சனி, 25 மே, 2013

தைராய்டு.. THYROID.

தைராய்டு..
உறவினர் ஒருவர் மிக மெலிந்து கொண்டே போனார். ஒருவர்  திடீரென்று குண்டாகவும் சோர்வாகவும் உணர்ந்தார்.. இருவரின் உடல் நிலைக்குமே காரணம் தைராய்டுதான்.

ஒருவர் படபடவென்று இருப்பார் எப்போதும். இன்னொருவர் படுத்துக் கொண்டே இருக்கலாமா என நினைப்பார். கை காலில் மதமதப்பு , பகலில் தூக்கம், இரவில் தூக்கமின்மை என பிரச்சனைகள். செக்கப் செய்து பார்த்ததில் தைராய்டு பிரச்சனை எனத் தெரிந்தது. இருவருக்கும் மத்திம வயதுதான்.

ஹைப்போ தைராய்டு, ஹைப்பர் தைராய்டு என்று இருவித பிரச்சனைகள் இருக்கின்றன. முதலில் எல்லாம் எல்லாருக்கும் பிரஷர் , சுகர் பிரச்சனைகள் மட்டுமே இருந்தன. இப்போ ஃபுல் ஹெல்த் செக்கப் செய்யப்போகும் பெரியவர்கள் எல்லாருக்குமே பிரஷர் ஷுகரோடு தைராய்டும் இருப்பதாக ரிசல்ட் வருகிறது.
T3, T4, TSH என்ற ஹார்மோன்கள் சுரப்புத்தான் இதற்கெல்லாம் காரணம். பொதுவாக நம் உடலில் கழுத்துப் பகுதியில் தைராய்டு ஹார்மோன் சுரக்கிறது. பாரா தைராய்டு சுரப்பியும் இருக்கிறது. இரண்டின் வேலைகளும் நாம் உண்ணும் உணவில் இருந்து ப்ரோட்டீனை உடலுக்கு ப்ரோட்டீனை உருவாக்கிக் கொடுத்தல், சக்தியை சேமித்து மத்த ஹார்மோன்கள் உண்டாக்கும் பிரச்சனைகளில் இருந்து பாதுகாத்தல் ஆகும்.

ஹைப்பர் தைராய்டு பிரச்சனை உள்ளவர்களுக்கு அதிகம் பசிக்கும். சாப்பிட்டுக் கொண்டே இருந்தாலும் பருக்க மாட்டார்கள். எப்போதும் நிம்மதியின்மையோடு இருப்பார்கள். ஒரு கட்டத்தில் ஹைப்பர்  தைராய்டே ஹைப்போ தைராய்டாகவும் மாறி அவர்களை மிகுந்த மனச்சோர்வுக்கு உள்ளானவர்களாக ஆக்குகிறது.

எப்போதும் சோம்பேறித்தனம், முடி கொட்டுதல், அதீத தூக்கம், / தூக்கமின்மை, எடை அதிகரிப்பு, எதிலும் நாட்டமின்மை, என இருப்பார்கள். டாக்டரிடம் காண்பித்தால் அவர்கள் பெரும்பாலும் அதிகாலை எழுந்தவுடன் ஒரு மாத்திரையை சாப்பிடச் சொல்வார்கள்.

நோயின் தன்மைக்கேற்ப 25 மைக்ரோ கிராம், 50 மைக்ரோ கிராம் அல்லது 100 மைக்ரோ கிராம் மாத்திரைகள் ( தைரோ நார்ம், எல்ட்ராசின் ) கூட எடுத்துக் கொள்கிறார்கள் அனைவரும். ஒரு முறை ட்ரெயினில் பயணம் செய்த சக பெண் காலையில் எழுந்து பல் துலக்கி தைராய்டு மாத்திரைகளைப் போட்டுக் கொண்டே சொன்னார்., இத போடாட்டா நாள் பூரா சோர்வா இருக்கும். காஃபி குடிக்க அரைமணி நேரம் முன்னே வெறும் வயிற்றில் போட்டா நல்லது என்று.

டாக்டரும் வெறும் வயிற்றில்தான் இந்த தைராய்டு மாத்திரைகளைப் போடச் சொல்கிறார்கள். மற்ற மாத்திரைகள் அனைத்தும் சாப்பிட்ட பின் தான் போடச் சொல்வார்கள்.

