திங்கள், 27 மே, 2013

கோலங்களும் கோலக் கிளிகளும்..:-

கோலங்களும் கோலக் கிளிகளும்.:-

தென் தமிழ் நாட்டுக்கே உரித்தான ஒரு கலை கோலக்கலை .மார்கழி மாசம்தான் கோலங்களுக்கான மாசம்.  யார் வீட்டுக் கோலம் பெரிசுன்னு ஒரு போட்டியே நடக்கும். முன்ன எல்லாம் விடியற்காலையில் எழுந்து வாசல் கூட்டி சாணி தெளிச்சு வாசல் நிறைக்க இந்தக் கோடிக்கும் அந்தக் கோடிக்கும் கோலம் போட்டு பார்டர் எல்லாம் போட்டு அமர்க்களப் படுத்துவாங்க. சிலர் காவி போட்டு அசத்துவாங்க.

வீட்டுல அக்கா, தங்கைகள் கோலம் போட்டா கூடவே பொடிசுகளும் எந்திருச்சு கலர் போட  உதவுவாங்க. கோலத்து நடுவுல சாணி வைச்சு பூசணிப்பூ அல்லது பரங்கிப் பூவை செருகிவைப்பாங்க. இதுக்காக தம்பி தங்கைகள் எல்லாம் ஓடி ஓடி பூ சேகரிப்பாங்க.


இப்பவெல்லாம் அர்த்த ராத்திரியில வாசல தெளிச்சு கோலத்தைப் போட்டுட்டு படுக்கப் போறாங்க. பிரம்ம முகூர்த்தத்துல எழுந்து கோலம் போட்டா  நமக்குத் தேவையான ஆக்சிஜன் காத்துல நிறைஞ்சு இருக்கும் நல்லதுன்னு  செய்திருக்காங்க. இப்ப வேலைக்குப் போற பெண்கள் ஆற அமர 4 மணி நேரம்  செலவழிச்சு கோலம் போட முடியாதுன்னு ராத்திரியே போட்டுடுறாங்க.

என் அம்மா வழிப் பாட்டி சாணம் தெளிச்சா கரைச்சு வடிகட்டி தெளிப்பாங்க. கோயம்புத்தூர் பக்கமெல்லாம் சாணிப் பொடின்னு மஞ்சள் கலர்ப் பொடி விக்கும். இதையே கரைச்சு போர்டிகோ எல்லாம் மெழுகி வைச்சிருப்பாங்க.

கோல மாவுகூட பச்சரிசியில் போடுறது நல்லது. ஏன்னா எறும்பு, குருவி , போன்றவை எல்லாம் அந்த அரிசியை சாப்பிடும்னு போட்டாங்க. ஆனா அது நல்லா வழு வழுன்னு போட வராது. எனவே வெள்ளைக் கல்லைப்பொடியாக்கி கோலம் போட ஆரம்பிச்சாங்க. அந்த வெள்ளைக் கல்லோட கலர் மாத்திரைகளைக் கலந்தா கலர்க் கோலப் பொடி ஆயிடும்.

ஓலைக்கு நனைக்கிற சாய மாத்திரை வாங்கி வந்து தண்ணியில் கரைச்சு கோலப் பொடியை அதுல போட்டுக் காயவைப்பாங்க. என் அம்மா காபித்தூள், கரி, உப்பு, ராபின் நீலம், மஞ்சள் பொடி, சுண்ணாம்பு, இதெல்லாம் கலந்து கலர் தயாரிப்பாங்க. உப்புல கலர் கலந்தும், தேங்காய்ப் பால் எடுத்த தேங்காய்ச் சக்கையை காயவைத்து கலர் சேர்த்தும்  வண்ணக்கோலம் போடப் பயன்படுத்துவாங்க.

கோலங்கள்  பச்சரிசி மாவு, வெள்ளைக் கல் பொடி ( முகுமா ), தேங்காய்த்துருவல், உப்பு , பூக்கள், இதிலெல்லாம் போடுவோம். பொடிக்கோலம், மாக்கோலம், ரங்கோலி, பூக்கோலம் , மணற்கோலம், (  SAND CARPET ) . பயறுக் கோலம் ( GRAIN CARPET)  என்ற வகை எல்லாம் எங்கள் பாத்திமா கல்லூரியில்  கல்சுரல் போட்டிகளில் போடுவோம்.

