புதன், 9 ஜனவரி, 2013

பெண்களும் பக்தி என்னும் போதையும்.

 ”திருமணம் ஆன புதுசுல என் மனைவி எப்ப நான் வீட்டுக்கு வருவேன்னு காத்துக்கிட்டு இருப்பா.. ”

 “அப்பிடியா.. இப்ப..?”

 ”எப்ப வெளியே போவேன்னு காத்துக்கிட்டு இருக்கா..ஏன்னா நாந்தான் ரிட்டயர் ஆகி வீட்டிலேயே எந்நேரமும் இருக்கேனே..”

இதுதான் ரிட்டயர்ட் ஆன கணவன்களின் நிலை. இளமைக்காலத்தில் கணவனின் வரவை எதிர்பார்த்து வழி மேல் விழி வைத்துக் காத்திருந்த பெண்களுக்கு கணவர்கள் ரிட்டயர்மெண்ட் ஆனதும் பிடிக்காமல் போய் விடுகின்றார்களா என்ன..அப்படி அல்ல.


ரிட்டயர்ட் ஆன கணவர் எந்நேரமும் மனைவி கூடவே இருப்பதால் சமைப்பது, செலவழிப்பது, செல்ஃபோனில் பேசுவது, அண்டை அயலாருடன் பேசுவது, சொந்தக்காரர்களுடன் பேசுவது எல்லாவற்றுக்கும் 144 தடையுத்தரவோ அல்லது எதிர்ப்போ காண்பித்துக் கொண்டிருப்பதால் அதுவரையில் இந்த விஷயங்களில் எல்லையற்ற சுதந்திரம் அனுபவித்துக் கொண்டிருந்த மனைவி சொல்ல ஆரம்பிப்பார், ”என்னை குற்றம் கண்டுபிடிக்க மாமியார், நாத்தனாரே வேண்டாம். எல்லாம் இவரே போதும் ”என்று.

எந்த இடத்தில் இந்தக் கருத்துக்கள் அதிக மோதலாகின்றன என்று பார்த்தால், ரிட்டயர் ஆகும் வரை ஆண்களுக்கு தன்னைச் சுற்றி என்ன நடக்கிறதென்றே தெரியாது. பிள்ளை என்ன படிக்கிறான். பெண் என்ன செய்கிறாள் என்று கேட்டால் பேந்தப் பேந்த மனைவியின் முகம் பார்த்து முழிப்பார்கள்.ரிட்டயர் ஆனபின்போ ஆண் தன்னுடைய அலுவலகப் பணிகளின் இறுக்கத்தில் இருந்தும் டென்ஷனில் இருந்தும் விடுதலையாகிறார். கையில் கணிசமானசேமிப்பும் இருக்கிறது, பெண்கள் பிள்ளைகள் வளர்ந்து படித்து வேலைக்குச் சென்று கை நிறைய சம்பாதிக்கிறார்கள். வீட்டில் அவருடன் இருப்பது மனைவி என்ற ஜீவன் மட்டுமே. மிக அதிகமாக அவருக்குக் கிடைக்கும் அந்த நேரமெல்லாம் அவர் மனைவி செய்யும் செயல்களை எல்லாம் கூர்நோக்கத் துவங்குகிறார்.

என்ன செய்கிறாள், யாருக்குச் செய்கிறாள், ஏன் செய்ய வேண்டும் அல்லது கூடாது என்பதை எல்லாம் தான் மட்டுமே தீர்மானிக்கும் கருவியாக கணவர் தன்னைக் கேட்டுத்தான் செய்ய வேண்டும் என்பதை முன்னிலைப்படுத்துகிறார். அப்படி அவர் தன்னை முன்னிலைப்படுத்தும்போது அதைப் புரிந்து கொள்ளும் அவரின் மனைவி அவரின் நான் என்ற ஈகோவை முடிந்தவரை திருப்திப்படுத்துகிறார். அதுவரை அவர் பாடம் சொல்லிக்கொடுத்து, உணவூட்டி, பள்ளி அனுப்பி வளர்த்த பிள்ளைகளிடம் அப்பா சொல்றதைக் கேட்டு செய்ங்க என்கிறார். வீடு வாங்குவதானாலும், கார் போன்ற பொருட்கள் வாங்குவதானாலும்.

