செவ்வாய், 17 மார்ச், 2015

தமிழ்க்குஷியில் மகளிர் தினச்செய்தி (உரை ) ( 2015 ).



என்னுடைய பெயர் தேனம்மைலெக்ஷ்மணன். மகளிர் தினம் பற்றிய  என் கருத்தைக் கேட்ட தமிழ்க்குஷி.காமுக்கும் ஆர்ஜே திரு குமரன் அவர்களுக்கும் என் முகநூல் வலைத்தளத் தோழியர் அனைவருக்கும் மகளிர்தின வாழ்த்துகள். 

வண்ணங்களால் நிறைந்தது வாழ்வு. ஆனால் இலக்கியத்திலாகட்டும் இதிகாசத்திலாகட்டும் பெண்ணைப் பணயமாக வைத்துத்தான் நடக்கிறது. நல்லவளாகவோ கெட்டவளாகவோ சித்தரிப்பதில் அவை முக்கியப் பங்கு வகிக்கின்றன. சீதையும் த்ரௌபதியும் இல்லாமல் ராமாயணம் மகாபாரதம் இல்லை. கணவன் சொல் கேட்டு ஐயம் தீர்க்கத் தீப்புகுந்தாள் சீதை. நெருப்பினுள்தான் நீர்க்கப்படுகிறது வாழ்வு. 

இன்றைக்குப் பெண்கள் சந்திக்கும் சவால்கள் என்றால் அவர்கள் தன்னை மீறி வெளிவருதல். தான் யார், தன்னால் என்ன செய்ய இயலும் எனக் கண்டுணர்தல், அதை சமூகத்துக்கும் குடும்பத்துக்கும் ப்ரகடனப் படுத்துதல் அதன்பின் அதைச் சாதிக்கத் தொடர்ந்து போராடுதல் அப்பிடின்னு நிறைய இருக்கு.

உடற்கூறு , மனத் தடுமாற்றம் பருவ வயதின் கவர்ச்சி கடந்து தன்னைக் கண்டுபிடிக்க பதின்மவயது முடியும்போதுதான் இயல்கிறது. குடும்பத்தின் அன்புப் பிடியை விட்டு வெளியுலகம் வந்து சாதிக்க இன்னும் தடை இருக்கவே செய்கிறது. ஏனெனில் வெளி உலகம் அவ்வளவு இம்பாலன்ஸ்டா இருக்கு. ஒரு புறம் சாதனை பெண்கள். இன்னொரு புறம் பாலியல் துன்புறுத்தல், இதை எல்லாம் கடந்து அவங்க சாதிக்க உலகம் தூண்டுகோலாகத்தான் இருக்கு. மிகச் சிறிய விழுமியங்களில் பெண்ணை ஒரு உயிரினமாகக் கூடக் கருதாத போக்கு இருக்கு. அதுக்கும் சமூகம்தான் காரணம். 


நம்ம சமூகத்துல ஆண் பெண் இரு குழந்தைகளும் வளர்ப்பு முறையில் சம வாய்ப்புகள் வழங்கப்படணும். பள்ளி கல்லூரிகளில் மாரல் சயின்ஸ் , வால்யூ எஜுகேஷன் போன்ற வகுப்புகள் கொண்டு வரப் படணும். அப்பிடி இருந்தா பொது இடங்களில் ரகசிய காமிரா வைச்சு பதிவு செய்து பெண்களை இழிவுபடுத்துறதும் ஹானர் கில்லிங்க் என்ற பெயரில் மதம், சாதி இனம் மாறிக் காதலிப்பவர்களைக் கொல்வதும், பெண் என்றாலே போகப் பொருள்தான் என நினைக்கும் ஆணாதிக்க உலகமும் மாறும். 

