சனி, 16 ஜனவரி, 2016

சாட்டர்டே ஜாலி கார்னர். இல்லறமும் நல்லறமும் ”இசை கேடும் “ பற்றி விசாலி ஸ்ரீராம்.


முகநூலில் தன் பளிச் புன்னகையாலும் பாசிட்டிவ் பகிர்வுகளாலும் என்னைக் கவர்ந்தவர் விசாலி ஸ்ரீராம். விசாலி மேம் என்றால் அம்மா என்று அழைக்கச் சொல்வார். :) சோ பாசப் பெருக்கில் அக்கா வயதிருக்கும் இவரை விசாலிம்மா என்று அழைப்பது உண்டு :)  இவர் தினம் ஒரு ( ஆன்மீகம் & திரை இசை ) பாடல் பற்றி தனது பக்கத்தில் பகிர்ந்திருப்பதை அவ்வப்போது படித்து இன்புற்றிருக்கிறேன். இசை பற்றி மட்டுமல்ல ஆன்மீகம் இல்லறம் பற்றியும் தொடர்ந்து ஆக்கப்பூர்வமாகப் பதிந்து வருபவர். விவரணைகள் அடங்கிய மிகப் பெரும் கட்டுரைகள் படிக்கப் படிக்க சுவாரசியம்.

தினம் ஒரு பூவும் தினம் ஒரு வாழ்த்தும் சாய் படமும் அத்தோடு எழுதப்பட்ட நற்சிந்தனைகளும் அவரிடமிருந்து எனக்கு இன்பாக்ஸில்  பரிசாகக் கிடைக்கும். அவரிடம் சாட்டர்டே ஜாலிகார்னருக்காக சில கேள்விகளை முன் வைத்தேன். அவர் கூறிய பதில்கள் இதோ. :)

விசாலி மேம்  இன்றைய இல்லறங்கள் பற்றியும் இன்றைய திரைப்பாடல்கள்  பற்றியும் கூற முடியுமா. ?

///இல்லறம் இன்று நல்லறமா? இல்லறம் என்பது நல்லறமாகும்....இதுவே வள்ளுவன் சொன்ன சொல்லாகும்...குடும்பத்து விளக்கே மனைவி என்றாகும்...கோபத்தை மறந்தால் சொர்க்கமுண்டாகும்...இது இல்லறத்துக்கு அன்றைய விளக்கம்.நம் தாய் தந்தை,தாத்தா பாட்டி ஏன் ஓரளவு நம் வரைக்கும்வந்தஇல்லறம்.பிடித்ததோ,பிடிக்கலையோ,தெரிந்ததோ,தெரியலையோ.

...நம்ம ஒன்றாம் வகுப்பு புத்தகத்தில் கண்டபடி....படத்தில் அப்பா...ஈசி சேரில் அமர்ந்து பேப்பர் படிப்பார்,அம்மா அடுப்பை ஊதி ஊதி சமையல் பண்ணுவார்,பக்கத்தில் குட்டிப் பையன் ஒருவன் பாடம் எழுதுவான்....ஒரு தங்கச்சிப் பாப்பா தவழ்ந்து கொண்டிருக்கும்.....இது அன்றைய இல்லறம்.கணவன் என்றால் வேலைக்குப் போயி சம்பாதித்துக் கொண்டு வரணும்....மனைவி குடும்பத்தை பாங்காக நிர்வாகம் பண்ணணும்,மாமனார் மாமியாரை மதிக்கணும்,மாலையிட்ட கணவனையே துதிக்கணும்,சாமக் கோழி கூவுமுன்னே எழுகனும்...கூடி பெருக்கி,சமைத்து,அவளையும் பார்த்துக்கணும்....மறுநாள் இதே கதைக்கு தயாராகணுமே....அவளும் படித்திருந்தால்,ஏதோ குழந்தைகளுக்கு சொல்லித் தரும் வகையில்(அன்று அது போதும்)அவளுக்கு குடுத்த நகையோ,பணமோ சொத்தோ....ஒரு பாதுகாப்பிற்கு.....ஏதோ ஒரு அசம்பாவிதம் வரும்போது அழுது கொண்டு மூலையில் உட்காராமல்....அன்று நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையுமாய் அவளும் உழைத்து பிள்ளைகளை கரைசேர்க்க அங்கே உண்மையான பெண்ணியம்..(வுமன்ஸ் லிப்)எழுந்தது....


