திங்கள், 12 மே, 2014

ரக்‌ஷா பந்தன். தினமலர் வாரமலரில்.



ரக்‌ஷா பந்தன்.
**************************************
சௌதாமினி யோசித்துக் கொண்டிருந்தாள். இன்றுடன் 18 நாட்கள் இருக்குமா. வியாழனோடு வியாழன் எட்டு அடுத்த வியாழன் பதினைந்து . வெள்ளி பதினாறு சனி பதினேழு, ஞாயிறு பதினெட்டு. இருக்குமென மனம் கணக்குப் போட்டது. இப்போதுதான் கௌசிக் அவளைக் கைபிடித்தது போலிருந்தது. அதற்குள் பதினெட்டு நாட்கள் ஓடிவிட்டனவா.. அவளால் நம்பத்தான் முடியவில்லை.

ஜப்பான் கடிகாரத்தில் ஐந்து முறை குயில் வந்து எட்டிப் பார்த்துக் கூவிவிட்டுப் போனது.


கல்யாணம் ஆன புதிது. கௌசிக் பண்ணும் அட்டகாசம், புது வீடு, புது நண்பர்கள், புதிய ஊர், தனிச் சூழ்நிலையில் மாட்டிக் கொண்டு ரொம்ப அவஸ்தைப்பட்டாள் சௌதாமினி. வந்த ஒரு வாரத்துக்கு தினம் தவறாமல் போன் பண்ணி அப்பாவுடன் பேசிவிட்டுத்தான் கௌசிக்கைக் கவனிப்பாள். இப்போது இரண்டு நாட்களுக்கு ஒரு முறை ஃபோன் பண்ணுவதாகக் குறைந்திருக்கிறது. மகள் என்னவோ அமெரிக்கா ஜப்பானில் இருப்பது போல் தினம் டெல்லியில் இருந்து வரும் ஃபோனுக்கு அவள் அப்பா மகாதேவன் காத்திருந்து காத்திருந்து வரிந்து கட்டிக்கொண்டு மகளுக்குச் சமமாக அரட்டையடிப்பதைக் காண பாகீரதி அம்மாளுக்குப் – சௌதாமினியின் தாய் - பற்றிக் கொண்டு வரும். 

மகாதேவன் கையிலிருக்கும் ஃபோனைப் பிடுங்கி “ சௌமிக் குட்டி.. இப்பிடி அடிக்கடி ஃபோன் பண்ணீன்னா மாப்பிள்ளைக்குக் கோபம் வந்திடும். அவரைக் கவனித்து எல்லாம் பண்ணும்மா. அப்புறம் பேசிக்கலாம். “ என்று கூறி டொக்கென வைப்பாள். 

அம்மாவை நினைத்துச் சிரித்துக் கொண்டாள் சௌதாமினி. மாமரத்திலிருந்து அணில் குட்டியொன்று ஜன்னல் வழியாகத் தாவி உள்ளே வந்து கழுத்தை ஒயிலாகத் திருப்பி இங்குமங்கும் விழித்துப் பார்த்துவிட்டு, இவள் கேக்குக்குப் போட எடுத்த முந்திரிப் பருப்பைச் சுத்தம் செய்யும்போது நல்லாயில்லை என்று போட்டு வைத்திருந்த சில துண்டு முந்திரிப்பருப்புகளில் இரண்டைக் கையிலெடுத்துச் சுவைத்துக் கொண்டிருந்தது.

இமைக்காமல் அதையே பார்த்து வியந்து கொண்டிருந்த சௌதாமினி வரவேற்பறையில் மாட்டியிருந்த ஜப்பான் கெடிகாரத்தில் குயில் ஐந்து முறை கூவியபோது திடுக்கிட்டுப் போய் ஐயையோ.. அடுப்பில் வைத்திருந்த கேக்  என்னாயிற்றோ என்ற பதற்றத்தில் உள்ளே ஓடினாள். அணில் மிரண்டு போய் ஓடிப்போய் விட்டது. கேக் ஓவனை இறக்கினாள். கொஞ்சம் கழித்துத் திறந்து பார்க்கையில் கேக்கின் அடிப்பாகம் அரக்கில் இருந்தது. 