நான் என்ற ஈகோ திருப்தியடைந்த ஒரு ஆண் எந்நேரமும் அதை எதிர்பார்க்கத்துவங்கும்போதுதான் பிரச்சனை ஆரம்பமாகிறது. அதிலிருந்து தப்பிக்க பெண் எடுக்கும் ஆயுதம் விரதம், பூஜை, புனஸ்காரம் என்று அதீதப்படியாக ஈடுபடுவது.

பொதுவாகவே இந்தியத்தாய்கள் தங்கள் வாழ்க்கையின் பெரும்பகுதியைக் கணவருக்கும், குழந்தைகளுக்குமாகவே வாழ்பவர்கள். குழந்தைக்கோ, கணவருக்கோ உடல் நிலை சரியில்லை என்றால்., விபத்து அல்லது பிரயாண பயம் என்றால் சாமிக்கு காசு எடுத்து வைப்பது, எல்லா விதமான வேண்டுதல்களும் வேண்டிக் கொள்வது எனச் செய்வார்கள். ( அங்கப்பிரதட்சணத்திலிருந்து காவடி எடுத்தல், அலகு குத்துதல் வரை)

இந்தக் கோயிலில் இந்த மாதம் இந்த விசேஷம் என்றால் அந்தக் கோயிலில் இருப்பார்கள். ஆடி மாதம் அம்மனுக்கு, ஆவணி மாதம் சூரியனுக்கு, புரட்டாசி மாதம் பெருமாளுக்கு, கார்த்திகை மாதம் முருகனுக்கு, மார்கழி மாதம் சிவனுக்கும், கண்ணனுக்கும், பங்குனி மாதம் திரும்ப அம்மனுக்கும் என மாதம் வாரியாகவும். தேதி, கிழமை , திதி வாரியாகவும் தங்கள் பக்தியைப் பெருக்கி வைத்திருப்பார்கள்.

திருக்கோயில்களில் உழவாரப்பணி செய்தல், பஜனை மடங்களில் பஜன்கள் பாடுதல், சத்சங்கம் என அவர்கள் தங்களை ஒரு பக்திமயமான உலகத்துக்குள் பொருத்திக் கொள்வார்கள். பொதுவாக இளமையிலிருந்தே பக்தி ரத்தத்தோடு ஊட்டப்பட்டிருப்பதால் பெண் பிள்ளைகள் வளர்ந்து திருமணமாகியோ திருமணப் பருவத்தை எட்டியோ இருப்பதால் பெண்களுக்கான உணர்வின் விளைவுகள் மட்டுறுத்தலோடுதான் இருக்கும்.

என் உறவினர் ஒருவர் இதுபோல் ரிட்டயரானதும் டிவி சீரியல்கள் பார்ப்பது, செய்திகள் கேட்பது,ஜூனியர் விகடன், நக்கீரன், போன்ற பத்திரிக்கைகளைப் படிப்பது எனப் பொழுதைக் கழித்தார். இதில் அவருடைய மனைவிக்குப் பெரும் கோபம். அவர் எந்நேரமும் எழுந்து மூச்சுப் பயிற்சி , உடல் சுத்தி செய்து சாமி விளக்கேற்றி வீட்டில் எந்நேரமும் காசெட்டில் தெய்வீகப் பாடல்களை ஒலிக்கச் செய்து வீட்டை மங்களகரமாக வைத்திருப்பார்.

தங்கள் பழக்கங்களில் இருவரும் கொஞ்சம் அதீதமான பொழுது பிரச்சனை ஆரம்பித்தது.கணவர் எந்நேரமும் டிவியில் ஜெயலெட்சுமி, ஜீவஜோதி ,ரஞ்சிதா போன்ற பெண்களின் கதைகளை செய்தி சானலில் பார்ப்பதும். முறை தவறிய உறவு கொண்ட சீரியல்களை தொடர்ந்து பார்ப்பது மட்டுமின்றி ஊருக்குப் போனால் கூட யாரிடமாவது போன் செய்து கதை கேட்பதும் பிடிக்கவில்லை. இந்த வயசில் சாமியே கும்பிடாமல் வன்முறை, கொலை, கொள்ளை செய்தியாகத்தான் கேட்கிறார் என்று குறை சொல்லித் தன்னை இன்னும் அதிகம் ஆன்மீகத்துள் புகுத்திக் கொண்டார்.

