செவ்வாய், 8 மார்ச், 2016

புதுக்கவிதை இயல்புகள்:-



புதுக்கவிதை இயல்புகள்:- ( அசைன்மெண்டை கவிதையா எழுதி இருக்கேன். :)

12.3.84.

ச. தேனம்மை
இளம் அறிவியல்
வேதியல் இரண்டாமாண்டு.

முன்னுரை :-

புதுக்கவிதை புதியவர்களின்
சிந்தனையைப் ’புதுக்க விதை’
புதைக்கின்றது.
கருத்துக்களைக் காப்பியடித்துக்
கொண்டிருந்த காப்பி(ய)
நாயகர்களின் முகத்திரையைக்
கிழித்தது புதுக்கவிதை.
வார்த்தைகளைக் கோர்த்து
வாய்ச்சாலம் பண்ணுவதல்ல இது.
‘பொங்கிவரும் வலிமைமிக்க
உணர்ச்சிகளின் வெளிப்பாடுகள் அவை’
யாப்பினை அறிந்தும்
யாப்பினை மீறி வெளிப்படும்
கவிதா விலாசங்கள்.
கவிதா விசாலங்கள் இவை.
‘உள்ளுறை உவமை’யையும்
உவப்பக் கொண்டவை.
பரமவைரியைப்
பக்கதில் பார்த்தாற்போல்
பளிச்சென்று துப்பிக்
குற்றங்களைச் சாடுபவை.
ஜீவா பாரதி தாசன்கள்,
பாலா, நாமக்கல்லின்
கவிதா விலாசங்கள்.
கவிதா விசாலங்கள்.

பொருளுரை:-

“கருப்புப் படர்ந்த கர்ப்பக்கிரகம்
என்னுள்
நெருப்பை வளர்க்கின்றது” இது
(உள்ளுறை உவமை.)
தற்காலத்தய மொட்டின்
வசன விசனம்
இந்த விசன வசனம்
கெட்டுப் போன சமுதாயத்திற்காக
கொட்டி முழக்கி எழுகின்றது.
“கர்ப்பக்கிரகங்களும்
தற்கால வியாபாரஸ்தலங்களே. !
ஏனெனில் பக்தியும்
வரங்களும் சகாயவிலைக்குக்
கிடைக்குமிடமல்லவா ?
பரிகாரமாய்ப் பணத்தை
வாங்கிக்கொண்டு ..!
இது நேரடித் தாக்குதல்.

அறிவுப் பூர்வ ஆராய்ச்சிகளும்
கவிதைப் பாதைகளில்
கம்பீர நடை போடும்.
“பத்துக்கு மேலாடை பதினொன்று”
”படுத்திருக்கும் வினாக்குறிபோல் மீசையுண்டே “
பல உருவக நடைகளும்
பலவந்தமாய்த் திணிக்கப்படும்.
“அக்கினிக் குஞ்சாய்  மனம்
தகித்தது அடுத்தவீட்டு
காஸ் அடுப்பைக் கண்டு “
இங்கே அருமையான வார்த்தை
’அக்கினிக் குஞ்சு’ இதை
சின்னத்தனமான சேதியைச் சொல்ல
சில்லறைத்தனமாய்ப் பயன்படுத்த வேண்டுமா ?

ஆங்கிலத் தாக்கம்
அங்கங்கே உண்டு.
‘யாதும் ஊரே
யாவரும் கேளீர்
எம்மொழியும்
”எம் மொழி” என்பது
எம்தமிழர் சித்தாந்தம்.
ஆதலால் அனுமதித்து
விட்டோம். மரபுமாற்றம்
என்ற பெயரில்.

காதல் மொழியில்
கதறித்தள் புதுக்கவிதை
புதுக் காதலர்க்குப் புது வாய்ப்பு.

“உனது
தும்மல்கள் கூட
எனக்கு
நாதத்துணுக்குகளே.”

“இதயத்துள் உன் இமைகள்
பயிரிட்ட
நாற்றங்கால்களை
வேரோடு பறித்தல்
எத்தனை வலி.”

புதுக்கவிதையைப் புதுப்பித்த
ஒரு வரி,
“காலக் கன்னியின்
கவிதைக் கோலம்.
கவிதைக் கன்னியின்
காலக் கோலம். “

“இரவுகள்
கனவுகள் கருவுறும்
கவிதை நேரங்கள். “

வரதட்சணைக் கொடுமையை
விளக்க
”மரங்கள் மண்ணுடன்
கோபித்துக் கொண்டு
வானத்தை
வாத்ஸல்யிக்கின்றன “

“ஞாபகம் தொலைத்த
மேகக் கனவுகள் “

”வாளியின் முத்தத்திற்காய்க்
கிணற்றின் ஆழத்தில்
சுருண்டு புரளும்
நீராய் எண்ணங்கள்.
நிதமும் அலையும் .”
எனக் கூறுகின்றன.