கௌசிக்குக் கேக் என்றால் ரொம்பப் பிரியம். கௌசிக்கின் நண்பன் ஹரீஷ். கௌசிக்கைப் போல ரொம்ப அமர்க்களமாகப் பேசவில்லை. நிறமும் கூட  கௌசிக்கைவிடக் குறைத்துத்தான். ஓரிரண்டு வார்த்தைகளில் அமைதியாகப் பதில் சொன்னாலும் அர்த்தத்துடன் பேசினான். அவனுடைய அமைதி அவளுக்குப் பிடித்திருந்தது. 

இரண்டு நாட்களுக்கு முன்பு அவன் தன்னுடைய டைரியை வைத்துவிட்டுச் சென்றுவிட்டான். எதேச்சையாக யாருடையது என்று பார்த்தால் அதில்  ‘ WE HAVE NO RIGHTS TO EXPECT ANYTHING FROM MANKIND FOR WHAT WE DO.’ BY VIVEKANANDA  என்று எழுதி இருந்தது. அந்த வாசகம் அவளுள் படிந்து போய்விட்டது.

பால் குக்கரை காஸ் அடுப்பில் வைத்துவிட்டு முகம் கழுவ சோப் எடுத்துக் கொண்டு பாத்ரூமுக்குப் போனாள். தண்ணீர் வரவில்லை. வாசற்புறம் வந்து வாட்டர்மேனைக் கூப்பிட யத்தனிக்கையில் எதிர்வீட்டுப் பெண் ஆர்த்தி ஊரிலிருந்து அப்போதுதான் வந்திறங்கிய தன் அண்ணனை வாயிலிலேயே நிறுத்தி வைத்து ரக்‌ஷா பந்தனைக் கையில் கட்டி, வாயில் தூத்பேடாவைப் போட்டு சிரிப்புடன் பாயி.. பாயி என்று என்னவோ ஹிந்தியில் பேசிக்கொண்டே சென்றது கண்ணில் பட இவள் மனசுக்குள்ளும் அந்த உற்சாகம் தொற்றிக் கொள்ள, துறுதுறுப்புடன் மனதில் திட்டமிட்டுக் கொண்டு வாட்டர்மேனைக் கூப்பிடவும் மறந்து உள்ளே ஓடவும், பால் குக்கர் விசிலடித்துக் கூப்பிடவும் சரியாயிருந்தது. பாத்ரூமில் திறந்து வைத்திருந்த குழாயின் வழியாகத் தண்ணீர் கொட்டிக் கொண்டிருந்தது. 

பாலை இறக்கி காஸை ஆஃப் செய்துவிட்டு, முகம் கழுவி லேசான ஒப்பனையுடன், சின்னமாகப் பொட்டு வைத்துக் கொண்டு வார்ட்ரோபைத் திறந்து லைட் ப்ளூ கலர் உடலும் ஒற்றை வரிசையில் குட்டி குட்டி மயில்கள் தோகை விரித்திருக்கும் பார்டரும் கொண்ட பட்டு சாரியை எடுத்து உடுத்தி ப்ரில்ஸ் வைக்கையில் காலிங்பெல் சத்தமிட்டது. இவள் கமிங். என்று கூறிவிட்டுச் சாரியை அவசரமாகச் சுற்றிக்கொண்டு கதவைத் திறப்பதற்குள் காலிங் பெல் பொறுமையின்றி அலற வேகமாகப் போய்த் திறந்தால் கௌசிக். பின்னால் ஹரிஷ். 

இவள் அலங்காரத்தைப் பார்த்ததும் கௌசிக்கின் கண்கள் வியப்பால் விரிந்தன. அவர்களை வரவேற்று பரபரவென்று உள்ளே போய் ரக்‌ஷா பந்தனை எடுத்து வந்து ஹரீஷின் கையில் கட்டிவிட்டு உள்ளே சென்று கேக்கை எடுத்து வந்து அவன் வாயில் போடவும் ஹரீஷும் கௌசிக்கும் முதலில் என்ன செய்வதென்று தெரியாமல் மௌனித்துப் போயினர். 