ஒரு கொலையை  சைக்காலஜி என்ற பெயரில் நியாயப்படுத்துவதாக ஒரு டாகுமெண்டரி பத்தி கேள்விப்பட்டேன். நீங்க பார்க்க வேண்டாம் ரொம்ப உடைஞ்சு போயிடுவீங்கன்னு என் பையனே சொன்னதால பார்க்கல. எனக்கு அந்தத் தெம்பும் இல்லை. ஒரு கொலையை நியாயப்படுத்தும் மனிதர்களுக்கும் சொல்ல ஒரு பக்கம் இருக்கு அதைக் கேட்டே ஆகணும் என்கிற மனோபாவம் உள்ள மனிதர்கள் மத்தியில் வாழ்ந்துக்கிட்டு இருக்கோம் நாம். நம் வீட்டில் உள்ள ஒரு குழந்தைக்கு இப்படி நேர்ந்தால் நம் மன நிலை இப்படி சாத்வீகமா இருக்குமா. ஒரு 80 வயது மூதாட்டியை டெல்லியில் பாலியல் வன்புணர்வு செய்த மனிதன் பற்றி படித்தேன். 

இப்போது எல்லாம் ட்ரெஸ் கோட் மற்றும் பெண்கள் அகால நேரத்தில் வெளியுலகிற்கு வருவது பற்றி பல கருத்து சொல்றாங்க. ஐடி உலகத்தில் பெண் 24 மணி நேரமும் பணிபுரிய வேண்டி இருக்கு.தேவைன்னா வேலைக்குப் போகச் சொல்லும் சமூகமே அகால நேரத்தில் இப்படி ஊரைச் சுத்தக்கூடாதுன்னும் சொல்றது விநோதம்.


பெண்களை சக்தி மாதா என்று சொல்லும் தேசத்தில்தான் இன்னும் ஒரு சராசரி சக மனித உயிரா மதிக்கப்படாத கொடுமை இருக்கு. உலகம் பூரா இருந்தாலும் இந்தியாவில் அது தொடர்வது வெட்கக் கேடானது. 
 
பெண் குழந்தைகளுக்கு உலகம் இப்படியானதுதான் இதை எப்படி எதிர்நோக்கணும்னு கற்றுக் கொடுக்கணும். கராத்தே போன்ற கலைகளைப் பயிற்றுவிக்கணும். தன்னம்பிக்கை மட்டுமல்ல எந்தச் சூழ்நிலையில் எப்படி செயலாற்றணும். என்றும் கற்பிக்கணும். தங்களோட இலக்கை அவங்க எட்ட ஒவ்வொரு பெற்றோரும் உதவி செய்யணும். திருமணம் முக்கியமானதுதான் என்றாலும் திருமணம் தாண்டியும் சாதிக்க முடியும்னு அவங்க உணரணும். தன்னைத் தனிமைப்படுத்திக்கக்கூடாது. அவங்க கோரிக்கைகள் நியாயமா இருந்தா குடும்பத்தினர் மட்டுமல்ல யாருமே எதிர்க்க முடியாது. 

அன்புக்கு ஏங்கும் சராசரி மனுஷிகள்தான் அனைவரும். பள்ளிக்கூடத்தில் கல்லூரியில் பணியிடத்தில் பாலியல் சங்கடங்களையும் தொல்லைகளையும் தாண்டி வரும் பெண்களுக்கு பூப்பாதை அமைக்க வேண்டாம். ஆனா அவங்க பாதையில் கல்லையும் முள்ளையும் கருத்து என்றபெயரில் தூவாமல் இருக்கலாம். 

முகநூல் ட்விட்டர் போன்ற தளங்களை பெண்கள் உபயோகிக்கக் கூடாது புகைப்படம் போடக்கூடாதுன்னு சொல்றாங்க. ஆனா அந்தப் புகைப்படங்களைத் தவறா உபயோகிப்பது தப்புன்னு சம்பந்தப் பட்ட குற்றவாளிக்கு யாரும் அறிவுரை கொடுக்குறதில்லை. 