அதற்குப் பின் வந்ததம்மா ஒரு யுகம்....அது கலியுகமா...கொலையுகமா?பெண்கள் படித்தார்கள்,பட்டம் வாங்கினார்கள்,நல்ல வேலைக்குப் போனார்கள்....நிறைய சம்பாதித்தார்கள்....விருப்பப் பட்டவனை மணந்தார்கள் என்னென்னவோ கனவு....ஏராளமான எதிர்பார்ப்பு....நானும் தான் உழைக்கிறேன்...தினமும் ஒரு புலம்பல்....தினமும் ஒரு வெறுப்பு....காலத்தின் கோலம்....காதலில் பெற்றார்களோ இல்லையோ...கடமையில் பெற்றார்களோ....பிள்ளை வேறு வருகிறது.....இன்னும் இடியாப்ப சிக்கல்...பணம் பணம் தேடி ஓடி....வீடு பூரா இருந்த மனிதத் தலைகள் மறைந்து...துரத்தப்பட்டு...அங்கே நுழைந்தது வெறும் மிஷின்கள்...அரைக்க,துவைக்க,தலை காய வைக்க,பாத்திரம் கழுவ....வீட்டிலேயே திரைப்படம்,கையிலே ஆளுக்கு ஒரு கை பேசி,மடியில் ஒரு கணினி.....மனம் பூரா வெறுப்பு....பேசிக் கொள்வது கூட மெஷினில்..."கணவன்பெரிதென்று மணந்தார்கள் மங்கையர்கள்...உழைப்பாள் அவளென்று மணந்தார்கள் நாயகர்கள் ....மனையாள் பணிசெய்தாள் மணவாளன் வாழலாம் அதிலே வருமானம் ஆனாலும் அவமானம்.....இது சில இடத்தில்....வீடுகள் தோறும் இதுதானே கேள்வி இன்று விடிந்தால் ஒரு எண்ணம்....எல்லோர்க்கும் தனி உள்ளம்....இருவரும் உழைத்தால் தான் இந்நாளில் பசி தீரும் இது ஒரு பக்க வாதம்....அதுவே பெரிய பக்கவாதம் பல இடத்தில்....கணவன் ஒரு வழி....மனைவி ஒரு வழி......குழந்தை தனி வழி....பாவம்...இது காலம் செய்யும் லீலை இன்று......உள்ளுக்குள்ளே புகைந்து வெந்து போன மகளிர் இன்று இல்லை....எடுத்தோம் கவிழ்த்தோம்.....உடனே விவாஹரத்து....எவ்வளவு அவசரமாக துணை தேடினார்களோ அவ்வளவு அவசரம் ரத்து செய்வதில்....குழந்தை கதி....இங்கே சில நாள்...அங்கே சில நாள்... ..இதுவா பெண்ணியம்....இதுவா.....வுமன்ஸ் லிப்.....இதற்கு ஊடகங்கள்,பத்திரிக்கைகள்,திரைப் படங்கள்...ஏன் அரசாங்கம் கூட ஒத்து...இதை எல்லாம் பார்த்துக் கொண்டு மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் விஷத்தை தொண்டையிலும்,கனத்தை நெஞ்சிலும் சுமந்து கொண்டிருக்கும் பெற்றோர்களே...இந்த இல்லறம் நல்லறமுமில்லை....இதை விடுத்து முதியோர் இல்லத்தில் மீதி இருக்கும் நாளையாவது நல்ல சிந்தனையோடு கழிப்பதில் தவறொன்றுமில்லை என்பதே என் தரப்பு நியாயம்..