பொடிக்கோலம் என்பது பொடியால் ( அரிசி ,கோலமாவு ) போடுவது. இது மண்ணில் போடுவது, தரையிலும் போடலாம். புள்ளிக் கோலம், நெளிக்கோலம் டிசைன் கோலம் என்பதில் அடங்கும். மங்கல நிகழ்ச்சிகள் என்றால் இரட்டை இழைக்கோலங்களும், அமங்கலம் என்றால் ஒற்றை இழையும் போடுவார்கள்.

மாக்கோலம் பெரும்பாலும் சிமெண்ட் அல்லது மார்பிள், மொசைக் தரைகளிலும் போடப்படும். இது மோதிர விரலால் துணியை கோலமாவில் நனைத்துப் பிழிந்தபடி போடப்படுவது. இதில் நடுவீட்டுக் கோலம், பாப்பாரக் கோலம், தும்பு பிடித்தல்,  நிலை வாசல் கோலம், நடைக்கோலம் என்பவை அடங்கும். இதில் நெளி நெளியாய்ப் போடுவதை நுடக்குப் போடுதல் என்பார்கள்.  கோலம் முடிந்ததும் இரட்டைப் புள்ளிகள் வைப்பார்கள். இதைப் புள்ளி குத்துதல் என்பார்கள். எந்த நிகழ்வு என்றாலும் அது கோலத்தோடுதான் துவங்கும்.

தீபாவளி, பொங்கல், நவராத்திரி, காரடையான் நோன்பு, பிள்ளையார் நோன்பு மட்டுமல்ல, பிள்ளைப் பெற்று அழைத்தால், மகள் சமைந்தால், திருமண சமயம் , மற்றும் மருமகள் முதல் தீட்டானால், பிள்ளை பெற்று அழைத்தால், விளையாட்டுப் பெட்டி வேவு எடுத்தால் என சுபத்துக்கும், கேதம் போன்ற அசுபத்துக்கும் கோலமிடுவார்கள். இதிலும் அமங்கலம் என்றால் ஒற்றை வரிசையில் புள்ளிகளும், மங்கல நிகழ்வு என்றால் இரட்டை வரிசைப் புள்ளிகளும் வைப்பார்கள்.

ரங்கோலி கலர்க்கோலப்பொடியால் போட்டு அலங்கரிக்கப்படுவது. இது புள்ளிக் கோலம், நெளிக்கோலம், டிசைன் கோலம் எதுவானாலும் மிகுந்த அழகைக் கொடுப்பது. நாங்கள் கதக்களி உருவத்தை ரங்கோலியில் வரைந்து முதல் பரிசு பெற்றோம். அத்தனை வண்ணங்களையும் அதில் சேர்க்கலாம். நவரசக் கலவை கதக்களி என்பது.

பூக்களால் போடப்படும் கோலம் பூக்கோலம். இது கேரளாவில் தவிர தமிழ் நாட்டில் போட்டிகளிலும்,  பெரிய விஷேஷ வைபவங்களில் வரவேற்கவும், பெரிய நிறுவனக்களின் ரிஷப்ஷன் ஹால்களில் நிகழ்வுகளின் போடும் போடப்படுகிறது.

மணற்கோலம் போட விதம் விதமான் நிறமுடைய மணல் தேவை. ஒரு முறை கன்னியாகுமரியில் வாங்கி வந்த 5 வகை மண்ணை வைத்து நாங்கள் போட்டிக்குக் கோலமிட்டோம். கறுப்பு, செம்மண், சந்தன நிற மண்,  சாதா மண், ஆற்று மணல் போன்றவை வைத்து டிசைன் வரைந்தோம்.

பயறு வகைக் கோலங்களும் போட்டிகளிலும் , பெரிய விஷேஷங்களில் அழகூட்டவும் போடப்படுகின்றன. இதற்கு 2 அடிக்கு  2 அடி என்ற அளவு கொடுத்து விடுவார்கள். அதில் நாம் இந்தியாவையும் வரையலாம். இறைவன் திருவுருவங்களையும் வரையலாம். இதில் மைசூர் தால் , பாசிப்பயறு, கறுப்பு உளுந்து, கடலைப் பருப்பு, பாசிப்பருப்பு, கறுப்புக் கொண்டைக் கடலை, சோயா, மொச்சை, ராஜ்மா, கொள்ளு, காராமணி, வெள்ளைக் கொண்டக் கடலை கொண்டு போடப்படுகிறது.