பெண்கள் ஆன்லைன் தொடர்புகளில் எச்சரிக்கையா இருக்கணும். சில சமயங்களில் சில அசம்பாவிதங்கள் நடந்துட்டா அதைப் பெரிசா எடுத்துக்காம எப்படிக் கடந்து வரணும்னு கற்பிக்கணும். 

சில பேர் தங்கள் குழந்தைகள் கணவருக்கான சில உடல் மனக் குறை நோய்களையும் எளிதாக எடுத்துக் கொண்டு வாழ்ந்துட்டு வர்றாங்க. அவங்க தன்னோட உடற்கூறுக் குறையையும் கடந்து இந்த சமூகத்துக்கு நிறைய சேவை செய்து வர்றாங்க. எழுத்தாளராகவும், சமூகப் போராளியாகவும், களப் பணியிலும் கார்ப்பரேட் பணியிலும் சமூக சேவையிலும் டாக்டர் தொழிலிலும் ஈடுபடும் பல பெண்களை முகநூல் மூலமா சமீபகாலமா அதிகம் தெரிஞ்சுக்குறேன். அந்தப் பெண்களுக்கு ஒரு ஹேட்ஸ் ஆஃப். 

மேரி க்யூரி ஹெலன் கெல்லர் ரோசா பார்க்ஸ் சின்னத்தாய்னு பல எடுத்துக்காட்டுகள் நம் முன்னே இருக்கு. ஆனா என் சாதனை அரசிகள் நூலில் இருக்கும் மோகனா சோமசுந்தரம், ரம்யாதேவி ஆகியோரை நான் இந்த மகளிர் தினத்தில் பாராட்ட விரும்புறேன். 

மோகனாம்மா கான்சரால் பாதிக்கப்பட்டும் துணிச்சலோடு போராடி சில சிகிச்சைகளுக்குப் பின் இப்போதும் களப்பணி ஆற்றிக்கிட்டு இருக்காங்க. 18 சங்கங்களில் யூனியன் லீடரா அசுரப் பணி செய்றாங்க. 

தீக்காயங்களால் பாதிக்கப்பட்ட ரம்யா தேவி  45 சர்ஜரிகளுக்குப்பின் தன்னை மீட்டு பொதுநல சேவையும் செய்துட்டு வர்றாங்க. இன்னும் திருஷ்காமினி சாஸ்த்ரிபவன் யூனியன் லீடர் மணிமேகலைன்னு பலரை சொல்லலாம். 

நம் சமூகத்தின் அச்சாணியாத் திகழும் நம்மைத் தன் செயல்களாலும் சிந்தனைகளாலும் புதுப்பிக்கும் அவங்க எல்லாருக்கும் இந்த மகளிர் தினத்தில் என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிச்சுக்குறேன். அதற்குத் தளமைத்துக் கொடுத்தமைக்கு நன்றி தமிழ்க் குஷி.  

டிஸ்கி :- ஆடியோ ஃபைல் கேட்டு இருக்கிறேன். கிடைத்ததும் பகிர்கிறேன். 

இதையும் பாருங்க.

சர்வதேச மகளிர் தினத்தில் தமிழ்க் குஷியில் பெண்கள் தினச் செய்தி


4 கருத்துகள்:

  1. //சர்வதேச மகளிர் தினத்தில் தமிழ்க் குஷியில் பெண்கள் தினச் செய்தி//

    ஒரே குஷியாகத்தான் உள்ளீர்கள் ...... நீங்கள் மட்டுமல்ல .... நாங்களும் தான்.

    பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. அது போல் சைக்காலஜி வேண்டவே வேண்டாம் என்பதே சரி...

    தமிழ்க் குஷிக்கு எங்களது நன்றிகளும்...

    பதிலளிநீக்கு
  3. நன்றி கோபால் சார்

    நன்றி தனபாலன் சகோ

    பதிலளிநீக்கு

  4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)