இன்னொரு உறவினர் யாருக்கோ தைராய்டு மாத்திரை சாப்பிட்டதனால் கான்சர் வந்து விட்டதாகக் கூறி யோகாவிலேயே சரி செய்து கொள்வதாகக் கூறினார்.

கழுத்தில் கழலை அல்லது கட்டி மாதிரி வருவது காயிட்டர் என்று சொல்கிறார்கள். இன்னொரு உறவினருக்கு இதை ஆபரேஷன் செய்து கொஞ்சநாள் பேச்சு கீச் கீச்சென்று வந்து இப்போதுதான் சரியாக பேசுகிறார்.

மின்சாரம், தண்ணீர்ப் பிரச்சனைகள் எல்லாருக்கும் பொதுவானது போல இந்த சுகர், பிரஷர், தைராய்டு பிரச்சனைகளும் அனைவருக்கும் பொதுவானதாக இருக்கிறது. ஏஜ், ரேஸ், க்ளாஸெல்லாம் ( AGE ,, RACE, CLASS )  எல்லாம் பார்ப்பதில்லை.

சென்னையில் ஒரு மருத்துவரிடம் இதற்காக அப்பாயிண்ட்மெண்ட் வாங்கினால் ஏதோ திருப்பதி ஏழுமலையப்பனை தரிசிக்கச் செல்வது போல ஹால் ஹாலாகக் கூட்டம். அவர் டையபடீஸுக்கும், தைராய்டுக்கும் சேர்த்து மருத்துவம் பார்ப்பவர். இரண்டுக்குமே ஒரே விதமான ட்ரீட்மெண்ட் ( ஒன்றுடன் ஒன்று இணைந்தது போல )

ஒரே விதமான மெனு கார்ட். கொடுத்து விடுகிறார்கள். காலையில் எழுந்து பல் துலக்கி இந்த மாத்திரையைப் போட்டுக்கணும். இந்த மெனுவில் இருக்கிற மாதிரி ஜீனி இல்லாம பால் கம்மியா காஃபி. காலையில் ரெண்டு இட்லி, பதினோரு மணிக்கு உப்பு கம்மியா மோர், அல்லது  காய்கறி சூப்.

மதியம் ஒரு கப் சாதம், காய்கறி ஒரு கப், பருப்பு ஒரு கப். இனிப்பு காய்கறி ( காரட், பீட்ரூட், உருளை, சேப்பங்கிழங்கு, சேனைக்கிழங்கு , வாழைக்காய், ) ஆகாது. இதுல போனசா என் உறவினர் வேற காலிஃப்ளவர், முட்டைக்கோஸ், முள்ளங்கி, பூசணிக்காய் ஆகாது என்கிறார்.

இனிப்பு வகைகள், பேக்கரி ஐட்டம்ஸ், ஐஸ்கிரீம் வகைகள், ஃபிரிஜ்ஜில் வைத்தது, கூல் ட்ரிங்க்ஸ், கொழுப்புச்சத்து உள்ளது, மேகி, சேமியா, ஜவ்வரிசி, கூழ், போரிட்ஜ், புட்டிங் வகைகள் ஆகாது .

பிரட் கூட வீட் ப்ரெட்தான். எதுவுமே ஈசியா டைஜெஸ்ட் ஆகிற ஃபார்மில்  ( கூழ் , கஞ்சி ) இருக்கக்கூடாது. அடை மாதிரி மெதுவாக செரிமானம் ஆகணும். ஈசியா ரத்தத்தில் கலந்தால் அது சுகரையும் தைராய்டையும் அதிகப்படுத்துமாம்.

பால் தண்ணியா, ஜீனி கம்மியா சாப்பிடலாம். ஒரு நாளைக்கு இரு முறைதான் பால் சாப்பிடலாம். காய்கறி, கீரை எவ்வளவு வேணாலும் சாப்பிடலாம். அரிசி சோற்றையும், இட்லி, தோசையையும் குறைத்து சப்பாத்தி, ரொட்டி, ராகி போன்றவை சாப்பிடலாம்.

உப்பு கம்மியா, எண்ணெய் இல்லாம சாப்பிடணும்.. நான்வெஜ்ஜே ஆகாது. குழம்புல போட்ட மீன், கோழிய மாதம் ஒரு முறை சாப்பிடலாம். ஃபாஸ்ட் ஃபுட், நூடுல்ஸ், பாஸ்டா, பிஸ்ஸா, பர்கர் எல்லாம் கண்ணால கூட பார்க்கக் கூடாது. பொறித்த வறுத்த உணவுகள் கூடவே கூடாது.