மனைவிக்கு என்ன பழக்கம் என்றால் அவர் மட்டுமே அந்தக் குடும்பத்தில் ஆன்மீக நம்பிக்கை உள்ளவர் போலும் அடுத்தவர்களுக்கு எந்த ஆன்மீக தெய்வ நம்பிக்கை இல்லாதது போலும் பேசி கோபத்தைக் கிளறுவார். ஒரு குறிப்பிட்ட வெள்ளிக் கிண்ணத்தில் பால் காய்ச்சியவுடன் எடுத்து சாமிக்கு நைவேத்தியம் வைத்துவிட்டுத்தான் அன்றைக்கு வீட்டில் யாருமே காஃபி குடிக்க முடியும். அப்படி பால் எடுத்து வைக்காவிட்டாலோ, அல்லது அந்த வெள்ளிக்கிண்ணம் தேடமுடியாமல் வேறு கிண்ணத்தில் பால் எடுத்து வைத்து விட்டு மத்தவர்கள் காஃபி அருந்தினாலோ தொலைந்தார்கள். அது கணவரானாலும் சரி, மகள்களானாலும் சரி, மருமகள்களானாலும் சரி.

அதேபோல் எந்தக் கோயிலுக்கு யார் என்ன சொன்னாலும் எல்லாருக்கும் முடியுமா என யோசிக்காமல் நேர்ந்து கொள்வது. வெளிநாட்டில் இருக்கும் பேரப்பிள்ளைகள் லீவுக்கு வரும்போதெல்லாம் மொட்டை போடவேண்டும் என்று ஒரு ஏதோ ஒரு கோயில் பெயர் சொல்லியபடி ரெடியாக இருப்பார் என் தூரத்து உறவினரான பெரியம்மா ஒருவர். ஒரு முறை அவரின் குட்டிப் பேரன் சொல்லிவிட்டான் பாட்டி இனி மொட்டை போட வேண்டிக்கிட்டா உனக்கு நேர்ந்துக்கோ. என்னை விட்டுடு.. என்று.

மாவிளக்குப் போடுதல், பொங்கல் இடுதல், பால் குடம் எடுத்தல், கரகம் எடுத்தல், தொட்டி கட்டுதல், வெள்ளி ஊஞ்சல், தங்கரதம் இழுத்தல், பாத யாத்திரையாக வருதல் எனப் பல வேண்டுதல்கள் செய்து கொண்டாலும் அடுத்தவரை செய்ய வைப்பதாக வேண்டி அதனால் நாம் யாரையும் கஷ்டப்படுத்தக் கூடாது என எண்ண வேண்டும். இந்த வீட்டுக்கும் மொத்த ஆன்மீக அதிகாரியே நாந்தான் என்ற ஜபர்தஸ்தின் மூலம் அடையப்போவது என்ன.?

இந்த இந்த வேண்டுதல்கள் குடும்ப வழிபாட்டின் முறைப்படிக் கடைப்பிடிக்கப்படுகின்றன என்பதை இளைய தலைமுறைக்குத் தெரியப்படுத்தினாலே போதும். முடிந்தால் கடைபிடிக்கச் சொல்லலாம்.

சில குடும்பங்களில் கார்த்திகை சோமவாரத்துக்கு ஊரோடு உணவிடும் பூசை, படைப்பு, குலதெய்வம் கும்பிடுதல், பொங்கல், திருவிழா என வீட்டாரோடும், பங்காளிகளோடும் கலந்து செய்யப்படும் விழாக்கள் அநேகம். வெளிநாடுகளில் வசிக்கும் பலர் வர முடியாவிட்டாலும் ஒப்புக் கொள்ளும் இந்தப் பெரியம்மாக்கள் ஊரில் இருக்கும் சிலர் வராவிட்டால் அதைப் பெரிது படுத்திப்படுத்தி விடுவார்கள்.

