செவ்வாய், 9 டிசம்பர், 2014

நிலவுத் தேனீயும் சூரியப் பட்டாம்பூச்சியும்.

1.உன் நினைவு மகரந்தத்தோடு
பட்டாம் பூச்சிகள் சுற்றுகின்றன..
சேகரிக்கும் பூவாகிறேன்.

***********************************

2. உன்னைத் தேடித்தேடிக்
களைக்கும் இமைகள்
உன் வருகைப் பூ மலர்ந்ததும்
படபடத்து பட்டாம்பூச்சியாகின்றன..


**************************************
 
3. தங்கப் பட்டாம்பூச்சியாய் சூரியனும்
வெள்ளிப் பட்டாம்பூச்சியாய் நிலவும்
பூமிப்பூவை மாறி மாறி மொய்த்தபடி..

***************************************


4. எதிர்வீட்டுக் குழந்தை
அனுப்பிய முத்தப் புறாக்கள்
காற்றில் சப்தமிட்டு
கன்னத்தில் எச்சமிடுகின்றன..

**************************************

5. இரவுப் பூவை
உறிஞ்சியபடி பறக்கிறது
நிலவுத்தேனீ..

***************************************

6. இசைத் தேன்..
******************

வண்ணங்களின் இசையை
சிறகசைத்து  இசைத்தபடி
வருகின்றன பட்டாம்பூச்சிகள்..
மயங்கி விரிகிற பூவின் காதில்
தேன் சுரக்கத் துவங்குகிறது..

****************************************

7. ஓவிய வகுப்பில்
கரும்பலகையில்
பெரிதாய்ப் பிறக்கும்
பட்டாம்பூச்சியோடு
நோட்டுப்புத்தகங்களில் பிறக்கும்
குட்டிப் பட்டாம் பூச்சிகள்
கைகோர்க்கத் துவங்குகின்றன..

**************************************

8. உன் பார்வைப்பூக்கள்
என்னை நோக்கி விரிய விரிய
பட்டாம்பூச்சியாய் மிதக்கத் துவங்குகிறேன்.

*********************************************

9. தந்தைப் பூ தாய்ப்பூ
குட்டிப்பூ  மூன்றையும்
கன்னம் தடவி குசலம் விசாரிக்கிறது
சூரியப் பட்டாம்பூச்சி..

*****************************************

10. ஒவ்வொரு சொட்டுத்தேனையும்
அனுபவித்துப் பருகி
அந்தந்த நிமிடங்களில்
வாழ்கிறது பட்டாம்பூச்சி.

****************************************

11. ரீங்காரச் சாவி கொண்டு
பூக்களைத் திறந்து
தேனருந்திச் செல்கிறது
பட்டாம்பூச்சி..


***************************************

12. பூவின் மொழியில்
(காது) மடல்களில் பேசி
தேனாய்க் கனிய வைக்கிறது
பட்டாம்பூச்சி.

************************************

13. காமக் காற்றைப் பறந்துகடந்து
காதல்தேனில் மயங்கி
வீழ்ந்து கிடக்கிறது பட்டாம்பூச்சி

************************************

14. ஒவ்வொரு பூவிடமும்
அதற்கான மொழியில்
பட்டாம்பூச்சி பேசிக் களிக்க
மலர்ந்து சிலிர்க்கின்றன பூக்கள்.

*************************************

15. பூக்கள் தங்கள் காதுகளைத்
திறந்தபடி காத்திருக்கின்றன
பட்டாம்பூச்சிகள் சொல்லும்
ரகசியத்தைக் கேட்க.

டிஸ்கி:- இந்தக் கவிதைகள் 16- 28, 2014 புதிய தரிசனம் இதழில் வெளிவந்தவை. 


6 கருத்துகள்:

  1. நிலவுக்கும் கதிருக்கும் பூமிக்கும் கூட இறக்கை முளைத்துவிட படபடக்கும் பட்டாம்பூச்சிக் கவிதைகள் அற்புதம். பட்டாம்பூச்சிக் கூட்டத்துக்குள் ஊடுருவிப் பறந்த முத்தப்புறாக்கள் இட்ட கன்னத்து எச்சம் உச்சம். பாராட்டுகள் தேனம்மை.

    பதிலளிநீக்கு
  2. மலரைச் சுற்றும் வண்டு போல
    கருத்து மாறாது சுற்றிச் சுற்றி வரும் அற்புதமான
    கவிதைகளைப் படிக்கப் படிக்க
    கள்ளுண்ட வண்டானோம்
    மனம் கவர்ந்த படைப்பு
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. மிக அருமையான பின்னூட்டத்துக்கு நன்றி கீது & ரமணி சார். !!!!!

    பதிலளிநீக்கு
  4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  5. அருமையான கவிதைகள். பாராட்டுகள் சகோ.

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)