ஏழைகளைப் பார்த்துப்
பரிவாக,
“இதய வேர்களில்
கோர்த்திருக்கும்
நீர்த்துளிகள்
விழி மலர்களிலும்
உப்பு வேள்வியாகக்
கொழிக்கின்றன “ என்றும்
கன்னிப் பெண்களையும்
எட்டாத ஆசைக்கனவுப்
பட்டச் சிறகுகொண்டு
பறக்கும் இளைஞரையும்
அவர்தம் கானல்நீருக்கு
ஆசைப்படும் வாழ்க்கையையும்.
“விழிகள் நட்சத்திரங்களோடு
உறவாடினாலும்
விரல்கள் என்னவோ
ஜன்னல் கம்பிகளோடுதான் “
என்று பரிந்துரைக்கின்றது.

நேசத்தைப் பற்றி
“உன் கண்களின் வார்த்தைகள்
கனவுப் புத்தகங்களில்தான்
அச்சேற முடியும். “

கொள்கையில்லாத
தனித்துவமற்ற ஆணைச் சாடி,
“நீ
இராமனுக்கு மறுபதிப்பா
என்பது சந்தேகமே. !
ஆனால்
நிச்சயமாய்
இராவணனின் வாரிசுதான்.!”

வாழ்க்கையின்
ஒவ்வொரு துணுக்கையும்
சுவைபடக் கூறுவது.
சமத்துவம் சமத்துவம்
சமத்துவத்தை
முதல் தத்துவமாகக் கொண்டது.
முதலாளித் தத்துவத்தை
முன்னின்று சாடுவது.
வகுப்பில் பாடங்கள்
போரடிக்கும் காலங்கள்
கவிதைகளின் வசந்த காலங்கள்.

முடிவுரை:-

என்றுமே கவிதையுடன்
கவிதையாய்த்
தமிழினிமையில்
வாழ்க்கையை உதறிவிட்டு
அமுதத்தேன் மழையில்
மூழ்கி மூழ்கி
வலம்புரி முத்துக்களை
எடுக்கத்தான் ஆசை.
ஆனால் நனவுலக நிஜங்கள்
பயமுறுத்தி
வாழ்க்கைப் போராட்டத்தில்
கலங்கச் செய்துவிடுகின்றன.
குடும்பத்தில் கலந்துவிட்டால்
இந்தக் கவிதைகள்  கானல் நீராய்
கனவுநேரங்களில்தான்
கண்டு களிக்க முடியும்.
கலந்துரையாட முடியும்.

6 கருத்துகள்:

  1. அப்போதே இப்படியெல்லாம் யோசித்து எழுதியுள்ளீர்களே ! பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  2. வார்த்தைகளைக் கோர்த்து
    வாய்ச்சாலம் பண்ணுவதல்ல இது.
    ‘பொங்கிவரும் வலிமைமிக்க
    உணர்ச்சிகளின் வெளிப்பாடுகள் அவை’
    யாப்பினை அறிந்தும்
    யாப்பினை மீறி வெளிப்படும்
    கவிதா விலாசங்கள்.///

    யம்மாடியோவ்!! எப்படி எழுதியிருக்கின்றீர்கள் 84 லேயே....அருமை அருமை..சொல்லிட வார்த்தைகள் இல்லை..

    கீதா 84 ல் இரண்டாம் வருடம் இளங்கலையா...நான் அப்போது எம் ஏ பொருளாதாரம் முதல் வருடம் தேனு...துளசி இரண்டாம் வருடம் ஆங்கில இலக்கியம்.

    அப்பவே இப்படி எல்லாம் கலக்கியிருக்கின்றீர்களே. செம!!! ஹப்பா செம இன்டெலிஜென்ட்பா....

    பதிலளிநீக்கு
  3. நன்றி விஜிகே சார்

    நன்றி துளசி சகோ, கீத்ஸ் :)

    அஹா கல்லூரிப் பருவப் பசுமைக் காலங்கள்.

    பதிலளிநீக்கு
  4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  5. சும்மா-ல்லாம் கருத்து சொல்ல முடியாது, கவிதையை ரசித்தேன், மிக நன்று

    பதிலளிநீக்கு
  6. நன்றி அசோகன் குப்புசாமி சார் :)

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)