மௌனக்கூட்டை முதலில் உடைத்தது. “ பஹன்.. ப்ரிய பஹன்..” என்று தழுதழுப்புடன் வந்த ஹரீஷின் குரல்தான். அவளிடம் தன் கையிலிருந்த மோதிரத்தைக் கழட்டிப் பரிசாகக் கொடுத்தான் ஹரீஷ். எதுக்குண்ணா இதெல்லாம் என்று மறுப்போடு வாங்கிக் கொண்டாள் சௌதாமினி.

மறுநாள் மாலை. மயங்கிய நிலையில் பிதற்றிக் கொண்டிருந்த கௌசிக்கை இரண்டு முரட்டு ஆசாமிகள் பொட்டலமாக மடித்துப் போட்டுவிட்டுப் போனார்கள். நடுரோட்டில் கிடந்தானாம். இவள் பதறிப்போனாள்.

டாக்ஸியில் தூக்கிப் போட்டுக் கொண்டு டாக்டர் வீட்டுக்கு ஓடினால் அவர் ஆறஅமர வந்து செக்கப் செய்துவிட்டு “ ஹெரோயின் சாப்பிட்டு இருக்கிறான் அது இவனைச் சாப்பிட்டுக்கிட்டு இருக்கது தெரியாம “ என்றார். இவள் ஹெரோயின்னா என்ன என்று கேட்க.” போதைப் பொருள் “ என்று கூறிவிட்டு பேடை எடுத்து மருந்துகளை வரிசையாக எழுதத் தொடங்கினார். 

இவள் பணம் கொடுத்துவிட்டுத் திரும்பி வருவதற்குள் விஷயத்தை அறிந்து கொண்ட ஹரீஷ் ஓடிவந்து மருந்துகளை வாங்கிக்கொண்டுவந்து கொடுத்துவிட்டு அவளுக்குத் துணையாக அன்றிரவு அங்கேயே தங்கி சிவராத்திரியாக்ப் பொழுதைக் கழித்துவிட்டு மறுநாள் காலை ஏழுமணிக்கு ஆபீசுக்கு ஓடிவிட்டுத் திரும்பவும் மாலை நேரம் பரக்கப் பரக்க ஓடிவந்து இப்போது கௌசிக்குக்கு எப்படி இருக்கிறதென்று விசாரித்தான்.

கோடு போட்ட பைஜாமாவில் யார்ட்லி மணக்க மெத்தையில் உறங்கிக் கொண்டிருந்த கௌசிக்கைப் பார்த்துப் பொங்கி வரும் அழுகையை அடக்கியபடி ஹரீஷை பால்கனிப் பக்கம் வருமாறு சைகை செய்தாள் சௌதாமினி. 

பையா என் கணவர் இந்தப் பழக்கத்துக்கு அடிமையாகி இருப்பது எங்க அப்பா அம்மா கேள்விப்பட்டா வருத்தப்படுவாங்க. அவரை எப்பிடியாச்சும் இந்தப் பழக்கத்திலேருந்து மீட்கணும். அதுக்கு நீங்கதான் உதவணும். என்று தழுதழுப்போடு சொல்லி முடித்தாள்.

கேட்டுக் கொண்டு தலையசைத்த ஹரீஷின் கண்களிலும் கண்ணீர். சௌதாமினியின் அப்பா அம்மா வந்த போதும் இருவரும் ரோட் ஆக்ஸிடெண்டில் அவன் விழுந்துவிட்டதாகக் கூறிச் சமாளித்தனர்.  அலுவலகத்திலும் ஹரீஷ் இதே போலப் பொய் கூறிச் சமாளித்தான்.

