திங்கள், 19 மே, 2014

ப்ரொஃபஸர்.



ப்ரொஃபஸர்.
================

ப்ரொஃபஸர் அந்தக் கண்ணாடிக் கதவுகளின் உட்புறத்தில் துல்லியமாய்த் தெரிந்தார். வெள்ளை வெளேரென்று ஜிப்பாவும், பாண்டும் அணிந்து கொண்டு. கிரிஸ்டல் போலப் பல்வரிசை மின்னியது. கருட மூக்குடன் அலையலையாய்ப் புரண்ட சுருள் முடிகளுடனும் அவர் கிளாஸ் எடுப்ப்தே அமர்க்களமாய் இருக்கும். கையில் சாக்பீஸுடன் அவர் தெர்மோ டைனமிக்ஸை எடுக்கும்போது பார்த்தால் செங்கோல் ஏந்தின அரசன்தான். அந்தக் குரலின் கம்பீரத்தில் மயங்கிக் கட்டுண்டு மாணவர்கள் வகுப்பை ஒழுங்காய் அட்டெண்ட் செய்வார்கள்.

அந்த ஹால் முழுக்கக் குரல் தெறித்து எதிரொலித்து ‘ உன்னை எங்கும் செல்ல விடமாட்டேன் ‘ என்று கையைப் பிடித்து வகுப்பில் உட்கார வைக்கும். ”சந்தேகங்கள் பாடங்களில் ஏற்பட்டால் உடனே வந்து என்னிடம் கேளுங்கள்.,”  என்று அவர் சொல்லிவிட்டார் என்பதற்காக சந்தேகம் வந்ததோ இல்லையோ அவரின் எக்ஸ்ப்ளனேஷன்களைக் கேட்க வேண்டியே அவரைச் சுற்றிக் கும்பல் குழுமிக் கொண்டேயிருக்கும்.


அவர் வெளிப்படையாகக், ‘கல, கல’ வென்று கதைத்துக் கொண்டு சிரித்துக் கொண்டு இருப்பதாகத் தோன்றும். அவர் தனக்குள்ளே பேசிக் கொண்டு, ஆர்க்யூ பண்ணிக் கொண்டு லேசாக வருத்தப்பட்டுக் கொண்டு இருப்பதாக நரேனுக்குத் தோன்றும்.

அருகே நெருங்கிய பிறகுதான் உள்ளே ப்ரொஸருடன் சுரேன் பேசிக் கொண்டிருப்பது லேசாகத் தெரிந்தது. இவனுள் லேசாக எரிச்சல் சுருசுருவென்று புறப்பட்டது. எப்போதும் சரி இவன் ஏதோ சந்தேகம் கேட்கப் புறப்படும் போதெல்லாம் அவன் அவருடன் நின்று சிரித்துக் கொண்டிருப்பான்.

அவனுடைய ப்ரெஸன்ஸ் ப்ரொஃபஸருக்கும் ரொம்ப மகிழ்ச்சியைத் தந்திருக்கின்றது என்பதை நிதரிசனமாக உனர்ந்தபோது இன்னும் எரிச்சல் முகிழ்த்து வழிந்தது. என்னைப் போலவே அவனுக்கும் சந்தேகம் தோன்றலாம் என்பது என் புத்திக்கு ஏன் எட்டாமற் போனது. என்னைப் போலவே அவனும் ஒரு ப்ரில்லியண்ட். அதனால் ஏற்பட்ட பொறாமை உணர்ச்சியோ.. எதுவானாலும் நான் நினைப்பது தப்பு.

ஆனால் அன்று ஒரு நாள் ப்ரொபஸர்” க்ளாஸ் ஹவர்ஸில் வரக்கூடாது நரேன். See the bell has gone. Now you have to go. Afternoon lunch hours  ல பார்க்கலாம். ‘” என்று துரத்தி அடித்து விடுவதைப் போலப் பேசினார். இவன் வராண்டாவைக் கடந்து வகுப்பிற்குள் நுழையும்போது திரும்பினால் ப்ரொஃபஸர் சுரேனுடன் பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது. அவனுக்கு மட்டும் இது க்ளாஸ் ஹவர் இல்லையா.. எனக்கு மட்டும்தானா.? 

