செவ்வாய், 17 மார்ச், 2015

சாரட்டுகள்.( பாகீரதியில் )

பகலில் காண்பதை விட
இருளில் குளம்புச்சத்தத்தோடு
திரைப்படங்களில் வரும்
சாரட்டுகள் கிளர்ச்சியூட்டுபவை.
இரவையும் ரகசியத்தையும்
ஒருங்கே சுமந்து வரும் அவை
அரண்மனையிலிருந்து ஆசைநாயகி வீட்டுக்கோ
சதியாலோசனைக் கூட்டத்துக்கோ
உயிர் தப்பி ஓடவோ
ஒரு மறைவான காதலைச் சந்திக்கவோ
பயணப்படுகின்றன.
மிகச் சொற்பமானவைகவர்ச்சியானவை
அரசர்களுக்கு மட்டுமே உரியவை,
பல ஜன்னல்களும் பட்டுத்திரைச்சீலைகளும்
வேலையாட்களும் கொண்டவை
அந்தப்புரப் பெண்கள் ஆங்கிலச் சீமாட்டிகளின்
தந்தக்கைகள் பிடித்து ஏற 
தங்கக்கைப்பிடிகள் பொருத்திய பெருமைக்குள்ளானவை..

குதிரைகள் இல்லாவிட்டாலும்
சாரட்டுகள் தயார்நிலையிலேயே இருக்கின்றன.
ஒரு ஏலக்கூடத்திலோ
பழைய அரண்மனையிலோ
வாடகை நிலயத்திலோ
ஒரு புகைப்படமாகவோ
கண்காட்சி ஓவியமாகவோ
துருப்பிடித்த இரும்பாகவோ

அவைகளைப் பார்க்கும் அக்கணம்
புலன்களில் பிடறி சிலிர்க்கும்
ஞாபகக் குதிரைகள் வார்ப்பட்டி கோர்த்து
வேகமாய் ஓடத் துவங்குகின்றன.
அதன் பின்னணியில்
இறந்து கிடந்த பூகோளமும் சரித்திரமும்
உயிர்பெற்றுப் பெருமிதமடைகின்றன.
டிஸ்கி :- இந்தக் கவிதை ஃபிப், 2015 பாகீரதியில் வெளியானது.

3 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)