பொதுவா நாம் தரையில் மட்டும் கோலம் போடாம தண்ணியிலயும் போடலாம். ஒரு வாளித்தண்ணீரானாலும் சரி, ஒரு தாம்பாளத்துல தண்ணீர்  ஊற்றிப் போட்டாலும் சரி. என்னது தண்ணீர்ல கோலமான்னு கேக்குறீங்களா.. ஆமாங்க ஆமாம். தண்ணியில் கோலம் போடுறதும் ஈஸிதான். ப்ரெஞ்ச் சாக் பவுடர்னு ஒண்ணு இருக்கு. அதை அந்தத் தண்ணீர் மேல தூவிட்டு அது நல்லா அடர்த்தியா பரவினவுடனே கோலமாவுனால கோலம் போடலாம். அதுல லேசான எடையுள்ள மெழுகு விளக்குகளையும் எரிய விடலாம். பொதுவா இந்த வகைக் கோலங்கள் நவராத்திரி சமயங்களில்  கொலுவுக்கு முன்னே போடப்படுது.

கோலத்துலயும்  சங்கீதம் இருக்குங்க. நாங்க  கல்லூரியில் படிக்கும்போது ஒருத்தர் கோலத்துல ச, ரி, க, ம, ப, த, நி,  என்ற ஏழுவகைக் கோலங்கள் போட சொல்லிக் கொடுத்து வகுப்பெடுத்தாருங்க. பொதுவா நாம மூணு புள்ளி, மூணு வரிசை வச்சு போடுற கோலங்கள்தான் அவை. இவைதான் புள்ளிக் கோலங்களுக்கு ஆதாரக் கோலங்கள் . இதை வச்சு நாம ஆயிரக்கணக்கான கோலங்கள் போடலாம்.  ஆரோகணம் , அவரோகணம்  என்ற வரிசையில் கூட இதை எல்லாம் மாத்தி மாத்தி இணைச்சு கோலம் போடலாம்னு சொன்னார். தப்பா போட்டா அபஸ்வரம் தட்டிரும். அதாங்க பாதி கோலம் போட்ட பின்னாடி தப்பா போட்டம்னா சிக்கலாகி வந்த வழியே சுத்தி கோலத்தை அழிச்சு அழிச்சுப் போட்டு அசிங்கமாக்கிடுவோம். எனவே நோட்டுல போட்டுப் பார்த்துட்டு வாசல்ல போடுறது உத்தமம். 

கைகள் பழகப் பழக நல்ல வளைவு நெளிவான கோலங்கள் போடலாம்.  காலையில் மட்டுமல்ல மாலையிலும் கோலம் போடும் பழக்கம் இருக்கு. சூரியனை வரவேற்க, அந்த நாளை வரவேற்க காலையில் கோலம் போடுவது போல மாலையிலும் வாசலைத் தெளிச்சுக் கோலம் போடும் பழக்கம் இன்னும் பல இடங்களில் இருக்கு. அந்தக் கோலம் என்பது லெக்ஷ்மண ரேகை மாதிரி . அதைத் தாண்டி தீமை ஏதும் வீட்டுக்கு வராது என்ற நம்பிக்கை. பழங்கள், பூக்கள், பறவைகள், சூரியன், சந்திரன், கொடிகள், வண்ணத்துப் பூச்சிகள், தாமரை , நட்சத்திரம் போன்றவை அடிக்கடி போடப்படும் கோலங்கள்.

வீட்டு வாசற்படிக்கு அந்தக் காலத்துல ரொம்ப முக்கியத்துவம் கொடுத்து இருக்காங்க. நீறு இல்லா நெற்றி பாழ்னு சொல்றா மாதிரி கோலம் இல்லா வாசல் பாழ்னு ஏதும் அமங்கலம் இருந்தாதான் கோலம் போட மாட்டாங்க. மத்த தினங்களில் நிச்சயம் ஏதோ ஒரு  கோலமாவது இருக்கும். வீட்டு வாசல் படியை கழுவி மஞ்சள் தடவி குங்குமம் இட்டு சிலபேர் எலுமிச்சை கூட வெட்டி வைப்பாங்க. திருஷ்டி கழியட்டும்னு.