இன்றைக்கு என் பிறந்தநாள் என்று கூறி ஆசி வாங்கத்தானே சென்றேன். ப்ரோஃபஸர் என்னை நன்றாக இன்ஸல்ட் செய்கிறார். அவருக்கு என்னைப் பிடிக்கவில்லை. என்னைப் பிடிக்காமல் போனதற்கு சுரேனின் ப்ரஸண்ட்தான் காரணம். “ மனசு குட்டிச் சாத்தானாய் நியாயம் கற்பித்தது.

சுரேனிடம் அன்றொரு நாள்,” நம்ம ப்ரொஃபஸரைப் பத்தி என்ன நினைக்கிறே..? ” என்று கேட்டதற்கு நத்திங். அவரைப் பத்தி நினைக்க என்ன இருக்கு.. ? இந்தக் கேம்பஸ்ல என்னோட பழகுறவங்கள்ல அவரும் ஒரு ஆர்டினரி மனுஷன் .. தட்ஸ் ஆல்.” என்று கூறியவனைப் பளாரென்று அடிக்க வேண்டும் போல் வெறி. 

எவ்வளவு பெரிய மனுஷனை இவ்வளவு சீப்பாய்ப் பேசுறே. அப்பிடின்னா நீ எதுக்கு அவர்கிட்ட போய் வழியறே..” என்று கேட்க வேண்டும் போல் இருந்தது. 

திடீரெனெ மூளைப்பகுதியில் ஒரு தெறிப்பு. ஏன் அவரே இவனைக் கூப்பிட்டுப் பேசியிருக்கலாமல்லவால் என்னை விட அவனைப் பிடிக்க என்னிடம் உள்ளதை விட அவனிடமும் மேலான குணம் இருக்கலாமில்லையா. 

சாத்தான் மனசு மறுபடியும் வேதம் ஓத ஆரம்பித்தது. “ ஆமாம் இருவரும் சேர்ந்து கொண்டு உன்னை இன்ஸல்ட் செய்கிறார்கள். உன் முகத்திலடித்து உன் துக்கத்தைப் பார்த்து சந்தோஷப்படுகிறார்கள். உனக்கு அவரையும் அவர் பாடம் நடத்தும் விதத்தையும் பிடிக்கும் என்று தெரிந்தேதான்.”

அன்று காலேஜை அடைந்ததும் பரபரப்பாகப் பேசப்பட்ட முதல் செய்தி ப்ரொஃபஸருக்கு ஒரு ஆக்ஸிடெண்டில் முகவாய்க்கட்டையில் நல்ல அடிபட்டு விட்டதாம். அதனால் பாலு க்ளினிக்கில் சேர்த்திருப்பதாக.

நரேன் ஓடோடினான். கேஸ் ஃபைலை விசாரித்தான். ப்ரொஃபஸர்  முகவாய்க் கட்டையைச் சேர்த்துத் தலையோடு சுற்றிக் கட்டியிருந்தார்கள். அவர் ஒண்டிக்கட்டை. அதனால் இவனே ஓடியாடி அவருக்கு வேண்டிய மருந்து , பழங்கள், வாங்கிக் கொடுத்து அருகே இருந்து இரவும் பகலுமாய்க் கண்விழித்துக் கவனித்து…

டாக்டர் சொன்னார்.. இவருக்குக் கட்டுப் பிரிச்சதும் குரல் சரியா வருமான்னு தெரியல.  Because by that accident the sound box was damaged…

இவனுக்கு அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எப்போது கண்விழிக்கப் போகிறார் ப்ரொஃபஸர்., எப்போது கட்டுப் பிரிப்பார்கள் என்று துடியாய்த் துடித்தான்.  இத்தனை நாளில் ஒரே ஒரு முறை  எட்டிப் பார்த்துவிட்டுப் போனவந்தான் சுரேன். பிறகு ஆள் அட்ரஸே காணல்லை. 