என்னுடைய இன்னொரு மாமி வருடம் தவறாமல் வருடப் பிறப்பன்று பழநிக்குச் செல்வார்.அங்கேஒரு முறை அர்ச்சனை செய்த தேங்காய் கெட்டுவிட அதன்பின் அவர் குடும்பத்தின் அன்றே ஒரு ஆக்சிடெண்டும் நடந்து விட அன்றிலிருந்து எந்தக் கோயிலுக்குப் போனாலும் உண்டியலில் 50, 100 என்று போட்டு விடுவார், அல்லது அன்னதானத்துக்கு வழங்கி விடுவார். இது போல இப்படித்தான் செய்ய வேண்டும் என்று கணவர் முதல் குழந்தைகள், பேரப்பிள்ளைகள் அனைவரையும் ரிங் மாஸ்டர் போல ஆட்டி வைக்காமல் அவர்கள் செலவழிக்கக் கிடைக்கும் நேரம் புரிந்து அதற்குப் பரிகாரமாய் என்ன செய்ய இயலும், மேலும் கோயிலை மேம்படுத்தவோ அல்லது அன்னதானத்துக்கோ நிதி வழங்கிவிடலாம். இன்று எல்லாம் இருக்கும் ஊர்களில் இருந்தே அந்த அந்தக் கோயில்களின் அக்கவுண்டில் டெப்பாசிட் செய்துவிட முடிகிறது.

இந்தக் கட்டுரை எழுத மிகப் பெரும் தூண்டுதல் போனமாதம் விஜய் டிவியில் நடைபெற்ற நீயா நானாதான். அதில் 60 களில் இருக்கும் ஆண்கள் ஒரு பக்கம், 50 களில் இருக்கும் பெண்கள் ஒரு பக்கம். பெண்கள் எல்லாரும் மஞ்சள் மாதாக்களாகவும், செவ்வாடைச் சக்திகளாகவும் இருந்தார்கள். ஒரு சர்வேயில் படித்தபடி அந்தக் கணவர்கள் அனைவரும் தங்கள் மனைவிகளை மிகவும் நேசிக்கிறவர்களாகவும் இருந்தார்கள். பல வருடங்கள் அந்தக் கணவர்களின் ஆக்கிரமிப்பில் ( அன்பாலும் சரி, அதிகாரத்தாலும் சரி ) ஆட்பட்டிருந்த பெண்கள் அனைவரும் பக்தி என்னும் போதையைக் கையிலெடுத்து (பழிக்குப் பழி..!) அவர்களை மிகச் சிரமத்துக்கு உள்ளாக்குகிறார்கள் என்று தோன்றியது.

குளித்துவிட்டேன் தொடாதீர்கள் என்று தடுப்பதாக ஒரு கணவர் கூறினார். போகும் வழியில் எல்லாம் காரை நிறுத்து நான் சாமியைக் கும்பிட்டுக்குறேன். என்று திருப்பூரில் இருந்து சென்னை வரை வாராவாராம் ஹாஸ்டலில் இருக்கும் இன் ஜினியரிங் படிக்கும் பிள்ளையைப் பார்க்கப் போகும்போதெல்லாம் இதேதான் என்று அலுத்துக் கொண்டார் அவர்.

பிள்ளையில்லாத வீட்டில் கிழவன் துள்ளி விளையாடுகிறான் என்று கிட்ட வரும் கணவரைக் கிண்டலடிப்பது இன்னொரு ரகம். ரொமான்ஸ் என்பது கணவன் மனைவிக்குள் எந்த வயதானாலும் இருக்க வேண்டியது அவசியம். அதை வயதைக் காரணம் காட்டியோ, பொறுப்பைக் காரணம் காட்டியோ, அல்லது ரிட்டயர்மெண்ட் ஆனதைக் காரணம் காட்டியோ வெறுப்பது அல்லது தள்ளி வைப்பது தவறு. வாழும் காலம் வரைக்கும் கணவர் தேவை. இளம் வயதில் ரொமான்ஸ் நாயகனாக இருந்தவர் முதிய வயதில் உங்கள் அன்புக்கும் அரவணைப்புக்கும் அங்கீகாரத்துக்கும் ஏங்கும் குழந்தை போல. உங்கள் இளம் வயதில் உங்களை அவர் பாராட்டவில்லை , ரசிக்கவில்லை, என்றோ அங்கீகரிக்கவில்லை என்றோ வெறுக்க வேண்டாம்.

