப் பேசிப்பழகுற ஆத்மார்த்த நட்பையும் சொல்லலாம்.

ரொம்ப நாள் சந்திக்காத உறவினர்களையோ நண்பர்களையோ சந்திச்ச ரெண்டாம் நிமிஷத்துல செல்போனை நோண்டி நம்பர் வாங்குறது. வாட்ஸப்புல சேக்குறது. கண்ட குப்பையையும் பார்வேர்டு பண்றதுன்னு இல்லாம. பழைய கதையை எல்லாம் ஒரு பத்து நிமிஷமாவது கையோடு கை கோர்த்துக் கண்ணோடு கண் & முகத்தோட முகம் பார்த்துப் பேசிப் பழகுங்க. வாழ்க்கை இனிமையானது. 



6 கருத்துகள்:

  1. எங்கள் பள்ளிப் பருவத்தில் பயன்படுத்தியுள்ளோம். அந்நாள்கள் நினைவுக்குவந்தன. நன்றி.

    பதிலளிநீக்கு
  2. நட்டல்லா சொட்டன்னீங்க . நாங்க 'ட்ட' போட்டு பேசின பழைய ஞாபகம் வந்தது

    பதிலளிநீக்கு
  3. நாங்கள் க பாஷை உபயோகிப்போம் ஒவ்வொரு வார்த்தையிலும் ஓரோர் எழுத்துக்கும் முன் க எழுத்தைச் சேர்த்துக் கொள்ள வேண்டும் உ-ம் கநா கன் கஉ கன் கனை கநே கசி கக் ககி கறே கன் = நான் உன்னை நேசிக்கிறேன் பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்

    பதிலளிநீக்கு
  4. ஆஹா நாங்களும்தான்....ஐதேஐனம்மை ஐசஐகோ ஐஅருஐமை! ஹிஹிஹி இப்படி ஐ, பை, க என்று போட்டுப்பேசுவோம்..

    கீதா

    பதிலளிநீக்கு
  5. நன்றி ஜம்பு சார்

    நன்றி நாகேந்திர பாரதி சகோ. ! அஹா ட்ட பாஷை. ! நட்டன்றி :)

    நன்றி பாலா சார் ஆஹா க பாஷை . கஅ கரு கமை. :)

    ஐயையோ நெம்ப பிடிச்சிருக்கு கீத்ஸ் ஐ பாஷை. ஐசூப்ஐபர். :)

    பதிலளிநீக்கு
  6. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)