ஹெரோயினுக்காகப் பலமுறை கௌசிக் ஹரீஷிடம் சண்டையிட மெல்ல மெல்ல அவனுடைய கவனத்தைப் பல வழிகளிலும் திருப்பி அவனுக்குப் பிடித்த இசை கேட்டு, அவனுடன் வாலிபால் விளையாடி கொஞ்சம் கொஞ்சமாக மறக்க வைத்தான். அவ்வப்போது மருத்துவர் உதவியையும் நாடி கவுன்சிலுங்கும் செய்யப்பட்டது.

எல்லா சமயத்திலும் ஹரீஷ்தான் பேருதவியாக இருந்தான். கர்ப்பம் தரித்திருந்த சௌதாமினி பிரசவத்துக்கு ஊருக்குச் சென்றபோதும் ஹரீஷ் கௌசிக்குடனே வீட்டில் தங்கிப் பார்த்துக் கொண்டான். 

அடுத்த வருஷம் ரக்‌ஷா பந்தன் திருவிழாவுக்கு இன்னும் இரண்டு நாட்கள் தான் இருந்தன.. இந்த முறை நிறைய இனிப்புக்களைச் செய்து வைத்துவிட்டுக் காத்திருந்தாள் சௌதாமினி. ரக்‌ஷா பந்தன் அன்று ஹரீஷின் கையில் ரக்‌ஷா பந்தனைக் கையில் கட்டிவிட்டு இனிப்புக்களை அவன் வாயில் போடும்போது தன்னுடைய வாழ்வை இனிப்பாகத் திருப்பிக் கொடுத்த சகோதரனின் மேல் உண்மையான பாசம் மிகுந்து கண்ணீராய் வழிந்தது. குட்டி சௌதாமினி தொட்டிலில் அசைந்து ‘ இங்கா இங்கா’ என்று அதை ஆமோதித்தாள்.  


10 கருத்துகள்:

  1. அருமையான கதை..ரக்‌ஷா பந்தன். !!
    தினமலர் வாரமலரில் வெளியானதற்கு வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  2. ரக்ஷா பந்தன் ....
    உறவை மீட்டுக் கொடுத்த உறவு.
    நல்ல கருத்துடன் கூடிய கதை !
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. ரக் ஷா பந்தன் ....
    உறவை மீட்டுக் கொடுத்த உறவு.
    நல்ல கருத்துடன் கூடிய கதை !
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. ரக் ஷா பந்தன் ....
    உறவை மீட்டுக் கொடுத்த உறவு.
    நல்ல கருத்துடன் கூடிய கதை !
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  5. நன்றி ராஜி

    நன்றி பெருமாள் சார்

    பதிலளிநீக்கு
  6. பெயரில்லா17 மே, 2014 அன்று 3:10 AM

    இன்று படித்துவிட்டேன் !என்னுள் இருந்த சில நினைவுகளிடம் "கதை " பேசிவிட்டு சென்றது !என் நண்பர் ஒருவர்க்கு நிகழ்ந்துள்ளது ...

    பதிலளிநீக்கு
  7. இன்று படித்துவிட்டேன் !என்னுள் இருந்த சில நினைவுகளிடம் "கதை " பேசிவிட்டு சென்றது !என் நண்பர் ஒருவர்க்கு நிகழ்ந்துள்ளது ...

    பதிலளிநீக்கு
  8. இன்று படித்துவிட்டேன் !என்னுள் இருந்த சில நினைவுகளிடம் "கதை " பேசிவிட்டு சென்றது !என் நண்பர் ஒருவர்க்கு நிகழ்ந்துள்ளது ...நெகிழச்செய்துவிட்டீர்கள்...

    பதிலளிநீக்கு
  9. இன்று படித்துவிட்டேன் !என்னுள் இருந்த சில நினைவுகளிடம் "கதை " பேசிவிட்டு சென்றது !என் நண்பர் ஒருவர்க்கு நிகழ்ந்துள்ளது ...

    பதிலளிநீக்கு
  10. இன்று படித்துவிட்டேன் !என்னுள் இருந்த சில நினைவுகளிடம் "கதை " பேசிவிட்டு சென்றது !என் நண்பர் ஒருவர்க்கு நிகழ்ந்துள்ளது ...

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)