உப்பு கூட தைராய்டுக்காக அயோடின் உப்பு உபயோகிக்கிறோம். தினமும் நடைப்பயிற்சியோ, யோகாவோ செய்யணும்.

ஹ்ம்ம் இதெல்லாம் பார்க்கப் பார்க்க நம்ம முன்னோர்களின் ஹெல்த் எப்பிடி இருந்தது. நம்ம ஹெல்த் எப்பிடி சீரழிஞ்சு இருக்குன்னு தோணுது.

கொஞ்சமே கொஞ்சம் லைஃபை என் ஜாய் செய்து சாப்பிட்ட நம்ம தலைமுறைக்கே இவ்வளவு கஷ்டம்னா ஃபாஸ்ட் புட்லயும் பிஸ்ஸாலயும், பெப்சிலயும் கொக்கோ கோலாலயும், டின் பீர்லயும் உயிர் வாழ்ற நம்ம இளைய தலைமுறையினர் இன்னும் என்னென்ன பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டி வருமோன்னு கவலையா இருக்கு.

ஆதியிலேருந்தே எண்ணெய் குறைவான ஆரோக்கியமான காய்கறி பருப்பு சேர்ந்த  வீட்டில் செய்யப்பட்ட உணவை சாப்பிடப் பழக்கித்தான் இருக்கோம். அதையே தொடர்ந்தா அவங்களுக்கும் நல்லது. நம்மளைப் போல மாத்திரைகளோடு வாழ வேண்டாம்.

 வரும் முன் காப்போம். வளரும் தலைமுறைக்கு எடுத்துச் சொல்வோம். 

8 கருத்துகள்:

  1. இன்றைய தலைமுறையினருக்கு கவலையளிக்கும் செய்தி.... வருமுன் காப்போம்..

    பதிலளிநீக்கு
  2. சென்னையில் ஒரு மருத்துவரிடம் இதற்காக அப்பாயிண்ட்மெண்ட் வாங்கினால் ஏதோ திருப்பதி ஏழுமலையப்பனை தரிசிக்கச் செல்வது போல ஹால் ஹாலாகக் கூட்டம். அவர் டையபடீஸுக்கும், தைராய்டுக்கும் சேர்த்து மருத்துவம் பார்ப்பவர். //சில வருடங்களுக்கு முன் உரவினர் ஒருவரின் சிகிச்சைக்காக நீங்கள் குறிப்பிடும் இதே மருத்துவரிடம் மணிக்கணக்காக காத்திருந்தது ஞாபகத்திற்கு வருகிறது.

    பதிலளிநீக்கு
  3. நானும் ஒரு தைராய்டி:)
    படித்துப் பார்த்து நிறைய சந்தோஷம். நான் தனியாக இல்லை என்று.
    நன்றி தேன்.

    பதிலளிநீக்கு
  4. அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய சிறப்பான பகிர்வு .எனக்கும் ஏறத்தாள இதே பிரச்சனை உள்ளது இந்நோய்க்கு இளையவர் முதியவர் என்ற பாகுபாடே கிடையாது போல !மிக்க நன்றி அம்மா பகிர்வுக்கு .

    பதிலளிநீக்கு
  5. தைராய்டு பற்றி பல பயனுள்ள தகவல்களைப் பகிர்ந்து விழிப்புணர்வு உண்டாக்கும் கட்டுரைக்கு நன்றியும் பாராட்டும். இன்றைய பல பெண்களுக்கு தைராய்டு பாதிப்பு இருப்பதால் வருடமொருமுறையாவது தைராய்டு பரிசோதனை செய்துகொள்வது அவசியம்.

    பதிலளிநீக்கு
  6. ஆம் ஸ்கூல் பையன்

    நன்றி ஸாதிகா

    நன்றி வல்லி சிம்ஹன்

    நன்றி அம்பாள் அடியாள்

    நன்றி கீதமஞ்சரி.

    பதிலளிநீக்கு
  7. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  8. நல்ல பகிர்வு.

    உணவுப் பழக்கங்களினால்தான் தற்காலம் இளைய தலைமுறையில் பலருக்கும் டயபடீஸ், கொலஸ்டரோல் ஆரம்பித்துவிட்டது.

    நீங்கள் சொன்னதுபோல சாப்பிடும் உணவில் மாற்றம் எடுத்தால் தப்பலாம்.

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)