நீயா நானாவின் உச்சக்கட்டதில் ஒரு கணவர் சொன்னார்., என் மனைவி எந்நேரமும் எழுந்ததில் இருந்து சாமிப்பாடல்கள் காசெட்டை காசெட் ப்ளேயரில் போடுவது , தொலைக்காட்சியிலும் ஆன்மீகப்பாடல்கள் கேட்பது , எந்நேரமும் அணையா விளக்காய் வீட்டில் விளக்கேற்றி பாடல்கள் பாடிக்கொண்டிருப்பது, கோயில் கோயிலாகப் போவது, அங்கே போனாலும் 108, 1008 என்று பிரகாரம் வருவது, விளக்குகளாக கோயிலில் ஏற்றிக் கொண்டே இருப்பது. வீட்டில் 108 சூடம் தீபாராதனை காட்டுவது என்று தன்னால் தாங்க முடியாத பக்தியைப் பற்றிப் பட்டியலிட்டார்.

அவரின் மனைவி எதிர் திசையில் அமர்ந்து கணவர் கட்டிய தாலியோடு துளசி மாலை, ருத்ராஷ மாலை என்று இன்னும் பலது அணிந்திருந்தார். அவர் எனக்கு இப்படி இருப்பதுதான் பிடிச்சிருக்கு. டிவியில் வேற எதுவுமே போட்டாலும் பிடிக்கிறதில்லை. அதை நான் அனுமதிக்கிறதில்லை. இந்த மனநிலை பிடிச்சிருக்கு. அதை மாத்திக்கப் பிடிக்கலை என சாதித்தார்.

அல்லும் பகலும் அனவரதமும் நீங்கள் தெய்வத்திலேயும் தெய்வத்தன்மையிலும் ஆழ்ந்திருந்திருங்கள். ஆனால் நீங்கள் சராசரி ஆசா பாசம் உள்ள பெண் தான் என்பதையும் உங்கள் கணவரும் பிள்ளைகளும் சராசரியானவர்களே என்பதையும் ஒப்புக் கொண்டு அவர்களுக்கு ஏற்றபடியும் இருக்கக் கற்றுக் கொள்ளுங்கள். பிரம்மச்சரியம், கிரஹஸ்தம், துறவறம்., வானப்பிரஸ்தம் என்பன உங்களுக்கு சீக்கிரமே கிட்டி இருக்கலாம். கணவரும் அந்த நிலை எய்துதல் வரை பொறுத்தல் உத்தமம்.

அளவுக்கு மிஞ்சினால் ஆன்மீகமும் ஒரு போதைதான். நீங்கள்தான் பெர்ஃபெக்ட் என்று எண்ண வைக்கும் போதை. அது உங்களை ஆட்டிப் படைக்காமல் காத்திடுங்கள்.

அதனால்தான் நகரத்தாரில் ஆண்கள் உபதேசம் கேட்பது என்று ஒன்று உண்டு. அதன் படி அவர் இறைவன் பெயரை உபதேசமாகக் கேட்டு விபூதி தரித்த பின் தான் பெண்ணுக்கு உபதேசம் வழங்கப்படும். ஏனெனில் இங்கு தன்னுடைய ஆன்மீக வாழ்வைத் தொடங்குவதைப் பற்றி ஆண் முதலில் முடிவு செய்து விட்டால் பெண்ணுக்கும் அது இனிமையாக தொடரக்கூடும் என்பதால்தான்.

நீங்கள் எத்தனை விளக்கு ஏற்றினீர்கள், எந்தெந்தக் கோயிலில் எத்தனை முறை அங்கப்பிரதட்சணம் செய்தீர்கள், எத்தனை சூடங்களில் ஆரத்தி காண்பித்தீர்கள் என்று கடவுள் உங்களிடம் கணக்குப் பார்ப்பதில்லை.. உங்கள் சக மனிதர்களிடம், குறிப்பாக உங்களுடன் தன் வாழ்க்கைப் பயணத்தை இன்னும் இனிமையாகக் கழிக்க விரும்பும் கணவருடன் எப்படிப்பட்ட உறவை வைத்துக் கொள்கிறீர்களோ மேலும் அவர்களின் விருப்புக்கு எவ்வளவு விட்டுக்கொடுத்துப் போகின்றீர்களோ அவ்வளவுக்கு உங்கள் ஆன்மீக வாழ்வும் மேம்படும்.