பூஜையறைக் கோலங்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. அதிலும் நவக்கிரகக் கோலங்கள், பன்னிரெண்டு ராசிகளையே கோலங்களாக வரைதல், இருதய கமலம், ஐஸ்வர்யக் கோலம் , ஆஞ்சநேயர் கோலம், சங்கு கோலம் , மயில் கோலம் போன்றவை  பூஜையறையில் போட சிறப்பு வாய்ந்தவை. சக்தி வாய்ந்த கோலங்களை மந்திரம்னு சொல்றோம். அவை விதிமுறைப்படி வரையப்பட்டிருக்கும். இந்து மதப்படி ஒவ்வொரு சாமிக்கும் ஒவ்வொரு விதமான யந்திரமும் கோலமும் கூட உண்டு.

துளசி மாடம் வச்சிருந்தா அதுக்கும் தூய்மை செய்து கோலம் போட்டு தீபம் காட்டுவாங்க. இந்த துளசி மாடத்தடியில் கண்டெடுக்கப்பட்டதால்தான் ஆண்டாள் சூடிக் கொடுத்த சுடர் கொடி பெருமாளை அடைய திருப்பாவை பாடிய காலத்தில் நாமளும் கோலங்கள் போட்டு வழிபடுறோம்.

புராண இலக்கிய காலங்களில் அரசர்கள் போருக்குப் போகுமுன்னும், போய் வந்த பின்னும் ஆரத்தி கரைச்சு  கோலத்தில் கொட்டும் பழக்கம் இருந்திருக்கு. சினிமாக்கள்ல கூட பார்த்திருப்பீங்க. காலாலேயே உருவங்களை உருவாக்கும்  பரத நாட்டியப் போட்டி எல்லாம் அந்தக் காலத்துல இருந்திருக்கு. பத்மினி, வைஜெயந்தி மாலா போன்ற நடன மணிகள் அட்டகாசமா ஒரு பீடத்துல இருக்குற கலர்க் கோல மாவுகளை  எல்லாம் தட்டிவிட்டு அதன்மேல் நடனமாடி புலி , சிங்கம் என்றேல்லாம் உருவங்களை உருவாக்குவாங்க.

நகரத்தார் திருமணங்களில்  பச்சரிசி மாவை அரைத்துத் துணியில் நனைத்து கோலம் போடுவார்கள். நிலை வாசல்படிக் கோலம் என்றும் சாமி வீட்டுக் கோலம் என்றும் வழங்கப்படும். திருமணத்தின் போது மணமக்கள் அமரும் மணவறையின் மீது போடப்படும் கோலம் மணைக் கோலம். நல்லது எல்லாவற்றிற்கும் ஒரு பாப்பாரக் கோலம் என்ற ஒன்றைப் போடுவார்கள்.

கணபதி ஹோமம் மற்றும் பலவித ஹோமங்களை செய்யும் போதும் கோலங்கள் போடப்படுகின்றன. ஹோமம் செய்யும் செங்கற்கள் மீதும் கோலம் போடுவார்கள். நிலைவாசல் படிகளில்போடும் கோலம் படிக்கோலம். கோலமாவில் நடுவீட்டில் தும்பு பிடித்து விட்டுக் கோலமிட ஆரம்பிப்பார்கள்.

பொங்கல் சமயங்களில் பொங்கல் தவலை,  இரும்பு அடுப்பு ( தற்போது காஸ் அடுப்பு ) அடுப்படி மேடை , கலவடை,( பொங்கலை இறக்கி வைக்க உபயோகப்படுவது ) , சுளகு ( முறம் ), எல்லாவற்றிலும் , குச்சியில் பஞ்சு சுத்தி நனைத்துக் கோலமிடுவார்கள். பச்சரிசி மாவும் , மஞ்சளும் நாமக்கட்டியும் கரைத்தமஞ்சள் மாவிலும் போடுவார்கள். மங்கலகரமாக இருக்கும்.

மாடு கன்னு வளர்ப்பவர்கள் கட்டுதுறையையும் கழுவி மஞ்சள், குங்குமமிட்டுக் கோலமிட்டு சாம்பிராணி தூபம் காண்பிப்பார்கள். தீபாவளி, கார்த்திகைக்கு தீபக் கோலங்களும், பொங்கலுக்கு பொங்கல் கோலங்களும், கிறிஸ்துமஸ், புத்தாண்டு தினங்களில் சாண்டாக்ளாஸ், மெழுகுவர்த்தி, தேவாலய மணி , கேக் போன்ற கோலங்களும், புத்தாண்டு, தீபாவளி, பொங்கல் வாழ்த்துக்களும், நல்வரவு , வருக வருக என்றும்  அனைவரையும் இனம் மொழி  பாகுபாடு பாராமல் கோலத்தாலேயே வரவேற்கும் மக்கள் நம் மக்கள்.