********************************************


தலைமுறைகள்.... முதலில் இது எதைப் பற்றி என்று சொல்கிறேன்....இது திரை இசை ரசனை பற்றியது...எனக்கு தெரிந்ததைப் பற்றித் தானே நான் பேச முடியும்!!!  அரசியலோ...கிரிக்கெட்டோ...ஓவியமோ...இதெல்லாம் பற்றி மூச்...எனக்குத் தெரியாது...நான் இங்கு ஆஜராகவும் மாட்டேன்.... முதலில் 20..20 ஆக இடைவெளியைப் பகிர்ந்து கொள்ளலாம்...என் தந்தையின் தந்தை...சிறிய தந்தை...இவர்கள் எனக்கு கிட்டத்தட்ட 60 வருடம் முந்திய காலத்தை சேர்ந்தவர்கள்......என் தந்தையின் தந்தை,சித்தப்பா இவர்கள் எல்லாம் எஸ்.ஜி.கிட்டப்பா ரசிகர்கள்...ஒன்று...அவர் செங்கோட்டை..எங்க தாத்தாவின் ஊர்.....இரண்டாவது அந்தக் கால நாடகப் பிரியர்கள்...மூன்றாவது அவர் பாடல் வரிகள்...ஆர்மோனியப் பெட்டியுடன் பாடினால் கிட்டத்தட்ட கடை கோடி ரசிகன் வரை மைக் இல்லாமல் கேட்கும் என்பதால்...அவர் பாடல்கள் அமைந்த ராகங்கள் எத்தனை கடினமானதானாலும் எளிமைப் படுத்திய அவர்கள் இசை நயம்....கூடவே சொப்பன வாழ்வில் மகிழ்ந்தேன்...அம்பா மனம் கனிந்து ...மன்மத லீலையை...எம்.கே.டி ....மனமோஹனாங்க அணங்கே ..ஜி.என்.பி.....மனம் குளிர கான் குளிர,ஆனந்தமேன் சொல்வேனே...எந்தன் இடது தோளும் கண்ணும் துடிப்பதென்ன...ப்ருஹி முகுந்தேதி...கிரிதரகோபாலா...எம்.எஸ்.அம்மா...இந்த நிலையில் இருந்தது... 

என் தாய்...தந்தை எனக்கு முந்திய தலைமுறை....அவர்கள் மனதில் ஊறிய இந்த மெட்டுக்கள் எங்கள் வரை தேக்கி வைக்கப் பட்டது....அத்துடன்..டி ஆர் மகாலிங்கம் ...காயாத கானகத்தே.....ஆண்டவன் தரிசனமே...எம்.எல்.வி அம்மாவின் குயிலே உனக்கு...ஆடல் காணீரோ,அய்யா சாமி...அந்தி மயங்குதடி....பின் வந்த டி .எம்.எஸ் ..தூக்கு தூக்கியின் அத்தனை பாடல்கள்...பின்னால் அவரின் பாடல்கள்...இவை எல்லாம் மதுவுண்ட வண்டாக்கியது...


 அவர்களுக்கு அடுத்த 10 வருடத்தில் பிறந்த என் சகோதரர்ககள்(பெரியம்மா பிள்ளைகள்)அவர்களால் அம்பிகாபதி..அதுவும்குறிப்பாக சிந்தனை செய் மனமே..இசை மணியாரின் கலை மங்கை உருவம் கண்டு ..இவையெல்லாம் படிப்புடன் படமாகியது....


என் தலைமுறையில்,ஏற்கெனவே மூளை வங்கியில் இருந்த கிட்டப்பா,ஜி என் சார்,எம்.எஸ் அம்மா,மகாலிங்கம்,எம்.எல்.வி அம்மா இசை மணியார் ,டி எம்.எஸ் ,இவர்களுடன் சுசீலாம்மா,ஜிக்கி அம்மா,லீலாம்மா,ராஜா.பி.பி.எஸ்,எ எல் ஆர்...சூலமங்கலம்,ராதா ஜெயலக்ஷ்மி,இசை சித்தர்,திருச்சி லோகநாதன்,கண்டசாலா,ஜானகி அம்மா(அந்த நாள்)ஜமுனா ராணி,ஈஸ்வரி அம்மா,சந்திரபாபு,இவர்கள் பாடல் வேதமாகியது... பாபநாசம் சிவன் எஸ்வி வி ..சிஆர்சுப்பராமன்,ராஜேஸ்வரராவ்,ஜி.ஆர்,கே.வி.எம்,மெல்லிசை மன்னர்கள் ...இவர்கள் எல்லாம் கடவுள் ஆனார்கள்....இசை என்றால் என்ன என்பது பிறப்பிலே ஓரளவு ஞானம் இருந்திருந்தாலும் ...கற்றுக் கொண்டது இவர்களால் தான்...இன்று வரை நல்ல இசையின் துணையோடு நிற்பது இவர்கள் தந்த ஞானம் தான்....

என் பிள்ளைகள் தலைமுறை சுமார் 40 வருடங்கள் முதல்.....இசைஞானியின் பக்கம் திரும்பியது...எஸ்.பி.பி,வாணி ஜெயராம்,யேசுதாஸ்...இவர்கள் என் காலத்திலேயே வந்திருந்தாலும் இவர்கள் காலத்தில் உச்சம் தொட்டனர்......அவர்கள் கேட்ட இசை அவர்கள் வேதமானது....அப்போதே இந்த முக்கல் ,முனகல்...கொஞ்சம் கூச வைக்கும் வரிகள் முன்னணியில்......அன்று என் இதயம் தொட்டவர் மலேசியா வாசுதேவன் அவர்கள்...


