புதன், 28 மே, 2014

கனக்கும் இறக்கைகள்.

பறந்து பறந்து
களைத்து வந்தமர்கிறது
ஒரு பறவை.
இளைப்பாறுதல் தந்த கிளையில்
ஒட்டிக் கொள்கின்றன கால்கள்.
இருப்பிடம் கிடைத்த இன்பத்தில்
சோர்ந்திருக்கின்றன இறகுகள்.
வேண்டும்போதெல்லாம்
கனிகள் கிடைக்கின்றன வாய்க்கருகில்.
கிறங்கிக் கிடந்த ஒரு கணத்தில்
யோசிக்கத்துவங்குகிறது பறவை,

எதையோ மறந்தே போய்விட்டதாய்.
அடித்த காற்றில் பக்கம் பறக்கும்
இறகு ஒன்று ஞாபகப்படுத்திச் செல்கிறது
அண்டவெளியில் கோள்களெனச் சுற்றியதை.
யாசிக்கத் தொடங்குகிறது பறவை
மரத்திடம் தன் அன்புப் பிடியை விடும்படி.
கூடு விடமுடியாத பறவையும்
கூடு சுமந்த மரமும்
கூடாகத் தொடங்குகின்றன
குலவித்  திரிந்த தோட்டத்தில்.
உதிரும் இலைகளோடு
பிரிவுக்கான பாடல் பாடி
வழியனுப்புகிறது மரம்.
பெருமிதமாய்ச் சாய்ந்திருந்த இறக்கைகள்
பிரிவில் நனைந்து
பெருவெளியில் கனக்கத் துவங்குகின்றன.

டிஸ்கி :- இந்தக் கவிதை மே 20, 2014  அதீதத்தில் வெளியானது.  

கனக்கும் இறக்கைகள்
http://www.atheetham.com/2015/06/blog-post_21.html



2 கருத்துகள்:

  1. மரம் பறவையை பிடித்திருப்பதாய் நினைப்பது பறவையின் மயக்கம். சிறகுகளின் சோர்வு நினைவுகளின் பலத்தில் உயிர் பெறுகின்றன போலும்!

    பதிலளிநீக்கு
  2. ஒரு உறவு இருப்பதாக நினைக்கும்போது பிடிப்பு இருப்பதாகத் தோன்றும்தானே. அது நட்பிலும் சரி, உறவிலும் சரி. அதுதான் மரம் பிடித்திருப்பதாகப் பறவை நினைக்கிறது ஸ்ரீராம்.

    இரண்டும் முதுமையடைந்துவிட்டன. இருந்தும் அது இளைப்பாறுதல் தந்த இடம்தானே. அதனுடையது அல்லவே. அதுதான் உயிர் பெறுகிறது சிறகு ஆனாலும் பாசத்தால் கனக்கிறது பெருவெளியில் :)

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)