திருவிழா தேர் , தெப்பம் சமயங்களில் ஒவ்வொரு வீதியிலும் சாமி உலா வரும் நேரம், நடுவாசலில் நீர் தெளித்துக் கோலமிடுகிறார்கள். சாமியை வரவேற்க தேர், மண்டபம், அம்பாரியோடு யானை, நாகம், மயில், கிளி, அன்னம், கருடன், கற்பக விருட்சம், காமதேனு என்று கோலமிடுவார்கள். ஏதோ ஒரு கோயிலுக்கும் பாத யாத்திரை செல்லும் பக்தர்கள் வந்தாலும் அவர்களை வரவேற்க கோலங்கள் போடுவதுடன் அவர்கள் பாதங்களில் நீரூற்றியும் மகிழ்வார்கள்.

தமிழ் நாட்டுப் பெண்களோடு கோலங்கள் பொதுவா இணைந்திருந்தாலும், ராஜஸ்தான், கேரளா வங்காளம் குஜராத், மகாராஷ்டிரா போன்ற பகுதிகளிலும் கோலமிடும் பழக்கம் உண்டு. ராஜஸ்தானில் வண்ணப் பொடியால் கோலங்களும் கேரளாவில்  ஓணம் பண்டிகையின் போது “அத்தப் பூக்கோலமு”ம்  வங்காளத்தில் “ ஆல்பனா” என்னும் கோல முறையும் பிரபலம்.  குஜராத்திலும் மகாராஷ்டிரத்திலும் ஸ்வஸ்திக் சின்னத்தை ஒட்டிக் கோலமிடுகிறார்கள். இது செல்வத்தைக் கொடுக்குமாம்.

நாகம் போன்ற சில கோலங்களை  எல்லா நாளும் போடக்கூடாதுன்னு சொல்வாங்க. நாக சதுர்த்தி, கருட பஞ்சமி போன்ற தினங்களில் போடலாம். ஞாயிற்றுக் கிழமை சூரியன், திங்கட்கிழமை சந்திரன்,செவ்வாய்க்கிழமை தாமரை, புதன் கிழமை சங்கு, வியாழக்கிழமை, கருடன், வெள்ளிக்கிழமை குத்துவிளக்கு, சனிக்கிழமை சக்கரம் ஆகிய கோலங்கள் போட்டால் விஷேஷம்.கோலம் போடும்போது சாமி பாடல்களோ, ஸ்தோத்திரங்களோ, பாமாலைகளோ சொல்லிக் கொண்டே போடுவார்கள்.

இப்பவெல்லாம் கோலம் போட முடியாட்டா கோல ஸ்டிக்கர் விக்குது.  செங்காவி பேஸ்ல வெள்ளை மாவில போட்ட மாதிரி சைஸ் வாரியா இருக்குது. அத ஒண்ண வாங்கி வீட்டு வாசலத் துடைச்சு மாட்டிடா 3 மாசத்துக்குக் கவலையில்லை.அத எடுத்துட்டு அடுத்த ஸ்டிக்கர ஒட்டிக்கலாம்.!

தன்னுடைய வாழ்க்கையை இஷ்டம் போல வாழ்பவர்களை “ கண்டதே காட்சி கொண்டதே கோலம்னு “ சொல்வாங்க. அது போல வாழ்க்கை சரியில்லாட்டா ”அள்ளித் தெளித்த கோலம்.. அலங்கோலம்”னு சொல்வாங்க. பிடிவாதம் பிடிக்கிறவங்களை ”நீ தடுக்கில் நுழைந்தால் நான் கோலத்துக்குள்ளே நுழைவேன்”னு  சொல்லி பதிலடி கொடுப்பாங்க. பொண்ணு ஓவியம் போல இருக்கான்னு ஒரு பாட்டில் வரும். காரைக்குடிப் பக்கமும் திருமணத்துக்குப் பொண்ணு கேட்டால் பொண்ணு ஓவியமா இருப்பா என்பார்கள். அதாவது அவ்வளவு சீரோடும் சிறப்போடும் இருப்பார்களாம். திருமணமாகி வந்த மருமகளை முதலில் கோலமிடச் சொல்லிப் பார்ப்பார்கள். கோலத்தை சீராகப் போட்டாலே குடும்பத்தை கட்டும் செட்டுமா நடத்துவா என்பதைத் தெரிந்து கொள்வார்கள்.