ப்ரொஃபஸருக்குக் கட்டு பிரித்ததும் அவர் பேசின முதல் வார்த்தை “ Where is Suren. I want to see him. Will you please get him here for me..? “  நரேனுக்கு ஏற்பட்ட கொதிப்பு சொல்லில் சொல்லி மாளாது. 

நான் ஒருத்தன் கல்லுக் குண்டாட்டம் எதிரே நின்று பணிவிடை செய்கையில், ஹூம் .. அவனைப் போல எனக்கும் ஏன் ஒரு அலட்சிய மனோபாவம் வர மாட்டேங்குது ப்ரொஃபஸர். விடேன் தொடேன் மாதிரி உங்களையே சுத்து வரேனே. கம்பீரமான அரசனின் அடிமை மாதிரி.. அப்படிப்பட்ட அவனை உங்களுக்கு எப்படிப் பிடிக்குதுன்னு இன்னும் எனக்குப் புரிபடமாட்டேங்குது..”

“நரேன்..உனக்கு மாத்ரம் சொல்றேன். மனசிலே வைச்சுக்கோ. மகனை எந்த அப்பாக்கும் பிடிக்காமப் போகாது. யெஸ் நரேன். என்னோட வைஃப் .. நரேனின் அம்மா ஒரு சுதந்திரப் பறவையா வாழணும்னு நினைச்சவ. யாரும் தன்னைக் கட்டுப்படுத்தக் கூடாது. முடியாதுன்னு நெனைச்சு வாழ்ந்தவ. என்னால அவளோட நடவடிக்கைகளைத் தாங்க முடியல. ஏன்னா சொசைட்டில என்னோட பொஸிஷன் தலைகுப்புறச் சரிஞ்சிரிச்சு. டைவோர்ஸ் கேட்டப்போ குழந்தை தாய்கிட்டயே இருக்கணும்னுட்டாங்க.

தன்னோட பிள்ளையத் தந்தைக்குத் தெரியாமப் போகுமா. அவன் அப்படியே அவங்க அம்மா அச்சு. அதே அலட்சியம் கோபம், தன்னை யாரும் எதுவும் செய்துட முடியாதுன்ற கர்வம். தான் தோன்றித்தனம்தான்.. இவ்வளவு டீப்பா உங்கிட்ட உண்மையைச் சொல்றேன்னா அதுக்குக் காரணம் உம்மேல எனக்கு ஏற்பட்ட நம்பிக்கைதான் ..” அவருடைய அந்தச் சொற்களில் தெறித்த உறுதியினைக் கண்டு வெட்கி, அவரின் வருத்தம் புரிந்து வருந்தி அவர் அவன் மேல் வைத்திருந்த நம்பிக்கையில் சந்தோஷப்பட்டுக் கலவையாய் ஆகிப் போனான்.

டிஸ்கி ‘85 டைரியிலிருந்து. 

டிஸ்கி:- 2014 ஏப்ரல் 1 ஆம் தேதி அதீதத்தில் வெளியாகி உள்ளது.

5 கருத்துகள்:

  1. நன்றாக இருக்கிறது வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  2. பேராசிரியர் வர்ணனை பிரமாதம். எனக்கு எங்க ஹெச் ஓ டி மேம் நினைவுக்கு வந்தார்கள். நல்ல கதை.

    பதிலளிநீக்கு
  3. நன்றி ஃபரீத்

    நன்றி ஸ்ரீராம். சின்னப்பிள்ளையில் எழுதிய கதை அப்பிடித்தான் இருக்கும். :)

    வல்லீம்மா நீங்கதான் கரெக்டா கண்டுபிடிச்சீங்க. இது என்னோட காலேஜ்ல லேடி லெக்சரர் ஒருத்தருடன் எனக்கு ஏற்பட்ட உணர்வுதான் கதை.. :) அதை ஆக்கம் செய்யும்போது அவங்களும் படிப்பாங்க ( தினமும் என் டைரியில் கதை, கவிதை, கட்டுரை ஏதோ ஒன்று எழுதி அவர்கள் பார்வைக்கு அனுப்புவேன் ) என்பதால் எல்லாரும் ஆணாகிவிட்டோம் காரெக்டரில்.. :) :) :)

    பதிலளிநீக்கு
  4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)