 டிஸ்கி:- இந்தக் கட்டுரை  2012 ஐப்பசி மாத மெல்லினத்தில் வந்தது.


8 கருத்துகள்:

  1. அருமையாக சொல்லிவிட்டீர்கள்.பெற்றோர்கள் வேண்டுதல்கள் நம் பிள்ளைகளுக்கு வசதிபடுமா என்பதையும் பார்க்க வேண்டும். இடம் பொருள் ஏவல் என்பார்கள். எல்லோர் வசதியும் வாய்ப்பும், காலசூழ் நிலைகளுக்கு ஏற்ப நம் விருப்பு வெறுப்புகளை அமைத்துக் கொள்ள வேண்டும்.
    கணவரும் தன் மனைவி விருப்பு, வெறுப்புக்களுக்கு கொஞ்சம் நேரம் ஒதுக்க வேண்டும்.
    கடவுள் வழிபாடு என்றாலும் அதிலும் அளவு முறை வேண்டும். எதுவும் அளவுக்கு மிஞ்சினால் கஷ்டம் தான்.

    பதிலளிநீக்கு
  2. அருமையான கட்டுரை தேன்மொழி!

    பதிலளிநீக்கு
  3. உங்கள் சக மனிதர்களிடம், குறிப்பாக உங்களுடன் தன் வாழ்க்கைப் பயணத்தை இன்னும் இனிமையாகக் கழிக்க விரும்பும் கணவருடன் எப்படிப்பட்ட உறவை வைத்துக் கொள்கிறீர்களோ மேலும் அவர்களின் விருப்புக்கு எவ்வளவு விட்டுக்கொடுத்துப் போகின்றீர்களோ அவ்வளவுக்கு உங்கள் ஆன்மீக வாழ்வும் மேம்படும்.

    வாழ்க்கைப்பாட்ம் அருமை ..!

    பதிலளிநீக்கு
  4. Aaanmeegam enbathu en varaiyil oru payanam (ulmugamaana payanam) atharkkana muyarchikal, payirchikal thavira namathu makkal verum sambirathaayangalai mattume pinparrkukiravarkalaaga iruppathil enna laabamo? sonnalum puriyaathu! solli puriyavaikkavum kastam. yeanendraal athu oru unarvin ullaaarndha unarvu.. ungal aaivu nandraaga irukkirathu thenamma..

    பதிலளிநீக்கு
  5. //என்று கடவுள் உங்களிடம் கணக்குப் பார்ப்பதில்லை.. உங்கள் சக மனிதர்களிடம், குறிப்பாக உங்களுடன் தன் வாழ்க்கைப் பயணத்தை இன்னும் இனிமையாகக் கழிக்க விரும்பும் கணவருடன் எப்படிப்பட்ட உறவை வைத்துக் கொள்கிறீர்களோ மேலும் அவர்களின் விருப்புக்கு எவ்வளவு விட்டுக்கொடுத்துப் போகின்றீர்களோ அவ்வளவுக்கு உங்கள் ஆன்மீக வாழ்வும் மேம்படும்.//

    கடைசி பஞ்ச் கரெக்ட்!! ரெண்டு தரப்புக்குமே பொருந்தும்.

    பதிலளிநீக்கு
  6. நன்றி கோமதி மேடம்

    நன்றி உமா

    நன்றி ராஜி

    நன்றி கல்யாண் குமார்

    ஹாஹா பஞ்சிலும் பஞ்ச் அடிச்சுட்டீங்க ஹுசைனம்மா.. கரெக்ட்.. அவங்களும் படிச்சு புரிஞ்சுக்கட்டும். :)

    பதிலளிநீக்கு
  7. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  8. அருமையான கட்டுரை தேனம்மை .அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு .புரிந்து நடந்துகொண்டால் அனைவருக்கும் நல்லது

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)