இந்த கால கட்டத்தில் வந்தவர்களோடு ஒரு சிறு பிடிவாதம்....அவர்கள் கேட்கும் இசை தேவகானம்...மற்றவைகளைக் கேட்பது கூட இல்லை....அது என் போன்ற சிலரை வெகுவாகப் பாதித்தது...ஒரு கால கட்டத்தில் ஒரு சில பாடல்கள் தவிர வேறு பாடல்கள் செவி வழி புக மறுத்து செவுடாக்கியது...அதனால் கூட இந்த தலை முறையுடன் எனக்கு ஒரு உறவு விரிசல் ஏற்பட்டது என்பது உண்மை...தேவா அவர்களின் இசை எனக்கும் பிடித்தது....அதில் ஒரு பணிவு இருந்தது.....பின்னர் அடுத்த இருபது ரெஹ்மான்.......சாதனைகளுக்கு அப்பாற்பட்டு அவரின் தனிப்பட்ட எளிமை வியக்க வைத்தது...அவருடன் வந்த ஹரிஹரன் குரல் என்னையும் கட்டிப் போட்டது..சித்ரா இசை மயக்கியது...சங்கர் மகாதேவன் குரல் உயரப் பார்க்க வைத்தது...ஸ்ரெயா கோஷல்..விஜய பிரகாஷ், கிறங்க வைத்தது...வித்யா சாகர் இசை கட்டிப் போட்டது..ஸ்ரீநிவாஸ்....குரல் ஈர்த்தது....


இப்போது என் பேரன் காலம்...என்னைவிட 55 வயது இளையவன்....அவன் இப்போது திரைப் படப் பாடல் கேட்க ஆரம்பித்ததிலிருந்து (நான் இதையெல்லாம் எதுவும் கேட்பதில்லை...என் காதில் ஈயத்தை காச்சி ஊற்றிக் கொண்டிருக்கிறேன்)......இந்தக் காலாம திரை இசையின் என்ன காலம் .........கலி காலம்...வரிகள் என்ன.....இசையின் ரகம் என்ன...திரையில் அது வரும் காட்சியின் அலங்கோலம்....ஆட்டத்தின் அசிங்கம்....பாடுபவர்களின் தரம்....... பயமாக இருக்கிறது.......ரொம்ப பயமாக இருக்கிறது .....3 வயசில் அம்மா இங்கே வா வா சொன்ன குழந்தை இப்போது காலத்தின் கட்டாயம் ...பாடும் பாட்டுக்கள் (பெற்றோர்களின் ஊக்கம் வேற).......டண்டனக்கா...ணக்கா ....தண்டமாரி ஊதாரி ஒட்டிக்கிட்டேன் நீ நாறி ....இன்று என் பேரன் பாடினது......இதற்கு என்ன அர்த்தம்.....அவனுக்கு இல்லை...நமக்கே தெரியாது.....


எனக்கு இன்றைய பாடல்கள் இங்கு குறிப்பிடும் அளவு எதுவும் தெரியாது...இது ,இன்று என்னை மிகவும் பாதித்தது.....ஒரு வசனம் ஞாபகம் வந்தது...கொஞ்சம் மாற்றி இருக்கேன்..."இறையனாரும் எம்பெருமானும் அகஸ்தியரும் கட்டிக்காத்த இந்த தமிழ் சங்கத்தில் பிழையான பாட்டுக்கு என் மன்னன் பரிசளிக்கிறான் என்றால் அதைக் கண்டு வருத்தப் படுபவனும் அடியேன் தான்"...இது ஒரிஜினல்....

நான் இப்படி சொல்கிறேன்.."கிட்டப்பாவையும்,எம்.கே டியையும்,டி எம்.எஸ் ,பி.பி எஸ் .....(ஆண்குரல்கள் ...அதிலும் மாதிரிக்கு ஒன்று என்று குறிப்பிட்டிருக்கிறேன் )..என் தலை முறையில் இன்று கொலைவெறியும்........தண்டமாரி ஊதாரியும் .....நாறுகிறதே.......தலையில் கை வைத்துக் கொண்டு இடிந்து போய் நான்.......கேட்டு மகிழ்ந்து போகும் என் மகள்.......

 இன்னும் என்னென்ன வரப் போகிறதோ.......தேன் வந்து பாய்ந்த என் காதுகள் புண்ணியம் செய்தவை.....இதற்கு மேல் சொன்னால் அடுத்தது பகை.....எனக்கு பின் வந்த தலை முறை கொஞ்சம் விழித்துக் கொண்டிருந்தால் இவ்வளவு தூரம் வந்திருக்குமா?......