கோலக்கலை என்பது இந்தியர்களோட, பொதுவா தென்னிந்தியர்களோட சம்பந்தப்பட்டது. சென்னை போன்ற பெருநகரங்களில் பெரும்பாலும் முறைவாசல் செய்யும் பெண்மணிகளே கோலமிடுவதால் மயிலாப்பூரிலோ அல்லது மந்தை வெளியிலோ போனால் நீங்க எல்லா வீட்டிலும் ஒரே மாதிரி ஸ்டார் கோலத்தைப் பார்க்கலாம். அந்த அளவுதான் அவர்களின் ரசனை அல்லது அவர்களுக்கும் கிடைக்கும் நேரம். அதை ஒரு கடமையா செய்வதால்தான் அப்படி தினமும் ஒரே மாதிரி ஸ்டாரை வரைகிறார்கள்.

பொதுவா கோலக்கலை என்பது தியானம் மாதிரி. ஆழ்ந்த கவனத்தோட நாம் ஈடுபடும்போது நல்ல தியானம் செய்த உணர்வு ஏற்படும். நம் சுவாசம் அமைதியாய் சீராய் இருக்கும். குனிந்தும் , முழங்கால் மடித்து அமர்ந்து போடும்போது உடல் நெளிந்து வளைந்து  பல ஆசனங்களை செய்த பலன் உண்டாகும். அந்தக் குறிப்பிட்ட உருவங்களில்  நம் மனதை ஒன்று குவிக்கும்போது அது சிறப்பான பலன்களைத் தருது.எனவே கோலக்கிளிகளே .. முடியும்போதெல்லாம் கோலமிடப் பழகுங்கள். அது உங்கள் வீட்டு வாசலானாலும் சரி, நோட்டுப் புத்தகமானாலும் சரி, அல்லது கணினித் திரையானாலும் சரி. அப்புறம் சொல்வீங்க நீங்க சொன்னதெல்லாம் சரிதான்னு.



6 கருத்துகள்:

  1. கோலம் பற்றி எவ்வளவு துல்லியமான விவரங்கள்.. நீர்க்கோலம் பற்றி முதன்முதலாய் கேள்விப்படுகிறேன். மெல்லினம் இதழில் வெளியானமைக்குப் பாராட்டுகள் தோழி.

    பதிலளிநீக்கு
  2. கோலத்தில் இத்தனை கோலமா ? அசத்திடீங்க தோழி இனிமேல் தியான வகுப்புக்கு அவசியம் இல்லை ...........வாழ்த்துக்கள் உங்கள் பெண் மொழிக்கு

    பதிலளிநீக்கு
  3. கோலத்தால் உண்டாகும் பயன்கள் உட்பட குறிப்பிட்டது அருமை... பாராட்டுக்கள் சகோதரி...!

    பதிலளிநீக்கு
  4. தன்னுடைய வாழ்க்கையை இஷ்டம் போல வாழ்பவர்களை “ கண்டதே காட்சி கொண்டதே கோலம்னு “ சொல்வாங்க. அது போல வாழ்க்கை சரியில்லாட்டா ”அள்ளித் தெளித்த கோலம்.. அலங்கோலம்”னு சொல்வாங்க. பிடிவாதம் பிடிக்கிறவங்களை ”நீ தடுக்கில் நுழைந்தால் நான் கோலத்துக்குள்ளே நுழைவேன்”னு சொல்லி பதிலடி கொடுப்பாங்க. பொண்ணு ஓவியம் போல இருக்கான்னு ஒரு பாட்டில் வரும். காரைக்குடிப் பக்கமும் திருமணத்துக்குப் பொண்ணு கேட்டால் பொண்ணு ஓவியமா இருப்பா என்பார்கள். அதாவது அவ்வளவு சீரோடும் சிறப்போடும் இருப்பார்களாம். திருமணமாகி வந்த மருமகளை முதலில் கோலமிடச் சொல்லிப் பார்ப்பார்கள். கோலத்தை சீராகப் போட்டாலே குடும்பத்தை கட்டும் செட்டுமா நடத்துவா என்பதைத் தெரிந்து கொள்வார்கள். - Nalla solli irukkireer kolathin perumai mattrum pazhamaiyai.

    பதிலளிநீக்கு
  5. நன்றி கீதமஞ்சரி

    நன்றி சரளா

    நன்றி தனபாலன்

    நன்றி மணவாளன்

    பதிலளிநீக்கு
  6. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)