திருமால் சீர் கேளாத செவியென்ன செவியோ...நாராயணா என்னாத நாவென்ன நாவோ......இதுதான் நிதர்சனம்.... இசை என்று வந்தால் நல்ல இசையைக் கேளுங்கள் பாடுங்கள்...ஊதாரி...நாதாரி.......தமிழே சரியாகத் தெரியாத குழந்தைகள் கூட தெளிவாக இப்படி அவலம் பாடணுமா......சிந்தியுங்கள்........

டிஸ்கி :-  இன்றைய இல்லறம் பற்றி நிறைய யோசிக்க வேண்டியிருக்கிறது விசாலிம்மா. உண்மைதான்.  பணத்தைத் துரத்திப் பலவற்றை இழக்கிறோம் என்பது உண்மைதான். இது ஒரு விஸியஸ் சர்க்கிள் போலத் தொடர்கின்றது. பக்கவாதம் என்று சரியாகத்தான் சொல்லி இருக்கின்றீர்கள். வாழும்வரை முதியவர்களும் இளையவர்களும் போராடித்தான் ஆகணும் போல.. ஹ்ம்ம்.

திரை இசையும் பாடலும் திரிந்தது பற்றித் தலைமுறை வரிசைப்படிக் கொடுத்திருக்கின்றீர்கள் . ரசித்துப் படித்தேன். ஆனால் இப்போது வரும் பாடல்களும் இசையும் நாம் கேட்ட பாடல்கள் போல ரசிக்கமுடியவில்லை என்பது உண்மைதான். அதையும் மீறி அங்கங்கே சில நல்ல பாடல்கள் வந்தாலும் இந்த டப்பாங்குத்துகள்தான் குழந்தைகளைப் போய்ச் சேருகின்றன என்பது அவலம் மிகுந்த ஒன்று. இசையில் இல்லை வார்த்தைகளில் மாற்றத்தைக் கொண்டு வாருங்கள் என்றுதான் இசையமைப்பாளர்கள் முன்னும் பாடலாசிரியர்களிடமும் கோரிக்கையாகச் சொல்ல முடிகின்றது. ஹ்ம்ம் பார்ப்போம் மாற்றம் நிகழலாம்.

சாட்டர்டே ஜாலிகார்னருக்காக சிறப்பான இரு விஷயங்கள் பற்றி அறிவுபூர்வமாக சிந்திக்கும்படி அழகான தகவல்கள் கொடுத்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி விசாலிம்மா :) வாழ்க வளமுடன். :) 

11 கருத்துகள்:

  1. இன்றைய இல்லறங்கள் பல
    உறவுகளை துறந்த இல்லறங்கள்தான்

    பதிலளிநீக்கு
  2. ஆஹா.... இல்லறம் பற்றியும் சினிமா பாடல்கள் பற்றியும் விளக்கமாக விபரமாக பேசியிருக்கிறார்...

    வாழ்த்துக்கள் அம்மா.... அக்கா....

    பதிலளிநீக்கு
  3. //வாழும்வரை முதியவர்களும் இளையவர்களும் போராடித்தான் ஆகணும் போல..//

    பேட்டி அருமை. பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  4. இசையின் தலைமுறை, இசையும் தலைமுறைகளும், இசையால் தலைமுறைகளின் பாகுபாடு, வாழ்க்கை முறைகளின் பரிணாமங்கள் என்று அனைத்தையும் பற்றி ஒரு அருமையான அலசல்! விசாலி ஸ்ரீராம் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி! - பாலாஜி,

    பதிலளிநீக்கு
  5. அருமையான பேட்டி! கருத்துக்கள் சிறப்பு! நன்றி!

    பதிலளிநீக்கு
  6. நன்றி ஜெயக்குமார் சகோ

    நன்றி குமார் சகோ

    நன்றி கோபால் சார்

    நன்றி கிருஷ்ணமூர்த்தி பாலாஜி, சரியா சொல்லி இருக்கீங்க :)

    நன்றி தளிர் சுரேஷ் சகோ

    பதிலளிநீக்கு
  7. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  8. அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி. பகிர்ந்த விதம் அருமை.

    பதிலளிநீக்கு
  9. நன்றி பாலாஜி

    நன்றி ஜம்பு சார்

    பதிலளிநீக்கு
  10. THENU.........NANRI SOLLA UNAKKU VARTHAIYILLAI ENAKKU....GOD BLESS YOU...

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)